Archives

இதழ்: 605 யானைத் தன் தலையில் மண்ணை இரைப்பதுபோல!

1 சாமுவேல்: 23  இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான்.

ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைபபார்த்தோம். வாட்டசாட்டமான அந்த யானை திடீரென்று தன் தும்பிக்கையால் மண்ணை எடுத்து அதன் தலையின்மேல் இரைக்க ஆரம்பித்தது. பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் அதிக நேரம் அங்கு நிற்கப் பயந்து அங்கிருந்து புறப்பட்டோம்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் ஆரம்பம் எத்தனை அருமையாயிருந்தது! நல்ல உயரமான ஆணழகன்! வாட்டசாட்டமாய் இருந்தான்! கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டான்! இன்னும் என்ன வேண்டும்?

ஆனால் இன்றோ கர்த்தருடைய வார்த்தையை அவன் புறக்கணித்ததால் ராஜாவாயிருக்கும் தகுதியை இழந்தான். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியத்துக்கு சமமாம்! பரிசுத்தமான இடத்திலிருந்து அசுத்தமான இடத்துக்கு தள்ளப்படுவதைப் போல் அல்லவா உள்ளது. நேர் எதிரிடையான திசையில் நடப்பது போல் அர்த்தம் உள்ளது! முரட்டாட்டம் பண்ணி கீழ்ப்படியாமல் போவது அவபக்திக்கும், விக்கிரகாராதனைக்கு சமம் என்று சாமுவேல் கூறுவதைப் பார்க்கிறோம். என்ன பரிதாபம்!

சவுல் தன்னுடைய கீழ்ப்படியாமையால் தன்னுடைய தலையிலே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டதைப் பார்க்கிறோம். உன்னுடைய அழிவுக்கு நீயே சீட்டுக்குலுக்கி எடுப்பது போல!

முரட்டாட்டம் என்ற வார்த்தை வேதத்தில் 98 முறை இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருமுறையும் அது ஒரு எச்சரிக்கையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் எபிரேய மொழி முரட்டாட்டம் என்ற வார்த்தையை மாரா என்று அழைக்கிறது. மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தம் என்பது நமக்குத் தெரியும்.

சவுலின் முரட்டாட்டமும் கீழ்ப்படியாமையும் அவன் வாழ்வில் கசப்பைத்தான் உருவாக்கிற்று.  சவுல் தனக்குக் கர்த்தர் கொடுத்த கிருபைகளை இழந்தான்.

சவுலின் வாழ்க்கை இன்று நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்! கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் மட்டும் இருந்து விடாதே! அது யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொளவது போலத்தான்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Advertisements

இதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா?

1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்.

நாம் நாமாக இல்லாமல் யாரோவாக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய வாழ்க்கை பெரிய ஸ்டார் போல இருக்கின்றது. ஒரு பெரிய கூட்டம் அவர் பின்னால் செல்கிறது.  அவர்களைப்போல மாறவும், பேசவும், மேடையை அலங்கரிக்கவும், அநேகர் ஆசைப்படுகின்றனர். ஆனால் சில ஊழியர்கள் ஏழைகளுக்கு சேவைசெய்வதில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.ஏழை எளியவர்க்கு உணவளிப்பதும், உடுத்துவிப்பதும்,அவர்களுடைய பணியாயிருக்கிறது. அவர்களை ஊழியக்காரர் என்று அங்கீகரிக்கக்கூட ஆட்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் மக்களின் பார்வையில் பெரியவர்கள் இல்லை, மிகவும் எளிமையானவர்கள்.  ஆனால் அவர்கள் தேவனுடைய பார்வையில் எத்தனை பெரிய அங்கீகாரம் பெற்றவர்கள்! அவர்களுடைய பாதங்கள் கர்த்தரின் பார்வையில் எவ்வளவு அழகானவைகள்.

என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவனுடைய பார்வையில் மிகச்சிறியவனாயிருந்த  சவுலைக் கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவனாக்கினார்!

