Tag Archive | அடைக்கலம்

இதழ்: 654 வானளாவிய மரங்களைப் போல!

1 சாமுவேல் 27:1 பின்பு தாவீது நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்.இனி சவுல் இஸ்ரவேலின்  எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டு பிடிக்கலாம் என்கின்ற நம்பிக்கையற்றுப் போகும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்துக்குப் போய், தப்பித்துக் கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

நான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வால்பாறைக்கு அடிக்கடி வருவேன்.அங்கு ஒரு இடத்தில் உள்ள மரங்கள் எப்பொழுதும் என் கண்களைக் கவரும். வானளாவிய அவைகள் இரும்பினால் செய்யப்பட்டவைகள் போல உறுதியாய் இருக்கும். நிச்சயமாக 200 வருடங்களுக்கு மேல் நிற்கும் மரங்கள் என்று அதைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம். இத்தனை உறுதியாக நிற்கும் இவைகள் எவ்வவளவு காற்றையும், கன மழையையும் பார்த்திருக்கக்கூடும்! அவையெல்லாவற்றையும் தாங்கி, இந்த மரங்கள் இரும்புபோன்ற உடலோடு, நிமிர்ந்து வானளாவ  நிற்பது ஆச்சரியம் தானே!

நாம் தாவீதையும், அவனோடு இருந்த 600 பேரையும் கர்மேல் பர்வதத்திலிருந்து, சவால்கள் என்னும் கொடிய  காட்டுக்குள் தொடரும்போது, நாம் நம் வாழ்க்கையில் தாவீதைப் போல, அநேக எதிரிகளை சந்திக்க நேர்ந்தாலும், எப்படி உறுதியாக நிமிர்ந்து நிற்கலாம் என்று பார்க்கலாம்.

இந்த அதிகாரத்தில் நாம் தாவீதை சந்திக்கும் போது, அவன் தன்னுடைய மனைவி மீகாளை இழந்த துக்கத்தில் இல்லை. அவன் ஒருத்தியை அல்ல, இரண்டு பேரைத் திருமணம் பண்ணியிருந்தான். அவனோடு இருந்த 600 பேரையும், ஒருவேளை அவர்களது குடும்பமும் அங்கு இருந்தால், அவர்களையும் சேர்க்கும்போது, தாவீதின் முன் பெரும் பாதை தோன்றியது.

தாவீது இவ்வளவு சோர்பாக இன்றைய வேதப்பகுதியில் பேசுவதின் அர்த்தம் இப்பொழுது புரிகிறது அல்லவா!

அவனுடைய பாதுகாப்பு மட்டுமல்ல, அவன் விவாகம் செய்த இரு பெண்களின் வாழ்க்கையும் கூட , சவுலுக்கு பயந்தும, உயிருக்காக ஒளிந்து ஓடும் நிலமையில் இருந்தது.

நாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்தால் எளிதாகத் தப்பிக்கத்தானே வழி தேடுவோம். வாழ்க்கை நமக்கு எளிதாக அமைய வேண்டும். இது தப்பான ஆசை இல்லவே இல்லை! யாருக்குத்தான் வேதனையை தலையில் சுமக்க ஆசை சொல்லுங்கள்! என்னால் முடியாது!  நீங்களும் என்னைப் போலத்தான் என்று எனக்குத் தெரியும்!

தாவீது தனக்கு இஸ்ரவேலில் பாதுகாப்பு இல்லை என்று அறிந்து, பெலிஸ்தியரின் தேசத்துக்கு செல்ல முடிவு செய்தான். பெலிஸ்தியரின் கோலியாத்தைக் கொன்ற அவன் அந்த நாட்டில் தனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்று எண்ணினானேத் தவிர, இஸ்ரவேலிலேயேத் தங்கி கர்த்தரின் செட்டைகளில் அடைக்கலம் புகுவதை பாதுகாப்பு என்று நினைக்கவில்லை.

நாம் எத்தனைமுறை இந்தத் தவறை செய்கிறோம். நம் வாழ்க்கையில் எரிமலை நெருப்பைக் கக்கும்போது,  நாம்  கர்த்தருடைய செட்டைகளைத் தேடாமல், மலைகளையும், குன்றுகளையும் நாடி ஓடுகிறோம் அல்லவா? நானும் கூட இப்படித்தான் ஓடியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொருமுறையும் கர்த்தரின் செட்டைகள் மாத்திரம் தான் எனக்குப் பாதுகாப்பு என்று உணர்ந்து ஓடி வந்துமிருக்கிறேன்!

