Archives

இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!

1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.

அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர்.

ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார்.

மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட ஒரு மரத்தின் உச்சியில் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் தெரித்த நீரில் நனைந்த ஒரு சிறிய பறவை தன்னுடைய கூட்டில் அமைதியாக அமர்ந்திருந்ததையும் சித்தரித்தனர்.

இதை வாசிக்கும்போது நான் தெய்வீக பிரசன்னம் என்பது நாம் தேவனுடைய ஆலயத்தில் தான் உணரமுடியுமா? காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையில் நம்முடைய வேதனைகளின் மத்தியில் அவருடைய பிரசன்னத்தை உணருவதில்லையா என்று நினைப்பேன்.

சவுல் தொடர்ந்து தேவனுடைய பிரசன்னத்தைத் தள்ளியதால் இன்னொரு பிரசன்னம் அவனைப்பற்றிக்கொண்டது. இந்த அதிகாரத்தில் 14 -23 வரை வாசிக்கும்போது என் உள்ளம் வேதனைப்பட்டது.

இந்த 10 வசனங்களில் நான்கு முறை ‘தேவனால் அனுப்பபட்ட ஆவி’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அப்படியானால் தேவன் பொல்லாத ஆவியை அனுப்பினாரா? என்று வேதனையோடு சிந்திப்பேன். நாம் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று கர்த்தராகிய இயேசு சொன்னதுதான் நினைவுக்கு வரும். அவனுடைய சொந்த முடிவினாலே கர்த்தருடைய ஆவியானவர் அவனை விட்டு விலகியதால் அசுத்த ஆவி அவனுக்குள் வந்து அவனை அலைக்கழித்தது. அவன் எவ்வளவுதூரம் அந்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்டான் என்பதை இன்னும் சில அதிகாரங்கள் தள்ளி நாம் படிக்கலாம். ஒருமுறை தாவீதைக் கொலை செய்யும்படி தன்னுடைய கையிலிருந்த ஈட்டியை எரியும் அளவுக்கு அவனைக் கோபத்தினால் அலைக்கழித்தது அந்த ஆவி.

இந்தப் பின்னணியில் சவுலை அசுத்த ஆவி அலைக்கழிக்கும்போதெல்லாம் தாவீது அங்கு அழைக்கப்படுவான். அவன் வாசித்த சுரமண்டல இசையானது சவுலை ஆறுதல் படுத்தி அந்த பொல்லாத ஆவி அவனை விட்டு அகலச் செய்யும்.

இந்த இடத்தில் நாம் தாவீதைப்பற்றிப் படிக்கும் வரை அவன் தன் தகப்பனின் ஆடுகளைத்தான் மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் வனாந்திர வெளியில் ஆடுகளோடு இருந்தபோதெல்லாம் அவன் கண்கள் பரலோக தேவனை நோக்கிப் பார்க்கும். அந்த சூழல்தான் அவனுக்கு பரலோக தேவனின் பிரசன்னத்தை தன் சுரமண்டலத்தின்மூலம் வேதனையில் இருக்கும் ஆத்துமாக்களுக்கு  கொண்டுவர உதவியது.

1 சாமு: 16: 17 ல் சவுல் தன்னுடைய ஊழியரை நோக்கி, நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்பதையும், அந்த வேலைக்காரரில் ஒருவன், இதோ பெத்லெகேமியனான ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன், கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்பதையும் படிக்கிறோம்.

தாவீதைப் பற்றி அந்தப்பகுதியில் வாழ்ந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.

ஒரு நிமிடம்!  நம் குடும்பத்திலோ அல்லது நம் நண்பர்கள் மத்தியிலோ யாருக்காவது ஆறுதல் தேவைப்பட்டால் தாவீதைப் போல நம்மை அழைப்பார்களா? நம்மால் பரலோக தேவனின் ஆறுதலை வேதனையிலிருக்கும் ஒரு உள்ளத்துக்கு அளிக்க முடியுமா? நம்மோடு கர்த்தர் இருக்கிறார் என்று சாட்சி கூறுவார்களா?

நாம் இன்று தாவீதைப்போல நம்முடைய சுரமண்டலத்தாலும், சாட்சியாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்குக் கொடுத்து சென்ற மெய்சமாதானத்தை வேதனையினால் அலைக்கழியும் மக்களுக்குக் கொடுக்க நமக்கு உதவிசெய்வாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Advertisements

இதழ்: 607 அகத்தின் அழகு!

1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான்.

