Tag Archive | அபிகாயில்

இதழ்: 793 தாவீதை நேசித்த தேவன்!

சங்கீதம் 51:1  தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்!

தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்!

தாவீதின் வாழ்க்கையில் அவன் பெண்களை நடத்தியவிதம் கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதத்தில் இல்லவே இல்லை! அவன் சவுலின் குமாரத்தியாகிய மீகாளை எப்படி நடத்தினான் ஞாபகம் உள்ளதா?  அவளால் ஜன்னல் வழியாக இறக்கிவிட்டபின்னர் அவளைத் தேடவே இல்லை. பின்னர் அவள் இன்னொருவனுக்கு மனைவி என்று அறிந்தபின்னரும் அவள் கணவனை விட்டு விட்டு வரும்படி செய்தான். அபிகாயிலிடம் இனிப்பான வார்த்தைகளை பேசி திருமணம் செய்த அன்று இன்னொருத்தியையையும் விவாகம் பண்ணின செய்தியை அவளிடம் சொன்னான் என்றும் பார்த்தோம். அதுமட்டுமல்ல அவனுடைய பாதையில் அவன் அநேகப் பெண்களை விவாகம் செய்து மனைவி என்ற பட்டியலை விரிவாக்கியிருந்தான்.

கடைசியில் நமக்கு மறக்கவே முடியாத காரியம் அவன் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து உல்லாசமாக பார்த்த போது அவன் கண்களில் பட்ட அழகி பத்சேபாளை அடைய, அவளுடைய உத்தம புருஷனும், சேனை வீரனுமான உரியாவைக் கொலை செய்ததுதான்!

இப்படிப்பட்ட தவறான ஓட்டத்தை ஓடிக்கொண்டிருந்த தாவீது எங்கோ ஒருநாள் தேவனாகிய கர்த்தரைத் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நோக்கி கதறியிருந்திருக்க வேண்டும்.

தாவீதை நியாயம் தீர்க்க நான் யார்? கர்த்தர் தாமே தம்முடைய அளவிடப்பட முடியாத ஞானத்தால் நம்முடைய எண்ணங்களையும் எண்ணங்களின் தோற்றங்களையும் அறிந்திருக்கிறார்!

தாவீது தன்னுடைய வார்த்தைகளால் அவரை

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்.அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது  ( சங்: 145;3)

என்று கூறுகிறான்.

சகலத்தையும் காணும் இந்த சர்வ வல்ல, மகத்துவமுள்ள தேவனிடம் தகுதியே இல்லாத இந்த பூமியில் வாழும் மனிதரை நேசிக்கும் உள்ளம் இருந்தது!  இந்த மகத்துவமான தேவனைப்பற்றி நான் அறிய அறிய, எனக்கு கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார் என்று புரிகிறது!

அதுமட்டுமல்ல! இன்னொன்றும் புரிகிறது!  தவறான பாதையில் புள்ளி மான் போல ஓடிக்கொண்டிருந்த இந்தத் தாவீதை நேசித்த மிகவும் பெரிய மகத்துவமுள்ள கர்த்தரால் என்னையும் நேசிக்க முடியும் என்ற மகா பெரிய உண்மையும் கூட!

தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார் என்று நான் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தபோது முதலில் என் நினைவுக்கு வந்தது இன்றைய வேதாகமப் பகுதி அடங்கிய சங்கீதம் 51 தான்! வேதாகமத்தில் நம் ஒவ்வொருவரையும் மிகவும் தொடும் சங்கீதம் இதுதான். இந்த சங்கீதத்தில் தான் நாம் தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் அதிகமாக நேசித்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது!  அதுமட்டுமல்ல! இங்குதான் நாம் ஒவ்வொருவரும் கர்த்தர் ஏன் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ள உதவும் என்றும் நம்புகிறேன்.

