1 இராஜாக்கள் : 17: 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
1 இராஜாக்கள் 17:19 – 21 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; ……..அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து; என் தேவனாகியக் கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
எலியா கிலேயாத்தின் குடிகளில் வாழ்ந்தபோது, இஸ்ரவேலின் கீழ்ப்படியாமையைக் கண்டு, இஸ்ரவேலின் தேவன் மழையை நிறுத்தி இந்த ஜனங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க மாட்டாரா என்று ஏங்கிய நாட்களிலிருந்து, அவன் ஆகாபின் அரண்மனைக்கு தேவனால் அனுப்பப்பட்டு மழை பெய்யாது என்ற செய்தியைக் கொடுத்த பின், தேவன் அவன் ஜெபத்தைக்கேட்டு, மழையையும், பனியையும் நிறுத்தியதைக் கண்டபின்னர் அவன் மனதில் தான் தேவனுக்காக செய்ய வேண்டிய பெரிய பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று நினைத்திருப்பான்.
அவன் கேரீத்தண்டை வந்தபோது கூட, முரட்டு மலைவாசியான அவனுக்கு அந்த வாழ்க்கை மிகவும் கடினமாகத் தோன்றியிருக்காது. ஆனால் அவனை போஷிக்க காகங்களுக்கு கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொன்னபோது சற்று திகைத்திருப்பான் அல்லவா! இறந்தவைகளையும் அழுகியவைகளையும் சாப்பிடும் காகங்கள் மூலமாக தனக்கு உணவு வருமா என்ற எண்ணம் வந்திருக்கும்.
காகங்கள் மூலமாக உணவு அளித்தது மட்டுமல்லாமல் அதே காகங்கள் மூலமாக தேவனாகியக் கர்த்தர் அவனைத் தன்னுடைய உன்னதமான சேவைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.ஆம் அந்த காகத்தின் மூலம் உணவு பெற்ற அனுபவம் இல்லாதிருந்தால் எப்படி சாறிபாத்தின் விதவையின் வீட்டில் மேல் வீட்டு அனுபவம் கிடைத்திருக்கும். மரித்துபோன பிள்ளையின் உயிருக்காக தேவனை நோக்கி விண்ணப்பித்த அந்த அனுபவம், தேவன் அந்தப் பிள்ளைக்கு உயிர் கொடுத்தவுடன் அந்தப் பிள்ளையை அதன் தாயிடம் ஒப்படைத்த அந்த அனுபவம் எங்கிருந்து வந்திருக்கும்! எலியா தேவனுடைய வல்லமையால், மரித்த குழந்தைக்கு இந்த உலக வாழ்வை திருப்பிக் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த சீதோன் நாட்டில் உள்ள அந்நிய தேவர்களை வணங்கிய சாறிபாத்தில் நித்திய ஜீவனையும் கொண்டு வந்தான்.
எலியா சாறிபாத்தில் வாழ்ந்ததால் வந்த விளைவை இன்று நாம் பார்த்தபின்னர், இந்த சாறிபாத் பயணத்தை நாம் முடித்து விடலாம்.
எலியா ஆகாபின் கோபத்துக்கு மறைந்திருக்கவே சாறிபாத்துக்கு அனுப்பப்பட்டான் என்றுதான் நான் எண்ணியதுண்டு. ஆனால் எவ்வளவு தவறு அது என்று இன்றுதான் கண்டு கொண்டேன்.உலகத்தில் நடக்கும் காரியங்களை நாம் காணும் விதம் வேறு, தேவன் காணும் விதம் வேறு அல்லவா?
ஒரு மூன்று சம்பவங்களை அதற்கு உதாரணமாகக் கூறுகிறேன். நீங்கள் அந்த காலத்தில், அந்தப் பகுதியின் வரைபடத்தை பார்த்தால், சாறிபாத் எங்கேயிருந்தது என்று தெரியும். மத்தியத்தரைக்கடல் கிழக்குக் கரையில், ஒரு குறுகலான நிலப்பகுதியே இந்த சீதோன். கர்மேல் பர்வதத்தின் வடபகுதியில் 120 மைல் அளவுக்கு இந்த நிலப்பரப்பு இருந்தது. இதில் மூன்று பட்டணங்கள் அமைந்திருந்தன. மேல்பரப்பில் சீதோன் நகரம், அதன்கீழே சாறிபாத், தென்பகுதியில் தீரு இருந்தது. இந்த பிரபலமான தீரு சீதோன் நகரங்களுக்கு நடுவிலே , இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவே வைக்கப்படும் சாண்ட்விச் போல சாறிபாத் இருந்தது.
தேவன் தம்முடைய தாசனை சாறிபாத்துக்கு மூன்று வருடங்கள் தங்கும்படி அனுப்பியதன் நோக்கம் என்னவாயிருந்திருக்கும்? அங்கு எலியாவின் வாழ்க்கை சண்ட்விச் போல சுவையூட்டியது. விதவையின் குமாரனை உயிரோடு எழுப்பிய கதை சாறிபாத்திலே தங்கியிருக்கும் என்றா நினக்கிறீர்கள்? நிச்சயமாக அது தலைமுறைதோறும் சொல்லப்பட்ட ஒரு சம்பவமாக மாறியிருக்கும். இவைகள் எல்லாம் முடிந்து பல வருடங்களுக்கு பின்னர் அங்கு தன் பிள்ளைக்காக அழுது கொண்டிருந்தாள். மத்தேயு அதை எப்படி குறிப்பிடுகிறார் பாருங்கள்.
மத்தேயு 15: 21 , 22 பின்பு இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்…. என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
இவளுக்கு எப்படி தெரியும் கர்த்தராகிய இயேசுவை ஆண்டவர் என்றும், தாவீதின் குமாரன் என்றும்? ஆச்சரியமாக இல்லை? இஸ்ரவேலின் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய எலியாவின் கதையும், அவன் மரித்த பிள்ளையை உயிரோடெழுப்பிய கதையும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலர் 21: 3-5 பாருங்கள்.
சிப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியா நாட்டிற்கு ஒடி, தீரு பட்டணத்துறையில் இறங்கினோம்….. அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து அங்கே ஏழுநாள் தங்கினோம்…… அந்த நாட்கள் நிறைவேறின பின்பு, நாங்கள் புறப்பட்டுப் போகையில் அவர்களெல்லாரும் மனைவிகளோடும், பிள்ளைகளோடும்கூட பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழியனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணினோம்.
எலியா அந்தப் பட்டணத்தில் கால் வைத்து நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின்னர், இயேசு அந்தப் பட்டணத்தில் ஊழியம் செய்யும்படியாகவும், பவுல் அப்போஸ்தலன் சுவிசேஷத்தைக் கொண்டுவரும்படியாகவும் அங்கே வாசல் திறக்கப்பட்டு இருந்தது.
நாம் கர்த்தரின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது, நம்மை ஆச்சரியப்படுத்தும்விதமாக தேவன் நம்மூலம் கிரியை செய்ய முடியும். அந்த அழைப்பு ஒருவேளை காகத்தின் மூலம் அனுப்பட்ட உணவு சேவையாக இருக்கலாம், அல்லது சாறிபாத் விதவையின் மகனை திரும்பக் கொடுத்த சம்பவமாக இருக்கலாம்! எதுவாயிருந்தாலும் சரி! கர்த்தருடைய சித்தத்தின்படி வாழும்போது அவர் நம் மூலமாக பெரிய காரியங்களை அவருடைய நாம மகிமைக்காக செய்வார் அல்லேலூயா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்