Archives

இதழ்: 650 பேசுவதில் விவேகம்!

1 சாமுவேல் 25: 36 …..அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

அபிகாயில் தாவீதை சந்தித்துத் திரும்பும்போது ராஜ விருந்து நடந்து கொண்டிருந்தது என்று பார்த்தோம். நாபால் குடித்து வெறித்திருந்தான். அதனால் அபிகாயில் அவனிடம் ஒன்றையும் அறிவிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது.

இந்தப்பகுதி மறுபடியும் அபிகாயிலுடைய விவேகத்தை நமக்கு தெளிவு படுத்துகிறது.

தாவீதை சந்தித்துத் தன்னுடைய மதிகேட கணவனையும், ஊழியரையும் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து மீட்டு, அவள் வீட்டுக்குத் திரும்பியபோது நடந்தவற்றை யாரிடமாவது கூற அவள் ஆசைப்பட்டிருப்பாள். ஆனால் அவள் அங்கு கண்டது குடித்து வெறித்திருந்த கணவனையும், அவனோடு களியாட்டம் போட்ட குடிகார நண்பர்களையும் தான்.

ஒரு நிமிடம்! நாம் இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்துவிட்டு களைப்பாக  வீட்டுக்குத் திரும்பும்போது,  நம் வீட்டில் சத்தமாக மியூசிக் போட்டு, நடந்த எதுவுமே தெரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? நாம் பயங்கர கோபத்துடன் திட்டி, ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்க மாட்டோமா?

அபிகாயிலுக்கு நாபாலைத் திட்ட எல்லா உரிமையும் இருந்தது! ஆனால் அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை! அமைதியாக இருப்பதைப் பார்க்கிறோம். நீங்களோ அல்லது நானோ அங்கு இருந்திருந்தால் ஒரு வார்த்தை அல்ல ஒரு அணை போல வார்த்தைகளைக் கொட்டியிருப்போம்!   நாம் ஒன்று  சொல்ல அது வார்த்தைத் தவறி மற்றொன்றாக முடிய , நிச்சயமாக வார்த்தைகள் பலத்த சண்டையில்தான் முடிவடைந்திருக்கும்!   இது நம்மில் பலர் அனுபவவிப்பது தானே! அதுவும் நாம் அதிகமாக சோர்பாக வீட்டுக்குத் திரும்பும்போது இப்படி நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லவா!

ஆனால் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை! தன்னுடைய கோபம் அடங்கும்வரை அவள் பேசவேயில்லை! வேதம் சொல்கிறது, பொழுது விடியுமட்டும் அவள் பேசவில்லை என்று.

ஒருநாள் நான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னைப் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா என்னிடம், நீ இப்பொழுது படுத்து தூங்கு, காலையில் இதைப் ப்ற்றி யோசி! காலையில் இதே பிரச்சனை உனக்கு வேறுமாதிரித் தோன்றும்! என்றார்கள். இதை என் வாழ்க்கையில் மறந்ததே கிடையாது.

அபிகாயில் காலை வரைக் காத்திருந்தாள். அது  அவளுக்கு கோபத்தை தணிக்க, நடந்ததை மறுபடியும் சிந்திக்க போதுமான நேரத்தைக் கொடுத்தது.

சாலொமொன் ராஜா , (நீதிமொழிகள் 25:11) ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் என்று வார்த்தையின் விவேகத்தைப் பற்றிக் கூறுகிறார். இது எவ்வளவு உண்மை!

அபிகாயில் நடந்து கொண்டது நமக்கு ஒரு நல்ல மாதிரியாக இல்லையா? நாம் கோபத்தில் இருக்கும்போது பேசவேக் கூடாது என்பது எவ்வளவு விவேகமானக் காரியம்!

கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளைக்கொண்டு உங்களை ஆசிர்வதிக்கட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

(premasunderraj@gmail.com)

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

இதழ்: 649 கர்த்தர் கணக்கு கேட்டால்?