தகுதியே இல்லாத என்னையும் தேவன் நேசிக்கிறார் என்ற எண்ணம் என்னை என்னுடைய வாழ்க்கைப்பாதையில் ஒவ்வொருநாளும் வழிநடத்துகிறது! நான் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் இந்த தேவன் என்னை நேசிக்கிறார் என்ற ஆணித்தரமான உண்மை!

இந்த மகாப்பெரிய தேவன் உன்னையும் என்னையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை இந்த வேதாகம தியானம் நமக்கு தெளிவாக்கி காட்ட வேண்டுமென்று ஜெபிக்கிறேன்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 656 கர்த்தரை நோக்கிப் பார்! உதவி வரும்!

1 சாமுவேல் 30: 3, 6  தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.                    தாவீதும் மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.    

தாவீது பெலிஸ்திய நாட்டில் தன் மனைவிகளோடும், தன்னோடிருந்த 600 பேர்களோடும், அவர்களுடைய குடும்பங்களோடும் வந்து குடியேறினான். பெலிஸ்திய நாட்டின் எல்லைகளை ஒட்டியிருந்த கானானியரை கொள்ளையடித்து வந்தான். ஆனால் பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீஸிடம் தான் யூதாவைக் கொள்ளையடித்ததாக பொய் சொல்லி ஏமாற்றுகிறான் என்று பார்த்தோம்.

ஆனால் தாவீது சிக்லாகை விட்டு வெளியே இருக்கும்போது, அமலேக்கியர் வந்து சிக்லாகை சுட்டெரித்து, அங்கிருந்த எல்லோரையும் சிறை பிடித்துக்கொண்டு போயினர்.

தாவீதின் மனைவிமாரான அபிகாயிலும், அகினோவாமும், தாவீதொடு இருந்த மனிதரின் குடும்பங்களும் சிறைப்பிடிக்கப் பட்டனர்.

தாவீது  ஏமாற்றியது எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள்! 29 ம் அதிகாரத்தில் தாவீதை, பெலிஸ்தியரின் ராஜாவாகிய ஆகீஸ், இஸ்ரவேலருக்கு விரோதமான யுத்தத்துக்கு அழைத்து செல்வதைப் பார்க்கலாம். கடைசி நிமிஷத்தில், பெலிஸ்திய பிரபுக்கள் அதை ஏற்றுக் கொள்ளாததால், அவன் தன் அந்தக் கொடிய காரியத்திலிருந்து தப்பித்து வீட்டுக்குத் திரும்புகிறான். வீட்டுக்கு வந்தால் தலையில் இடி விழுந்தாற்போல் அவன் வாழ்ந்த சிக்லாக் கொள்ளையிடப்பட்டு  அக்கினிக்கு இரையாயிருந்தது.

தாவீது கர்த்தரை நம்பாமல் எதிரிகளின் பட்டணத்தில் அடைக்கலம் புகுந்ததும் தவறு! அடைக்கலம் கொடுத்த ஆகீஸை பொய் சொல்லி ஏமாற்றியதும் தவறு. அவன் கர்த்தரை விசுவாசிக்காதின் அடையாளம் இது. அவிசுவாசம் கீழ்ப்படியாமையை பிறப்பிக்கும்!

தாவீது எப்பக்கமும் ஓட முடியாமல் மாட்டிக்கொண்டு, தேவன் பக்கம் திரும்புகிறான்.  நம்முடைய அவிசுவாசத்தாலும், கீழ்ப்படியாமையாலும் நாம் துக்கமான பாதையில் செல்லும்போது, தேவனாகிய கர்த்தர் தம்முடைய கிருபையை நம்மிடமிருந்து விலக்குவதில்லை!   அவர்   நமக்கு உதவி செய்ய நம்மண்டை வருகிறார்.

இந்த  மா பெரிய கிருபையைத்தான் கர்த்தர் தாவீதுக்கு சிக்லாக்கில் அருளினார். பொய் சொல்லி, ஏமாற்றி, கர்த்தரை விட்டு விலகிய அவனுக்கு கர்த்தர் கிருபையாய் இரங்கினார்.