உன்னுடைய பார்வையில் நீ எப்படிப்பட்டவன்? மிகவும் சிறியவனாய்த் தோன்றிய சவுலுக்கு இஸ்ரவேலை ஆளும் ராஜாவாகும் பெரிய அழைப்பு கர்த்தரிடத்திலிருந்து வந்தது

நீ இன்று மேடையை அலங்கரிக்கும்  அவசியம் இல்லை! பெரிய ஸ்டார் போன்ற ஊழியம் செய்யவேண்டாம். ஒன்று மட்டும் மறந்து போகாதே. உன் பார்வையில் சிறியவனான உன்னைக் கர்த்தர் பெரிய கனவானாகக் காண்கிறார்!

உங்கல் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

இதழ்: 603 அப்பப்பா! என்ன போலியான முகபாவம்!

1 சாமுவேல் 15: 13,14  சாமுவேல் சவுலினிடத்தில் போனான்.சவுல் அவனை நோக்கி நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

செய்த தவறை மறைக்கும் ஒருவர் நாவில் தேன்ஒழுகும் வார்த்தைகளை பேசுவதைப்பார்த்து இப்படியும் ஒருவர் போலியாக இருக்கமுடியுமா என்று வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இங்கு அப்படித்தான் நடந்து கொள்கிறான். அமலேக்கியருடன் செய்த யுத்தத்தில் கர்த்தர் சாமுவேல் மூலமாய்க்கூறியபடி எல்லாவற்றையும் அழிக்காமல் தனக்குப்பிடித்தமானவற்றை பாதுகாத்ததுமன்றி, சாமுவேல் வரும்வரைக் காத்திராமல் தகனபலிகளை செலுத்தியும் விட்டான் என்று பார்த்தோம்.

இவ்வளவு தவறுகளை செய்த அவன், சாமுவேலைக்கண்டதும் சற்றும் மனம் கூசாமல்,  ‘ நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்பதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தைகள் நடந்த சம்பவத்தோடு எப்படி பொருந்தும்? அதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? நம்ம ஊரில் யாரையாவது சோப்பு போடுவது, ஐஸ் வைக்கிறது,  வெண்ணையைத் தடவுகிறது என்ற வார்த்தைகளைக்  கேட்டிருக்கிறீர்களா? அதைப்போலத்தான் இது!

சவுல் இப்படி கீழ்ப்படியாமல் தன் சொந்த இஷ்டப்படி நடப்பது இதுதான் முதல்தடவை அல்ல, கடைசிதடவையும் அல்ல!

இதை வாசிக்கும்பொழுது நானும் பலதடவைகள் சவுலைப்போல நடந்து கொண்டதை உணர்ந்தேன். கர்த்தர் என்னையும் பார்த்து பலமுறை என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்று கேட்டிருக்கிறார். அது நான் கீழ்ப்படியாத ஒரு காரியமாயிருக்கலாம், அல்லது நான் கர்த்தரிடம் மறைக்க நினைத்த ஒரு காரியமாயிருக்கலாம். இதை போலியான முகபாவத்தோடு நான் செய்யும் எந்த ஸ்தோத்திரபலிகளும் மறைக்க முடியாது.

சாலொமோன் தானுடைய உன்னதப்பாட்டு 2:15 ல், திராட்சைத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள் என்று கூறியது போல சிறு பாவங்கள், சிறு பொய்கள், சிறு பித்தலாட்டம், சின்னஞ்சிறு ஆசைகள் இவைகள் தான் சிறுநரிகளாய் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை அழித்துவிடும். ஜாக்கிரதை!

நாம் கர்த்தரை சந்திக்கும் நாளில் அவர் நீ எதையெல்லாம் எனக்காக செய்தாய் என்று கேட்கமாட்டார். நீ எனக்கு உண்மையாக இருந்தாயா என்றுதான் கேட்பார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 602 என்னிடம் ஏன் இந்த மனஸ்தாபமோ!

1 சாமுவேல் 15: 10,11  அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது.

இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது  நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள்!

