1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;”
இன்று நாம் எல்க்கானா, அன்னாள், சாமுவேல் என்பவர்களின் குடும்பத்துக்குள் நுழையப் போகிறோம்.
ஆண் பெண் என்ற பாகுபாடு அதிகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள் என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டுள்ளது.
இவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதுவதற்காக நான் அநேக வேதாகம விளக்கவுரைகளைப் படித்துக் கொண்டிருந்த போது, கிறிஸ்தவ விளக்கவுரை ஆசிரியர்கள் கூட, அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள் என்பதை ஏதோ அந்தக்காலத்தில் அநேக குடும்பங்களில் இருந்த ஒரு சாதாரண வழக்கம் போலத்தான் எழுதியிருக்கிறார்கள்.
இன்று ஒரு உதாரணமாக யாக்கோபுக்கு இரண்டு (+2) மனைவிகள் இருந்ததால், நாம் அவரை நம் வாழ்க்கையின் மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதுமட்டுமல்ல யாக்கோபு இரண்டு மனைவிகளை அடைந்ததற்கான தண்டனையையும், தாவீது பல மனைவிகளை அடைந்ததற்கான தண்டனையையும் அவர்கள் குடும்பம் நிச்சயமாக அனுபவித்தது என்பது உண்மை அல்லவா!
ஏதேன் தோட்டத்தில் தேவன் அமைத்த திருமணம் என்ற பந்தத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவைத்தான் கர்த்தர் ஏற்படுத்தினாரேத் தவிர ஒருவனுக்கு இரண்டு பேர், அல்லது ஒருவனுக்கு பலர் என்ற உறவுகள் கர்த்தரால் ஒருபோதும் ஏற்படுத்தப்பட்டதல்ல.
எல்க்கானா என்ற ஒருவனை மணந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் படிக்கும் முன்னர், எல்க்கானா வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் ஒவ்வொருவரும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் என்று பார்க்கிறோம். பல பெண்களை மணப்பது கூட இவர்கள் பார்வையில் மிகச்சரியாகப் பட்டிருக்கலாம்.
இன்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கும் சிலர் கூட , ‘ எல்லோரும் செய்வதைத் தானே நானும் செய்கிறேன், அதில் என்னத் தவறு ‘ என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தவறு என்ற எண்ணம் அவருடைய வார்த்தையை நாம் அதிகமாகப் பற்றிக் கொள்ளும்பொழுதுதான் தெரியும்.
மற்றவர்களுடைய கண்களுக்கு சரி என்றுப் பட்டவிதமாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இரண்டு மனைவிகளை மணந்த எல்க்கானா தன் குடும்பத்தில் வேதனையையும் கண்ணீரையும் விதைத்தான். அவன் இரு பெண்களை மணந்து கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தபோது அதனால் வரப்போகும் மனவேதனைகளை சற்றும் கற்பனைகூட செய்திருக்க மாட்டான்.
நாம் கூட அப்படித்தான், பின் வரும் விளைவுகளை உணராமல் நாம் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதை செய்து விடுகிறோம். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கு பிரியமில்லாத எந்த செயலை நீ செய்தாலும் அதனால் வரும் வேதனையை ஒருநாள் அனுபவிக்கத்தான் வேண்டும்.
ஒருவேளை நாம் இன்று அனலுமில்லாமல், குளிருமில்லாமல் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெது வெதுவென்று இருப்போமானால் நம்முடைய வாழ்வு தேவனை கனம் பண்ணாது. அனலற்ற கிறிஸ்தவ வாழ்க்கை உன்னை உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க செய்து விடும். ஜாக்கிரதை! அதனால் வரும் விளைவுகளையும் வேதனையையும் உன் கண்களால் காண்பாய்!
தேவனுடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றி, பரிசுத்த ஆவியானவரால் கனி கொடுக்கும் வாழ்க்கை மட்டுமே கர்த்தராகிய தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்தும்! இந்த லெந்து காலத்தில் தேவனாகிய கர்த்தரையும், அவருடைய வார்த்தையையும் அதிகமாகத் தேடி அவரில் நிலைத்திருக்க தேவன் உதவி செய்யுமாறு ஜெபி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்