1 இராஜாக்கள் 18: 15-18 அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான். ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
வேதம் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விசேஷமான புத்தகம் என்பதை நான் மறுபடியும் மறுபடியும் சொல்வதால் உங்களுக்கு சலித்துப் போகாது என்று நினைக்கிறேன்.
இன்று மறுபடியும் நாம் காணும் இந்த எலியாவுக்கும், ஆகாபுக்கும் நடந்த உரையாடல் வேதம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எவ்வளவு தெளிவாக வெளிப்படுத்துகிரது என்று பார்க்கிறோம்.
அவர்கள் இருவருடைய உரையாடலையும் என் மனக்கண்களால் பார்த்தேன். எலியா சாறிபாத்திலிருந்து கால்நடையாய் வந்ததால் சற்று அவனிடம் களைப்பு தெரிந்தது. சற்று அழுக்காகவும் காணப்பட்டான். ஆகாபோ தன்னுடைய ராஜ வஸ்திரங்கள் தரித்தவனாய், தன்னுடைய சேவகர் சூழ நின்று கொண்டிருந்திருப்பான்.
மூன்றரை வருட காலமாய் இஸ்ரவேலில் தேடப்பட்ட குற்றவாளியை, மிருகஜீவன்களுக்கு புல் தேட சென்றபோது சந்திப்போம் என்று ஆகாப் நினைக்கவேயில்லை.தன்னுடைய கோபத்தை எல்லாம் வார்த்தையில் கொட்டி அவன், இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். ஆம்! மற்றவர்மேல் பழியைப்போடும் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது.
எலியாவின்மேல் பழியைப்போடுவதை நிறுத்திவிட்டு, ஆகாப் தன்னை சற்று கண்ணாடியில் பார்த்திருந்தால் நிலைமையே மாறியிருந்திருக்கலாம். ஆனால் இந்த மூன்றரை வருடங்களாய் மனம் மாறாதவன் எலியாவின் மேல் பழியைப் போடுகிறான்.அதற்கு எலியா இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்று அவனுடைய வாசற்படியில்தான் தான் இஸ்ரவேலின் கலக்கம் ஆரம்பித்ததாக அவனுக்கு நேரிடையாகக் கூறினான்.
எலியா தைரியமாக ஆகாபிடம் உண்மையை நேருக்கு நேர் உரைக்கிறதைப் பார்க்கிறோம். ஆகாபுக்கும் அவனுடைய முன்னோருக்கும், கர்த்தருடைய கட்டளைகள் மறந்தே போய்விட்டது! நாம் இன்று கேள்விப்படும் அம்னீசியா நோய் அவர்களுக்கு அன்று வந்துவிட்டது போல! அதுவும் தேவனுடைய கட்டளைகளும், எச்சரிக்கைகளும் மட்டும் மறந்து போயின மற்றவை அல்ல!
உபாகமம் 28: 15, 23, 24 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
மூன்றரை வருடங்கள் தேவனுடைய தண்டனையை வாங்கியபின்னரும் மன்ம் திருந்தாத ஆகாபிடம், எலியா , என்மேல் பழியைப் போடாதே, தேவனும் இதற்கு காரணம் அல்ல, வானம் வெண்கலமாய் போய்விட்டதற்கு , உங்கள் கண்களுக்கு ஆனந்தமானபடி நடந்து, தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஆட்சி செய்யும் நீயும் உன் உறவினருமே காரணம் என்றான்.
எத்தனைமுறை நம் வாழ்வில் நம்மை வந்தடையும் கஷ்டங்களுக்கு நாமே காரணமாக அமைந்து விடுகிறோம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் நம்முடைய விரலை மற்றவரை நோக்கி நீட்டுவதில்லையா?
தாவீது செய்த பாவங்களையும், அவன் அவற்றை ஒப்புக்கொண்டு , தன்னுடைய தவறுகளை அறிக்கையிடுவதை நாம் சங்கீதம் 51 ல் வாசிக்கிறோம் அல்லவா? தேவனுடைய இரக்கமும், நம்மை மன்னித்து, நம் பாவங்களை மறக்கும் அவருடைய தெய்வீக குணமும் தான் நமக்கு சுத்த இருதயத்தைத் தர முடியும்.
அன்று கொல்கதா மலையில் தேவனுடைய குமாரனாகிய இயேசு, எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டபோதே, பழி போடும் விளையாட்டு முடிந்து விட்டது. அவருடைய கிருபை நம்மேல் விரலை நீட்டி நம்மை குற்றவாளியாக்குவதில்லை. நாமும் நம்முடைய குற்றத்திற்காக மற்றவர் மேல் விரலை நீட்டாமல், தாவீதைப் போல அவற்றை அறிக்கையிட்டு விட்டு விடும்போது இரக்கம் பெறுவோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்