1 இராஜாக்கள் 18 : 26 – 29 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
ஒருநிமிடம் இந்த வேதாகமப்பகுதியை நாம் நம் கண்களின் முன்னால் கொண்டுவருவோம். 450 பாகால் தீர்க்கதரிசிகள் பலிபீடத்தை சுற்றிலும், துள்ள்க்கொண்டும், குதித்துக் கொண்டும், உச்ச குரலில் ஓசையிட்டுக் கொண்டும், அவர்கள் தேவனை அக்கினி அனுப்புமாறு கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருந்தனர். அவ்வப்பொழுது பாகாலே எங்களுக்கு உத்தரவு அருளும் என்ற குரல் கேட்டுகொண்டேயிருந்தது.
அநேக மணி நேரங்கள் இது தொடர்ந்து கொண்டேயிருந்தது. மத்தியான வேளையில் எலியா அவர்களை பரியாசத்தோடு உற்சாகப்படுத்த முடிவு செய்தான். அவன் அவர்களிடம் உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
எலியா இப்படிக் கூறவும் காரணம் இருந்தது! பாகாலைப் பற்றிய சில கதைகள் அங்கு இருந்தன. வறட்சியான காலங்களில் அவன் உறக்கநிலையில் இருப்பான் என்ற கதை எல்லோருக்கும் தெரிந்தது. நேரம் ஆக ஆக அவர்களுடைய கூக்குரல் மிகவும் கொடூரமான செயல்களோடு சேர்ந்து இரத்தமும், காயமுமாக இரணகளமாக மாறின. சுற்றியிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கூடபயத்தால் உடல் சிலிர்த்திருக்கும். குறைந்தது அங்கிருந்த கொஞ்சம் பேராவது தாங்கள் இந்த போலியான தேவனால் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இதை வாசிக்கும்போது வஞ்சிப்பவன் எத்தனைமுறை நம்மையும் ஏமாற்றுகிறான் என்று யோசித்தேன். நம்முடைய தேவனுடைய பாதுகாப்பைவிட்டு நாம் சற்று வழிவிலகி செல்லும்போது, ஏமாற்றுக்காரன் எத்தனை வஞ்சகமாக பேசி நம்மை பாதுகாப்பற்ற தன்னுடைய எல்லைக்குள் கொண்டு செல்கிறான்.
இத்தனை நாட்கள் தங்களை தேனொழுகும் வார்த்தைகளால் மயக்கியவர்கள் இன்று தங்கள் பற்களைக் கடித்துக்கொண்டு, தங்கள் சரீரங்களைக் கத்தியால் குத்திக் கிழித்துக் கொண்டும், பொய்யான தேவனை பலவிதமான குரலால் கத்தி, கூவி , கெஞ்சி அழைத்துக் கொண்டும் இருப்பதை இஸ்ரவேல் மக்கள் கண்டபோது தாங்கள் எவ்வளவுதூரம் போலியானவைகளால் ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்திருப்பார்கள்.
அன்பின் சகோதர சகோதரிகளே ! தேவனை ஆராதிக்கும் இடத்தில் வேறொன்றை நாம் வைப்போமானால் நாமும் ஒருநாள் இந்நிலையில்தான் இருப்போம். தேவன் ஒருவரே! அவருக்கு முன்னால் நாம் முழங்கால் படியிடும்போது சாத்தான்கூட நடுங்குவான். அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவர் பட்சிக்கிற அக்கினி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்