1 இராஜாக்கள் 18:19 – 20 இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
எழுப்புதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடினேன், அதற்கு மறுமலர்ச்சி, உயிர்ப்பு என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகாபுடைய ஆட்சி காலத்திலும், அவனுடைய தகப்பன் ஆண்ட காலத்திலும் இஸ்ரவேல் நாட்டின் நிலை மிகவும் கேவலமாகியிருந்தது. மோசே கொடுத்த கட்டளைகளும், எச்சரிக்கைகளும் மூட்டை கட்டி எறியப்பட்டன. இந்த மழையில்லாத மூன்றுவருட கால வறட்சிக்கு முன்பு, செழிப்பான நாடு போன்ற வெளிப்புற காட்சியால் , அவர்கள் பரிசுத்தமில்லாமல் சீரழிந்து கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவேயில்லை. வானத்துக்கும் பூமிக்கும் தேவனாகியக் கர்த்தருக்கு செய்யப்பட்ட ஆராதனை பண்டைகால வழக்கமாயிற்று. பாகால் வழிபாடு, அன்றைய தினத்தில் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாயிற்று. மழையும் பனியும் நின்று போய் வறட்சி நிலவ ஆரம்பித்தபோது, இஸ்ரவேல் மக்களுக்கு, எலியாவின் ஜெபத்துக்கு பதில் கொடுத்து தேவன் மழையை நிறுத்தினார் என்பதன் பொருளே புரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அது இயற்கையின் சுழல், அவ்வளவுதான்.
கர்த்தருடைய வார்த்தை மறுபடியும் எலியாவுக்கு உண்டாகி, அவனை ஆகாபுக்கு காண்பிக்கும்படி கூறியபோது, எலியா இஸ்ரவேல் அனைத்தையும் கர்மேல் பர்வதத்தில் கூடும்படி ஆகாப் மூலமாக அறிக்கை விடுத்தான். ஆதிமுதல் தேவனாகியக் கர்த்தர் செய்தது போல மலைகள் தேவனுடைய செய்தியை மனிதருக்கு வெளிப்படுத்தும் இடமாகத் தெரிந்துகொள்ளப்பட்டது.
மோரியா மலைமேல் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தம்முடைய அழைப்பை உறுதிப்படுத்தி, ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக்கி ஈசாக்கை இரட்சித்தார்.
சீனாய் மலை மீது கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு தம்முடைய கட்டளைகளைக் கொடுத்தார்.
இப்பொழுது இஸ்ரவேல் மக்களின் முரட்டாட்டமும், கீழ்ப்படியாமையும் அவர்களை அழித்துக் கொண்டிருந்த வேளையில் கர்த்தர் அவர்களைத் தம்முடைய தாசனாகிய எலியா மூலம் கர்மேல் பர்வத்தண்டை கூடிவரச் செய்கிறார்.
இஸ்ரவேல் அனைத்தும் உற்சாகத்துடன் கர்மேல் பர்வதம் ஏறினர், அந்த மலை, எலியாவுக்கும், பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கும் இடையே நடக்கப்பக்கும் சரியான போட்டிக்கு ஆயத்தமாயிற்று.
எலியா கர்மேலுக்கு வந்தாயிற்று, ஆகாபும் வந்துவிட்டான், பாகாலின் தீர்க்கதரிசிகள் வந்தாயிற்று, இஸ்ரவேல் மக்களும் கூடிவிட்டனர்.
உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த இஸ்ரவேலை உயிர்ப்பிக்கிற வேளை வந்தாயிற்று. இஸ்ரவேலின் கண்களுக்கு முன்னர் மழையோடு சேர்ந்து ஒரு எழுப்புதலின் தீ வரப்போகிறது.
சில நேரங்களில் நாம் பெரிய அளவில் எழுப்புதல் தேவை என்று ஜெபிக்கிறோம். தவறே இல்லை! கடந்த சில வருடங்களில் நான் தேவனோடு தொடர்பு கொள்ளும் நேரத்தை அதிகரித்து வருகிறேன் ஏன் தெரியுமா? ஒரு எழுப்புதல் நம்முடைய நாட்டில் வர வேண்டுமானால், அந்த பரலோக அனுபவம் முதலில் வர வேண்டிய இடம் என்னுடைய தனிப்பட்ட சிறிய இதயத்தில்தான் என்று விசுவாசிக்கிறேன். எழுப்புதலைத் தாரும் என்று ஜெபித்துவிட்டு, நம்முடைய சொந்த வாழ்வில் எழுப்புதலை அனுபவிக்கத் தவறினால் என்ன பிரயோஜனம்?
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (சங்கீதம் 42 : 1) என்ற சங்கீதக்காரனின் தாகம் நமக்குள்ளும் எழுப்புதல் வந்து நம்முடைய தாகம் தீர்க்கப்பட வேண்டும் என்ற வாஞ்சையைக் கொடுக்கிறது அல்லவா? இன்றே அந்த பரலோக சந்தோஷத்தை நாம் அனுபவிக்கும்படியாய் முழங்கால் போடுவோம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்