1 இராஜாக்கள் 18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு பெரிய ஜனக்கூட்டமே கர்மேல் மேல் திரண்டு விட்டது! ராஜாவாகிய ஆகாப், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியா , யேசபேலின் பாகாலின் தீர்க்கதரிசிகள், மற்றும் தேவனுடைய பாதையை விட்டு விலகி சென்ற திரளான மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்தனர்.
வேதம் கூறுகிரது, எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து அவர்களிடம் உரையாட ஆரம்பித்தான் என்று. இவர்கள் பாவிகள் என்று எலியா தன்னை தூரப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களிடம் நெருங்கி பேச ஆரம்பிக்கிறான்.
மிகவும் களைப்போடிருந்த தேவனுடைய தாசனாகிய எலியா அவர்களை நோக்கி, நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள் என்று கேட்பதைப் பார்க்கிறோம். இந்த குந்திக் குந்தி என்ற வார்த்தை எபிரேய மொழியில், இரண்டு நினைவுகளால், முடிவெடுக்கத் தயங்கி, அசைவாடி,என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. நம்முடைய தேவனாகியக் கர்த்தரைப் பற்றி நன்கு அறிந்திருப்போமானால், அவருக்கு பிடிக்காத ஒரு குணமே இந்த இரு நினைவுகள் உள்ள குணம் தான்.
வெளிப்படுத்தின விசேஷத்தில், அப்போஸ்தலனாகிய யோவான், லவோதிக்கேயா சபைக்கு எழுதும்போது,
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். (வெளி 3:15,16) என்று எழுதுகிறார். அந்த சபையில் இருந்த ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் கர்த்தர் கொடுத்த செய்தி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை நல்ல குளிர்ந்த பானம் போன்றிருந்தாலும் பரவாயில்லை, அல்லது சூடான பானம் என்றாலும் பரவாயில்லை, இந்த குளிரும் இல்லாத, சூடும் இல்லாத பானம் எனக்குக் குமட்டுகிறது, நான் இதை வாந்தி பண்ணிப்போடுவேன் என்பதே.
இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரவேல் மக்களும், யூதா மக்களும் அன்று வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய சரித்திரம் பதிவாயிருக்கிற புத்தகங்களை வாசிப்போமானால், அவர்களுக்கு நல்ல , கர்த்தருக்கு பயந்த ராஜா ஆட்சி செய்தபோது அவர்களும் கர்த்தருடைய வழியில் நடந்தனர். ராஜாவுடைய வழியை அவர்கள் அப்படியே காப்பியடித்தாலும், ஒருசிலர் தங்கள் வீடுகளில் விக்கிரகங்களை வைத்திருந்தனர். ஒருவேளை அவர்கள், இந்த ராஜா போனவுடன் கடிகாரத்தின் பெண்டுலம் அங்கும் இங்கும் ஆடுவது போல அடுத்த ராஜா விக்கிரகங்களை வணங்குவான், அப்பொழுது தேவைப்படும் என்று நினைத்தார்களோ என்னவோ!
ஆனால் தேவனாகியக் கர்த்தர் அன்று கர்மேல் பர்வதத்தின் மேல் நின்ற மக்களுக்கும், தலைமுறை தலைமுறை தோறும் உள்ள மக்களுக்கும் சொல்லவேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால், நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்?இப்படி நீங்கள் குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உங்களை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் என்பதே.
எலியா ஜனத்தண்டை நெருங்கியபோது, அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டும் கெட்டான் வாழ்வைப்பார்த்து, தேவ மனிதனாகிய அவன் உள்ளம் வேதனைப்பட்டிருக்கும். நாமும் குந்திகுந்தி நடக்கும் போது தேவனாகியக் கர்த்தர் நம்மைப் பார்த்து மிகுந்த வேதனைப் படுகிறார்.
இந்த இடத்தில் என்ன நடக்கிறது பாருங்கள்! இதை வாசிக்கும்போது நானும் தவற விட்டிருப்பேன் ஆனால் ஆவியானவர் என்னை விடவில்லை.
ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
ஏன்? இந்த இடத்தில் நான் நின்று கொண்டிருந்திருப்பேனானல், முதலில் எனக்குள் பயம் வந்திருக்கும், கர்த்தர் என்னை அடித்து விடுவாரோ??? அதுதான் அவர்களுடைய அமைதிக்கும் காரணம் என்று நினைக்கிறேன். நான் திருடும்போது மாட்டிக்கொண்டால் என்ன பதில் சொல்ல முடியும்???
இன்று ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்! இந்த நொண்டி நொண்டி நடக்கும் வாழ்க்கை, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாய்ந்து வாழும் வாக்கை, இருநினைவுகளால் அசைவாடிக் கொண்டிருத்தல் இவையெல்லாம் இனி வேண்டாம்! இன்றே முடிவெடுக்கும் தருணம்! ஆதலால்,
கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்று எலியா அழைப்பு விடுக்கிறான்.
இன்று யாரை சேவிப்பீர்கள் என்று உன் வாழ்க்கையிலும் முடிவெடுக்கும் நாள்! இன்றே இரட்சிப்பின் நாள்! இதுமட்டும் குந்திக்குந்தி வாழ்ந்த இருநிலை வாழ்வை விட்டுவிடு! கர்த்தருக்கென்று வாழ்வேன் என்று முடிவெடு! நீ அப்படி முடிவெடுத்து தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழாவிட்டால், கர்த்தர் உன்னை ஐயோ பாவம், இவன் அவ்வப்பொழுது எனக்காக வாழ்கிறான், சூழ்நிலையினால் தவறிவிடுகிறான் என்று பாவம் பார்க்க மாட்டார்! உன்னை வாந்திபண்ணி போடுவார்! எச்சரிக்கை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்