1 சாமுவேல் 25: 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜாவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது. அவன் இருதயம் களித்திருந்தது. அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

ஆடுகள் மயிர் கத்தரிக்கும் காலம் கடந்து விட்டது! நாபாலுக்கு நல்ல வருமானம்! தாவீதிடம் நீயா நானா என்று பேசிவிட்டு, இப்பொழுது தாவீது நானூறுபேரோடு கர்மேலில் அவனைக்கொல்ல வருவதுகூடத் தெரியாமல் நாபால் வெறித்துக் களித்துக்கொண்டிருந்தான்!

அவனுடைய மனைவியாகிய அபிகாயில் தன்னைக் காப்பாற்றத் தீவிரித்து சென்றது கூடத் தெரியாமல் ராஜவிருந்து நடந்துகொண்டிருந்தது நாபாலின் வீட்டில்!

ஒருநிமிடம் கண்ணை மூடி இந்தக் களியாட்ட விருந்தை பாருங்களேன்! அங்கே அவர்கள் சத்தமாக சிரிப்பது கேட்கவில்லையா? அந்தக் குடிகாரர்கள் ஊற்றிக்குடிக்கும் மதுவின்  மணம் நம் நாசியைத் துளைக்கவில்லையா ?  ஏதோ நாளை என்று ஒன்று இல்லாததுபோலல்லவா கூத்தடிக்கிறார்கள்!

அபிகாயில் தாவீதை சந்தித்து திரும்பியபோது இந்தக் காட்சியைத்தான் பார்த்தாள்.

நாபால் தன்னுடைய வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டாடியது என்னை சற்று சிந்திக்க வைத்தது. இன்றைக்கு சொத்து சம்பாதிக்கும் பலர் இப்படித்தானே தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்! இன்று யூ ட்யூபில் சில பணக்காரரின் திருமண வைபவங்களைப் பார்க்கும்போதும், அவர்கள் மணமக்களின் ஆடையில் பதிக்கும் பொன்னையும், வைரங்களையும் பார்க்கும்போதும் இவர்கள் நாபாலைப்போல நாளை என்று ஒன்று இல்லாததுபோல நடந்து கொள்கிறார்களே என்றுதான் நினைக்கத் தோன்றும்.

நாபால் தன்னுடைய மனைவியின் கண்களுக்கு முன்பாகவும், கர்த்தருடைய பார்வையிலும் தான் சம்பாதித்ததை குடித்து, வெறித்து, களியாட்டம் பண்ணிக்கொண்டிருந்தான்.

ரோமர் 14:12 ல் பவுல் கூறுகிறார்,’ ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்’ என்று. அப்படியானால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்கு கொடுக்கவேண்டுமென்ற பயம் நமக்குள் வேண்டும்!

நம்மில் பலர் இன்று நாபாலைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நான் சம்பாதித்தது, நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்று எண்ணிக்கொண்டு,  நாளை என்ற ஒன்று இல்லாததுபோல் இன்றைக்கே அனுபவிக்க நினைக்கிறோம்.

நாபாலுடைய இந்த எண்ணம் அவனை அழிவுக்குள்ளாக்கியது! ஒவ்வொரு சிறிய ஆசிர்வாதமும் கர்த்தருடைய கரத்தில் இருந்து வருகிறது என்று எண்ணாமல், நாபாலைப்போல நான் சம்பாதித்த சொத்தை எப்படி வேண்டுமானலும் செலவிடுவேன் என்று வாழ்வோமானால் நாமும் அழிந்து போவோம்!

இன்று கர்த்தர் உன்னிடம் கணக்கு கேட்டால், உன் வாழ்க்கையில் என்னென்ன அவருக்குப் பிடித்தவை, என்னென்ன அவருக்குப் பிடிக்காதவை என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

சிந்தித்து பார்!

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரா!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

இதழ்: 648 அன்றாட வாழ்வில் எதற்கு முக்கியத்துவம்?

1 சாமுவேல் 25:34 … உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடம்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன்..

நம்மில் எத்தனை பேர் ஒருநாளில் ஒன்றுக்கு இரண்டு வேலையை செய்துகொண்டு பிள்ளைகளோடு இருக்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுகூட நமக்குத் தெரியவில்லை! நம்முடைய வேலைகளுக்கே நேரம் ஒதுக்கத் தெரியாதபோது வேதம் வாசிப்பதும், ஜெபிப்பதும் சாத்தியமா என்ன?

