1 இராஜாக்கள் 18:24 நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
இன்றைய வேதாகமப் பகுதியை நான் வாசிக்கும்போது என்னால் கர்மேல் பர்வதத்தை கண் முன்னால் கொண்டுவர முடிந்தது. நாங்கள் 2006 ல் இஸ்ரவேல் நாட்டை மாத்திரம் சுற்றிப்பார்க்க சென்றபோது கர்மேல் போகும்படியான கிருபையைக் கர்த்தர் கொடுத்தார். செழிப்பான பச்சைப் பசேலென்ற பர்வதம். மத்தியதரைக்கடலின் ஓரத்தில் உல்லாசமாகப் படர்ந்திருக்கும் பர்வதம் அது. அங்கு மழையும் அதிகம் பெய்யும் என்று கேள்விப்பட்டேன். மேற்கிலிருந்து வரும் மேகங்கள், மத்தியத்தரைக் கடலின் ஈரப்பதத்தோடு சேர்ந்து நல்ல மழையை வருவித்தது. ஆதலால் அங்கு தேக்கு, அத்தி, ஒலிவமரங்கள் போன்றவை அடர்த்தியாக வளர்ந்திருந்தன்.
இங்குதான் எலியா இஸ்ரவேல் மக்களை, தேவன் உங்கள் கடவுளா அல்லது பாகால் உங்கள் கடவுளா என்று இன்றே முடிவு செய்யுங்கள் என்று அவர்களுடைய ஆத்தும எழுப்புதலுக்காக அழைக்கிறான். அங்கே அமைதி நிலவுகிறது.
இப்பொழுது எலியா தனக்கும், பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கும் மத்தியில் ஒரு பெரிய போட்டியை ஏற்படுத்துகிறான்.
1. அதற்காக முதலில் இரண்டு பலிபீடங்கள் உடனே கட்டப்படவேண்டும். அதில் நெருப்பு எங்கேயும் ஒளித்து வைக்கப்படக்கூடாது. ஏன் இந்த உத்தரவு? பாகாலின் தீர்க்கதரிசிகள் பலிபீடத்தின் அடியே சுரங்கம் அமைப்பது வழக்கம். அதன் மூலம் வரும் காற்றினால் சிறிய நெருப்புப் பட்டவுடனே பெரியதாக எரிய ஆரம்பிக்கும்.
2. இரண்டு காளைகள் கொண்டுவரப்பட்டு, அவை துண்டிக்கப்பட்டு, ஒவ்வொரு பலிபீடத்தின் விறகுகள் மீதும் வைக்கப்படவேண்டும். என்னைப்போல நீங்களும், ஏன் எலியா காளைகளைக் கேட்டான் என்று ஒருவேளை சிந்திக்கலாம்! இந்த வசனம்
பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி, (லேவியராகமம் 16 : 6) நமக்கு பதில் கொடுக்கிறது. காளைகள் பாவ நிவாரணபலியாகக் கொடுக்கப்பட்டது.
3. முதலில் பாகாலின் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய தேவனின் நாமத்தை சொல்லிக் கூப்பிடவேண்டும்.
4. எந்த தேவன் அக்கினியால் பதில் கொடுக்கிறாரோ அவரே தேவன்
இவ்வளவுநேரம் அமைதியாய் இருந்த ஜனங்கள் இப்பொழுது இது நல்ல வார்த்தை என்று சத்தமிட்டனர். அவர்களில் என்ன நடக்கும் என்று பார்க்க ஆவலுடன் பலர் இருந்தனர், பாகால் வெற்றி பெரும் எந்த நம்பிக்கை பலருக்கு, ஆனால் ஒரு சிலர் உள்ளத்தில் யெகோவாவே உண்மையான தேவன் என்று வெளிப்படாதா என்ற ஆவல் இருந்திருக்கும்.
என்ன பரிதாபம்! மூன்றரை வருடங்கள் பஞ்சத்தை அனுபவித்தபின்னரும், இஸ்ரவேல் மக்களுக்கு தேவனாகியக் கர்த்தரே ஆளுகை செய்பவர் என்று புரியத் தவறி விட்டது. இஸ்ரவேலின் தேவனே கர்த்தர் என்று அவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய நிலைமை இன்று! தேவனாகியக் கர்த்தர் பூமியின் மேல் மழையை அனுப்புமுன் பாகால் தேவனே இல்லை என்று நிரூபிக்கப்பட வேண்டும். யார் உண்மையான தேவன் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் நிலவியது.
இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலையில் தம்முடைய கைகளால் எழுதிய கல்லில் அவரையல்லாமல் வேறே தேவன் இல்லை என்று தெளிவு படுத்தியிருந்தார். ஆனால் என்ன பரிதாபம், இன்று கர்மேல் மலையில் எலியா அதை அந்த மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய நிப்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது!
இன்று நாமும் பல நேரங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனுக்கும் பாகாலுக்கும் நடுவில் நிற்கிறோம் அல்லவா? நம் தேவன் முற்றிலும் நம்பப்படத்தக்கவர் என்று உன் வாழ்வில் புரிந்து கொண்டுள்ளாயா? வெறும் நம்பிக்கை மட்டும் நம்மை காப்பதில்லை, எந்த தேவன்மேல் நாம் நம்பிக்கை வைக்கிறோமோ அவரே நம்மை காப்பவர்! தேவனை நம்புகிறவர்கள் ஒருநாளும் அசைக்கப்படுவதில்லை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்