Tag Archive | அன்னாள்

மலர் 7 இதழ்: 558 ஒரு உதவாக்கரை வாழ்க்கையா?

1 சாமுவேல் 1: 2  பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

என்னுடைய வாழ்க்கையில் என்றாவது நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்கு இதை வாசித்தவுடன் வந்தது.

உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா?  யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.!

ஒருவேளை உங்கள் கணவர்  உங்களை கைவிட்டதாலோ, அல்லது சரீரப்பிரகாரமாக கொடுமை செய்ததாலோ நான் உபயோகப்படுத்தப் பட்டு தூக்கி எறியப்பட்டு விட்டேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம்!

அல்லது சிறு வயதிலேயே யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டதால் உங்கள் அடிமனதில் நான் எதுவுக்குமே உதவாதவள் என்ற எண்ணம் ஆறாத புண்ணைப் போல இருக்கலாம்!

அப்படித்தான் அன்னாளும் தான் ஒரு உதவாக்கரை என்று தன்னைப்பற்றி நினைத்தாள். அன்னாள் வாழ்ந்த சமயத்தில் பிள்ளை பேறு என்பது கடவுளுடைய ஆசீர்வாதம் என்ற எண்ணம் மட்டுமல்ல, பிள்ளை பெறாதவள் கடவுளால் சபிக்கப்பட்டவள் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இருந்தது.

அன்னாளுடைய மலட்டுத்தன்மை அவள் தன்னைத்தானே வெறுக்க செய்தது. அவள் குடும்பத்தார் அவளை வெறுமையாகப் பார்த்தனர், சமுதாயத்தினர் அவளை கடவுளால் சபிக்கப்பட்டவளாய்ப் பார்த்தனர். அவளுடைய சபையின் போதகர் கூட அவளை போதையில் இருப்பவள் என்று சிறுமையாய் எண்ணினார்.

அப்படிப்பட்ட பயனற்ற தன்மையில் வாழ்ந்து கொண்டிருந்த அன்னாளை கர்த்தர் ஒரு பயனுள்ள தாயாக மாற்றினார். அன்னாளின் வாழ்க்கையை நான் இந்த மலர் எழுதுவதற்காக படித்தபோது அவளும் என் கண்களுக்கு ஒரு வேதாகமத்தின் கதாநாயகி போலத்தான் தோன்றினாள்.

அன்னாளைப் பற்றி இன்னும் ஓரிரு நாட்கள் படிக்கும் போது, தயவுசெய்து உங்களுடைய வாழ்க்கையில் பயனற்ற தன்மை என்று நீங்கள் நினைக்கும் இடத்தை சற்று கூர்ந்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதை நினைத்துப் பார்க்கவே அஞ்சும் ஒரு இடமாக, சம்பவமாக, காயமாக இருக்கலாம். பயனற்ற வெறுமையான அந்த வாழ்க்கையை மாற்றி அன்னாளைப் போல பயனுள்ள வாழ்க்கையாக உங்களை  மாற்றக் கர்த்தரால் கூடும்.

அன்னாளைப் போல நாம் வெறுமையாய் இருக்கும் போது தான் கர்த்தர் நம்மை நிரப்ப முடியும் என்று நாம் அறிந்து கொள்வோம்.

ஒன்றுக்கும் உதவாக்கரை என்ற கறையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? கர்த்தரிடம் வாருங்கள் உங்களை அன்னாளைப் போல ஆசீர்வாதமாக்குவார்.

நாம் தொடர்ந்து  அன்னாளின் வாழ்க்கையைப் படிக்கும்போது தயவு செய்து உங்கள் நண்பர்களையும் இந்தத் தோட்டத்துக்கு அழைத்து வாருங்கள். அன்னாளின் வாழ்வில் அற்புதத்தை செய்த தேவன் உங்கள் வாழ்விலும் அற்புதங்களை செய்வார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 5 இதழ் 310 வீட்டுக்குள் நுழையும் போது வரும் சுகமே தனி!

1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,
அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

நேற்று 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்தேன். வருகின்ற வழியில் காரில் உள்ள ஏசியில் சிறிது பழுது ஏற்பட்டதால் பிரயாணம் சுலபமாக இல்லை. மலையில் மழையிலும்,குளிரிலும் இருந்து விட்டு வந்த எங்கள் சரீரம் ஏசி இல்லாத காரில், வெளியில் அடித்த கடும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் கஷ்டப்பட்டது. ஆனாலும் எங்கள் நோக்கம் வீட்டுக்கு போகும் வரை எங்கும் காரை நிறுத்தாமல் போய் விட வேண்டும் என்பதாகவே இருந்தது. வீட்டுக்குள் நுழையும் போது சரீரம் சோர்படைந்திருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் களைப்பைப் போக்கியது. நாங்கள் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கி எழுந்து வந்த என் பேரன் Zac எங்கள் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டபோது வந்த சுகமேத் தனி!

இதை வாசிக்கும் உங்களில் பலர் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வீட்டுக்குத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். வீடு என்றவுடன் என்ன ஞாபகத்து வரும்? நீங்கள் வாழ்ந்த கட்டிடமா? உங்கள் படுக்கை அறையா? உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரா? ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா? வீடு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நீங்கள் சிறு வயதில் அனுபவித்த இன்பங்கள் ஞாபகம் வரவில்லையா?

இன்றைய வேதாகமப் பகுதியில் சாமுவேல் தீர்க்கதரிசி வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது என்று வாசிக்கிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ராமாவில் தான் சாமுவேலின் தாய் தகப்பனாகிய அன்னாளும், எல்க்கானாவும் வாழ்ந்தனர் (1 சாமுவேல் 2:11) அதுமட்டுமல்ல, சாமுவேலுக்கு பின்னர் அவர்களுக்கு பல குழந்தைகள் இருந்தனர், அப்படியானால் சாமுவேலுக்கு அங்குத் தம்பி, தங்கை மாரும், அவர்களுடைய பிள்ளைகளும் கூட இருந்தனர்.

அது மட்டுமல்ல, அவ்விடத்தில் சாமுவேல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சாமுவேலுக்கு அங்கே அவனுடைய தாய் தகப்பன் மட்டுமல்ல, தம்பி தங்கை மட்டுமல்ல, உற்றார் உறவினர் மட்டுமல்ல, கர்த்தருடைய பலிபீடமும் இருந்தது. இவை அனைத்தும் உள்ள இடமே சாமுவேலுக்கு வீடு என்ற சுகத்தைக் கொடுத்தது என்று பார்க்கிறோம். வீடு என்பது தேவனைத் துதித்து ஆராதிக்கும் ஒரு இடம் கூட!

வீடு என்பது நான்கு சுவர்கள் உள்ள வசிப்பிடம் மட்டும் அல்ல, நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நம் குடும்பும் வாழும் இடம்! சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள்! பின்னர் வீட்டுக்குள் நுழையும் சுகமே தனி சுகமாக மாறும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்