1 இராஜாக்கள்: 16: 29 -30 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில்,உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
வேதத்தை ஆராய்ந்து படிக்கும்போது சில தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். காயீனுக்கும் ஆபேலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஆபிரகாமும் லோத்தும் பற்றிகூட பார்த்திருப்பீர்கள்!
நாம் கடந்த வாரங்களாக பார்த்தவிதமாக தேவனுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு ராஜாக்களால் ஆளப்பட்டனர். இஸ்ரவேலின் தென் பகுதியாகிய யூதாவை நம்முடைய அருமையான யோசபாத்தும், வட பகுதியாகிய இஸ்ரவேலை மிகவும் மோசமான ஆகாபும் அவனுடைய வில்லி மனைவி யெசெபேலும் ஆண்டு வந்தனர்.
இன்று நாம் எலியா தீர்க்கதரிசி ஆகாபின் அரண்மனை வாசலில் வந்து நிற்பதற்கு முன்பாகவே இந்த ஆகாப் மற்றும் எலியா என்ற இரண்டு முற்றிலும் மாறுபட்ட தனி மனிதர்களைப் பற்றி சற்று சிந்திக்கலாம்!
இந்த இருவருமே தங்கள் பேரார்வத்தையும், சக்தியையும் முடிந்தவரை உபயோகப்படுத்தினர் ஆனால் எதற்காக உபயோகப்படுத்தினர் என்பதில் தான் வேறுபாடு உள்ளது. பேரார்வம் அல்லது passion என்ற வார்த்தை சிலரை அவர்கள் விரும்பிய துறையில் வல்லவர்களாக மாற்றும். சிலர் இசைத்துறையில் செல்கின்றனர், சிலர் விளையாட்டில் பேரார்வம் காட்டி அந்தத் துறையில் வல்லவர்களாகிறார்கள். சிலரை இந்த பேரார்வம் மதவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கூட மாற்றும்.
ஒரே சமயத்தில் இந்த பூமியில் வாழ்ந்த இந்த இருவருமே நம்முடைய பேரார்வத்தையும், திறமைகளையும், சக்தியையும் எந்த அளவுக்கு தேவனுக்கு விரோதமான செயலில் ஈடுபடுத்தலாம் என்பதற்கும், எந்த அளவுக்கு பரலோக தேவனை மகிமைப்படுத்த உபயோகிக்கலாம் என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். எலியாவின் பேரார்வம் அவனை பரலோகத்துக்குத் தூக்கி சென்றது ஆனால் ஆகாபையோ நரகத்துக்கு இழுத்துச் சென்றது.
எலியா ஜெபத்திலும், தேவனுடைய வார்த்தைகளை தைரியமாய் பேசுவதிலும் பேரார்வமுள்ளவனாயிருந்தான், ஆகாபோ விக்கிரகமாகிய பாகாலை வணங்குவதில் பேரார்வம் காட்டினான்.
நாம் தொடர்ந்து இந்த இரு தனிப்பட்ட மனிதர்களையும் பற்றிப் படிக்கும் முன்னர், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய திறமைகளையும் ஆர்வத்தையும் ஆசீர்வாதத்துக்காகவும் உபயோகப்படுத்தமுடியும், சாபத்துக்காகவும் உபயோகப்படுத்தமுடியும் என்பதை மறந்து போக வேண்டாம்.
கர்த்தராகிய இயேசுவோடு நெருங்கி வாழ்வதில் ஆர்வம், அவரோடு பேசுவதிலும், அவர் சத்தத்தை தினமும் கேட்பதிலும் ஆர்வம் கொள்வோமானால் அது நம்மை அவருடைய ஊழியத்தில் பேரார்வம் கொள்ளச் செய்யும். எப்படிப்பட்ட ஊழியம்???
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு (பிலி 4:13)
என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய உன்னத ஊழியம்! தேவனாகியக் கர்த்தர் தாமே நம்மை எலியாவைப் போல தேவனுக்கடுத்த காரியங்களில் பேரார்வம் காட்ட உதவுவாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்