இந்த மனவேதனை என்ற அர்த்தத்தைத்தான் மனஸ்தாபம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் கொடுக்கிறது. பிள்ளைகள் தவறான நண்பர்களைத் தெரிந்து கொள்ளும்போது, அல்லது தவறான முடிவைத் தங்கள் திருமண வாழ்வில் எடுக்கும்போது நம் உள்ளம் எவ்வாறு வேதனைப்படுகிறது என்று உங்களில் பலருக்குத் தெரியும்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவாக தெரிந்துகொள்ளப்பட்ட சவுல் தவறு செய்தபோது கர்த்தர் அவனைக் குறித்து மனவேதனைப்பட்டார் என்றுதான் இங்கு பார்க்கிறோம். அவனுடைய நடவடிக்கை, செயல்கள் யாவும் அவரை வேதனைப்படுத்தின. அவனைப் பார்க்கும்போது அவனை ஏன்  உருவாக்கினேன் என்று வருந்தவில்லை, ஐயோ இவன் இப்படி நடந்து கொள்கிறானே என்று வருத்தப்பட்டார்.

தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளோடு கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும்போது இந்த முக்கியமான ஒரு காரியத்தை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் ஒருநாளும் நம்மை உருவாக்கினதைக்குறித்து வருந்துகிறவர் அல்ல. நாம் அவர் வழியை விட்டு விலகும்போது மிகுந்த மன வேதனைப்படுகிறவர்.

மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, பரலோக தேவனின் அன்பை உணர்ந்தவராய் , அவர் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்று கூறுகிறார் (2 பேதுரு 3:9).

கர்த்தர் இன்று எதைக்குறித்து மனஸ்தாபப்படுகிறார்? ஐயோ நான் இன்று அவரிடம் பேசவில்லையே அதனாலா? நான் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வில்லையே அதனாலா? ஐயோ இன்று என்னுடைய ஆபீஸில் என்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, அவரை நான் துக்கப்படுத்திவிட்டேன்!  இப்படி ஒருநாளில் எத்தனைமுறை அவரை நாம் துக்கப்படுத்துகிறோம்.

சவுலைப் போல நம் தேவனாகிய கர்த்தரை நாம் துக்கப்படுத்தவேண்டாம்.

நாம் அவரை நோக்கி ஒரு அடி நகர்ந்தால் போதும் அவர் நம்மை நோக்கி ஓடி வந்து நம்மைக் கட்டித் தழுவிக்கொள்வார்.

நாம் பெரியவர்களாய் இருப்பதால் அவர் நம்மை நேசிக்கவில்லை! அவர் மகா பெரியவராய் இருப்பதால்தான் நம்மை நேசிக்கிறார்! அவரை துக்கப்படுத்தி உதாசீனப்படுத்தாதே!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 601 எதற்கு மதிப்பு அதிகம்!

1 சாமுவேல் 15: 1,3, 9  பின்பு சாமுவேல்  சவுலை நோக்கி: ….இப்போதும் கர்த்தருடைய  வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். ….

இப்பொழுதும்  நீ போய் , அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், கழுதைகளையும், கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

சவுலும், ஜனங்களும் ஆகாகையும்,ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும் அழித்துபோட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டான்.

 

கர்த்தர் சாமுவேலைக் கொண்டு சவுலிடம் அமலேக்கியரை முற்றிலும் அழிக்கும்படி கூறுவதைப் பார்க்கிறோம். அமலேக்கியருக்கு கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் அன்றே வந்து விட்டது என்று நினைக்கிறேன். பல தருணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் கர்த்தருக்கு எதிரான திசையிலே கால் பதித்ததால் கர்த்தர் சவுலிடம் அவர்களை அழிக்கக் கட்டளையிட்டார்.

சவுல் யுத்தத்துக்கு சென்றான், வெற்றியும் பெற்றான். ஆனால் ஒன்று மட்டும் செய்யவில்லை!

நம்முடைய வாழ்க்கையில் இந்த ஆ னா ல் என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது என்று யோசித்துப்பாருங்கள்.

சவுலுடைய யோசனை கர்த்தருடைய யோசனையை விட அருமையான யோசனை அல்லவா! ஆடுமாடுகள், ஆட்டுக்குட்டிகள், இன்னும் நலமான எல்லாவற்றையும் அழித்துப்போட மனதில்லாமல் தப்ப வைத்துக் கொண்டான். நலமானவைகள் என்னவாயிருக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை எரிகோவை யோசுவா அழித்த போது ஆகானின் கண்களைக்கவர்ந்த பணமும், துணிமணிகளும்போல இங்கு கூட இருந்திருக்கலாம்.