சரித்திரத்தில் நடக்கும்  சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், கண்டுமிருக்கலாம். வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம்  நடந்த  சம்பவங்கள் நாம் வேதத்தில் படிப்பதைப் போலவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றன அல்லவா? அதனால் தான் வேதத்தில் நாம் படிக்கும் சிலருடைய வாழ்க்கை நம்மைப் பிரதிபலிப்பது போலவும், நமக்குப் பாடம் கற்பிப்பது போலவும் உள்ளது.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு இதைத்தான் கற்பிக்கிறது.

உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? சவுல் இஸ்ரவேலின் மேல் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது அவன் வாட்டசாட்டமான, உயரமான ஆணழகனாக இருந்தான். வெளியில் பார்க்கும்போது அவன் ராஜாவாகிறது இஸ்ரவேலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவன் கர்த்தருடைய கிருபையால் ராஜரீகம் செய்ய ஆரம்பித்தபோது, திறமைசாலியாகவும் காணப்பட்டான்.  நாளாக, நாளாக அவனில் முரட்டாட்டம் காணப்பட்டபோது சாமுவேல் அவனிடம், நீ உன் பார்வையில் மிகச்சிறியவனாயிருந்தபோது கர்த்தர் உன்னை ராஜாவாகியதை மறந்து போகாதே என்று எச்சரித்தார். ஆனால் அவன் தலையில் ஏதோ ஏறிவிட்டது. அவன் தான் ராஜாவாயிப்பதற்கு மட்டுமல்ல, ஆசாரியனாயிருப்பதற்கும் தகுதியானவன் என்று முடிவுசெய்து, தகனபலிகளையும் செலுத்தி கர்த்தரை வேதனைப்படுத்தினான்.

இஸ்ரவேல் மக்கள் சவுலிடம் கண்டதற்கு எதிரிடையாக சவுலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த குணம் இப்பொழுது வெளியே சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை நாம் நம்முடைய அரசியல்வாதிகளிடம் கண்டதில்லையா? நம்முடைய ஹீரோக்களிடம் கண்டதில்லையா? நம்முடைய பாதிரிமாரிடம் கண்டதில்லையா? அல்லது நம்மிடம்தான் கண்டதில்லையா? நம்மை எவ்வளவு அழகாக நாம் சித்தரிக்க முயற்சிசெய்தாலும், ஒருநாள் நமக்குள் ஒளிந்திருக்கும் நம்முடைய உண்மையான முகம் எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது!

சவுலின் வெளிப்புற அழகு அவனுடைய உட்புறத்தில் இல்லை என்று சாமுவேல் கண்டு கொண்டபின்னரும் சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல் மறுபடியும்  ஈசாயின் குமாரனாகிய எலியாபின் முகத்தையும், சரீரவளர்ச்சியையும் கண்டு கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுகிறவன் இவன் தானாக்கும் என்றான் ( 1 சாமு 16:6).

அப்பொழுது கர்த்தர் சாமுவேலுக்கு , ‘ நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்றுகூறுவதைப் பார்க்கிறோம்.

கர்த்தர் இன்று அழகான ஆண்மகனைத் தேடவில்லை! அழகாய் ஆடையணியும் பெண்ணையும் தேடவில்லை! அழகான உள்ளத்தைத்தான் தேடுகிறார்.

அன்று ராகாபிடம் கண்ட உள்ளழகு! வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தரைப் பின்பற்ற உள்ளத்தில் ஏங்கிய அழகு!

அன்று ரூத் என்ற மோவாபியப் பெண்ணிடம் காணப்பட்ட உள்ளழகு! தாவீதின் வம்சத்தை உருவாக்கிய இந்த உள் அழகை தேவன் புறம்பே தள்ளப்பட்ட மோவாபியரில் கண்டார்!

மனிதர் காணும்விதமாக கர்த்தர் உன்னைக் காண்பதில்லை! அவர் உனக்களித்திருக்கும் பரலோக கிருபையின் மூலம்தான் உன்னைக் காண்கிறார்.

இன்று உன் உள்ளத்தில் கர்த்தர் எதைக்காண்கிறார்?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ் : 606 சவுலின் பதவி விலக்கம் எதனால்?

1 சாமுவேல் 16:1  கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

1 சாமுவேல் 15 ம் அதிகாரத்தில் நாம் கடைசியாக சென்ற வாரம் பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.  சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். 35 ம் வசனம் கூறுகிறது, சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக்கண்டு பேசவில்லை என்று.