உன்னுடைய கீழ்ப்படியாமையால் சிக்லாகில் மாட்டிக்கொண்டிருக்கிறாயா? தாவீதைப்போல கிருபையின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பு! உதவி உடனே வரும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 653 அவசரமாய் தேர்ந்தெடுத்த துணை!

1 சாமுவேல்: 25:42  பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய் அவனுக்கு மனைவியானாள்.

நான் இதற்கு முன்னால் இந்தப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம், ஒரு பணக்கார விதவையான அபிகாயில், தாவீதை மணந்து சந்தோஷமாக வாழ்ந்தாள் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அபிகாயிலின் வாழ்க்கையைப் பற்றி  ஆழமாகப் படிக்கும் போது தான் அது தவறான எண்ணம்  என்று புரிந்தது.

தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியபோது அவள் மறு பேச்சில்லாமல் அதை ஏற்றுக்கொண்டாள் என்று பார்த்தோம்.  நாபாலால் அவள் உள்ளம் காயப்பட்டிருந்தது! அவனுடைய திடீர் மரணம் வேறு அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது!

அப்படிப்பட்ட வேளையில், அவள் அவசர அவசரமாக அவனைத் திருமணம் செய்ய விரைந்தது எதனால் என்று புரியவில்லை! அவள் உள்ளத்தில் என்ன எதிர்பார்ப்புகள் இருந்தனவோ தெரியவில்லை! நிச்சயமாக கர்மேலில்  நாபோலோடு வாழ்ந்த வாழ்க்கையை விட முற்றிலும் வேறான வாழ்க்கைக் கிடைக்கும் என்றுதானே எதிர்பார்த்திருப்பாள்.

அபிகாயில் ஒரே ஒருநாள் தாவீதை சந்தித்திருந்தாள். ஒருவேளை அவன் தான் இஸ்ரவேலின் எதிர்கால ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பதைக் கூறியிருக்கலாம்! அபிகாயில் ஒருவேளைத் தன்னை எதிர்கால அரசியாகக்கூட நினைத்திருக்கலாம்!

ஆனால் தாவீதோ நாடோடியாக வாழ்ந்து கொண்டிருந்தான். 400 பேர் அவனோடு இருந்தார்கள். எல்லாவற்றையும் பகிர்ந்து வாழும் ஒரு நாடோடிகளின் தலைவன் அவன்!  அவனிடம் வந்த சில நாட்களிலேயே, கர்மேலின் வாழ்க்கை எவ்வளவோ மேல் என்று புரிந்திருக்கும்.

அதுமட்டுமல்ல! அபிகாயில், தாவீது இருவரின் வாழ்க்கையிலும் முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட தோல்வி மனதில் இன்னும் ஆறாத காயமாகத் தான் இருந்திருக்கும். தாவீது சவுல் ராஜாவின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்திருந்தான். இந்த அதிகாரம் 44 ம் வசனத்தில் பார்க்கிறோம், சவுல் அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தான் என்று. ஒருவேளைத் தாவீதின் மீது தனக்கு இருந்த வெறுப்பை இவ்விதமாக வெளிப்படுத்தியிருந்திருப்பான். காயத்தோடு ஒன்று  சேர்ந்த இருவரும், ஒருவர் காயத்துக்கு மற்றொருவர் மருந்து போடவேண்டும் என்றுதான் எதிர்பார்த்திருப்பார்கள்! அது சாத்தியமா?

வாலிப நண்பர்களே! நான் சரியான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்! ஆனால் ஒன்று சேரும்போதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பது வெளிப்படும்! அது உங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம்!

அதனால்தான் நம் வாழ்க்கையில் நாம் ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து, இவள்தான் அல்லது இவன் தான் என் காயத்துக்கு மருந்து என்று அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்து, நம்பிக்கையை வளர்ப்பதற்கு முன்னரே நான் தேவனைத் தேட வேண்டும்!

