Tag Archive | அம்னோன்

இதழ்:782 முகஸ்துதி செய்கிறவன் வலையை விரிக்கிறான்!

2 சாமுவேல் 15: 4-6  பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு என்னைத் தேசத்திலே நியாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி முத்தஞ்செய்வான். இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல்  மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான்.

பரலோக தேவன் நமக்கு அருளியிருக்கும் நன்மையான வாழ்வு என்ன என்று நாம் தாவீதின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தாவீது ராஜாவின் தரமில்லாத நடத்தையால் உரியாவின் மனைவியைத் தனக்கு சொந்தமாக்கியது மட்டுமல்லாமல், உரியாவைக் கொலை செய்ததது அரண்மனைக்கு வெளியே மட்டுமல்ல அரண்மனைக்கு உள்ளும் எல்லோராலும் அறியப்பட்டிருந்தது. இந்தக் காரியம் அவனுடைய பிள்ளைகளை எவ்வாறு பாதித்திருந்தது என்பதை அவர்களுடைய நடத்தையிலிருந்து பார்க்கிறோம்.  தான் நினைத்த எதையும் அடையலாம் என்ற எண்ணத்தில் தன் சொந்த சகோதரியை கற்பழித்த அம்னோன், விருந்துக்கு அழைத்து சகோதரனாகிய அம்னோனை கொலை செய்த அப்சலோம் என்று தாவீதின் பிள்ளைகள் செய்த காரியம் அவன் தகப்பனின் நடத்தையின் பிரதிபலிப்புதானே!

இன்றைய வேதாகமப்பகுதியில் அப்சலோம் இஸ்ரவேல் மக்களிடம் நாவுக்கினிய வார்த்தைகளைப் பேசி அவர்களைத் தன் வசப்படுத்துவதைப் பார்க்கிறோம். வேதம் நமக்கு அப்சலோம் மிகவும் சௌந்தரியமானவன் என்று சொல்கிறது. நல்ல உயரம்! நல்ல முகக் களை! அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் உருவம்! அதுமட்டுமல்ல! அவன் மக்களை மகிழ வைக்கும் திறமை வாய்ந்தவன்!  ஒவ்வொருநாளும் அவன் பட்டணத்து வாசலில் உட்கார்ந்து மக்களை சந்தித்து, ராஜாவிடம் நியாயம் கேட்டு வந்தவர்களை அவனே நியாயம் தீர்த்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டான். அதுமட்டுமல்ல! என்னை இந்த தேசத்து நியாதிபதியாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஜனங்களின் மனதில் வேறுபாடு கொண்டுவரும் விதையை விதைத்தான்.

உங்கள் துக்கம் என்னுடைய துக்கம்! ராஜாவுக்கு உங்கள் துக்கத்தை விசாரிக்க எங்கே சமயம் இருக்கிறது? நான் ஆடுகள் மயிர் கத்தரிக்கும் விருந்துக்கு அழைத்தபோது அதற்கு வரக்கூட ராஜாவுக்கு நேரம் இல்லை! உங்களுக்கு எப்படி நேரம் கொடுப்பார்? நானும் உங்களைப்போலத்தான்! அதனால் உங்கள் துக்கத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்! என்று நாவில் தேன் சொட்ட சொட்ட பேசியிருப்பான்.

அவன் செய்த இந்தக் காரியத்தை ‘ ஆடுகளைத் திருடுதல்’ என்று சொல்லலாமே! இரகசியமாக அவன் ராஜாவுக்கு சொந்தமான ஆடுகளைத் திருடிக் கொண்டிருந்தான்.  வெகு சீக்கிரமே இஸ்ரவேல் மக்கள் அப்சலோமின் வலையில் விழ ஆரம்பித்தனர்.

இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்ததால்தானோ என்னவோ சாலொமோன் தான் எழுதிய நீதிமொழிகளில் இவ்வாறு எழுதுகிறான்.

பிறனுக்கு முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது.. ( நீதி: 29:5,6)

எதை அறிய வேண்டுமோ அதைமட்டும் அறியும் அறிவு!

எதை நேசிக்க வேண்டுமோ அதை மட்டும் நேசிக்கும் மனது!

