1 இராஜாக்கள் 17: 9 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
இந்த வசனத்தில்தான் நாம் முதன்முதலில் சாறிபாத் விதவையை சந்திக்கிறோம். நான் இதை முதலில் வாசித்தபோது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி என்னவென்றால், ஏன் தேவனாகியக் கர்த்தர், தம்முடைய ஊழியக்காரனை ஒரு தனிமையில் வாழ்ந்த விதவையினிடத்தில், அதுவும் ஒரு பைசா கூட இல்லாத ஒரு ஏழைப்பெண்ணிடம் அனுப்ப வேண்டும் என்று. இது ஆச்சரியமாக இல்லையா?
ஆனால் இதைப் படிக்க ஆரம்பித்தபோது, பரம பிதாவாகிய தேவன் , எலியாவை விதவையின் வீட்டுக்குள் அனுப்பி, ஆசீர்வாதத்தில் மழையைப் பொழிந்த விதமாக, அவர் பூமியில் கிரியை செய்து துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்கிறதைக் காண முடிந்தது.
இன்று நாம் சாறிபாத்தைவிட்டு புறப்படும் முன்னர், நம் தேவனாகியக் கர்த்தர் விதவைகளை ஆதரிக்கும் விதத்தையும், அப்படிப்பட்டோரை ஆதரிக்கும்படி நமக்குக் கட்டளை கொடுத்திருப்பதையும் பார்க்கலாம்.
வேதத்தில் கிட்டத்தட்ட 96 முறை இந்த வார்த்தை விதவை என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே அது தேவன் அதிகமாக நேசித்த மக்களின் பெயர் என்று நமக்குப் புரிகிறது அல்லவா?
இருளில் ஒளிவீசும் தீபம் போன்ற சில வேத வசனங்களை இன்று நாம் சிந்திப்போம்.
1. சங்: 146:9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும் ஆதரிக்கிறார்.
2. எரேமியா 7:6 பரதேசிகளையும், திக்கற்றவர்களையும், விதவையையும் ஒடுக்காமலும்…..
3. எரேமியா 22:3 … நீங்கள் பரதேசியையும், திக்கற்றவனையும், விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமல் இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தை சிந்தாமலும் இருங்கள்.
4. சகரியா:7:9,10 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து …… விதவையையும் திக்கற்ற பிள்ளையையும், பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்…..இருங்கள் என்றார்.
5. மல்கியா 3:5-6 நான் நியாயந்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து,…. எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும்,பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய் தீவிரமான சாட்சியாய் இருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.
6. யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படும் உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறை படாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்கிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பான மாசில்லாத, சுத்தமான பக்தியாயிருக்கிறது.
அப்படியே ஒரு வரைபடம் போன்ற ஒழுங்குமுறை உருவாகிறது அல்லவா! எனக்குத் தெரிகிறது. வேதம் முழுவதுமே தேவன் ஆதரவற்றவர்களுக்குத் தாமே ஆதரவாக இருப்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கடைசியான வேதாகமப் பகுதியில், அப்போஸ்தலனாகிய யாக்கோபு, இயேசுவின் சகோதரர் என்று வேதாகம வல்லுநர்களால் கருதப்படும் யாக்கோபு, கர்த்தராகிய இயேசு விதவையின் மகனை உயிரோடு எழுப்பினதைத் தன் கண்களால் கண்ட யாக்கோபு, கர்த்தராகிய இயேசு இன்னொரு விதவை தன்னுடைய கடைசி நாணயத்தை ஆலயத்தில் செலுத்தியதைக் கண்டு அவளைப் புகழ்ந்ததைக் கண்ட யாக்கோபு, என்ன எழுதுகிறார் பாருங்கள்! நாம் இந்த எளியவருக்குக் காட்டும் தயவே மாசில்லாத சுத்தமான பக்தி என்கிறார்.
தேவனாகியக் கர்த்தர் நமக்குக் கொடுதிருக்கிற கட்டளைகளில் ஒன்று இது. நம்மை சுற்றிலும் உள்ள , அல்லது நம்முடைய குடும்பத்தில் உள்ள ஆதரவற்றோருக்கும், விதவைகளுக்கும் நாம் உதவிசெய்ய முன் வருவோமா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்