அபிகாயில் தாவீதை மணந்து நிச்சயமாக சந்தோஷமாக வாழ்வில்லை! அவள் இன்னொரு பெண்ணோடு தன் கணவனை பங்கு போட வேண்டும் என்று தாவீது சொன்னபோது அது அவளுக்கு இடி போலத்தான் இருந்திருக்கும். கர்மேல் வாழ்க்கை எவ்வளவோ மேல் என்று தோன்றியிருக்கும்!

வெற்றிகரமானத் திருமணம் ஒரு முக்கோணம் போன்றது! அதில் ஒருவன், ஒருத்தி, தேவன்,  இவர்களைத்தவிர யாருக்கும் இடம் கிடையாது!

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ஒவ்வொருநாளும் திரும்பக்கட்டப் பட வேண்டிய ஒரு மாளிகை போன்றது!

அபிகாயிலைப் போல அவசரமாய் முடிவு செய்துவிட்டு பின்னர் வருத்தப்படாதே! முதலில் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து அவருடைய சித்தத்தை அறிந்துகொள்!

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 652 காயப்பட்ட உள்ளம்!

1 சாமுவேல்: 25: 39 – 43  நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது,……அபிகாயிலை விவாகம் பண்ணுகிறதற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.  

பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து…. அவனுக்கு மனைவியானாள்.

யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான். அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள். 

அபிகாயிலின் கணவன் கர்த்தர் வாதித்ததினால் மரித்ததை நேற்றுப் பார்த்தோம். அதைக் கேள்விப்பட்ட தாவீது அபிகாயிலை மணக்க விரும்பி தூது அனுப்புகிறான்..

இந்த அதிகாரத்தைப் படிக்கும்போது என்ன காரணத்தினால் தாவீது அபிகாயிலை விவாகம் செய்ய முடிவெடுத்திருப்பான் என்று என்னால் யூகம் பண்ணவே முடியவில்லை. ஆனால் இந்த சம்பந்தத்தில் லாபம் தாவீதுக்குத்தான் என்று மட்டும் புரிந்தது. அபிகாயிலிடம் பணம் இருந்தது! தாவீதுக்கு அது தேவைப்பட்டது.

அபிகாயிலின் பணம் செழித்தக் குடும்பத்தில் அவள் வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தது என்று நாம் பார்த்தோம். அவளுடைய விவேகமும், புத்திசாலித்தனமும் அவளை தனிப்படுத்திக் காட்டியபோதிலும், அவளுடைய புத்திகெட்ட, துராக்கிரதனான  கணவனால், அவள் உள்ளம் எவ்வளவு தூரம் காயப்பட்டிருந்திருக்கும் எனபதை நாம் சிந்திக்கவில்லையானால் அவள் கதைக்கு நாம் நியாயம் செய்ய மாட்டோம் அல்லவா!

அவளுடைய புண்பட்ட உணர்ச்சிகளை  மேலும் காயப்படுத்தியது அவளுடைய கணவனின் திடீர் மரணம். அவளுக்கும், நாபாலுக்கும் பிள்ளைகள் இருந்ததாக வேதம் கூறவில்லை. அவளுடைய கண்ணீரின் ஈரம் காயுமுன்னரே தாவீதின் ஆட்கள் அவளை நெருங்கி தாவீது அவளை விவாகம் செய்ய விரும்புவதாகக் கூறினர்.

நாபாலுக்கும் தாவீதுக்கும் எத்தனை வித்தியாசம்! நாபால் ஒரு பேலியாளின் மகன், முட்டாள், துராகிருதன். தாவீதோ அழகும், ஆண்மையும் கொண்டவன். அவனைப் பார்த்தவுடன் பெண்கள் தெருவில் கூடி அவனைப் புகழ்ந்து  பாடும் ஈர்ப்பு தன்மை கொண்டவன்!

