Tag Archive | அபிகாயில்

இதழ்: 643 தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகள்!

1 சாமுவேல்: 25: 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி : உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

மிகப்பிரமாதமான விருந்தோடும், சாந்தமான வார்த்தைகளோடும் வந்த அபிகாயில் பேசி முடித்தவுடனே தாவீது அவளிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.

உண்மையை சொன்னால் இந்த வார்த்தைகள் பல காரணங்களுக்காக  என்னை மிகவும்  தொட்டு விட்டன!  முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனெனில் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள், தேவனாகியக் கர்த்தர் அவனோடு பேசியவை போல இருந்தன! தாவீது தேவனோடு ஒவ்வொருநாளும் தொடர்பில் இருந்ததால் அவனால் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

உன்னைக் கர்த்தர் தம்முடைய செய்தியோடு யாரிடமாவது அனுப்பியதுண்டா? நீ அந்த நபரிடம் பேசியபோது அவர், கர்த்தர் தாம்  உங்களை என்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று கூறியதைக் கேட்டிருக்கிறாயா?

என்னுடைய ராஜாவின் மலர்களை வாசிக்கும் பலர் அப்படி எனக்கு எழுதுகிறதைப் பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் அவை என் கண்களில் நீரை வர வைக்கும்!

இந்த வசனத்தில், இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜா, கர்த்தராகிய இயேசுவின் குடும்பத்தில் இடம் பிடிக்கப்போகும் ஒரு ராஜா, அபிகாயிலின் வார்த்தைகளைக் கேட்டவுடன், உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தேவனுக்கு மகிமையை செலுத்துவதைப் பார்க்கிறோம்.

அபிகாயிலின் வார்த்தைகள் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவந்தன!

அபிகாயில் ஒர் நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்படவில்லை! ஒரு அன்பான கணவனோடு வாழவில்லை! ஒவ்வொரு நிமிடமும் பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அவள் கர்த்தரை சபிக்கவில்லை! கர்த்தர்தான் தன்மேல் இந்த பாரத்தைக் கொடுத்துவிட்டார் என்று முணுமுணுக்கவில்லை! அவளுடைய குடும்ப சூழலால் அவள் தேவனைவிட்டு பின்வாங்கவும் இல்லை! தேவனுடைய சித்தத்துக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அபிகாயில் சிந்தித்து செயல் பட்ட ஒரு பெண்! அவள் பெருந்தன்மையோடு நடந்து கொண்டாள். தாவீதைக் கண்டவுடன், தாழ்மையோடு நடந்தாள். கடைசியில் அவள் பேச ஆரம்பித்த போதோ, அவள்  தேவனோடு கொண்டிருந்த உறவு அவளுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டது.  அவை தாவீதுக்கு தேவன் தன்னுடன் பேசிய வார்த்தைகள் போல் தோன்றின!

உனக்கும் எனக்கும் முன்பு அபிகாயிலின் வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறது என்று பாருங்கள்! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் வார்த்தைகள் யாருக்காவது ஆசீர்வாதமாக உள்ளதா?

கர்த்தாவே பேசும்! உம்முடைய வார்த்தைகளை என் வாழ்க்கையின் மூலம் உரத்த சத்தமிட எனக்கு உதவும் என்பதே இன்று என் ஜெபம்! நீங்கள் எப்படி?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Advertisements

இதழ்: 642 உன்னை நடத்தும் தேவன்!

1 சாமுவேல் 25: 26 – 27  இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்….. இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற  வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும்.

எத்தனையோ வருடங்கள் வேதத்தை ஆழமாகப் படித்திருந்தாலும், வற்றாத நீரோடை போல, ஒவ்வொரு நாளும் நமக்கு புதிதாக ஒரு பாடத்தைத் தருவதே இதன் சிறப்பு என்பதை இன்று இந்த வசனங்களைப் படிக்கும்போது மறுபடியும் ஒருமுறை உணர்ந்தேன்.

அபிகாயில் தாவீதைப் புகழாமல், அவனைப் பணிந்து, தான் வாழ்க்கைப்பட்ட இடம் எப்படிபட்டது என்பதை தாவீதுக்கு சாந்தமாக எடுத்துரைத்தாள் என்று கடந்த நாட்களில்  பார்த்தோம்.