அபிகாயில், தாவீது என்ற இருவரின் வாழ்க்கையிலிருந்து நாம் இன்னொரு பாடம் கற்றுக்கொள்வோமென்றால் அது நம்முடைய அன்றாடைய வாழ்வில் எது முக்கியம் என்று சீரமைப்பதுதான்!

1 சாமுவேல் 25: 34 ல் , அபிகாயில் தீவிரமாய் தாவீதைச் சந்திக்க வந்ததாக அவன் அவளுக்கு நன்றி சொல்லுகிறான். தீவிரம் என்ற இந்த வார்த்தை எபிரேய மொழியில் ‘எளிதான ஓட்டம்’ என்ற அர்த்தம் கொண்டது.

இது ஒரு நிமிடம் என்னை சிந்திக்க வைத்தது!

அன்று அவள் எவ்வளவு வேலைகள் செய்தாள் என்று நாம் பார்த்தோம் அல்லவா? தாவீதுக்கும் அவனோடு இருந்த 400 பேருக்கும் அவள் மிகப்பெரிய விருந்தை  தயார் பண்ணினாள்!  நாம் 40 பேருக்கு விருந்து என்றாலே ஆடிப்போகும் வேளையில் இந்தப் பெண் எவ்வளவு சாமர்த்தியசாலியாயிருப்பாள்! அவள் செய்த அத்தனை வேலைகளும் அவளுக்கு எளிதான ஓட்டமாயிருந்து என்றால் எதை எதை எப்பொழுது செய்யவேண்டும் என்று எளிதாக திட்டமமைத்து செயல்பட்டிருப்பாள்.

ஒருவேளை அபிகாயிலுக்கு நம்மைப்போல அலுவலகப் பொறுப்புகள் இல்லாமலிருந்தாலும், அநேக குடும்பப் பொறுப்புகள் இருந்தன. ஆனால் அதன் மத்தியில் ஒரு அவசர வேலை வந்தவுடன் அவள் திக்குமுக்காடவில்லை, முறுமுறுக்கவும் இல்லை! அந்த வேலைகளை எளிதாக நடத்தி முடித்தாள்.

இன்னொமொரு காரியமும் இன்று என் மனதில் பட்டது. அபிகாயிலுக்கு எத்தனையோ வேலைகள் இருந்தபோதிலும், அவள் தேவனாகியக் கர்த்தரின் செய்தியை தாவீதுக்கு எடுத்து செல்லத் தேவைப்பட்டபோது அவள் அங்கு தயாராக இருந்தாள். ஏனெனில் அவள் உள்ளம் அநேக வேலைகளுக்கு மத்தியிலும் தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தது! அவருடைய சத்தத்துக்கு செவி கொடுத்தது! தேவனுடைய காரியமாய் செல்ல வேண்டியதிருந்தபோது அவள் அதையும் எளிதாக நடத்தினாள்!

அன்றாட வாழ்க்கையில் எதை எதை செய்ய வேண்டும், எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்று அறிந்து செயல்பட்டதால் அவள் அநேக வேலைகளை எளிதாக செய்ய முடிந்தது!

இன்று நாம் எப்படி இருக்கிறோம்? அநேக அலுவல்கள் மத்தியில் தேவனுடைய சத்தம் நம் செவிகளில் ஒலிக்கிறதா? அன்றாட வேலைகள் மத்தியில் வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதா?

நேரமா? அது எங்கே கிடைக்கிறது? வாரத்தில் ஒருநாள் திருச்சபைக்கு போய்வந்து விட்டால் போதாதா? ஒவ்வொரு நாளும்  பம்பரம் போல சுற்றுகிறோம், எங்கே கடவுளின் சத்தத்தை வேறு கேட்கமுடியும்? என்று உங்களில் அநேகர் புலம்புவது எனக்குக் கேட்கிறது!