அடுத்த வசனத்தில் அவள் உடனே தாவீதுடைய அழைப்புக்கு இணங்கி, தன்னுடைய தாதிகளோடு அவனைத் திருமணம் செய்ய செல்வதாகப் பார்க்கிறோம்.

ஆனால் என்னுடைய மனதை முள்ளைப்போல குத்தியது அடுத்த வசனம்தான். தாவீது அவளை மட்டும் விவாகம் செய்யவில்லை, இன்னுமொரு பெண்ணையும் அதே சமயத்தில் மணந்தான். அவனுடைய இன்னொரு விவாகத்தைப் பற்றி அபிகாயிலுக்குத் தெரியுமோ இல்லையோ தெரியவில்லை. விவாகம் செய்தவுடன் தாவீது அவளிடம், இது என்னுடைய இன்னொரு மனைவி என்று அறிமுகப்படுத்தியிருப்பானோ என்னவோ!

என்ன மரியாதை அந்தப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டது என்று பாருங்கள்!

ஒருவேளை நீங்கள்கூட, அந்தக்காலத்தில் இரண்டு, மூன்றுபேரை மணம் செய்வது சகஜம் தானே. இதில் தாவீது செய்தது என்ன தவறு என்று நினைக்கலாம்!

நோவா இரண்டாவது மணம் செய்யவில்லை! ஈசாக்கு செய்யவில்லை! நம்முடைய முற்பிதாக்களில் எவரெவர் இரண்டாவது பெண் கொண்டார்களோ  அவர்கள் எல்லாரும் ஒவ்வொருமுறையும் தங்கள் கால்களில் தாங்களே கொதி நீரை ஊற்றியமாதிரி கஷ்டப்பட்டார்கள், ஏனெனில், ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஆதியில் ஏதேனில் கர்த்தர் நமக்காக ஏற்படுத்திய நியமம்!

அபிகாயிலின் காயப்பட்ட உள்ளம் ஆறுதலைத் தேடியது! அவள் தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியவுடனே எதையும் சிந்திக்காமல் அதற்கு சம்மதிக்கிறாள். ஆனால் ஒருவேளை அவள் காயம் ஆற நேரம் எடுத்து, சிந்தித்து முடிவை எடுத்திருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நாம்  ஏதோ ஒரு காரியத்தில் காயப்பட்ட வேளையில், யாராவது நம்மிடம் ஆறுதலாய் நடந்து கொண்டால், நாம் நம் உள்ளத்தை பறிகொடுப்பதில்லையா! விவாகரத்தைக் கடந்து வரும் ஒரு பெண் அல்லது ஆண்,  அந்த காயப்பட்ட சூழ்நிலையில் தனக்குத் துணையாக நின்றவருடன் திருமணம் செய்வதை பார்த்திருக்கிறேன்.

ஆனால் எந்த முடிவையும், கண்ணில் நீர் காயும் முன்னர் எடுக்கவேண்டாம் என்பதே நாம் அபிகாயிலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்!

கர்த்தர் உங்களை இந்த வார்த்தையின் மூலம் ஆசிர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 651 கல்லைப்போலான இருதயம்!

1 சாமுவேல் 25:37-38 பொழுது விடிந்து நாபாலின் வெறி தெளிந்தபின்பு அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள். அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறைய பத்து நாளுக்கு பின்பு அவன் செத்தான்.

நாபாலின் வீட்டில் ராஜவிருந்து நடந்துமுடிந்தது. மதுபானத்தை அதிகமாக அருந்தியிருந்ததால், அன்று இரவு நாபாலிடம் அபிகாயில் எந்தக்காரியத்தையும் சொல்லவில்லை என்று பார்த்தோம்.

மறுநாள் காலையில், எல்லாவற்றையும் நாபாலுக்கு அவள் அறிவித்தாள். நாம் அவளுடைய காலத்துக்கு செல்ல முடிந்தால், ஒரு ஈயாகவாவது மாறி அவளுடைய அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்க நமக்கு ஆவல் உண்டல்லவா!

