1 இராஜாக்கள் 17:2-3 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு.
கீலேயாத்தின் குடிகளிலிருந்து எலியா கர்த்தரால் அழைக்கப்பட்டு, இஸ்ரவேலில் பாகால் வழிபடுதலை மையமாகக் கொண்டிருந்த சமாரியாவுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்டான் என்று பார்த்தோம்.
கர்த்தர் தனக்குக் கொடுத்த பணியை அவன் ஆகாபின் அரண்மனையில் செய்து முடித்தவுடன் கர்த்தர் அவனுக்கு இன்னொரு செய்தியை கொடுக்கிறார். அவர் இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு என்கிறார்.
எலியா நன்றாகத்தானே விளையாடி பந்து வீசினான் இப்பொழுது அவனுக்கு ஏன் தண்டனை என்று என் மனம் கேள்வி எழுப்பியது. அநேக வேதாகம வல்லுநர்கள் கர்த்தர் அவனைப் பாதுகாப்பதற்காகவே அங்கு அனுப்பினார் என்று கூறியிருந்தாலும், இங்கு என்னுடைய மிகவும் மதிப்பிற்குரிய சார்ல்ஸ் ஸ்விண்டோல் அவர்கள் எழுதியிருப்பதை எழுத விரும்புகிறேன்.
தேவன் எலியாவை கேரீத் ஆற்றண்டைக்கு அனுப்பியதின் காரணம் அந்த ஆற்றின் பெயரில் அடங்கியிருக்கிறது. இன்றைக்கு யாருமே அந்த ஆறு எங்கு ஓடியது என்று கண்டுபிடிக்க முடியவில்லையென்றாலும் அந்த ஆற்றின் பெயர் கேரீத் என்ற எபிரேய வார்த்தை அதன் அர்த்தத்தை காட்டுகிறது. கேரீத் என்பதற்கு துண்டிக்கப்பட்டது அல்லது வெட்டி விடப்பட்டது என்று அர்த்தம்.யோர்தான் நதியிலிருந்து வெட்டி விடப்பட்ட ஒரு சிறிய ஆறு நாளடைவில் மறைந்து விட்டது போலும்.
இப்பொழுது அர்த்தத்துக்கு வருவோம். துண்டித்து விடப்படுதல் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் பிறரை விட்டு துண்டிக்கப்படுதலைக் குறிக்கிறது. வெட்டி விடப்படுதல் என்பது மரத்தை சிறியதாக வெட்டுவதுபோல அர்த்தம்.
இப்படியாக தேவனுடைய வார்த்தைகளை தரியமாய்ப் பேச ஆகாபிடம் அனுப்பப்பட்ட இந்த மனிதன் கேரீத் ஆற்றண்டையிலே ,எல்லாவித ஈடுபாடுகளையும் தவிர்த்து, அவனைத் தூண்டிவிடக்கூடிய எல்லாவித நடவடிக்கைகளிலிருமிருந்து துண்டிக்கப்பட வேண்டும்.
அதே சமயம் எலியா , அந்த ஆற்றண்டையிலே உள்ள அசௌகரியமான சூழ்நிலையால் , ஒவ்வொருநாளும் தன்னுடைய உணவுக்காக காத்திருக்கும் பரிதாபமான சூழ்நிலையால், ஒவ்வொரு தேவைக்கும் தேவனை நோக்கிக் காத்திருக்கும் நிலைக்கு வெட்டப்பட வேண்டும்.
அதுமாத்திரம் அல்ல அந்த இடம் அவனுக்கு ஒரு இராணுவ பயிற்சி முகாம் போல அமைந்தது என்றும் பாஸ்டர் சார்ல்ஸ் சுவிண்டோல் எழுதியிருக்கிறார். தேவனுடைய வார்த்தையை ஆகாபிடம் எடுத்துச் சென்ற ஒரு மனிதனாக இருந்த எலியாவை தேவமனிதனாக மாற்றியது இந்த பயிற்சி முகாம்தான். பயிற்சி முகாமில் முதலில் அடிப்படை பயிற்சிகள் கொடுக்கப்பட்டு ஒருவரைத் தேர்ச்சியடைய செய்கின்றது. இங்கு எலியா யாரை நம்ம்பப்போகிறான் என்ற அடிப்படை பயிற்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.
யார் அவனுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்த போகிறார் என்பதைக் கற்றுக்கொடுக்கவே எலியா கேரீத்தண்டை அனுப்பப்பட்டான்.
எப்பொழுதுமே இதை வாசிக்கும்பொழுது என் மனதில் ஒரு கேள்வி எழுந்ததுண்டு! இஸ்ரவேலிலே மழை பெய்யாது என்று எலியா சொல்லிவிட்டு வந்தான். அப்படியானால் மழைகாலத்தில் மட்டும் ஓடிய இந்த கேரீத் சீக்கிரம் வற்றிவிடும் என்று கர்த்தருக்குத் தெரியும். பின்னர் ஏன் அங்கே அனுப்பினார், யோர்தான் போன்ற பெரிய ஆற்றண்டை ஏன் அனுப்பவில்லை என்று. ஆனால் இன்றுதான் எனக்கு இந்த உண்மைத் தெளிவு பட்டது. துண்டித்துவிடப்பட்ட தனிமை! அடுத்த வேளை உணவுக்காகக் காத்திருக்க வேண்டிய அளவுக்கு வெட்டி விடப்பட்ட நிலைமை, எப்பொழுது தண்ணீர் வற்றிவிடுமோ என்ற பயம், இவையனைத்துமே அவனை ஒரு மிக உயர்ந்த தேவ மனிதனாக்கும் பயிற்சிகள்தான்!
ஒருவேளை இன்று நீ அப்படிப்பட்ட தனிமை என்ற கேரீத் அண்டை இருக்கலாம், வியாதி என்ற கேரீத் உன்னை பயமுறுத்தலாம், துக்கம் என்ற கேரீத் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம், அவற்றின் மத்தியில் ஆண்டவரே உம்முடைய சித்தத்தின்படி, உம்முடைய கூடார மறைவிலே என்னை மறைத்துக் கொள்ளும் என்று ஜெபிப்பவர்கள் பாக்கியவன்கள்.
எலியாவை தேவனாகிய கர்த்தர் வெட்டி, துண்டித்து சிறுமைப்படுத்த அங்கு அனுப்பவில்லை. அவருடைய நோக்கம் அதற்கு நேர்மாறானது! தேவனுடைய வற்றாத ஜீவ ஊற்றை அவன் முற்றிலும் சார்ந்து வாழும்படியாய் அவனை உருவாக்கினார்!
அவர் உன்னையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்