தேவனை மட்டுமே புகழும், துதிக்கும் நாவு!

எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை மட்டுமே பிரியப்படுத்தும் உள்ளம்!

இவையே நமக்கு நன்மையான வாழ்வை அமைத்துத் தரும்!  இதனையே நாம் ஒவ்வொருநாளும் பெற கர்த்தராகிய இயேசு நமக்கு உதவி செய்வாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்!

மீகா 7: 18,19  தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

நான் என்றாவது பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் மாற்றி வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா? என்று சற்று யோசித்தேன். நிச்சயமாக அப்படிப்பட்டவை உண்டு! ஆனால் அதை இனி என்னால் மாற்றவே முடியாது!

ஒருதடவை நடந்தது நடந்ததேதான்! எத்தனைதடவை இப்படி நடந்து போன் காரியத்தைக் குறித்து மறுபடியும் மறுபடியும் வருத்தப்பட்டிருக்கிறோம்! நான் இப்படி பேசியிருக்கவே கூடாது, இப்படி நடந்து கொண்டிருக்கவே கூடாது, தவறு பண்ணிவிட்டேன் என்று குற்ற உணர்ச்சியால் மனதுக்குள் புலம்பியதில்லையா?

தாவீதின் வாழ்க்கையின் மூலம் எவ்வாறு நாம் நன்மையான வாழ்க்கையை வாழலாம் என்று தொடர்ந்து படிக்கப் போகிறோம். நாம் கடந்து போன செயலுக்காக மனதூக்குள் அழுது புலம்பி நம்மையே நாம் வருத்திக்கொள்ளாமல் வாழ்வதுதான் கர்த்தர் கொடுக்கும் நன்மையான வாழ்க்கை!

அப்படியானால் என்ன? நான் செய்த எல்லாமே சரியா? நான் செய்தது தவறு என்று நினைக்க வேண்டாமா? என்று நாம் நினைக்கலாம். நிச்சயமாக நாம் செய்த தவறை நாம் உணர வேண்டும், அதைக்குறித்து மனஸ்தாபப்பட வேண்டும், அதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும். அதோடு மட்டும் அல்லாமல் கர்த்தருடைய உதவியால் நான் அந்தத் தவறிலேயே வாழ்ந்து கொண்டிராமல் அதைவிட்டு விலகி வாழ்க்கையில் முன் நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

தாவீதைப் பாருங்கள்! விபச்சாரம், கொலை, குழந்தையின் பரிதாபமான மரணம் இவை அவன் மனதை அரித்துக் கொண்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்! ஐயோ இப்படி நடவாமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும் என்றுதானே அழுது புலம்பியிருப்பான். அதுமட்டுமல்ல தன்னுடைய குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததால்தானே அம்னோன் தாமார் என்ற பிள்ளைகளின் வாழ்க்கை கெட்டு அழிந்தது!

2 சாமுவேல் 13: 24 – 28 ல் அப்சலோம் தன் தகப்பனைத் தான் ஆடுகள் மயிர் கத்தரிக்கும் இடத்திற்கு வருமாறு வருந்தி அழைக்கிறான். ஆனால் தாவீது அதை மறுத்து விட்டான். இதைப் படிக்கும்போது அப்சலோம் தாவீதை ஏன் அவ்விதம் வருந்தி அழைத்தான்? தாவீது அங்கு இருந்திருந்தால் அவனால் அம்னோனை இவ்வளவு சுலபமாக தீர்த்துக்கட்டியிருக்க முடியுமா? பின்னர் ஏன் அழைத்தான்? என்று யோசித்தேன்!  ஒருவேளை அப்சலோம் தான் அம்னோனை அடித்துக் கொன்றதை தன் தகப்பனாகிய தாவீது தன் கண்களால் காண வேண்டும் என்று விரும்பினானோ என்னவோ என்று நினைத்தேன். தாவீதின் பாவத்தால் பிள்ளைகளுக்குள் நடக்கும் பொல்லாப்பை அவன் தகப்பன் கண்ணால் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பான்.