அந்த அமலேக்கியரின் ராஜாவை ஏன் விட்டு வைத்தான் என்று தெரியவில்லை. ஒருவேளை சுற்றுலா பயணிகளுக்கு காண்பிப்பதற்காக அவனை வைத்துக்கொண்டானோ என்று தெரியவில்லை. அவனைப் பார்க்கும்போது சவுலுக்கு பேரும், புகழும் கிடைக்கும் அல்லவா!

எது எப்படியிருந்தாலும் சரி, சவுல் செய்த இந்தக் காரியம் கர்த்தரின் சித்தத்திற்கு, கர்த்தரின் வார்த்தைக்கு நேர் எதிரிடையான காரியம். கர்த்தருக்குக் கீழ்ப்படிவதைவிட   இந்தப் பொருட்கள் சவுலின்  பார்வையில் மிகுந்த மதிப்புள்ளவைகளாய் காணப்பட்டன.

என்ன பரிதாபம்!

நம் வாழ்வில் எத்தனைமுறை சவுலைப்போல, பேருக்கும், புகழுக்கும், சொத்துக்கும், சம்பத்துக்கும், பதவிக்கும், பொருளுக்கும், பொன்னுக்கும், துணிமணிகளுக்கும், அதிக மதிப்பு கொடுக்கிறோம் என்று சிந்திதுப்பாருங்கள். அவற்றிற்காகத்தானே நாம் வாழ்கிறோம்! அவைகளின்  மதிப்புக்கு முன்னால் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் என்பது  தூள் தூளாகிவிடுகிறது அல்லவா?

இன்று கர்த்தருக்குக் கீழ்ப்படிவதை விட நாம் உயர்வாக மதிப்பிடும் யாதொரு காரியம் நம்மில் உண்டோ என்று ஆராய்ந்து அவற்றைக் கர்த்தரின் பாதத்தில் ஒப்புக்கொடுப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 600 ஒரு தடையும் இல்லை! தைரியமாயிரு!

1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

கடவுள் எப்படி என் தேவைகளை அறிந்து எனக்காக யாவையும் செய்ய முடியும்! அவர் என்ன நம் அருகில் இருக்கிறாரா?  என்னைப்போல் எத்தனை கோடி மக்கள் தங்களை அவருடைய பிள்ளைகள் என்கிறார்கள்! அத்தனைபேரில் சத்தமும் அவர் காதில் விழுமா? என்று என்றாவது நினைத்ததுண்டா?

அப்படியானால்  சவுலின் குமாரன், பட்டத்து இளவரசன், யோனத்தான் வாயினின்று புறப்பட்ட இந்த ஞானமான, நம்பிக்கையான வார்த்தைகளை சற்றுக் கேளுங்கள்!

சவுல் ஒன்றும் பெலிஸ்தியருக்கு எதிரே தன் வீரத்தைக் காட்டாததால் ஜனங்கள் அவஸ்தைக்குள்ளாகி, பயத்தில் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளித்துக் கொண்டனர் என்று படித்தோம்.

ஆனால் யோனத்தானோ தன் தகப்பனின் தலைகனமான வழியில் செல்லவில்லை! அதற்குபதிலாக யோனத்தான் தன் சேனை வீரரோடு பெலிஸ்தியரின் சேனை இருந்த தாணையத்துக்குப் போக முடிவு செய்தான்.

எத்தனை தைரியம் பாருங்கள்! ஆனால் இது அவன் ஆணவத்தால் எடுத்த முடிவு அல்ல! அவனுடைய இருதயத்தை தான் அவன் வாய் பேசிற்றே! என்ன சொல்கிறான் பாருங்கள்!

அவன், ‘ ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்’ என்று பார்க்கிறோம்.

பெலிஸ்தியரின் சேனை எத்தனைத் திரளாயிருந்தாலும் பரவாயில்லை, கர்த்தர் நம்மை ரட்சிக்க நினைப்பாராயின் அதற்கு எதுவும் தடையாக நிற்க முடியாது என்பது அவனது அசைக்கமுடியா நம்பிக்கை!