இன்று அபிகாயில் தாவீதைப் புகழ்ந்து பேசுவதைப் பார்க்கிறோம். எப்படிப்பட்ட புகழ்ச்சி? அவனுடைய மனிதத் தன்மைக்காக அல்ல! அவனோடு தேவன் இருப்பதற்காக!  தேவையில்லாத வார்த்தைகளால் அவனைத் தன்வசப்படுத்த முயலாமல், தேவன் தாவீதோடு இருந்து அவன் கை இரத்தம் சிந்தவும் விடவில்லை, அவன் தனக்காக யுத்தம் செய்து நீதியை சரிகட்டவும் விடாமல் அவனைப் பாதுகாத்ததை அவனுக்கு நினைப்பூட்டினாள்!

இது என்னை ஆச்ச்சரியமூட்டியது! அந்த இடத்தில் நானோ அல்லது நீங்களோ இதுந்திருந்தால் நாம் நமக்குத்தானே மகிமையை எடுத்திருப்போம்! தாவீதே! கொஞ்சம் கவனி! நான் இங்கு வந்து உன்னைத் தடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?   வீணான இரத்தப்பழி உன்மேல் விழாமலும், உன்னை எதிர்த்தவர்களைப்  பழிவாங்கி நீயே உனக்கு நீதியை சரிக்கட்டினாய் என்ற பெயர் உனக்கு வராமலும் இருக்கத்தான்  நான் ஓடி வந்தேன்! – என்று நமக்கு நல்ல பெயர் பெற்றிருக்க மாட்டோமா?

ஆனால் அந்தவேளையில் அபிகாயில் தனக்கு நல்ல பெயரைத் தேடாமல், கர்த்தர் இதை உனக்காக செய்தார்  ஏனெனில் அவர் உன்னோடு இருக்கிறார், உன்னை வழிநடத்துகிறார்  என்று தேவனை மகிமைப் படுத்துவதைப் பார்க்கிறோம்.

இதுவே ஒருவர் தேவனுடைய சித்தத்துக்குள் நடப்பதின் அடையாளம்!  அவள் செய்த எந்தக் காரியத்திலும், தன்னுடைய ஞானத்தினால் இது நடந்தது என்று தனக்கு புகழைத்தேடாமல்,  கர்த்தருடைய வழிநடத்துதலினால் தான் இது நடந்தது என்று கர்த்தரை நோக்கி அவருக்கு மகிமையைக் கொடுத்தாள்!

நாம் வெற்றிகரமாக செய்யும் எல்லா செயலிலும் நாம் கர்த்தரை மகிமைப் படுத்துகிறோமா?

அப்பப்பா! எவ்வளவு கஷ்டமான ப்ராஜெக்ட், நான் எவ்வளவு கடினமாக உழைத்து வெற்றியோடு முடித்திருக்கிறேன் தெரியுமா? என் படிப்பு, என் அறிவுதான் இதற்கு உதவியது என்று நினைப்பதில்லையா?

நீ தானாய் உருவாகவில்லை! உருவாக்கப்பட்டதே  தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகத்தான்! மறந்து விடாதே! ஒவ்வொரு சிறிய காரியத்திலும் உன்னை நடத்துபவரை மகிமைப்படுத்து!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?

1 சாமுவேல் 25:25   என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது.

அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம்.

அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தாவீது ஒரு அழகிய, ஆற்றல்மிக்க, இளமை நிறைந்த வாலிபன். அவனைப் பார்த்ததும் அவள் அவனைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் அவள் வாயைத் திறந்ததுமே உண்மையைப் பிட்டு வைக்க ஆரம்பித்தாள்.

நாம் பேசுவது போல, நான் யாருக்கு கழுத்தை நீட்டியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்று நாபாலின் துர்க்குணத்தை இரண்டே இரண்டு வாசகங்களில் விளக்கி விட்டாள்.

அபிகாயில் வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு தயவு தாட்சியம் இல்லாத, ஒரு அசுத்த நடக்கயுள்ள ஒருவனோடுதான்! எத்தனை பரிதாபம்! நிச்சயமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கவே முடியாது.