அப்சலோம் என்ன மனதில் நினைத்து செயல்பட்டானோ தெரியவில்லை ஆனால் நான் தாவீதின் இடத்தில் இருந்திருந்தால் அன்று அப்சலோம் அழைத்த அழைப்புக்கு இணங்கி ஆடுகளை மயிர் கத்தரிக்கும் இடத்திற்கு போகாததை நினைத்து என் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியால் அழுது புலம்பியிருப்பேன். போயிருந்தால் ஒருவேளை தாவீதால் அந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியும் அல்லவா?

தாவீதின் வாழ்க்கையில் அழுது புலம்ப, குற்றத்தால் மனக்கசந்து அழ அநேக காரியங்கள் இருந்தன. ஆனாலும் சங்கீதம் 51 ல் தாவீது

அப்பொழுது  பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன். பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.  (சங்:51:13)

என்று கூறுகிறான். தாவீது தன்னுடைய குற்ற உணர்ச்சிகளிலேயே வாழாமல் தன்னுடைய குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்று அதைத் தாண்டி தன்னுடைய ஓட்டப் பிரயாணத்தைத் தொடருவதைப் பார்க்கிறோம். பாதகரை கர்த்தருக்குள் வழிநடத்தும் நிலைக்கு வந்துவிட்டான்.

நம்முடைய கர்த்தராகிய ஆண்டவர் நம் மேல் குற்ற உணர்வு என்ற நுகத்தை சுமத்தவே மாட்டார். நம்முடைய பாவங்கள், அக்கிரமங்கள் எல்லாமே சமுத்திரத்தின் ஆழத்தில் போடப்பட்டுவிட்டன. அவர் நன்மையான வாழ்வையே நமக்கு ஈவாகத் தருகிறார்.

இது நமக்கு எத்தனை மகிழ்ச்சியான செய்தி! குற்ற உணர்வால் நாம் தலை குனிய வேண்டாம்! மனக்கசந்து கண்ணீர் விட வேண்டாம்! நன்மையான வாழ்வைத்தரும் இயேசு கிறிஸ்து கொடுக்கும் அற்புத விடுதலை இது!

நேற்று என்னைவிட்டு கடந்து விட்டது! காலம் அதை எடுத்து விட்டது!

நாளை ஒருவேளை என்னைத்தேடி வராது!

ஆனால்  இன்று என்னிடம் இன்னும் இருக்கிறது!

என்று ஒவ்வொருநிமிடமும் எண்ணி இன்றைய தினத்தில் நாம் கிறிஸ்து நமக்கு கொடுக்கும் நன்மையான வாழ்வை சந்தோஷமாக வாழ கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 778 பழிவாங்கினால் நிறைவு கிடைக்குமா?

2 சாமுவேல் 13:  23, 28, 29  இரண்டு வருஷம் சென்றபின்பு அப்சலோம் …ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்……அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள். அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன். உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்று போடுங்கள். நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்…… அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்.

அப்சலோம் நீண்ட நாட்கள் காத்திருந்தான். அவன் உள்ளத்தில் கோபம் உலையாகக் கொதித்துக்கொண்டிருந்தது. அவன் இரண்டு நாட்கள் காத்திருந்தானோ, இரண்டு வருடங்கள் காத்திருந்தானோ அது முக்கியம் இல்லை ஆனால் அவன் அம்னோன் தாமாருக்கு விளைத்த தீங்குக்கு பழி வாங்கியே தீர வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்தை மறைத்துக் கொண்டு காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்த தருணம் வந்து விட்டது. ஆடுகளை மயிர் கத்தரிக்கும் நாட்களில் அம்னோனை அவனுடைய தகப்பனாகிய தாவீதிடமிருந்து பிரிக்கும் தருணம் கிடைத்தது!

அப்சலோம் தருணத்தைத் தவறவிடவில்லை.  அம்னோனை நன்கு குடிக்க வைத்து பின்னர் அவனை அடித்துக் கொல்லும்படி அப்சலோம்  தன் வேலைக்காருக்கு கட்டளைக் கொடுக்கிறான். இது சாதாரணமாக முடிந்துவிடும்! அப்சலோம் தன் கையை இரத்தமாக்க வேண்டிய அவசியமே இருக்காது. வேலைக்காரரே வேலையை முடித்து விடுவார்கள்! அம்னோன் தாமாருக்கு செய்த தீங்குக்கு விலை கொடுத்தே ஆகவேண்டும்!