அபிகாயில் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல சொல்ல, அவள் ஆயத்தம் பண்ணின விருந்தையும், அவள் தாவீதை சந்தித்து பேசின எல்லா வர்த்தமானங்களையும் அவன் அறிந்தபோது, கோபம் உச்சியை எட்டியது. சில வேதாகம வல்லுநர் இதை மாசிவ் ஹார்ட் அட்டாக் என்றே கூறுகின்றனர்.

கட்டுக்கடங்காத கோபமா அல்லது வேறே ஏதாவது மருத்துவ காரணமோ தெரியவில்லை ஆனால் அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்தது, அவன் கல்லைப் போனாலானான்  என்று வேதம்  கூறுகிறது. அதுமட்டுமல்ல கர்த்தர் அவனை வாதித்ததினால் பத்து நாளுக்கு பின்பு அவன் இறந்தே போனான்.

கர்த்தர் அவனை வாதித்தார் என்ற வார்த்தையை நான் படித்த போது லூக்கா 12 ம் அதிகாரம்தான் நினைவுக்கு வந்தது.

அதில் ஒருவன் தன்னுடைய ஆஸ்தியை பாகம் பிரித்துக் கொடுக்கும்படி இயேசுவானவரிடம் கேட்கிறான். அதற்கு அவர் தன்னுடைய பாணியில் அவர்களுக்கு ஒரு உவமையைக் கூறுகிறார். ஒரு ஐஸ்வரியவானின் நிலம் நன்றாய் விளைந்தது. அவன் நான் என்ன செய்வேன்? என் களஞ்சியங்களை பெரியதாய்க் கட்டி அவற்றில் இதை சேர்த்து வைத்து, அநேக நாட்களுக்கு வேண்டிய பொருள்கள் இருக்கிறது ஆகையால், புசித்து, குடித்து, இளைப்பாறு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று நினைத்தான்.

தேவனோ அவனை நோக்கி, மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது  என்றார்  ( லூக் 12: 20)

இந்த உவமையில்  கர்த்தராகிய இயேசு நாபாலுடைய பெயரை உபயோகப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தேன். நாபால் என்ற ஒரு ஐஸ்வரியவான் இருந்தான். அவன் ஆடுகளை மயிர் கத்தரிக்கும் வேளை அவனுக்கு மிகுந்த பலன் கிடைத்தது. அதற்குக் காரணம் தாவீது அவனுடைய ஆடுகளைப் பாதுகாத்ததினால் தான். அவன் அதை தாவீதோடு பகிர்ந்து கொள்ளாமல் தனக்கென்று சேமிக்க நினைத்தான். ஆனால் கர்த்தர் அவனை நோக்கி, மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்று அவனை வாதித்ததினால் அவன் மரித்தான், என்று கூட கூறியிருக்கலாம்!

நான் நாபாலின் கதையையும், இந்த உவமையையும் படித்தபோது கர்த்தர் இன்று என்னிடம், நீ இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்ப்பட்டால், நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றால் என்ன சொல்லுவேன் என்று நினைத்தேன். இந்த வசனத்தை நாம் ஒவ்வொருநாளும் படுக்கும் முன் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

நம்மில் பலருக்கு இதைக் கேட்கவே பிடிக்காது ஏனெனில் இதற்கு பின்னணியில் பொருளாசை என்னும் பாவம் ஒளிந்து கொண்டிருக்கிறது! அது தேவனுக்கும் நமக்கும் உள்ளத் தொடர்பைத் துண்டித்து, நாம் பரலோக தேவனின் முகத்தைக் காணாமல் மறைத்துவிடும்!

இன்று உங்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டால் என்ன பதில் கொடுப்பீர்கள்!  சிந்தித்து பாருங்கள்!