இன்றைய வசனம் கூறுகிறது சாமுவேல் சவுலுக்காக துக்கித்துக்கொண்டிருந்தான் என்று. சாமுவேல் சவுலை தன்னுடைய மகன் போல்தான் பார்த்தான். கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவன்மேல் சாமுவேலுக்கு ஒரு பாசம் இருந்தது. சாமுவேலின் அக்கறை, பாசம், அறிவுறுத்தல் இவை எதுவுமே சவுலின் வாழ்க்கையில் கிரியை செய்யவில்லை. கடைசியில் கர்த்தர் சாமுவேலிடம் சவுலை நான் புறக்கணித்துவிட்டேன் என்று கூறுவதைப்ப் பார்க்கிறோம்.

ஏன் புறக்கணித்தார்?

இந்தப்  புறக்கணித்தல் என்ற வார்த்தையை சற்று ஆழமாகப் படித்தபோது அதற்கு விலக்கு, தள்ளு என்று அர்த்தம் என்று பார்த்தேன். சவுலை ராஜாவாயிராதபடி கர்த்தர் விலக்கிவிட்டார் அல்லது தள்ளிவிட்டார் என்பதுதான்  அர்த்தம். அவனுக்கு கர்த்தர் அளித்திருந்த இஸ்ரவேலின் முதல் ராஜா என்னும் உன்னதபணியில் அவனிடம் அர்ப்பணிப்பும்,உண்மையும், காணாததால் கர்த்தர் அவனுடைய மேன்மையான, உன்னதமான பதவியை  அவனிடமிருந்து  விலகச்செய்தார்.

தேவனாகியக் கர்த்தருக்கு சவுலின்மேல் அன்பு இல்லாமல் போயிற்றா? இல்லை! அவனுக்கு தேவன் அளித்த மேன்மையான பணியில் அவன் உண்மையாய், அர்ப்பணிப்போடு இல்லாததால் கர்த்தர்அந்த உயர்ந்தப் பதவியிலிருந்து அவனை விலக்கினார்.

அப்படியானால் நாம் கீழ்ப்படியாமல் போகும்போது கர்த்தர் நம்மிடம் உள்ள ஆசீர்வாதங்களைப் பறித்து விடுவாரோ என்ற பயம் வந்து விட்டது அல்லவா? கர்த்தர் நம்மை நம்பி நம்மிடம் ஒப்பணித்திருக்கிற எந்தப் பணியையும் நாம் அவருக்குப் பயந்து செய்யாவிடில் அந்த ஆசீர்வாதம் நம்மிடமிருந்து விலக்கப்படும் என்பதற்கு சவுலின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.

இன்று உனக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் உன்னதமான பொறுப்பு என்ன? ஆபீஸிலா, வீட்டிலா அல்லது சமுதாயத்திலா?

நான் வாழும் இந்த வாழ்க்கை, நான் செய்யும் இந்த வேலை, என்னுடைய இந்த நிலைமை எனக்குக் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம் என்று சொல்வாயானால், அதில் நீ உண்மையாக, அர்ப்பணிப்போடு இருக்கிறாயா? கர்தருடைய வார்த்தைக்கு அனுதினமும் கீழ்ப்படிகிறாயா? இல்லையானால் ஒரு நொடியில் கர்த்தர் அதை உன்னிலிருந்து விலக்கிவிடுவார். ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 605 யானைத் தன் தலையில் மண்ணை இரைப்பதுபோல!

1 சாமுவேல்: 23  இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான்.

ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைபபார்த்தோம். வாட்டசாட்டமான அந்த யானை திடீரென்று தன் தும்பிக்கையால் மண்ணை எடுத்து அதன் தலையின்மேல் இரைக்க ஆரம்பித்தது. பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் அதிக நேரம் அங்கு நிற்கப் பயந்து அங்கிருந்து புறப்பட்டோம்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் ஆரம்பம் எத்தனை அருமையாயிருந்தது! நல்ல உயரமான ஆணழகன்! வாட்டசாட்டமாய் இருந்தான்! கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டான்! இன்னும் என்ன வேண்டும்?

ஆனால் இன்றோ கர்த்தருடைய வார்த்தையை அவன் புறக்கணித்ததால் ராஜாவாயிருக்கும் தகுதியை இழந்தான். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியத்துக்கு சமமாம்! பரிசுத்தமான இடத்திலிருந்து அசுத்தமான இடத்துக்கு தள்ளப்படுவதைப் போல் அல்லவா உள்ளது. நேர் எதிரிடையான திசையில் நடப்பது போல் அர்த்தம் உள்ளது! முரட்டாட்டம் பண்ணி கீழ்ப்படியாமல் போவது அவபக்திக்கும், விக்கிரகாராதனைக்கு சமம் என்று சாமுவேல் கூறுவதைப் பார்க்கிறோம். என்ன பரிதாபம்!

