1 இராஜாக்கள் 17:21 – 23 அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து; என் தேவனாகியக் கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார், பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது ………. எலியா பிள்ளையை எடுத்து …….அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்றான்.
இன்றைய வேதாகமப்பகுதியை வாசிப்போமானால், அன்று அந்த சிறிய குடிசையில், அந்த விதவையின் வீட்டில் விவரிக்கமுடியாத சந்தோஷம் நிலவியது நம் மனக்கண்களுக்குத் தெரியும்.
கண்ணீரோடும், அழுகையோடும் இருதயமே வெடித்துச் சிதறியதுபோல அமர்ந்திருந்த அந்த விதவையிடம் எலியா, பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்றான்.
எலியா அந்தப் பிள்ளையை ஏந்தியவனாய் மேலறைக்கு சென்றபோது, அந்தப் பெண்ணின் மனதில் என்னதான் ஓடிக்கொண்டிருந்திருக்கும்? அவளை சுற்றியிருந்த வறுமையிலிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது அல்லவா? மனதைப் பிழிந்தெடுக்கும் வேதனை! நீங்களும் இதை அனுபவித்திருக்கிறீர்களா?
எனக்கு ஒன்று மட்டும் தேரியும், நான் அந்தப்பெண்ணின் இடத்தில் இருந்திருந்தால், எலியா என் பிள்ளையை மேலே கொண்டுபோனவுடனே, தேவனிடம் ஒரு அற்புதத்தைக் கேட்டிருப்பேன். ஏனெனில் ஒவ்வொருநாள் காலையிலும் மாவும் எண்ணெயும் குறைவுபடாமல் நிறைவதை பார்த்தவள் நான் தானே! அந்த அற்புதத்தை செய்த தேவன் இதை செய்ய முடியாதா?
எலியா மேலிருந்து வந்தபோது, அவள் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று அவள் அறிந்தபோது, அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவள் விசுவாசத்தை உறுதிப்படுத்தின.ஒவ்வொருதடவை அவளுடைய குமாரன் தன் தாயின் கழுத்தை சுற்றி தன் கைகளை வீசியபோதும், எலியா தன்னுடைய தேவனைப்பற்றிக் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று உணர்ந்தாள். எலியாவின் தேவன் வாக்கு மாறாதவர்!
இந்த சம்பவத்தின் மறுபக்கத்தையும் பார்ப்போம்! இந்த் விதவையும் அவள் குமாரனும் மட்டுமா தேவனுடைய வல்லமையை அனுபவித்தனர்???? எலியா அனுபவிக்கவில்லையா?
எனக்கு மிகவும் பிடித்த வேதாகமப்பகுதி இது, ஏனெனில் இது எலியா தன்னுடைய தேவனுடன் கொண்டிருந்த உறவைக் காட்டுகிறது. அவன் தேவனிடம் அந்த விதவையின் சார்பாக எடுத்த வேதனையின் குரல் என் செவிகளில் தொனிக்கிறது. தனக்கு தங்க இடம் கொடுத்த அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பேரிடர் அவன் உள்ளத்தைக் கசியவைத்தது. அவள் எனக்கு இடம் கொடுத்து என்னைப் பார்த்துக்கொண்டாள், இப்பொழுது நீர் அவள் தேவையை சந்தியும் என்று ஜெபித்தான்.
அவன் ஜெபித்தபோது தேவன் சர்வ வல்லவர், இறந்த பிள்ளையை உயிரோடெழுப்ப முடியும் என்று அவன் முழுமனதோடு விசுவாசித்திருப்பான் அல்லவா? அவன் ஒருநாள் ஜெபித்தபோது இஸ்ரவேல் முழுவதும் மழை நின்றுபோனதே அந்த ஒரு அடையாளம் போதாதா அவன் ஜெபம் கேட்கப்படும் என்பதற்கு. இப்பொழுது தேவனாகியக் கர்த்தர், அவனுடைய ஜெபத்தைக் கேட்டதன் மூலம் தன்னுடைய வல்லமைக்கு அளவே இல்லை என்று வெளிப்படுத்தினார். மரணம் கூட அவரை ஜெயிக்க முடியாது.
எலியா தனக்கு வாக்கு மாறாத வல்ல தேவனை விசுவாசித்தான். எலியா கிலேயாத்தின் குடிகளில் வாழ்ந்தபோது அவரை விசுவாசித்தான்! ஆகாபின் அரண்மனையில் நின்றபோது விசுவாசித்தான்! கேரீத் ஆற்றண்டையில் அன்றாட உணவு கொடுப்பேன் என்றவரை விசுவாசித்தான்! இப்பொழுது சாறிபாத்தில் முற்றிலும் அவரை விசுவாசித்தான்!
எலியாவின் வாழ்க்கைப்பாதையில் ஒவ்வொரு தருணத்திலும், தேவன் தம்முடைய வல்லமையை மேலும் மேலும் அதிகமாக வெளிப்படுத்தி அவர் எப்படிப்பட்டவர் என்று அவன் புரிந்துகொள்ள செய்தார். இது அவனை இதைவிட மேலான ஒரு தருணத்தில், அவன் தேவனுடைய நாமத்துக்காக, பாகால் தீர்க்கதரிசிகள் முன்பாகவும், யேசெபேலின் தோப்பு தீர்க்கதரிசிகள் முன்பாகவும் நிற்க வேண்டிய நேரத்தில், அவன் அசையாமல் உறுதியோடு நின்று, தேவனை மகிமைப்படுத்திய ஒரு வல்லமையான பாத்திரமாக அவனை உருவாக்கிற்று.
ஒரு சாதாரண மனிதன், ஒரு உன்னத தீர்க்காதரிசியாக உருவாக்கப்பட, தேவனுடைய மறைமுகமான கரம் அவனை வனைந்து கொண்ட அற்புதத்தைதான் நான் இங்கு பார்க்கிறேன்.எலியாவின் தேவன் இன்றும் நம் வாழ்க்கையில் கிரியை செய்கிறார்.
இன்று உன் வாழ்வில் நடக்கும் சில காரியங்கள் உனக்கு துக்கத்தைக் கொடுக்கலாம். எனக்கு உதவிசெய்த இந்தப்பெண்ணுக்கு ஏன் ஆண்டவரே இப்படி நடந்தது என்று எலியா கதறியவிதமாக நீயும் கதறிக்கொண்டிருக்கலாம். இவை யாவும் உனக்குத் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தவே! அதன்மூலம் உன்னைத் தம் பாத்திரமாக உருவாக்கவே என்பதை மறந்துபோகாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்