இன்று நம்முடைய 21 வது நூற்றாண்டில் இந்த நிலமை மாறியிருக்கிறதா?இன்றும் நம்மில் பலர் நாபாலோடுதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அபிகாயிலின் திருமணம் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டதாகத்தான் இருந்திருக்கும். அன்று அவள் வாழ்ந்த காலத்தில் அப்படிதான் நடந்தது. அதுமட்டுமல்ல! திருமண பந்தங்களுக்கு பணம் ஒரு காரணமாயிருந்தது. அபிகாயிலின் தகப்பனார் அவளை ஒரு பணக்காரனுக்குக் கட்டிக் கொடுக்கத்தான் விரும்பியிருப்பார். அபிகாயிலின் குடும்பம் கூட பணக்காரர்களாக இருந்திருக்கலாம்! பணக்காரர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பந்தம் கலந்து கொள்வது இன்றும் நம்மிடையே வழக்கம்தானே!

நாம் ஒருவேளை இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால் நமக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் தான் வந்திருக்கும்.

ஆனால் அபிகாயிலின் குரலில் எந்த ஆத்திரமும், கோபமும் இல்லை.  தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றிக் கூறவில்லை. தான் ஒரு பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக தாவீதிடம் கூறுகிறாள். தன்னுடைய் கணவனின் செயலில் தனக்கு கொஞ்சம்கூட பிரியமில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறாள். எத்தனை தெளிவு! எத்தனை சாந்தம்! எப்படி அபிகாயிலால் இப்படி இருக்க முடிந்தது!

அபிகாயிலைப் போல உன் வாழ்க்கை அமைந்து விட்டதா?  நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையா? உன் கனவுகள் நொறுங்கிப்போய்  விட்டனவா? கசப்போடு  வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?

உன்னை உண்மையாய் நேசிப்பவர் ஒருவர் உண்டு! அவர் இயேசு கிறிஸ்து! அவருடைய உண்மையான அன்பு உன் உள்ளத்தில் வேரூன்றியிருக்கும் கசப்பை மாற்றும்! அவரிடம் வா!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 640 பொன்னைவிட மின்னிய சாந்தம்!

1 சாமுவேல் 25: 24   ……..உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.

நாபாலைத் திருமணம் செய்த குற்றம் அல்லாமல் வேறு குற்றம் அறியாத ஒரு பெண்தான் நம்முடைய அபிகாயில். இந்த அழகியப் பெண்ணின் குணநலன்களைத் தான் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அவளுடைய புத்திசாலித்தனம், கவனித்து செயல் படும் குணம், நேரத்தை வீணாக்கமல் செயல் படும் தன்மை, தாழ்மையான குணம்  என்று பல நற்குணங்களை பார்த்துவிட்டோம்.

அலைபாயும் நீருக்கு அணை கட்டுவதுபோல, பாய்ந்து வந்து கொண்டிருந்த தாவீதின் கோபத்துக்கு தன்னுடைய சாந்தத்தால்  அணை போட்டாள் அபிகாயில். எத்தனை சாந்தமான, மென்மையான வார்த்தைகளால் அவள் தாவீதிடம் பேசுகிறாள் பாருங்கள்!

அந்த ஒருத்துளி நேரம் அவள் தன்னைபற்றியோ, தன் பெருமையைப்பற்றியோ சிந்திக்கவேயில்லை. அந்தப் பாலைவனத்தில் அபிகாயிலின் சாந்த குணம் பொன்னைவிட அதிகமாக மிளிர்ந்தது ஏனெனில் அது அவள் குடும்பத்தையும் அவளுடைய ஊழியர் அனைவரையும் பேரழிவிலிருந்து இரட்சித்தது அல்லவா!

சாந்தகுணம் என்பது ஒருவரின் பலவீனம் அல்ல! கர்த்தராகிய இயேசுவில் காணப்பட்ட அழகிய குணம்தான் அது. அவர் தேவனுடைய குமாரனாயிருந்தும், இந்த உலகத்தில் வாழும் நம்மை பாவத்தினால் ஏற்படும் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்க தம்மைத் தாழ்த்தி சிலுவை பரியந்தம் ஒப்புவித்தாரே!