சவுல் தன்னுடைய கீழ்ப்படியாமையால் தன்னுடைய தலையிலே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டதைப் பார்க்கிறோம். உன்னுடைய அழிவுக்கு நீயே சீட்டுக்குலுக்கி எடுப்பது போல!

முரட்டாட்டம் என்ற வார்த்தை வேதத்தில் 98 முறை இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருமுறையும் அது ஒரு எச்சரிக்கையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் எபிரேய மொழி முரட்டாட்டம் என்ற வார்த்தையை மாரா என்று அழைக்கிறது. மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தம் என்பது நமக்குத் தெரியும்.

சவுலின் முரட்டாட்டமும் கீழ்ப்படியாமையும் அவன் வாழ்வில் கசப்பைத்தான் உருவாக்கிற்று.  சவுல் தனக்குக் கர்த்தர் கொடுத்த கிருபைகளை இழந்தான்.

சவுலின் வாழ்க்கை இன்று நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்! கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் மட்டும் இருந்து விடாதே! அது யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொளவது போலத்தான்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா?

1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்.

நாம் நாமாக இல்லாமல் யாரோவாக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய வாழ்க்கை பெரிய ஸ்டார் போல இருக்கின்றது. ஒரு பெரிய கூட்டம் அவர் பின்னால் செல்கிறது.  அவர்களைப்போல மாறவும், பேசவும், மேடையை அலங்கரிக்கவும், அநேகர் ஆசைப்படுகின்றனர். ஆனால் சில ஊழியர்கள் ஏழைகளுக்கு சேவைசெய்வதில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.ஏழை எளியவர்க்கு உணவளிப்பதும், உடுத்துவிப்பதும்,அவர்களுடைய பணியாயிருக்கிறது. அவர்களை ஊழியக்காரர் என்று அங்கீகரிக்கக்கூட ஆட்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் மக்களின் பார்வையில் பெரியவர்கள் இல்லை, மிகவும் எளிமையானவர்கள்.  ஆனால் அவர்கள் தேவனுடைய பார்வையில் எத்தனை பெரிய அங்கீகாரம் பெற்றவர்கள்! அவர்களுடைய பாதங்கள் கர்த்தரின் பார்வையில் எவ்வளவு அழகானவைகள்.

என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவனுடைய பார்வையில் மிகச்சிறியவனாயிருந்த  சவுலைக் கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவனாக்கினார்!

உன்னுடைய பார்வையில் நீ எப்படிப்பட்டவன்? மிகவும் சிறியவனாய்த் தோன்றிய சவுலுக்கு இஸ்ரவேலை ஆளும் ராஜாவாகும் பெரிய அழைப்பு கர்த்தரிடத்திலிருந்து வந்தது

நீ இன்று மேடையை அலங்கரிக்கும்  அவசியம் இல்லை! பெரிய ஸ்டார் போன்ற ஊழியம் செய்யவேண்டாம். ஒன்று மட்டும் மறந்து போகாதே. உன் பார்வையில் சிறியவனான உன்னைக் கர்த்தர் பெரிய கனவானாகக் காண்கிறார்!

உங்கல் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

இதழ்: 603 அப்பப்பா! என்ன போலியான முகபாவம்!

1 சாமுவேல் 15: 13,14  சாமுவேல் சவுலினிடத்தில் போனான்.சவுல் அவனை நோக்கி நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

செய்த தவறை மறைக்கும் ஒருவர் நாவில் தேன்ஒழுகும் வார்த்தைகளை பேசுவதைப்பார்த்து இப்படியும் ஒருவர் போலியாக இருக்கமுடியுமா என்று வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இங்கு அப்படித்தான் நடந்து கொள்கிறான். அமலேக்கியருடன் செய்த யுத்தத்தில் கர்த்தர் சாமுவேல் மூலமாய்க்கூறியபடி எல்லாவற்றையும் அழிக்காமல் தனக்குப்பிடித்தமானவற்றை பாதுகாத்ததுமன்றி, சாமுவேல் வரும்வரைக் காத்திராமல் தகனபலிகளை செலுத்தியும் விட்டான் என்று பார்த்தோம்.

இவ்வளவு தவறுகளை செய்த அவன், சாமுவேலைக்கண்டதும் சற்றும் மனம் கூசாமல்,  ‘ நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்பதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தைகள் நடந்த சம்பவத்தோடு எப்படி பொருந்தும்? அதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? நம்ம ஊரில் யாரையாவது சோப்பு போடுவது, ஐஸ் வைக்கிறது,  வெண்ணையைத் தடவுகிறது என்ற வார்த்தைகளைக்  கேட்டிருக்கிறீர்களா? அதைப்போலத்தான் இது!

