1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள்.
இந்த லெந்து நாட்களில் நம் உள்ளத்தையும், நம் வாழ்க்கையையும் பற்றி ஆராய்ந்து பார்க்க சில நாட்கள் நாம் வேதத்தில் இடம்பெற்ற சிலருடைய வாழ்க்கையைத் திரும்பி பார்க்கிறோம்.
இன்று அதிகாலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது கடந்த நாட்களை சற்று திரும்பிப் பார்த்தேன். மிகச் சிறிய வருமானம் இருந்த காலங்களில் கூட மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், பெரிதாக எதற்காகவும் ஆசைப்படாமல், இயேசுவின் அன்பு என்ற அஸ்திபாரத்தோடும் ஜெபம் என்ற கூரையோடும் கட்டப்பட்ட ஒரு நல்ல குடும்பத்தை தேவன் ஏற்படுத்திக் கொடுத்தற்காக என் உள்ளம் நன்றியால் நிரம்பிற்று!
இங்கே அன்னாள், பெனின்னாள் என்ற இரு பெண்களை மணந்த எல்க்கானாவின் குடும்பம் அஸ்திபாரமேயின்றி ஆடிக்கொண்டிருந்தது! யாருடைய தவறு அதற்குக் காரணம்?
ஒரு கணம் என்னோடே கூட சிந்தித்து பாருங்கள்! நாம் மற்றொரு பெண்ணின் நிழலில் வாழ்வதை கற்பனை பண்ணிப்பார்க்க முடிகிறதா? ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல! தினம் தினம், நம் குறைகளை முள்ளால் குத்துவது போல சுட்டிக்காட்டி , அதைப் பெரிது பண்ணி, கிண்டலும் கேலியும் பண்ணும் ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் வாழ்வது எப்படியிருக்கும்!
பெனினாளின் வார்த்தைகள் அன்னாளைக் காயப்படுத்தியது மட்டுமல்ல அவளைத் துக்கப்படுத்தியது என்று வேதம் கூறுகிறது. தினமும் அன்னாளுடைய மலட்டுத்தனத்தை அவள் உரத்த சத்தமாய்க் குத்திக்காட்டினாள்.
ஒரு ஆங்கில வேதாகம மொழி பெயர்ப்பு, பெனினாளுடைய வாய் அவளைப் புண்படுத்தியது என்று கூறுகிறது. எபிரேய மொழி பெயர்ப்பு , அவளுடைய வார்த்தைகள் அன்னாளை ஆழ்ந்த துக்கத்திலும் , சரீர வேதனையிலும் ஆழ்த்தியதாகக் கூறுகிறது! மனதில் வேதனை அதிகமாகும் போது நம்மால் சரியாக சாப்பிடக் கூட முடியாது அல்லவா? பட்டினியாக உடலை வருத்தும்போது உடல்நிலை பாதிக்கப் படும் என்பதும் நாம் அறிந்ததே! எல்க்கானா அன்னாளைப் பார்த்து, ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? என்று கேட்பதை நாம் 1:8 ல் பார்க்கிறோம். பென்னினாளின் வார்த்தைகள் அவ்வளவு தூரம் அன்னாளைப் பாதித்தன.
நம்முடைய வார்த்தைக்கு உள்ள சக்தியை நாம் என்றுமே குறைவாக எடை போடக் கூடாது. நான் என்னுடன் கல்லூரியில் படித்த பெண்கள் அவர்களுடைய கண்களுக்குக் குறைவாய்ப் பட்ட மற்ற பெண்களை வார்த்தையால் குத்திக் கிழிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படி வார்த்தைகளால் குத்தப் பட்ட ஒரு பெண், சாப்பிட்டதையெல்லாம் வாந்தி பண்ணி, உடல் நிலை பாதிக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். மனோதத்துவ நிபுணர்கள் இதனால் ஏற்படக்கூடிய பல நோய்களைப் பற்றி நமக்குக் கூற முடியும்!
பெனின்னாளுக்கு அன்னாளுடன் எந்த விரோதமும் இருக்கக் காரணம் இல்லை! அவள் பிரச்னைக்குக் காரணம் அவள் கணவன் எல்க்கானா தான். ஒரே பெண்ணுடன் வாழாமல், இரு பெண்களை மணக்க முடிவெடுத்ததுதான் இத்தனைக்கும் காரணம். பெனின்னாள் செய்ததும் தவறுதான்! திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனை மணக்க முன் வந்த போதே அவள் வாழ்க்கை ஆனந்தமான மலர்த் தோட்டமாக இருக்காது என்று உணர்ந்திருக்க வேண்டும். தன்னுடையத் தவறையும், தன் கணவன் எல்க்கானாவின் தவறையும் உணராமல் இந்தப் பெண் அன்னாளை வருத்தப்படுத்தினாள் என்று பார்க்கிறோம்.!
சிம்சோனின் கையிலிருந்த கழுதையின் எலும்பு போல பெனின்னாளின் வார்த்தைகள் அன்னாளை உடைத்து சுக்கு நூறாக்கியது. அதனால் தான் சங்கீதக்காரன் இவ்விதமாக கூறினான் .
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. [சங்:19:14]
இன்று உன்னுடைய வார்த்தைகள் யாரையாவது குத்தி, உடைத்து, சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கின்றனவா? யாரைவாது உன் வார்த்தைகளால் துக்கப் படுத்தி, விசனப் படுத்திக் கொண்டிருக்கிறாயா? யாரிடமாவது நீ பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு வேண்ட வேண்டியிருக்கிறதா?
எல்லாவற்றுக்கும் மேலாக எல்க்கானாவின் குடும்பத்தைப் போல உன் குடும்பம் அஸ்திபாரமற்று ஆடிக்கொண்டிருக்கிறதா? அன்பும், ஜெபமும் இல்லாமல் சண்டையும் சச்சரவும் உள்ள குடும்பம் நிலையாக நிற்காது! ஜாக்கிரதை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்