அபிகாயிலைப்போல ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று மனதில் அறிந்து செயல்பட்டால் நிச்சயமாக உங்களால்கூட கர்த்தருடைய சத்தத்தை அனுதினமும் கேட்க முடியும்! உங்கள் அனுதின வாழ்க்கை எளிதாகும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ் 647 பழிவாங்குதல் என்றால்?

1 சாமுவேல் 25:33 … என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக!

ஆலோசனையைக் கொடுப்பதும், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல உறவுக்கு தேவையான அஸ்திபாரம் என்று அபிகாயில், தாவீதின் வாழ்க்கையிலிருந்து பார்த்தோம்.

இன்றைய வசனத்தில் தாவீது அபிகாயிலிடம், ‘ என்னுடைய வாழ்வில் யார் எதற்கு பொறுப்பு என்று சற்று ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அபிகாயில்’ என்று கூறுவது போல்  உள்ளது!

கண்ணுக்கு கண் என்ற வேத வசனத்தை இறுகப்பிடித்துக் கொண்டு யாராவது நமக்கு ஒரு அடி கொடுத்தால் மறு அடியை வச்சு வாங்கி விடுவதுதான் நமக்குப் பழக்கம்.

நல்லவேளை, பழிவாங்கும் வெறியோடு வந்த தாவீதிடமும், அவனுடைய 400 ஊழியரிடமும், பழிவாங்குவது கர்த்தருடைய வேலை, உன்னுடையது அல்ல என்று அபிகாயில் என்றப் பெண் ஞாபகப்படுத்தியதால் அவன் தப்பித்தான்! இல்லையானால் கர்த்தர் செய்ய வேண்டிய வேலையை அவன் செய்ய சென்றிருப்பான்.

பழிவாங்குதல் என்னுடையது என்று ஏன் கர்த்தர் சொன்னார் என்று என்றாவது என்னைப்போல நீங்களும் யோசித்ததுண்டா?

இதற்காக எபிரேய, கிரேக்க மொழிகளில் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று படித்தேன்.  நான் அதற்கு தண்டனை என்ற அர்த்தத்தைத்தான் எதிர்பார்த்தேன்.

ஆனால் தாவீது உபயோகப்படுத்தின இந்த எபிரேய மொழியில் ஆச்சரியப்படும்படியாய் பழிவாங்குதல் என்பதற்கு, அவர் இந்தப் பிரச்சனையை சந்திப்பார் அல்லது அவர் இதை மேற்பார்வையிடுவார்  என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது என் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. என் கர்த்தர் என்னைத் துன்பப்படுத்தும் எல்லா பிரச்சனைகளையும் அவரே சந்திப்பார்! அல்லேலூயா!

அதனால்தான் தாவீது தான் பழிவாங்காதபடி தடை செய்த அபிகாயிலுக்கு நன்றி சொல்கிறான்.

மனிதராகிய நாம் தேவனாகிய கர்த்தரைப்போல் எல்லாவற்றையும் காணமுடியாது,  எல்லாவற்றையும் அறியவும் முடியாது!  நம்முடைய குறுகிய பார்வையால், அநியாயத்தைத் தட்டிக்கேட்கிறேன் என்று நாம் பழிவாங்க முயன்றால் அது நம்மையே திருப்பியடித்து விடும். அதனால்தான் நம்மை நேசிக்கும் தேவன் இந்தப் பிரச்சனையை அவரே மேற்பார்வையிட்டு, அவரே இதை சந்திப்பதாக நமக்கு வாக்குக் கொடுக்கிறார்.நம்மை எதிர்க்கும் அல்லது நமக்கு எதிராக செயல்படுபவர்களைக்கூட அவர் சந்தித்து அவர்களையும் தம்முடைய மந்தைக்குள் கொண்டுவர அவரால் கூடும்!

பழிவாங்குதல் கர்த்தருடையது என்று அறிவாயா? யாரையாவது சொல்லாலோ, செயலாலோ பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கிறாயா? இது நீ செய்ய வேண்டியது இல்லை!  விசுவாசத்தோடு கர்த்தரிடம் ஒப்புவித்துவிடு! அவர் உன் காரியத்தை தானே மேற்பார்வையிட்டு சந்திப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ரா

 

 

 

 

இதழ்: 646 ஆலோசனை மென்மையான பனியைப் போன்றது!

