1 இராஜாக்கள் 17:1 கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி; என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
அக்கிரமம் நிறைந்த ஆகாபின் முன்னால் எலியா ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தினால் வந்து நின்றான் என்று பார்த்தோம்.
தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து வந்த பலருக்கு, யெரொபெயாமிலிருந்து ஆரம்பித்த அந்த நீடிய 40 வருட காலகட்டம் தேவனால் மறக்கப்பட்ட காலம் போலத் தோன்றியிருக்கலாம். அவர்களுடைய சமுதாயம் நாளுக்கு நாள் நரகத்தை நோக்கிப் பயணம் செய்ததை அவர்கள் கலக்கத்தோடே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் எலியாவைப்போல தேவனுடைய காரியத்தில் வைராக்கியம் உள்ளவர்களாகவும் வாழ்ந்திருப்பார்கள். யெசெபேல் தேவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் ஒழிக்க முடிவு செய்த செய்தி அவர்களை சற்று கலங்கடித்திருக்கும். அவர்களுக்குள் ஒரு தீர்க்கதரிசியாகிய எலியா, மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான் என்று யாக்கோபு 5:17 கூறுகிறது.
ஒரு நிமிடம்! எலியா ஏன் மழையை நிறுத்தும்படி ஜெபித்தான் என்று என்றாவது யோசித்தீர்களா? இந்தக் காரியம் என்னையும் சிந்திக்க வைத்ததால் சற்று இதைக் குறித்து ஆராய்ந்தேன். என்னை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில், ஆகாபின் கடவுளாகிய பாகால்தான் மழையை வருஷிக்கப்பண்ணும் தேவன் என்று அவர்கள் நம்பினர். வானத்தையும், பூமியையும், மழையையும், காற்றையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்னர் , இந்த சாதாரண பூமியின் விக்கிரகக் கடவுளாகிய பாகால் நிற்க முடியுமா?
எலியா தேவனோடு கொண்டிருந்த தொடர்பு இன்று இருந்துவிட்டு நாளை செல்வது போன்றது அல்ல. அவன் தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் நன்கு அறிந்திருந்தான். தேவன் மோசேயின் மூலமாக , அவருடைய சத்தத்துக்கு செவி கொடாமல் போகிறவர்களுக்கு அருளிய இந்த எச்சரிக்கை அவனுக்குத் தெரியும்.
உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார், நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும். ( உபா 28:24)
எலியா என்னும் கீலேயாத்தின் குடிகளில் கரடு முரடாய் வாழ்ந்து வந்த அடையாளமற்ற ஒருவன், தேவனுடைய வாக்கு நிறைவேறும்படியாய், மழை நிற்கும்படியாய் ஜெபித்தான். யாக்கோபு 5:17 கூறுகிறது, அப்பொழுது மூன்றுவருஷமும், ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை என்று.
இன்று என்னை உற்சாகப்படுத்திய காரியம் என்னவென்றால் , எலியா ஆகாபின் அரண்மனையை நோக்கி நடந்தபோது வழியில் அநேக நீரோடைகளைக் கடந்திருப்பான். ஒவ்வொன்றும் நிரம்பி வழிந்து கொண்டிருந்திருக்கும். சமாரியாவுக்கு செல்லும் வழியெல்லாம் அழகிய பச்சை பசேலென்ற தோட்டங்களும், காடுகளும் இருந்திருக்கும். அவையெல்லாம் தாண்டி தேவன் அளித்த பணியை மட்டும் நிறைவேற்றும் எண்ணத்தோடு அவன் ஆகாபிடம் சென்று, இந்த தேசமே மழையில்லாமல் உலர்ந்த எலும்பு போல ஆகப்போகிறது என்று எச்சரிக்கப் போகிறான்.அவனுடைய இந்த பெலத்துக்கு பின்னால் இருந்தது அவனுடைய ஜெபம் மட்டுமே!
இதை வாசிக்கும்போது என் கண்களில் நீர் வந்தது. உண்மையான ஜெபம் நமக்குத் தேவையான பெலத்தைக் கொடுக்கும்!
அருமையான தேவனுடைய பிள்ளைகளே! தேவன் எங்கேயிருக்கிறார் எந்று விசுவாசிகளும் கேள்வி எழுப்பக்கூடிய கொடிய கால கட்டத்தில் எங்கேயோ வாழ்ந்த இந்த அடையாளமற்ற மனிதன் தேவனிடம் தினமும் ஜெபித்துக் கொண்டிருந்தான். தேவன் அவனை ஆகாபின் அரண்மனைக்கு தம்முடைய பிரதிநிதியாய் செல்ல அழைத்தபோது, அவனுடைய ஜெபம் அவனுக்கு பெலன் அளித்தது!
உன்னிடம் இந்த ஜெப வாழ்க்கை உண்டா? ஜெபமே ஜெயம்! ஜெபமே பெலன்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்