1 இராஜாக்கள் 17:1 கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி……. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
கடந்த சில வாரங்களாக நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எலியா வாழ்ந்த காலத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது! ஒருவேளை நான் ஆகாப் ஆளுகை செய்து கொண்டிருந்த வேளை அங்கே பெத்தேலில் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன் என்றால் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் வந்திருக்காதா???? நான் பெத்தேல் என்று சொன்னதின் காரணம், அந்தக் கால கட்டத்தில் பெத்தேல் தான் ஆவிக்குரிய நடவடிக்கைகளின் மையமாக இருந்தது. பெத்தேல் என்றால் தேவனுடைய வீடு என்றுதானே அர்த்தம்!
ஆதியாகமம் 12:6-8 ல் ஆபிரகாம் தன்னுடைய சொந்த ஊரை விட்டு தேவன் வழிநடத்திய ஊருக்கு வந்து அங்கே பெத்தேலுக்கு அருகே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான் என்று பார்க்கிறோம்.ஆனால் அன்று அந்த இடம் பெத்தேல் என்று அழைக்கப்படவில்லை.
பின்னர் பல வருஷங்களுக்கு பின்னர், தன்னுடைய சகோதரனுடைய கோபத்திற்கு பயந்து ஓடிய யாக்கோபு, பெத்தேலில் ஒரு சொப்பனத்தைக் கண்டான். தேவனை தரிசித்த அவன் இது தேவனுடைய வீடு அல்லவா என்று அதற்கு பெத்தேல் என்று பெயரிட்டான் என்று ( ஆதி 28:11-18 ) பார்க்கிறோம்.
இந்தப் பின்னணியில் பார்ப்போமானால், தேவனுக்கு விரோதமான ராஜாவாக இருந்த யெரோபெயாம் இந்த பெத்தேலில் நடந்த ஆவிக்குரிய நடவடிக்கைகளை திசைமாற்ற வேண்டிஒரு கன்றுக் குட்டியின் விக்கிரகத்தை வைத்தது ஆச்சரியப்படக்கூடியது அல்ல என்று நினைக்கிறேன்!
இந்த யெரோபெயாமிலிருந்து ஆகாப் வரை 40 வருட கால விக்கிர ஆராதனை நடந்த ஆட்சியின் காலத்தில் அங்கே ஒரு தேவனுடைய விசுவாசிகள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? அந்த சமயத்தில் யாராவது என்னைப்பார்த்து, உன் தேவன் எங்கே என்று கேட்டிருந்தால் என்ன சொல்லியிருக்க முடியும்? தாவீதைப் போல அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை பட்சிக்கிறதுபோல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே அவர்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறதில்லை ( சங்: 14: 4 ) என்றுதான் புலம்பியிருக்க முடியும்!
இன்றுகூட நம்மை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை நாம் பார்க்கும்போது, நாம் கர்த்தர் இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? என்றுதானே எண்ணத்தோன்றுகிறது.
தேவனை அறிந்த மனிதனாகிய எலியாவின் வார்த்தைகள் தேவனை அறியாத ஆகாபின் அரண்மனையில் தொனித்தபோது, தேவனே இந்த பிரபஞ்சத்தை ஆளுகை செய்கிறவர் என்ற ஆணித்தரமான தொனியில் இருந்தது! இன்று எலியாவின் வார்த்தைகள் என்னை புல்லரிக்கச் செய்தன! அவன் வார்த்தைகளில் எந்த தயக்கமும் இல்லை! எந்த பயமும் இல்லை! நான் தேவனை அறிவேன் என்றத் தெளிவு தான் காணப்படுகிறது!
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் – என்ற வார்த்தைகளைப் பாருங்கள்! நான் உனக்கு முன்பாக நிற்கவில்ல ஆகாபே! நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் – என் தேவன் ஜீவனுள்ளவர்! என்று விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்த ஆகாபைப் பார்த்து சொல்லுகிறான்.தேவனை அவன் அறிந்திருந்ததால் வரும் ஆச்சரியப்படத்தக்க தைரியம்!
ஆம் என் தேவன் ஜீவனுள்ளவர்! ஆம் என் தேவனே ஆளுகை செய்கிறவர்! நான் அவருக்கு முன்பாக நிற்கிறேன் ஆகாபே உமக்கு முன்பாக அல்ல! என்று எலியா கூறியது, தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்கும் நமக்கு , எங்கே அக்கிரமங்கள் செழிக்கிறதோ அங்கே தேவன் நிச்சயமாகத் தம்முடைய மனிதரை எழுப்புவார் என்ற நிச்சயத்தைக் கொடுக்கிறது அல்லவா? சிந்தித்து ஜெபியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்