1 சாமுவேல் 25:33  நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும்….. நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக!

நமக்கு யாராவது யோசனை சொன்னால் நாம் எப்பொழுதும் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதுண்டா என்று இன்றைய வசனம் என்னை சிந்திக்க வைத்தது.

நண்பர்களுக்கு இடையிலாகட்டும், உறவினருக்காகட்டும் ஆலோசனை சொல்வது என்பது ஒரு கடினமான காரியம். அவர்களே யோசித்து நல்ல முடிவு எடுக்கட்டும் நாம் தலையிடக் கூடாது என்றுதான் நினைப்போம்.

கணவன் மனைவிக்குள்ளும், நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற மோதல் வரும் அல்லவா?

இந்த மோதல் அபிகாயிலுக்கும் தாவீதுக்கும் வந்திருக்க வாய்ப்பு இருந்தது அல்லவா? இடுப்பில் பட்டயத்தை சொருகியிருந்த தாவீதுக்கு  அபிகாயில் ஒரு சொற்பொழிவே ஆற்றிவிட்டாள்.

அவனுடைய பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறினாள். அவனுடைய கோபத்தைத் தணிக்கும்படி யோசனை கூறினாள். நாபால் என்பவன் ஒரு முட்டாள் என்பதை மறந்து விடவேண்டாம் என்று அறிவுரைத்தாள். அவள் பேச்சு முழுவதும் தாவீதுக்கு அவள் கொடுத்த ஆலோசனைதான்! ஆனால் அவளுக்கு தாவீது யார் என்று இதுவரைத் தெரியாது! அவர்கள் இருவரும் இதற்குமுன் சந்தித்ததாக வேதம் கூறவேயில்லை. ஆதலால் அவர்கள் நெருங்கிய நண்பர்களாயிருக்க வாய்ப்பேயில்லை.

இதுதான் இந்தக் கதையின் சுவாரஸ்யமான பகுதி. தனக்கு ஆலோசனைக் கொடுக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து, நீ என்ன எனக்கு ஆலோசனைக் கொடுப்பது! வழிவிடு நான் என் வழியே போகிறேன்! நாபாலுக்கு நான் யார் என்று காண்பிக்கிறேன் என்று தாவீது சொல்லாமல் அவளுடைய ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.

ஒருவருக்கு ஆலோசனைக் கொடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல! இங்கு அபிகாயில் தாவீதிடம் நடந்து கொண்ட விதமும், தாவீதை சிறிது கூட மட்டம் தட்டாமல் பேசியதும், கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்தாததும், மற்றவருக்கு ஆலோசனைக் கொடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது!

தாவீது அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி, மூச்சை இழுத்து விட்டு, அவளுடைய வார்த்தையிலுள்ள ஞானத்தைப் புரிந்துகொண்டு, அவளுடைய ஆலோசனையை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் இருவருக்குள்ளும் மரியாதைதான் உருவாகியதே தவிர வெறுப்பு இல்லை!

ஆலோசனையைக் கொடுக்கத் துடிக்கும் உனக்கும், ஆலோசனையை ஏற்க மறுக்கும் உனக்கும், இவர்கள் இருவரும் பெரியதொரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள் அல்லவா!

ஒருவரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு ஆலோசனையைக் கொடுப்பவரை விட ஞானம் வேண்டும்!

நம்மேல் பனி பெய்வதைப் பார்த்திருக்கிறீகளா? அது விழுவதே தெரியாது. அவ்வளவு மென்மையாக இருக்கும். நம்மேல் விழுந்த பனி அப்படியே நம்மில் கரைந்துவிடும்! அப்படிப்பட்டதுதான் நல்ல ஆலோசனையும்! நீ கொடுக்கும் ஆலோசனை ஒருவன் தலையில் விழும் கல்லைப்போல இருக்கக்கூடாது! அபிகாயில் தாவீதுக்கு கொடுத்த ஆலோசனையைப்போல, பனியைப்போல மென்மையாக இருக்க வேண்டும்!