சாந்தகுணமுள்ளவர்கள் பாகியவான்கள்! அவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்! ( மத் 5:5) என்று கர்த்தராகிய இயேசு கூறியது மனதில் ஒலிக்கவில்லையா?  இந்த உலகில் பெருமையுள்ளவர்கள் மேன்மையான இடத்தை அலங்கரிக்கும் இந் நாட்களில்  நம்முடைய இயேசுவின் இந்த வார்த்தைகள் ஆச்சரியத்தைக் கொடுக்கும்! ஆனால் பெருமையுள்ளவர்கள் இன்று பூமியை அலங்கரிக்கலாம், சாந்தகுணமுள்ளவர்களே அதை சுதந்தரிப்பார்கள் என்பது அவருடைய வாக்குத்தத்தம்!

அபிகாயில் தன்னுடைய குடும்பத்துக்காகவும், தன்னுடைய ஊழியரின் நலனுக்காகவும் தன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து எறிந்தாள். தான் யார், தன்னுடைய சொத்தின் மதிப்பு என்ன என்ற எண்ணம் அவளுக்குள் எழும்பவேயில்லை! சண்டை வேண்டாம், சமாதானம் வேண்டும் என்பதே அவள் எண்ணமாயிருந்தது.

இந்த குணம் நமக்கு உண்டா? குடும்பத்துக்குள் சண்டை வேண்டாம் என்று உன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து சாந்தமாய் நடந்து கொள்கிறாயா? சாந்தமான வார்த்தைகளைப் பேசுகிறாயா அல்லது உன் பெருமையினால் குடும்பத்தை ப்ரித்துக்கொண்டிருக்கிறாயா?

சாந்தமே ரூபமாய் வந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசுவிடம் இந்த சாந்த குணத்தை எனக்குத் தாரும் என்று கேட்போமா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 639 பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்!

1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப்  பாதகம் என் மேல் சுமரட்டும். 

மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன்.  இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது.  அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப் பெண்ணாகப் பார்த்தேன்.

அபிகாயில் தன்னுடைய குடும்பத்துக்காக எல்லாப் பழியையும் ஏற்றுக்கொண்டாள். அதுமட்டுமல்ல தாவீதின் நல்ல உள்ளத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அவள் அவனுடைய பட்டயம் ஏந்திய கோபமான உள்ளத்தை அல்ல, அவனுடைய இளகிய  உள்ளத்தைத் தொட முயற்சி செய்தாள். கோபமாய் வந்த தாவீதிடம் என் கணவன் செய்தது தவறு என்றால் நீ செய்கிறது நியாயமா என்று வாதம் பண்ணாமல், மொத்தத் தவறுக்கும் தானே பொறுப்பு என்கிறாள்.

அபிகாயில் எந்தவிதத்திலும் பொறுப்பு அல்ல என்று தாவீது நன்கு அறிவான். அபிகாயிலின் வாயிலிருந்து இந்த தாழ்மையான மென்மையான வார்த்தைகள் புறப்பட்டவுடனே அவன் உள்ளம் இளகிற்று, அவன் பட்டயம் இறங்கிற்று.

நம்முடைய வாழ்க்கையில் நாம் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க  என்னென்ன முயற்சிகள் எடுப்போம்!  அதற்காக கடுமையாக எந்த நிலைக்கு வேண்டுமானலும் போய் போராடுவோம் அல்லவா!  நாம் பட்டயத்தை கீழே இறக்கி, சமாதானத்தை உண்டு பண்ணாமல்,  நாம் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத்தானே போராடுவோம்!

ஆனால்  அபிகாயில் என்ன செய்தாள் பாருங்கள்! பழியை யார் ஏற்பது என்பது முக்கியம் இல்லவே இல்லை, சண்டையை யார் நிற்ப்பாட்டுவது என்பதுதான் முக்கியம் என்று நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்.

என்ன ஆச்சரியம்!  தன்னைப்பற்றி சிந்திக்காமல் மற்றவர்களின் நலனுக்காக போராட வந்திருக்கும் அபிகாயிலுடன் போராட முடியாது என்று முடிவு செய்தான் தாவீது!