இன்று தேவனாகிய கர்த்தர் உன் வாழ்வில் கொடுக்க நினைக்கும் ஆசீர்வாதங்களை யாரும், எதுவும் தடை செய்ய முடியாது.

இன்று நீ ஒருவேளை ஒரு ப்லத்த சேனையை எதிர்க்க முடியாத பெலவீனனாக உனக்குத் தெரியலாம். ஐயோ! எனக்கு விரோதமாக இருக்கும் பொய்சாட்சிகள் அநேகம் நான் என்ன செய்வேன் என்று நினைக்கலாம். கர்த்தர் உன்னை ரட்சிக்க நினைத்தால் எல்லாம் அதமாகிவிடும்!

அவர் உன்னைக் காக்கவும், இரட்சிக்கவும், உனக்கு பதிலளிக்கவும் இந்த உலகில் எந்தத் தடையுமில்லை!  அவர் எவ்வளவு உயரத்தில்இருந்தாலும் சர், எத்தனை சத்தம் அவர் செவிகளில் விழுந்தாலும் சரி,  அவர் உன் சத்தத்தை அறிவார்! உனக்கு வரும் உதவி தடைபடாது! தைரியமாய்  நம்பு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

இதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்?

1 சாமுவேல் 13: 9  அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.

சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்!

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத செயலைத்தான் சவுல் செய்கிறதைப் பார்க்கிறோம். தகனபலிகளை செலுத்தும் உன்னத பணியைக் கர்த்தர்  லேவியருக்குக் கொடுத்திருந்தார்.  சவுலோ பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவன். தகனபலிகளை செலுத்தும் உரிமை சவுலுக்குக் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல சாமுவேல் தீர்க்கதரிசி அவனைக் காத்திருக்கும்படி கூறியிருந்தார். ஆனால் சாமுவேல் வரத் தாமதித்த சந்தர்ப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சவுல் ஆசாரியர்  ஊழியத்தை செய்யத்துணிவதைப் பார்க்கிறோம்.

சவுல் இந்த ஒருமுறைமட்டுமல்ல பலதடவை சந்தர்ப்பத்தை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டதால் அவன் வாழ்க்கை மட்டுமல்ல இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையும் அவஸ்தைக்குள்ளாயிற்று.

எவ்வளவு சீக்கிரத்தில் சவுல் தான் யார் என்பதை மறந்துவிட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தினான் என்று பாருங்கள்.

தேவனுடைய குமாரானனான இயேசு கிறிஸ்துவானவர் சந்தர்ப்பத்து ஏற்றவாறு நடக்கக்கூடிய சூழ்நிலையை சாத்தான் மூன்று முறை ஏற்படுத்தினான் என்று வேதத்தில் படிக்கிறோம். நாற்பது நாட்கள் உபவாசத்துக்குப்பின் கடும்பசியில் இருந்த ஒருவரிடம் உன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி இந்தக் கற்களை அப்பமாக்கி சாப்பிடு, என்னை மட்டும் வணங்கு இந்த உலகமே உனக்கு,  கீழே தாழக்குதி தேவதூதர்கள் தாங்கட்டும் என்றான். நாமாயிருந்தால் அந்த வேளையில் அதுதான் சரி என்று நினைத்திருப்போம். ஆனால் சகல அதிகாரமும் கொண்ட கர்த்தராகிய இயேசுவோ தம்முடைய பிதாவின் சித்தத்தை தம்முடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தியல்ல, தம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் நிறைவேற்றினார் என்று பார்க்கிறோம்.

இன்று நீயும் நானும்  சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? சவுல் பக்கம் சூழ்நிலை சாதகமாயிருந்தாலும் அவன் செய்த காரியம் கீழ்ப்படியாமை அல்லவா?

 கர்த்தராகிய இயேசுவை நாம் அறிந்திருப்பதையும், அவரை நாம் நேசிப்பதையும் இந்த உலகத்துக்கு காட்டும்  ஒரே அடையாளம் நாம் அவருக்குக் கீழ்ப்படிவதுதான்! வாயினால் செய்யும் ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்