கர்த்தர் உங்களை இந்த வார்த்தையின் மூலம் ஆசிர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

 

இதழ்: 650 பேசுவதில் விவேகம்!

1 சாமுவேல் 25: 36 …..அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

அபிகாயில் தாவீதை சந்தித்துத் திரும்பும்போது ராஜ விருந்து நடந்து கொண்டிருந்தது என்று பார்த்தோம். நாபால் குடித்து வெறித்திருந்தான். அதனால் அபிகாயில் அவனிடம் ஒன்றையும் அறிவிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது.

இந்தப்பகுதி மறுபடியும் அபிகாயிலுடைய விவேகத்தை நமக்கு தெளிவு படுத்துகிறது.

தாவீதை சந்தித்துத் தன்னுடைய மதிகேட கணவனையும், ஊழியரையும் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து மீட்டு, அவள் வீட்டுக்குத் திரும்பியபோது நடந்தவற்றை யாரிடமாவது கூற அவள் ஆசைப்பட்டிருப்பாள். ஆனால் அவள் அங்கு கண்டது குடித்து வெறித்திருந்த கணவனையும், அவனோடு களியாட்டம் போட்ட குடிகார நண்பர்களையும் தான்.

ஒரு நிமிடம்! நாம் இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்துவிட்டு களைப்பாக  வீட்டுக்குத் திரும்பும்போது,  நம் வீட்டில் சத்தமாக மியூசிக் போட்டு, நடந்த எதுவுமே தெரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? நாம் பயங்கர கோபத்துடன் திட்டி, ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்க மாட்டோமா?

அபிகாயிலுக்கு நாபாலைத் திட்ட எல்லா உரிமையும் இருந்தது! ஆனால் அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை! அமைதியாக இருப்பதைப் பார்க்கிறோம். நீங்களோ அல்லது நானோ அங்கு இருந்திருந்தால் ஒரு வார்த்தை அல்ல ஒரு அணை போல வார்த்தைகளைக் கொட்டியிருப்போம்!   நாம் ஒன்று  சொல்ல அது வார்த்தைத் தவறி மற்றொன்றாக முடிய , நிச்சயமாக வார்த்தைகள் பலத்த சண்டையில்தான் முடிவடைந்திருக்கும்!   இது நம்மில் பலர் அனுபவவிப்பது தானே! அதுவும் நாம் அதிகமாக சோர்பாக வீட்டுக்குத் திரும்பும்போது இப்படி நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லவா!

ஆனால் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை! தன்னுடைய கோபம் அடங்கும்வரை அவள் பேசவேயில்லை! வேதம் சொல்கிறது, பொழுது விடியுமட்டும் அவள் பேசவில்லை என்று.

ஒருநாள் நான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னைப் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா என்னிடம், நீ இப்பொழுது படுத்து தூங்கு, காலையில் இதைப் ப்ற்றி யோசி! காலையில் இதே பிரச்சனை உனக்கு வேறுமாதிரித் தோன்றும்! என்றார்கள். இதை என் வாழ்க்கையில் மறந்ததே கிடையாது.

அபிகாயில் காலை வரைக் காத்திருந்தாள். அது  அவளுக்கு கோபத்தை தணிக்க, நடந்ததை மறுபடியும் சிந்திக்க போதுமான நேரத்தைக் கொடுத்தது.

சாலொமொன் ராஜா , (நீதிமொழிகள் 25:11) ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் என்று வார்த்தையின் விவேகத்தைப் பற்றிக் கூறுகிறார். இது எவ்வளவு உண்மை!

அபிகாயில் நடந்து கொண்டது நமக்கு ஒரு நல்ல மாதிரியாக இல்லையா? நாம் கோபத்தில் இருக்கும்போது பேசவேக் கூடாது என்பது எவ்வளவு விவேகமானக் காரியம்!

கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளைக்கொண்டு உங்களை ஆசிர்வதிக்கட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

(premasunderraj@gmail.com)

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 649 கர்த்தர் கணக்கு கேட்டால்?

