1 இராஜாக்கள்: 17:1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி
இந்த வருடத்தின் இரண்டாவது மாதத்தைக் காணச் செய்த கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரிப்போம். இந்த மாதம் முழுவதும் தேவனுடைய கரம் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துமாறு நம்மைத் தாழ்மைப்படுத்தி ஜெபிப்போம்.
என்னுடைய நண்பர்களில் பலருக்கு நல்ல குடும்பப் பின்னணி உண்டு! அவர்களுடைய சொந்தங்கள் எல்லா ஊரிலேயும் இருப்பார்கள். ஆனால் என்னுடைய பெற்றோரைப் பற்றி நினைக்கும்போது , அவர்கள் பிறந்த குக்கிராமங்களைப் பற்றி யோசிக்கும்போது, இந்த உலகத்தில் நான் எந்த விசேஷமான அடையாளமும் இல்லாதவள் போலத்தோன்றும். உங்களில் யாருக்காவது என்னைப்போலத் தோன்றியது உண்டா?
அப்படித் தோன்றியிருக்குமானால் நமக்கு ஒரு துணை உண்டு! அடுத்த இரண்டு வாரங்கள் நாம் படிக்கப்போகும் அந்த மனிதன் தான் நம்மைப் போன்றவன்!
நாம் எலியாவை சந்திக்கும்போது அவன் திடீரென்று சரித்திரத்தில் எங்கோவிருந்து வருகிறான். திடீரென்று புறப்படும் எரிமலை போன்ற வருகை அது! அவனுடைய வருகையைப் போலத்தான் அவனுடைய மறைவும் இருந்தது என்று சொல்ல முடியும்!
எலியாவை திஸ்பியனாகிய எலியா என்று நாம் அழைக்கலாம் ஆனால் அந்த திஸ்பியா எங்கு இருந்தது என்று யாருக்கும் தெரியாது! எலியாவின் பெற்றோர் யார்??? யாருக்கும் தெரியாது!
வேதாகம் எழுதப்பட்ட காலத்தில் ஒவ்வொருவருடைய குடும்பப் பின்னணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கால கட்டத்தில் எலியாவின் பெற்றோரைப் பற்றி ஒன்றுமே எழுதப்படவில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரை எல்லாம், அவன், யோர்தானுக்கு கிழக்கேயிருந்த கீலேயாத்தின் குடிகளில் வளர்ந்த ஒருவன் என்பது மட்டும்தான். கீலேயாத் ஒரு தனிமையான, கரடுமுரடான காடுகளைக் கொண்டது, ஆங்காங்கே மலையருவிகளைக் கொண்டதுமான இடம் என்பதும் தெரியும்.
அங்கு வாழ்ந்த குடிகளைப்பற்றி எழுதும் F.B Meyar அவர்கள், கீலேயாத்தின் குடிகள் அந்த நாட்டைப்போலவே முரட்டுத்தனமும், சட்டதிட்டங்கள் இல்லாமை, மற்றும் திருத்தப்படாத, ஒழுங்கற்ற தன்மைகளில் வாழ்ந்து வந்தனர் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் வாழ்ந்தது கல்லால் கட்டப்பட்ட வீடுகளில் என்றும், ஆடுகள் மேய்ப்பதே அவர்கள் தொழில் என்றும் அவர்களைப்பற்றி அறிகிறோம்.
இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய அரசாங்கத்திடம் நமக்காகச் செல்ல ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தால் எப்படிபட்டவரைத் தேர்ந்தெடுப்போம்??? எலியாவைப் போல எங்கோயிருந்த வந்த யாரோ என்றால் நாம் அவரைத் தேர்ந்தெடுப்போமா?
எங்கோயிருந்து வந்த யாரோவாக இருந்த என்னையும் உன்னையும் தேவன் தம்முடைய உன்னத ஊழியத்துக்கு தேர்ந்தெடுத்திருப்பாரானால், அதுவும் தகுதியற்ற நம்மை அவர் தேர்ந்தெடுத்திருப்பாரானால் நாமும் எலியாவின் காலணிகளைத்தான் அணிந்து கொண்டிருக்கிறோம்!
ஒருவேளை நான் தகுதியேயில்லை, எனக்குத் திறமையில்லை, அதற்குரிய படிப்பில்லை, என்று தேவனுடைய அழைப்பை புறக்கணித்துக் கொண்டிருப்பாயானால், எனக்குப் பேசத் தெரியாது என்று பின்வாங்கிய மோசேயை கர்த்தர் எவ்விதமாக உபயோகித்தார் என்று சிந்தித்துப் பார், வேசியாயிருந்த கானானியப் பெண் ராகாபை எப்படி உபயோகித்தார் என்று தெரியும் அல்லவா! நம்மைப்போன்ற எங்கேயோயிருந்து வந்த யாரோக்களை தேவன் உபயோகப்படுத்துவதை வேதாகமம் முழுவதும் நாம் காணலாம்.
திஸ்பியனாகிய எலியாவை உபயோகப்படுத்திய தேவன் உன்னையும் உபயோகப்படுத்துவார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்