1 சாமுவேல் 1: 4, 5 ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.
அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.”
என்னுடைய கார் சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்சனையா என்று பார்க்க சொல்லியனுப்பினேன். காட்டிலும் மேட்டிலும் அசையாமல் ஏறும்படியாக அமைக்கப்பட்ட வண்டி அது. அப்படிப்பட்ட வண்டி கொஞ்ச காலமாக சிறிய பள்ளத்தில் இறங்கினாலும் வேகமாக ஆடுகிறது. என்னவாயிருக்கும்? என்று எண்ணினோம். வண்டி சர்வீஸிலிருந்து வந்த போது சஸ்பென்ஷனில் எந்த பிரச்சனையும் இல்லை, அதைத் தாங்கியிருக்கும் ஒரு சிறிய உள்ளாழி ( bush) தான் உடைந்திருக்கிறது என்று அதை மாற்றி அனுப்பினர். ஒரு சிறு உள்ளாழி உடைந்து விட்டதால் இத்தனை பெரிய வண்டியே ஆட்டம் கொள்கிறது!
அப்படித்தானே நம் குடும்பமும்!
நம் குடும்பத்தில் நடைபெறும் ஒரு சிறிய தவறு, உறவுக்குள் ஏற்படும் ஒரு சிறிய கீறல், நம் குடும்பத்தையே ஆட்டி விடுகிறது அல்லவா?
இன்று நாம் எல்க்கானாவின் குடும்பத்தின் உள்ளே சென்று பார்க்கலாம்! நிம்மதி இழந்து ஆட்டம் கொண்டிருந்த அவனுடைய குடும்பத்தில் கீறல் விழுந்த புஷ் என்னவாயிருக்கும் என்று சற்று பார்க்கலாம்?
அன்னாளின் வாழ்க்கையைப் பற்றி நான் படித்த அநேக புத்தகங்கள் அவள் கணவன் அவளை மிகவும் நேசித்துதான் திருமணம் செய்தான் என்று கூறுகின்றன, ஆனால் திருமணம் ஆனவுடன் அவளுக்கு குழந்தைபிறக்காத மலட்டுத்தன்மையுடையவள் என்று தெரிந்தவுடனே, அவன் கர்ப்பத்தில் செழிமை உள்ள இன்னொருப் பெண்ணை மணந்து கொண்டான். கர்த்தர் நமக்கு அமைத்துக் கொடுத்த திருமண பந்தத்தில் குழந்தை இல்லாவிட்டால் இரண்டாவது மணம் செய்து கொள்ளலாம் என்று ஏதாவது ஏற்படுத்தினாரா?
எல்கானா மிகவும் விரும்பிய பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்ததால் பெனின்னாளுக்கு அவன் இதயத்தில் இடம் கிடைத்ததா? இல்லை! தவறான நோக்கத்துக்குக்காக ஏற்படும் உறவில் அன்புக்கு இடம் இல்லை. எல்க்கானா தன்னை விட அன்னாளை மிகவும் நேசிக்கிறான் என்ற எண்ணம் அவள் மனதில் காயமாக அல்லவா அமைந்தது!
எல்க்கானா அன்னாளுக்கு தன்னுடைய அன்பை மட்டும் தாராளமாக வழங்க வில்லை, அவளுடைய உலகப்பிரகாரமான தேவைகளுக்கும் அவன் தாராளமாக வழங்கினான். பெனின்னாளையும், அவன் பிள்ளைகளையும் விட அன்னாளுக்கு இரட்டிப்பாக வழங்கினான்! எல்க்கானா காட்டிய இந்த பட்சபாதம் பெனின்னாளை உடைய செய்ததால், அவள் தன்னுடைய வெறுப்பை அன்னாள் மீது காட்டினாள். அந்தக் குடும்பமே ஆட்டம் கொள்ள ஆரம்பித்தது!
இன்று உன் குடும்பத்தை தாங்கும் உள்ளாழியில் கீறல் உள்ளதா? நாம் ஒரு பிள்ளையை விட மற்ற பிள்ளையை அதிகமாக நேசித்தால் கூட உள்ளாழியில் கீறல் விடுந்து விடும்! கர்த்தரின் சித்தத்தை விட்டு நம்முடைய சுயநலத்துக்குக்காக நாம் செய்யும் காரியங்கள், பட்சபாதமுள்ள அன்பு இவை நம் குடும்பத்தை ஆடச் செய்து விடும் ஜாக்கிரதை! உன்னுடைய குடும்பம் எப்படியிருக்கிறது?
நம்முடைய குடும்பம் என்னும் வாகனத்தின் சஸ்பென்ஷன், மேடு பள்ளங்கள், காடு மலைகள் இவைகளைத் தாண்டும் போது ஆடாமல், குலுங்காமல் இருக்க வேண்டுமானால், அன்பு என்னும் உள்ளாழி கீறல் விழாமல் இருக்க வேண்டும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு நம் குடும்பத்தில் நிறைந்திருக்குமானால் தான் இது சாத்தியமாகும்! குடும்ப ஜெபம் இதற்கு ஒரு அஸ்திபாரம்! தயவு செய்து தேவன் உங்கள் குடும்பத்தில் கிரியை செய்ய இடம் கொடுங்கள்! உங்கள் உறவுகளில் கீறல் விழுந்துவிடாமல் காத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்