இந்த உலகத்தில் நல்ல ஆலோசனையைவிட உயர்ந்த பரிசை யாருமே கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசுதான் நமக்குக் கிடைத்திருக்கிற வேதப்புத்தகம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 645 உன்னைக் காப்பாற்றும் நல் யோசனை!

1 சாமுவேல் 25: 33  நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக.

அபிகாயில் சொன்ன யோசனையை தாவீது ஏற்றுக்கொண்டான் என்று பார்த்தோம். இன்றைய வசனத்தைப் படிக்கும்போது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் நீதிமொழிகளில் கூறியது நினைவிற்கு வந்தது

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்; புத்தி உன்னைப் பாதுகாக்கும் (நீதி:2:11)

எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். ஆனால் இன்று அபிகாயிலின் வாழ்க்கையின் மூலம், யோசித்தபின்னர் பேசுவதைப் பற்றி வேதத்திலிருந்து அறிகிறோம். நாம் ஒரு காரியத்தைக் குறைவாகப் புரிந்து கொண்டு பேசும்போது என்ன நடக்கும்? நாம் யோசிக்காமல் பேசிவிட்டதை உலகுக்கே காட்டிவிடும் அல்லவா?

ஒருவேளை சாலொமோன் இதைத் தன் தகப்பனாகிய தாவீதின் மூலம்தான் அறிந்திருக்கலாம்.  மற்றும் அவன்  நீதிமொழிகள்  3:21 ல், என் மகனே, இவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞானத்தையும், நல்லாலோசனையையும்  காத்துக்கொள், என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். தாவீது இந்த அரிய பாடத்தை தான் சந்தித்த நல்யோசனை கொண்ட அபிகாயிலின் மூலம் கற்றிருந்திருக்கலாம் அல்லவா!

அபிகாயிலைப்பற்றி நாம் முதன்முதலில் வேதத்தின் வாசிக்கும்போதே அவள் புத்திசாலியும், ரூபவதியுமாயிருந்தாள் என்று வேதம் கூறுகிறது ( 25:3). அவளுடைய வெளிப்புறமான அழகுக்கு முன்னரே புத்திசாலித்தனம் இடம் பெறுகிறது. அவளுடைய வெளிப்புற அழகு அவளுடைய உட்புற புத்திசாலித்தனத்தை கருமையாக்கவில்லை!

நான் அநேக அழகானவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வாயைத் திறந்தால்மட்டும் தான்  புத்தியீன வார்த்தைகள் அவர்களிடமிருந்து அருவி போல வருவதைப் பார்க்கலாம். எதையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, அதையும் இதையும் முடிச்சி போட்டு பேசுபவர்கள்!

நம்மில் எத்தனைபேர் வெளிப்புற அழகைக்கண்டு மயங்கி , கண்மூடித்தனமாக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு இன்று அழுது புலம்பி கொண்டிருக்கிறோம்?

நல் யோசனை உன்னைக் காப்பாற்றும் ஏனெனில் அது நமக்கு தேவன் அளிக்கும் பரம ஈவு!

நாம் எதையும் பேசும்போது அடுக்கு மொழி அவசியமில்லை! நல்யோசனை அவசியம்!

நல்யோசனை என்ற இந்த வார்த்தைக்கு உன்னுடைய வாழ்க்கையில் அர்த்தம் என்ன?  என்றாவது ஒருநாள், ஐயோ நான் பேசுமுன் ஆலோசனை பண்ணாமல் பேசிவிட்டேனே என்று எண்ணியுள்ளாயா?

உடனுக்குடன் பதில் கொடுத்து பேசுவது, அதிகமான வார்த்தைகளை அள்ளி வீசுவது, சுய கர்வத்தோடு பேசுவது இவை என்றுமே எனக்கு அழிவுக்கு வழியென்றுதான் தோன்றும்!

அபிகாயில் யோசித்து பேசின வார்த்தைகள் அவளையும் அவளுடைய குடும்பத்தையும் பேரழிவினின்று காத்தன!