இன்று நான் அபிகாயிலின் இடத்தில் இருந்தால், நாபாலுடைய குற்றத்தின் பழியை என் தலையில் ஏற்றுக்கொண்டிருப்பேனா என்று யோசிக்கும்போது அபிகாயில் என் மனதில் ஒரு உயர்ந்த இடம் பெற்றாள்!

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!

1 சாமுவேல்: 25:18  அபொழுது அபிகாயில்  தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி

அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய  ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள் என்று இன்றைய வேத பாகம் குறிக்கிறது.

அவள் தன்னுடைய ஊழியக்காரரின் உதவியுடன் தாவீதுக்கும் அவனோடிருந்த மனிதருக்கும்  பெரிய விருந்து பண்ணுவதைப் பார்க்கிறோம். ஆம் மிகப்பெரிய விருந்து! அவள் குடும்பத்தாரோடு தாவீதுக்கு ஏற்பட்ட பகையைத் தீர்க்க அவள் தன்னால் முடிந்த பெரிய விருந்தைப் பண்ணுகிறாள். தாவீது தங்களுக்கு  செய்த தன்னலமற்ற  உதவியை நினைத்து அவள் உள்ளம் நன்றியால் நிரம்பிற்று.

தாவீதும் அவனோடிருந்தவர்களும் பட்டயத்தை அறையில் கட்டிக்கொண்டு நாபாலுக்கு சொந்தமானவைகளை அழிக்க தயாராக இருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!

அபிகாயில் தன்னுடைய தாவீதுக்காக ஆயத்தம் பண்ணின மிகப்பெரிய விருந்துடன் அவனை நோக்கி புறப்படுகிறாள். ஐந்து ஆடுகளை அடித்து சமையல் பண்ணி, இருனூறு அப்பங்களை சுட்டு, ஐந்துபடி பயற்றை வறுத்து, திராட்சை ரசம், திராட்சை வத்தல், அத்திப்பழ அடைகள் என்று வகை வகையான சாப்பாடு!  அவளுடைய இந்தப் பெருந்தன்மையும், பரந்த உள்ளமும் பாராட்டத்தக்கவை தானே! இதை செய்வதற்கு அவளுக்குள் எந்தத் தயக்கமும் இல்லை!

இதைப்படிக்கும் போது எந்தத் தயக்கமும்  இல்லாமல் ஒரு விலை உயர்ந்த பரிமள தைலத்தை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் ஊற்றி தன்னுடைய நன்றியைத் தெரிவித்த மரியாள்தான் என் ஞாபகத்துக்கு வருகிறாள். அவள் தன் செயலில் காட்டிய நன்றி இன்றும் படிப்போரின் உள்ளங்களைத் தொடுகிறது. அப்படித்தான் அபிகாயிலின் செயலும் தாவீதின் உள்ளத்தைத் தொட்டது. அவன் உள்ளம் மாறியது, அவன் கோபம் தணிந்தது! எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய பட்டயம் கீழே இறங்கியது.

அபிகாயில் போன்ற ஒரு சூழ்நிலை நமக்கு வந்தால் என்ன செய்திருபோம்?

ஒரே ஒரு காரியம் நம் சிந்தனைக்கு!  இன்று எத்தனை மன வருத்தங்கள், கோபம், விரோதம், பழிவாங்குதல் இவற்றை நம் மத்தியில் பார்க்கிறோம்! இவைகள் நம் குடும்பங்களில் மட்டும் அல்ல  திருச்சபைகளையும் விட்டு வைக்கவில்லையே! அபிகாயிலைப் போல ஒரு அன்பின் விருந்து ஒருவேளை சில மன தர்க்கங்களை மாற்றலாம் அல்லவா?  துப்பாக்கி குண்டுகளைப் போல வீசப்பட்ட வார்த்தைகளைக் கூட இந்த அன்பு மாற்றிவிடும்!