சவுல் இப்படி கீழ்ப்படியாமல் தன் சொந்த இஷ்டப்படி நடப்பது இதுதான் முதல்தடவை அல்ல, கடைசிதடவையும் அல்ல!

இதை வாசிக்கும்பொழுது நானும் பலதடவைகள் சவுலைப்போல நடந்து கொண்டதை உணர்ந்தேன். கர்த்தர் என்னையும் பார்த்து பலமுறை என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்று கேட்டிருக்கிறார். அது நான் கீழ்ப்படியாத ஒரு காரியமாயிருக்கலாம், அல்லது நான் கர்த்தரிடம் மறைக்க நினைத்த ஒரு காரியமாயிருக்கலாம். இதை போலியான முகபாவத்தோடு நான் செய்யும் எந்த ஸ்தோத்திரபலிகளும் மறைக்க முடியாது.

சாலொமோன் தானுடைய உன்னதப்பாட்டு 2:15 ல், திராட்சைத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள் என்று கூறியது போல சிறு பாவங்கள், சிறு பொய்கள், சிறு பித்தலாட்டம், சின்னஞ்சிறு ஆசைகள் இவைகள் தான் சிறுநரிகளாய் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை அழித்துவிடும். ஜாக்கிரதை!

நாம் கர்த்தரை சந்திக்கும் நாளில் அவர் நீ எதையெல்லாம் எனக்காக செய்தாய் என்று கேட்கமாட்டார். நீ எனக்கு உண்மையாக இருந்தாயா என்றுதான் கேட்பார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 602 என்னிடம் ஏன் இந்த மனஸ்தாபமோ!

1 சாமுவேல் 15: 10,11  அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது.

இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது  நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள்!

இந்த மனவேதனை என்ற அர்த்தத்தைத்தான் மனஸ்தாபம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் கொடுக்கிறது. பிள்ளைகள் தவறான நண்பர்களைத் தெரிந்து கொள்ளும்போது, அல்லது தவறான முடிவைத் தங்கள் திருமண வாழ்வில் எடுக்கும்போது நம் உள்ளம் எவ்வாறு வேதனைப்படுகிறது என்று உங்களில் பலருக்குத் தெரியும்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவாக தெரிந்துகொள்ளப்பட்ட சவுல் தவறு செய்தபோது கர்த்தர் அவனைக் குறித்து மனவேதனைப்பட்டார் என்றுதான் இங்கு பார்க்கிறோம். அவனுடைய நடவடிக்கை, செயல்கள் யாவும் அவரை வேதனைப்படுத்தின. அவனைப் பார்க்கும்போது அவனை ஏன்  உருவாக்கினேன் என்று வருந்தவில்லை, ஐயோ இவன் இப்படி நடந்து கொள்கிறானே என்று வருத்தப்பட்டார்.

தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளோடு கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும்போது இந்த முக்கியமான ஒரு காரியத்தை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் ஒருநாளும் நம்மை உருவாக்கினதைக்குறித்து வருந்துகிறவர் அல்ல. நாம் அவர் வழியை விட்டு விலகும்போது மிகுந்த மன வேதனைப்படுகிறவர்.

மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, பரலோக தேவனின் அன்பை உணர்ந்தவராய் , அவர் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்று கூறுகிறார் (2 பேதுரு 3:9).

கர்த்தர் இன்று எதைக்குறித்து மனஸ்தாபப்படுகிறார்? ஐயோ நான் இன்று அவரிடம் பேசவில்லையே அதனாலா? நான் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வில்லையே அதனாலா? ஐயோ இன்று என்னுடைய ஆபீஸில் என்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, அவரை நான் துக்கப்படுத்திவிட்டேன்!  இப்படி ஒருநாளில் எத்தனைமுறை அவரை நாம் துக்கப்படுத்துகிறோம்.

சவுலைப் போல நம் தேவனாகிய கர்த்தரை நாம் துக்கப்படுத்தவேண்டாம்.

நாம் அவரை நோக்கி ஒரு அடி நகர்ந்தால் போதும் அவர் நம்மை நோக்கி ஓடி வந்து நம்மைக் கட்டித் தழுவிக்கொள்வார்.

நாம் பெரியவர்களாய் இருப்பதால் அவர் நம்மை நேசிக்கவில்லை! அவர் மகா பெரியவராய் இருப்பதால்தான் நம்மை நேசிக்கிறார்! அவரை துக்கப்படுத்தி உதாசீனப்படுத்தாதே!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்