1 இராஜாக்கள் 18: 1-2 அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி, நான் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்..
அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வாலிபனான தீமோத்தேயு ஒரு மகனைப் போல என்று சொல்லலாம். புதிய ஏற்பாட்டில் தீமோத்தேயு 1, 2 புத்தகங்கள் இந்த கர்த்தருடைய பிள்ளைகள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை பதிவிட்டுளது, 2 தீமோத்தேய் 1:2 ல் பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது என்று பவுல் எழுதுவதைப் பார்க்கிறோம். பின்னர் 8 -10 ல் பவுல் அவன் மீது கொண்ட மிகுந்த அன்பினால், அவன் தைரியமாய் , வெட்கப்படாமல் சாட்சி கொடுக்கும்படி அவனிடம் கூறுகிறார்.
உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு நம்பிக்கையூட்டும் வேதபகுதி! அவர் திடீரென்று நம்மைப்பார்த்து, இதைச்செய், அதைச்செய் என்று சொல்வதே இல்லை. முதலில் நம்மை இரட்சித்து, பின்னர் தம்முடைய பரிசுத்த அழைப்பினாலே அழைக்கிறார். எரேமியா கூறுவதுபோல, நம்முடைய வாழ்க்கையைக்குறித்த திட்டங்கள் எல்லாமே நினைக்கப்பட்ட பின்னர், அவருடைய வார்த்தை நம்மை அழைக்கிறது. (எரேமியா 29:11)
இதன் பின்னணியில் இன்று நாம் இன்றைய வேதாகமப்பகுதியைப் பார்ப்போம். அவன் சாறிபாத்துக்கு வந்து மூன்று வருடங்கள் கழிந்தபின்னர், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகிற்று. கர்த்தர் எலியாவை குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட வேலைக்காக அழைக்கிறார். அதுமட்டுமல்ல, அவன் என்ன செய்ய வேண்டுமென்றும், என்ன பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தேவன் ஒரு பெரிய எழுப்புதலை இஸ்ரவேலில் கொண்டுவரும் பணியில் எலியாவை ஈடுபடுத்துகிறார். நான் வேதத்தைப் படித்தவரை, அது எவ்வளவு பெரியதொரு எழுப்புதல் என்று எலியாவுக்கே தெரியாது. தேவனுடைய நினைவுகள் அவனுக்குத் தெரியாதே! அவற்றின் மத்தியில் முக்கியஸ்தனாக எலியா நிற்கிறான்.
ஆனால் எலியாவுக்கு ஒன்றுமட்டும் தெரியும். தேவனாகியக் கர்த்தர், நீ நினையாத வேளையில், நினையாத காரியங்களை, வல்லமையோடு செய்ய வல்லவர் என்று. காகங்கள் மூலம் உணவு சேவையை நடத்த அவரால் மட்டுமே முடியும்! மரித்த குழந்தையை உயிர்ப்பிக்க அவரால் மட்டுமே முடியும்! மழையை நிறுத்த அவர் மட்டுமெ வல்லவர்! அவர் எலியாவிடம் மழை வரப்போகிறது என்று நீ ஆகாபுக்கு சொல் என்று கட்டளையிட்டபோது, கர்த்தர் ஏதோ ஒரு பெரிய காரியத்தை செய்யப்போகிறார் என்று அவனுக்குத் தெரியும் ஆனால் என்னவென்று தெரியாது.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய வேதபகுதி இது! தேவனுடைய அழைப்புக்காக நாம் ஒவ்வொருவரும் நம் செவிகளைத் திறந்தே வைக்க வேண்டும். பவுல் தன் அன்பு மகன் தீமோத்தேயுவுக்குக் கூறியவிதமாக நமக்கு தேவனின் பரிசுத்த அழைப்பு எந்த வேளையிலும் கதவைத்தட்டலாம்! எரேமியா தீர்க்கதரிசி கூறியவிதமாக அவர் நமக்காக கொண்டிருக்கும் நினைவுகள் தீமைக்கல்ல, நன்மைக்கேதுவானதே! அவர் நம்மை அழைப்பாரானால் அதற்கேற்ற வல்லமையை நமக்கு அருளி, அவர் நமக்குக் கொடுத்திருக்கிற பணியை நாம் முடிக்கவும் உதவி செய்வார்.
அவர் எலியாவின் தேவன்! அவர் உன்னுடைய , என்னுடைய தேவனும் கூட! அவருடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமா?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்