இன்று உங்கள் வாழ்க்கையில் தாவீதைப்போல எதிரிகளால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? எத்தனைக் காற்று , மழை அடித்தாலும் நிமிர்ந்து  நிற்கும் மரங்களைப்போல நீங்கள் சோர்ந்து போகாமலிருக்க கர்த்தர் உங்களுக்கு கிருபை அளிப்பார்!

அவருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் உண்டு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 360 கடக்க முடியாத கடலின் கரையிலே!

யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்…”

இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் அவர்களை பகலிலே மேக ஸ்தம்பத்திலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார்.

இப்பொழுது வேதத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்!

எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள் முழு நம்பிக்கையையும் வைத்திருப்பார்கள் என்று நாம் நினைக்கும் வேளையில், அவர்கள், இந்த வனாந்திரத்தில் சாகிறதைப் பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருக்கும் என்று கூறியது நமக்கு அதிர்ச்சியை கொடுகிறது. சரியான மனநிலையில் இருந்த யாராவது, இந்த அற்புதங்களை அனுபவிப்பதைவிடமுதுகில் சவுக்கடி வாங்குவதுதான் மேல் என்று சொல்வார்களாஎன்ன? என்று நினைக்க தோன்றுகிறது.

 

ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை! நம்மில் பலர் இவ்வாறுதானே நடந்து கொள்கிறோம்.    

 
கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து புரியாத பாதையில் செல்லும் வேளையிலும் விசுவாச நடை போடுவதை விட்டுவிட்டு, விசுவாசமில்லாமல் மூச்சு திணறி பயத்தோடு ஆண்டவரைப் பார்த்து, உம்மை பின்பற்றுவதைவிட நான் பார்வோனிடம் அடிமையாய் இருப்பதே மேல் என்று முணங்குகிறோம் அல்லவா?

நம்முடைய வாழ்க்கைப் பாதையில் சாத்தான் கொண்டு வரும் பயம், சந்தேகம் என்பவை, நம்மை அவிசுவாசத்தில் நடத்தி நாம் தேவனுடைய மகா கிருபையை அனுபவிக்க முடியாமல் செய்கின்றன.

சங்கீதம்: 46: 1 தேவன் நமக்கு அடைக்கலுமும் பெலமும், ஆபத்து காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

 

கடக்க முடியாத சமுத்திரக் கரையிலே இஸ்ரவேல் மக்கள் பாளையமிரங்கியதால், மோசேயை நோக்கி, “மோசே எங்களை எகிப்துக்கு திரும்ப அழைத்து செல்லும்” என்று கதறினர்  ஆனால் கர்த்தர் மோசேயிடம் மோசே என் பிள்ளைகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று சொல் என்று கூறினார்.

என்ன பொறுமை! அவிசுவாத்தோடு முணங்கிய அவர்களைப் பார்த்து, விசுவாசமில்லாத சந்ததியே, எவ்வளவு அற்புதங்களை உங்கள் மத்தியில் செய்தும் நன்றியில்லாமல் நடந்து கொள்ளுகிறீர்கள். எகிப்துக்கே திரும்பிப் போங்கள். அடிமைகளாய் சவுக்கடி வாங்கினால்தான் உங்களுக்குத் தெரியும் என்று அவர்களை வெறுத்து கடிந்து கொள்ளாமல்,பயத்தில் நடுங்கி திகைத்த தன் பிள்ளைகளை பார்த்து நீடிய பொறுமையுள்ள தேவனாகிய கர்த்தர் பயப்படாதிருங்கள் என்றார்.

 

எதிர்காலத்தைக் குறித்த பயம், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம், வறுமையினால் வரும் பயம், அன்பான குடும்பத்தினரை இழந்து தவிப்பதால் வரும் பயம், தனிமையினால் வரும் பயம் , நோயின் கொடுமையால் வரும் பயம், வயதாவதால் வரும் பயம், மரணத்தை குறித்த பயம், இவற்றில் எந்த இன்று பயம் உங்களைத் தாக்கியுள்ளது? கர்த்தர் உங்களை பார்த்து பயப்படாதிருங்கள் என்கிறார்!

 

இம்மட்டும் நடத்திய இம்மானுவேல் இன்னமும் நம்மை நடத்துவார். எதைக்கண்டும் அஞ்சவேண்டாம்! புரியாத பாதையிலும் கரம் பிடித்து நடத்துவார்! நீ கடக்கவே முடியாது என்று அஞ்சி கலங்குகின்ற சமுத்திரத்தைக் கண்டு பயப்படாதே! உன்னுடைய எல்லா பயத்தையும் அவரிடம் ஒப்புவி.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com