I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
அன்று நடந்த சம்பவம் என் உடம்பில் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று ஒருவர் என்னிடம் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகுமோ அந்த அளவுக்கு பாதிக்கப் பட்டுவிட்டேன் என்பதே அதின் அர்த்தம்.
சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப் பட்ட நீண்ட பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று கூட நினைக்காமல் நாம் பேசிவிடுகிறோம். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் ஒரு காரியம் தான். நாம் உணருமுன்னால் உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்ததைப் போன்ற நிரந்தர பாதிப்பை அது ஏற்படுத்தி விடும்.
அப்படிப்பட்ட ஒரு பாதிப்புதான் அன்னாளுக்கும் ஏற்ப்பட்டிருந்தது. ஆனால் அன்னாள் அதை எப்படி கையாண்டாள் என்று பாருங்கள்! அவள் ஒருநாளும் யாரோடும் சண்டையிட்டு கூக்குரலிடவில்லை! தன்னுடைய வேதனையை, துக்கத்தின் பாரத்தை கர்த்தரிடம் எடுத்து சென்றாள்.
யோவான் சுவிசேஷத்தில் கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்க்கிறோம்.
அப்பொழுது சீமோன் பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்:…. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு: பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான்: 18:10,11)
அன்னாளின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது, எப்படி இந்த சம்பவம் பொருந்தும் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்!
கர்த்தராகிய இயேசுவானவர் தம்மை பிடிக்க வகைதேடினவர்கள் மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தம்முடைய பிதாவானவர் மேல் முழு நம்பிக்கையும் வைத்து பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்ற விதமாக, அன்னாள் தன் கர்ப்பத்தை அடைத்திருந்த தன் தேவனாகிய கர்த்தரிடம் முழு நம்பிக்கையோடு தன்னை ஒப்புக்கொடுத்து, அழுது ஜெபித்தாள் என்று பார்க்கிறோம்.
அன்னாள், தன்னை வார்த்தைகளால் குத்தி சிதறடித்த பெனின்னாளை கோபத்தால் திட்டி தீர்த்து விட்டு, இதற்குக் காரணமான கர்த்தரை இழிவு படுத்தாமல் , இந்தப் பாத்திரத்தை தனக்குக் கொடுத்த பிதாவானவரிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.
அன்னாளின் வாழ்க்கையில் அவள் தன் தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையை மட்டுமல்ல, தன் மேல் உப்புக் காகிதம் போல காயத்தை ஏற்படுத்திய பெண்ணை பதிலுக்குக் காயப்படுத்தாமல், அந்தத் துயரத்தை அவள் கர்த்தரிடம் முறையிட சென்றதையும் பார்க்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படும் நமக்கு இது ஒரு பெரிய பாடம் அல்லவா? நம்மிடம் கோபத்தோடு நடந்து கொள்ளுபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம்மைத் துன்பப் படுத்துபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? பதிலுக்கு பதில் கொடுத்து விடுகிறோம் அல்லவா? நீ என்னைக் காயப்படுத்தினாய் நானும் உன்னை காயப்படுத்துகிறேன் என்ற எண்ணம் அநேக விசுவாசிகளுக்கும் உண்டு. நாமும் பதிலுக்கு உப்புக் காகிதத்தைப் போல உரசி நெருப்பை உண்டு பண்ணுவதில்லையா?
அன்னாளைப் போல தேவனை நம் வார்த்தைகளின் மூலமும், நம் வாழ்க்கையின் மூலமும் மகிமைப் படுத்த இன்று முயற்சி செய்வோம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்