1 சாமுவேல் 25: 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜாவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது. அவன் இருதயம் களித்திருந்தது. அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

ஆடுகள் மயிர் கத்தரிக்கும் காலம் கடந்து விட்டது! நாபாலுக்கு நல்ல வருமானம்! தாவீதிடம் நீயா நானா என்று பேசிவிட்டு, இப்பொழுது தாவீது நானூறுபேரோடு கர்மேலில் அவனைக்கொல்ல வருவதுகூடத் தெரியாமல் நாபால் வெறித்துக் களித்துக்கொண்டிருந்தான்!

அவனுடைய மனைவியாகிய அபிகாயில் தன்னைக் காப்பாற்றத் தீவிரித்து சென்றது கூடத் தெரியாமல் ராஜவிருந்து நடந்துகொண்டிருந்தது நாபாலின் வீட்டில்!

ஒருநிமிடம் கண்ணை மூடி இந்தக் களியாட்ட விருந்தை பாருங்களேன்! அங்கே அவர்கள் சத்தமாக சிரிப்பது கேட்கவில்லையா? அந்தக் குடிகாரர்கள் ஊற்றிக்குடிக்கும் மதுவின்  மணம் நம் நாசியைத் துளைக்கவில்லையா ?  ஏதோ நாளை என்று ஒன்று இல்லாததுபோலல்லவா கூத்தடிக்கிறார்கள்!

அபிகாயில் தாவீதை சந்தித்து திரும்பியபோது இந்தக் காட்சியைத்தான் பார்த்தாள்.

நாபால் தன்னுடைய வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டாடியது என்னை சற்று சிந்திக்க வைத்தது. இன்றைக்கு சொத்து சம்பாதிக்கும் பலர் இப்படித்தானே தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்! இன்று யூ ட்யூபில் சில பணக்காரரின் திருமண வைபவங்களைப் பார்க்கும்போதும், அவர்கள் மணமக்களின் ஆடையில் பதிக்கும் பொன்னையும், வைரங்களையும் பார்க்கும்போதும் இவர்கள் நாபாலைப்போல நாளை என்று ஒன்று இல்லாததுபோல நடந்து கொள்கிறார்களே என்றுதான் நினைக்கத் தோன்றும்.

நாபால் தன்னுடைய மனைவியின் கண்களுக்கு முன்பாகவும், கர்த்தருடைய பார்வையிலும் தான் சம்பாதித்ததை குடித்து, வெறித்து, களியாட்டம் பண்ணிக்கொண்டிருந்தான்.

ரோமர் 14:12 ல் பவுல் கூறுகிறார்,’ ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்’ என்று. அப்படியானால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்கு கொடுக்கவேண்டுமென்ற பயம் நமக்குள் வேண்டும்!

நம்மில் பலர் இன்று நாபாலைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நான் சம்பாதித்தது, நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்று எண்ணிக்கொண்டு,  நாளை என்ற ஒன்று இல்லாததுபோல் இன்றைக்கே அனுபவிக்க நினைக்கிறோம்.

நாபாலுடைய இந்த எண்ணம் அவனை அழிவுக்குள்ளாக்கியது! ஒவ்வொரு சிறிய ஆசிர்வாதமும் கர்த்தருடைய கரத்தில் இருந்து வருகிறது என்று எண்ணாமல், நாபாலைப்போல நான் சம்பாதித்த சொத்தை எப்படி வேண்டுமானலும் செலவிடுவேன் என்று வாழ்வோமானால் நாமும் அழிந்து போவோம்!

இன்று கர்த்தர் உன்னிடம் கணக்கு கேட்டால், உன் வாழ்க்கையில் என்னென்ன அவருக்குப் பிடித்தவை, என்னென்ன அவருக்குப் பிடிக்காதவை என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

சிந்தித்து பார்!

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரா!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்