நியாதிபதிகள் 16: 6, 7 தெலீலாள் சிம்சோனைப் பார்த்து; உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப் படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு சிம்சோன்; உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
பெரியவர்கள் நம் வீடுகளில் அடிக்கடி ‘ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் திருமண பந்தத்தையே கால்க்கட்டு என்றனர் !
சிலர் ‘ குடும்பத்தையே கட்டி அழு அல்லது வேலையையே கட்டி அழு’ என்ற வார்த்தைகளை குடும்பத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ அதிக நேரம் செலவழிப்பவர்களைப் பார்த்துக் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். நம்மில் சிலருக்கு குடும்பம் ஒரு கட்டு, சிலருக்கு வேலை ஒரு கட்டு, சிலருக்கு திருமணம் ஒரு கட்டு, இப்படியாக நாம் பலவிதமான கட்டுகளால் இந்த உலகத்தில் கட்டப்படுகிறோம்.
இந்தக் கட்டுகள் நம்மை தேவனுடைய சித்தத்தை செய்யும்படியான நம்முடைய நோக்கத்தை நோக்கி வழிநடத்துகின்றனவா? அல்லது தடை செய்கின்றனவா? என்பதே முக்கியம்.
மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து (ஏசா:5:18)
நாம் எதோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதே முக்கியம் என்று ஏசாயா கூறுகிறார்.
சிம்சோன் திம்னாத்துக்குள் நுழைந்த நாள் முதல் சோரேக் ஆற்றங்கரையில் தெலீலாளிடம் நட்பு கொண்டது வரை உணர்ச்சிகளாலும், சரீரத்தாலும் தன்னை பலவிதமான கட்டுகளுக்கு உட்படுத்தினான் என்று பார்க்கிறோம்.
சிம்சோனை கட்டிய கட்டுகளை அவன் பலமுறை அறுத்து எறிந்துவிட்டாலும், ஒருநாள் அவை அவனுடைய வாழ்வில் அறுக்க முடியாத கட்டுகளாய் மாறி அவனை அழித்து விட்டது என்ற கதை போன்ற சம்பவத்தை வேதாகமத்தில் இடம் பெற செய்த தேவனுடைய நோக்கமே, நாம் விளையாட்டாய் எடுத்துக்கொண்டு தவறான உறவும், தவறான காரியங்களும் நம்மை கட்டும் படி ஒப்புக்கொடுத்திருக்கிறோமே அவை ஒருநாள் நம்மை அழித்துவிடும் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ளத்தான்!
‘என்னைக் கயிறுகளால் கட்டு’ என்ற விளையாட்டு தெலீலாள் போன்ற சாமர்த்தியசாலியிடம் பலிக்கவில்லை. சிம்சோனைக் கட்டிய கயிறுகள் என்னென்னவெண்று பாருங்கள்!
என்னால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் , என்னுடைய பலத்துக்கு ஈடானவன் யார்? – இது சுய பெலன்
எனக்கு தெலீலாள் வேண்டும், என் உலகத் தகப்பனையும் பரலோகத் தகப்பனையும் நான் கேட்க வேண்டியதில்லை என்று நினைத்தான் – இது சுய தேடல்
நான் எப்படி தோல்வியடைய முடியும்! நான் மிகப் பெரியவன் இந்த சாதாரணமானவை என்னை மேற்க்கொள்ள முடியாது – இது சுய நீதி
சிம்சோனால் இவற்றை அறுத்து எறியமுடியாமல் தெலீலாள் விரித்த வலையில் விழுந்தான். நியாதிபதிகள் 16 ம் அதிகாரத்தில் பலமுறை தன்னுடைய சரீரத்தை கட்டும்படி அவளிடம் கொடுத்து விளையாடிக்கொண்டிருந்தவன், 14ம் வசனத்தில் தன் தலையையும் , 17 ம் வசனத்தில் தன் இருதயத்தையும் அவளுக்குக் கொடுத்துவிட்டான் என்று பார்க்கிறோம்.
சிம்சோனை தன் மடியிலே தூங்க வைத்துக்கொண்டு அவன் தலைமயிரை சிரைப்பித்தாள் என்ரு வாசித்த போது கர்த்தர் ஏன் அவனை திராட்சையின் பள்ளத்தாக்கான சோரேக் பள்ளத்தாக்குக்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார் என்று எனக்குப் புரிந்தது. அவன் சிந்தையை ஆட்கொள்ளும் எந்த பானமும் அவனுக்கு வேண்டாம் என்று கர்த்தர் கூறியிருந்தார். மதுபானமும், தெலீலாளும் அவன் சிந்தையை மாற்றி விடுவார்கள் என்று கர்த்தர் அறிந்திருந்தார்.
இன்று சிம்சோனின் கதைதான் நம்முடைய கதையும்! நம்முடைய சிந்தையை அடிமைப்படுத்தும் காரியங்களோடு தான் நமக்கும் போராட்டம்!
இன்று உன் வாழ்க்கையில் உன்னை சரீரத்தாலும், இருதயத்தாலும், சிந்தையாலும் இறுகக் கட்டியிருக்கும் தெலீலாளை தூக்கி எறிந்து விடு. அந்தத் தெலீலாள் ஒரு பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ அல்லது பொருளாகவோ அல்லது புகழாகவோ அல்லது பதவியாகவோ இருக்கலாம்.
தேவனாகிய கர்த்தரின் பிள்ளையாக நாம் வாழத்தடையாயிருக்கும் எந்த தெலீலாளும் நமக்கு வேண்டாம்!
சிந்தையில் கவனம் செலுத்து! அவைகள் வார்த்தைகளாகிவிடும்!
வார்த்தைகளில் கவனம் செலுத்து! அவைகள் செயல்களாகிவிடும்!
செயல்களில் கவனம் செலுத்து! அவைகள் உன் பழக்கவழக்கங்கள் ஆகிவிடும்!
பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்து! அவைகள் உன் நடத்தை ஆகி விடும்!
நடத்தையில் கவனம் செலுத்து! அதுவே நீ சேருமிடம் எதுவென்று முடிவுசெய்யும்!
( ஆங்கிலத்தில் யாரோ ஒருவரால் எழுதப்பட்டது)
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல தெலீலாளின் வலையில் சிக்கி விடாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்