யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நான் எலியாவைப் பற்றித் தொடரும்முன் இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து பார்க்கும்படியாக ஒருசிலருடையை வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.
நாங்கள் அடிக்கடி வால்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு அருவியில் குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். அவர்கள் குரங்குகளுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு கையில் ஒரு பொட்டலத்தை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு பெண் கையிலிருந்த பலகாரத்தை அந்த குரங்கு இருந்த திசையில் தூக்கி எறிந்தாள். உடனே அது தன் கையிலிருந்த பொட்டலத்தை விட்டெரிந்துவிட்டு, பலகாரத்தை கையில் கவ்விப்பிடித்துக்கொண்டு அமர்ந்தது.
அதைப் பார்த்தவுடன் என் மனதில், எத்தனைமுறை நாம் இந்த குரங்குகள் போல அலைகிறோம் என்ற எண்ணம் வந்தது! நம்மிடம் எவ்வளவு துணிமணிகள், பொருட்கள் இருந்தாலும் புதிதாக எதையாவது பார்த்துவிட்டால் அதை ஓடிப்போய் வாங்கவேண்டும் என்ற ஆவல் இல்லையா! பண்டிகை காலத் தள்ளுபடிகளும், டி.வி விளம்பரங்களும், நான் எப்படியாவது இதை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவதில்லையா! அது மட்டுமல்ல நம்மில் எத்தனைபேர் மாற்றான் தோட்டத்து மல்லிகைமேல் நம் கண்களை அலைய விடுகிறோம்? கண்களால் கண்டதெல்லாம் நமக்கு சொந்தமாக்கி விடவேண்டும் என்ற வெறி நம்மில் எத்தனைபேருக்கு உண்டு?
இப்படிப்பட்ட இச்சை நம்மிடம் மட்டும் அல்ல, யோசுவா காலத்தில் வாழ்ந்தவர்களிடமும் இருந்தது. யோசுவா 6:17 -18 ல் கர்த்தர் எரிகோவை இஸ்ரவேல் மக்களிடம் ஒப்புக்கொடுத்தபோது, யோசுவா ஜனங்களை நோக்கி, இந்தப்பட்டணமும், அதிலுள்ள யாவும் கர்த்தருக்கு சாபத்தீடாயிருக்கும். அதில் ஏதாகிலும் எடுத்துக் கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தை சாபத்தீடாக்கி கலங்கப்பண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.
எந்தப் பொருட்களிலாவது தயவுசெய்து கை வைத்துவிடாதீர்கள், நீங்கள் கை வைத்து விட்டால் பிரச்சனை உங்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் சேர்ந்துதான், என்று யோசுவா கர்த்தருடைய கட்டளையை தெளிவாக ஜனங்களிடம் சொல்லிவிட்டான்.
சாபத்தீடானவை என்பதற்கு எபிரேய மொழியில் கொடுக்கப்பட்டுள்ள ’சேரம்’ என்ற வார்த்தை ‘அழிக்கப்படத்தக்கவை’ ’அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவை” என்ற அர்த்தம் கொண்டது. கர்த்தரால் அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்களை நான் பற்றிக் கொண்டிருப்பேனானால் எனக்கு என்ன நடக்கும்? நானும் சேர்ந்துதானே அழிக்கப்படுவேன்? யோசுவாவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றை நான் எடுக்காமல் இருப்பதுதானே எனக்கு நல்லது!
இதில் வந்த பிரச்சனை என்னவென்றால், ஆகான் இந்த கட்டளையை மதிக்கவேயில்லை, தன் வழியில் எறியப்பட்ட பலகாரத்தை குரங்கு தாவி பிடித்துக்கொண்டது போல தன் கண்களால் கண்ட பொருட்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான்.
ஆகானைப் பற்றிக் குறைகூறுமுன், எத்தனையோமுறை எனக்குக்கூட ஆகான் இருதயம் இருந்திருக்கிறது. நான் அடைந்தது போதாது, இன்னும் கொஞ்சம் வேண்டும் என்ற ஆசை இருந்தது, அடையக்கூடாதவைகளின் மேலும் ஆசை இருந்தது. ஆம்! நான் கர்த்தருக்கு சொந்தமானவள், ராஜாதி ராஜாவுடைய பிள்ளை, இந்த பூமியும் அதிலுள்ள யாவும் என் தகப்பனுடையவை என்று முற்றிலும் அறியுமுன்னர் ஆகானின் இருதயம்தான் எனக்குள்ளும் இருந்தது!
நம்மில் எத்தனைபேர் நாம் யாருடைய பிள்ளை என்றும், நாம் எந்த இராஜ்யத்தை சேர்ந்தவர்கள் என்றும் உணராமல் உலகப்பிரகாரமான பொருட்களின்மேல் அதிக ஆசையைக் கொண்டவர்களாக இருக்கிறோம்! குரங்கைப்போல ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தாவி பிடிக்கிறவர்களாகக் காணப்படுகிறோம்.
இன்று எதை தாவிப் பிடித்துக்கொண்டு எனக்கு இது வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய்? ஆகானைப்போல அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளைப் பற்றிக்கொண்டிருக்கிறாயா? கண்ணில் காண்பவைகளை அடையும் ஆசை நம்மை அழிவிற்குள் கொண்டுபோய் சேர்க்கும்!
பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டாம்;இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்;
பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத்: 6: 19-21)
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்