உன்னுடைய வார்த்தைகள் எப்படிப்பட்டன என்று சிந்தித்துப் பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 644 நட்பு என்னும் ஒரு கட்டிடம்!

1 சாமுவேல் 25: 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப்பார்த்து; நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ. இதோ நான் உன் சொல்லைக்கேட்டு,உன் முகத்தைப்பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

இதை எழுதும்போது ஒரு கட்டிட வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பிளாக்குக்கு மேலாக இன்னொரு பிளாக்கை வைத்து ஒவ்வொரு சுவராக ஒரு கட்டிடம் உருவமைந்தது.  இன்றைய வேதாகமப்பகுதி,  தாவீதுக்கும், அபிகாயிலுக்கும் நடுவே ஏற்ப்பட்ட உறவு, வெற்றிகரமாக கட்டி முடித்த ஒரு கட்டிடத்தைப் போல உருவாகிற்று என்பதை எனக்கு உணர்த்தியது.

அபிகாயில் & தாவீது என்னும் ஒரு அழகிய கட்டிடத்தின்  ப்ளூ பிரிண்ட் நம்முடைய கரத்தில் உள்ளது! ஒரு உறுதியானக் கட்டிடத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அதில் உள்ளன!  இதை முதலிலும்,  பின்னர் பத்சேபாள் & தாவீது என்ற உறவையும் நாம் படிக்கும்போது, எங்கே, எப்படி, என்ன தவறாக போனது என்பதை நாம் தெளிவாகக் காணலாம்!  இரண்டு உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம் நம்மை ஆச்சரியப்படுத்தும்!

தாவீது அபிகாயிலின் வார்த்தைகளையும், அவளை அன்பும், பண்பும், புத்திசாலித்தனமும், தாராளகுணமும், தாழ்மையும்  நிறைந்தவளாகவும்  பார்த்தபோது, தயவும், மென்மையும் வாய்ந்த அவளிடம் ஒரு சிறந்த கட்டிடம் போன்ற உறவுக்கான எல்லா அம்சங்களும் இருந்ததைக் கண்டான்.

ஒரு சிலரைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே நாம் அவர்கள் ஒரு நல்ல நட்புக்குத் தகுதியானவர்கள் என்று உணருவதில்லையா!

தாவீது அபிகாயிலிடம் ஒரு நல்ல நட்புக்கான அறிகுறிகளைப் பார்க்கிறான். அவள் அவனோடு பேசியதை அவன் ஏற்றுக்கொண்டு, அவள் கொண்டுவந்ததை அவள் கையில் வாங்கிக் கொள்கிறான். அபிகாயிலிடம் ஒரு நல்ல இருதயத்தைப் பார்த்தான். மற்றவர்களை துக்கப்படுத்தாத ஒரு இருதயம், மற்றவர்களை கோபப்படுத்தாத ஒரு குணம், எப்பொழுதுமே இளகிய நல்ல மனம்,  ஒரு நல்ல நட்பு வேறு எங்கு ஆரம்பிக்க முடியும்?

நீ  சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தாவீது அவளுக்கு உடனே பதில் கொடுக்கிறான்.

நாம் நம்முடைய திருமண உறவுக்குள், அல்லது ஒரு நட்புக்குள், அல்லது ஒரு வியாபார உறவுக்குள் பிரவேசிக்கும் முன்,  இப்படிப்பட்ட உறவுக்குள் நம்மை நடத்துபவர் கர்த்தர் என்பதை மறந்தே போகிறோம்.

நல்ல நட்பு அல்லது  நல்ல உறவு உனக்கு யாரிடமாவது உள்ளதா?

உன்னுடைய உள்ளத்தைத் திறந்து நீ அபிகாயிலைப் போல பேசாவிட்டால் உன்னால் எப்படி நல்ல நட்பை உருவாக்க முடியும்?

ஆயிரம் பேருக்கு முன்னால் நின்று பேசுவது சுலபம்!  ஆனால்  ஒருவரிடம் உண்மையான நட்பை உருவாக்குவதுதான் கடினம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்