1 இராஜாக்கள் : 17: 4 – 6 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய்க் கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
நாங்கள் ஒருவருடத்திற்கு முன்பு வரை சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அங்கு விடியற்காலை 5 மணிக்கே நாங்கள் இருவரும் நடப்பதற்காக வெளியே செல்லுவோம். விடியற்காலையில் எங்களை எழுப்பும் சத்தமே கா….. கா…. என்ற காகங்களாகத்தான் இருக்கும். நாங்கள் நடக்கும் தெருக்களின் முனைகளில் பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும், அவற்றை சுற்றிலும் காகங்களைப் பார்க்கலாம். விடியற்காலமே அவைகள் தங்கள் இரைதேடும் வேலையை குப்பைத் தொட்டிகளுக்குள் ஆரம்பித்து விடும்.
வேதத்தில் லேவியராகமத்தில் 11:5 ல் தேவனாகியக் கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடம் காகத்தை அருவருப்பானவைகளின் பட்டியலில் சேர்த்தார். இந்த அழுகிய மாம்சத்தை உண்ணும் அருவருப்பான பறவைகளை கர்த்தர் தம்முடைய ஊழியனான எலியாவுக்கு உணவு வ்ழங்கும் சேவைக்காக உபயோகப்படுத்தியது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
நான் இந்தக் காட்சியை என் மனக்கண்களால் பார்த்தேன். நான் அங்கு எலியாவைப்போல அந்த கேரீத் ஆற்றண்டையிலே, விடியற்காலத்தில் குளிர்ந்த நீரைப் பருகிவிட்டு சில்லென்று வந்த காற்றில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். அங்கு திடீரென்று வந்த ஒரு காகம் என் முன்னால் ஒரு இறைச்சித் துண்டையும், அப்பத்தையும் போட்டு விட்டு கா … கா… என்று கத்திவிட்டு செல்கிறது. எனக்குத் தெரியும் என்னுடைய காலை உணவு வந்துவிட்டது என்று.
நல்லவேளை கர்த்தர் எலியாவுக்கு அருவருப்பான பறவை என்று எண்ணப்பட்ட காகத்தின் மூலம் உணவு அனுப்பப்போவதை முன்னமே சொல்லிவிட்டார்! அதனால் காகம் உணவைக் கொண்டுவந்தபோது அவனுக்கு அதிர்ச்சியாகவே இல்லை! நான் உண்மையை சொல்லப்போனால் எலியாவின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக சற்று முகத்தைத் தூக்கியிருந்திருப்பேன். ஐயோ! எனக்கு உணவு கொடுக்க குப்பைவண்டி வந்தால் எப்படியிருக்கும்?
அருவருப்பான பறவை ஒன்றால் உணவு கொடுக்கப்பட்டது என்று நம்முடைய மூக்கை சுழிக்கும்முன் கர்த்தராகிய இயேசு இந்த பறவையைப்பற்றி என்ன கூறுகிறார் பாருங்கள்!
லூக்கா 12:24 காகங்களைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, அவைகளுக்கு பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார், பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
இந்த வசனம் என் கவனத்தை நிச்சயமாகக் கவர்ந்தது. நாம் அருவருப்பாய் கருதும் பறவையைத்தானே கர்த்தர் இயேசு உதாரணமாகக் காட்டினார். நம்முடைய தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம்முடைய குறைகளை நிறைவாக்க வல்லவர், அதற்கு ஒருவேளை காகம் போன்ற தூதுவரை அனுப்பினாலும் பரவாயில்லை!
நான் இப்பொழுதும் சில கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கும் வேதாகமக் கல்லூரியான டாலாஸ் தியாலாஜிகல் செமினரி பற்றி அதிகமாக படித்திருக்கிறேன். அதில் நடந்த ஒரு சம்பவம் என் விசுவாசத்தை அதிகமாக விருத்தியாக்கியது. 1924 ல் அப்பொழுது பிரெசிடெண்ட் ஆக இருந்த டாக்டர் ஹாரி ஐயர்ன்சைட் அவர்கள், ஒரு மத்தியான வேளையில், இன்னும் ஒருசிலரோடு சேர்ந்து, கர்த்தரை நோக்கி இவ்வாறு ஜெபித்துக்கொண்டிருந்தாராம், ஆண்டவரே நீர் ஆயிரம் மலைகளில் உள்ள ஆடுமாடுகளுக்கு சொந்தக்காரர் அல்லவா! அவற்றில் சிலதை விற்று எங்கள் தேவைகளை சந்தியும் ஆண்டவரே என்று.
அந்த வேளையில் உயரமான ஒரு டெக்ஸாஸ் மனிதர் உள்ளே வந்திருக்கிறார். அவர் ஒரு எண்ணெய் வியாபாரி. அவர் கூறினாராம், நான் இன்று இரண்டு வண்டியில் வந்த என்னுடைய மாடுகளை விற்றேன். என்னுடைய வியாபாரத்துக்காகத்தான் விற்றேன் ஆனால் எதற்கு என்று எனக்குத் தெரியாது இந்தப்பணத்தை உங்கள் வேதாகமக் கல்லூரிக்குக் கொடுத்தும்படிக்கு எனக்குள் நான் உந்தப்பட்டேன் என்றாராம். அப்பொழுது அங்கிருந்த பெண் ஓடிப்போய் அவர்கள் ஜெபித்துகொண்டிருந்த அறைக்குள் சென்று, டாக்டர் ஐயர்ன்சைடை நோக்கி, ஹாரி, கடவுள் மாட்டை விற்று பணத்தை நமக்கு அனுப்பிவிட்டார் என்று கூறினாளாம்.
சந்தேகமே வேண்டாம்! கவலைப்படவேண்டாம்! அவர் நமது தேவைகளை சரியான நேரத்தில் சந்திப்பார். அது தரையிலோ, கப்பலிலோ, அல்லது காகம் மூலமோ கூட வரலாம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்