நாம் இன்று முயற்சி செய்யலாமே! நம்முடைய குடும்பத்தில், திருச்சபையில் அன்போடு நாம் தாராளமாய் பரிமாறும் செயல் , தாவீது அபிகாயிலைப் பார்த்து கூறியதைப்போல, ‘ உன்னை இன்றையதினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ ( 25:32)  என்று நம் பகையை விலக்கலாமே!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!

1 சாமுவேல் 25: 15 -17   அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும்.

ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை  கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கைகளில் நடந்த நன்மை, தீமை யாவற்றையும் கதையைப்போல  நம் மனதில் நிற்பவைகளாக எழுதியிருக்கிறார்.  அதனால் தான் நாம் வேதத்தில் காணும் அன்றாட வாழ்க்கைக்கானப் பாடங்களை தவறாமல் படித்து, புரிந்து, அவற்றை நம்  மனதில் எழுதிக்கொள்ளவேண்டும். அப்படி செய்வோமானால் அவை நம்மை நல்லவழியில் நடக்க உதவும்.

இங்கு தாவீதின் வாழ்வில் கால்பதித்த அபிகாயிலை ஒரு புத்திசாலியானப் பெண்ணாகப் பார்க்கிறோம். புத்திசாலித்தனத்தில் பலவகை உண்டுதானே!  இந்தப்பெண்ணிடம் நான் கண்டது நடைமுறை புத்திசாலித்தனம்! அவளுடைய ஊழியக்காரன் ஒருவன் வந்து அவள் கணவனாகிய நாபால் தாவீதின் மனுஷரிடம் சீறினான் என்று சொன்னவுடன் அவள் இருக்கையிலிருந்து எழுந்து கண்ட வார்த்தைகளால் நாபாலைத் திட்டவில்லை ! தொடர்ந்து அவன் கூறிய சம்பவங்களை பொறுமையோடு கேட்டாள். ஒரு புத்திசாலியின் அடையாளம்!

அவளுடைய ஊழியக்காரனின் வார்த்தைகளைப் பொறுமையோடு செவிடகொடுத்து கேட்டதால் அபிகாயிலுக்கு தாவீது தமக்கு எந்த தீமையும் செய்யவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அவள் கணவன் தாவீதிடம் பொல்லங்கான வார்த்தைகளைப் பேசியது தவறானது என்றும் புரிந்துகொண்டாள்.

தன்னிடம் பேசிய ஊழியக்காரனை அபிகாயில் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. அநேகர் வேலையில் இருப்பார்கள், விசேஷமாக ஆடுகள் மயிர் கத்தரிக்கும் வேளையில் எல்லோரும் அங்கு கூடுவார்கள். அவளுக்கு ஒவ்வொருவரையும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அதனால் அந்த ஊழியன், திருமதி நாபால் அவர்களே! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அதனால் நான் சொல்வதை கொஞ்சம் கவனித்து செயல் படுங்கள்! என்று கூறியிருக்கலாம்.

அபிகாயிலுக்கு அவளுடைய கணவனைப்பற்றி நன்கு தெரியும். அவனுடைய செயல்களில் அவன் துராக்கிருதன் என்று அறிவாள். நாபாலின் குணத்தோடு இந்த ஊழியரின் வார்த்தைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெளிவாகப் புரிந்தது. முழுக்கதையையும் கேட்டு அறிந்து கொண்டாள்!

கவனித்து செயல் படுவது புத்திசாலித்தனம்! இது நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம்! எந்த முக்கிய்மான காரியத்திலும்  பொறுமையாக யோசித்து, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து செயல்படுவோமானால் தவறான முடிவுக்குள் நாம் செல்ல மாட்டோம்.

இன்னும் ஒருபடி அதிகமாகக் கூறுகிறேன். கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, படித்து, அவர் நமக்கு வேதத்தின் மூலமாக அளிக்கும் ஞானத்தின் மூலம் செயல் படுவதுவதுதான் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த புத்திசாலித்தனம்!

நீ செய்யவேண்டிய காரியத்தை கவனித்து, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து அவருடைய வழிநடத்துதலை அறிந்து செயல்படு! அபிகாயிலைப்போல ஒவ்வொரு காரியத்தையும் சரியாக எடை போட்டு பின்னர் செயல்பட வேண்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்