அப்சலோம் திட்டமிட்டபடியே அம்னோனை முடித்து விட்டான். குடிபோதையிலிருந்த அம்னோனை அப்சலோமின் வேலைக்காரர் அடித்தே கொன்று விட்டனர். அப்சலோமின் இந்தக் கொடூர செயலைப்பார்த்த தாவீதின் மற்ற குமாரர் எல்லோரும் தங்கள் கோவேறு கழுதைகளில் ஏறி ஓட்டம்  பிடித்தனர். துரதிருஷ்டவசமாக இதுதான் அந்தக் குடும்பத்தின் இரத்தம் சிந்தும் படலத்தின்  முதல் ஆரம்பம்!

ஒருவன்  மண்ணை சாப்பிட்டுவிட்டு அப்பா என் வயிறு நிறைந்து விட்டது என்று சொல்வதைப்போலத்தான் இந்தப் பழிவாங்குதலும் இருக்கும். அந்த சமயத்தில் ஒரு நிறைவைக் கொடுப்பது போல இருந்தாலும் அது உண்மையான நிறைவு அல்ல!

புல் டாக்  (bull dog)  என்னப்படும் நாய் எப்படி இருக்கும் தெரியுமல்லவா?அதற்கு மூக்கை சுற்றி சதை தொங்கும். ஒரு சிறு பெண் அந்த நாயின் அருகில் உட்கார்ந்து முகத்தை  பல கோணங்களில் சுளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவள் அம்மா, நீ ஏன் நாயைப் பார்த்து முகம் சுளிக்கிறாய் என்று கேட்டதற்கு, அதுதான் என்னைப்பார்த்து முதலில் சுளித்தது என்று சொன்னாள் அந்த சிறுமி!

நாம் இந்த உலகத்தில் பார்க்கும்  ஒவ்வொரு சுளிப்புக்கும் பதில் சுளிப்பு கொடுத்துக்கொண்டேயிருந்தால் நம் வாழ்வு எப்படியிருக்கும்? அதனால் பயன் தான் என்ன? நம் வாழ்க்கையே வீணாகிவிடும் அல்லவா?

பழிவாங்குதல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்து ஒருவரைத் தாக்கும் முன் தயவுசெய்து  அன்பும், இரக்கமும், கிருபையும், தயவும், மன்னிப்புமே நம்முடைய தேவன் நமக்கு காட்டியுள்ள பாதை என்பதை  ஒருபோதும் மறந்து போகவேண்டாம்!

பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ( ரோமர் 12:19)

கர்த்தர் இந்த வார்த்தைகளின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 777 வாயில் தேன்! மனதிலோ நஞ்சு!

2 சாமுவேல் 13: 21,22  தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.

ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட ஆரம்பித்தனர்! இவர்கள் என்ன செய்கிறார்கள்! ஒருவரை மற்றொருவர் பேசவிடாமல் தடுப்பதுதான் இவர்கள் உள்நோக்கமா என்று நினைக்கத்தோன்றியது!

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நம்முடைய உள்நோக்கம் வெளிப்படும் என்பது உண்மை அல்லவா! சில நேரங்களில் நம்முடைய உள்நோக்கத்தை நாம் மூடி மறைத்தும் வாழ்கிறோம்.

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, தாவீதுராஜா அம்னோன் தாமாரை ஏமாற்றி கற்பழித்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது கோபமாயெரிந்தான் என்று. ஆனால் அவன் அம்னோனைக் கூப்பிட்டு இந்த விஷயத்தைப் பற்றிக் கண்டித்ததாக வேதம் எங்குமே கூறவில்லை. தன்னுடைய வீட்டுக்குள் நடந்த இந்தப் பாவத்தைத் தட்டி கேட்க அவனால் ஏன் கூடாமல் போயிற்று என்று என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை! அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தால் அவனுடைய வீட்டிலும், நாட்டிலும் நீதி குறைவுபட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தாமாரின் அண்ணனாகிய அப்சலோம் தன்னுடைய தங்கையை யாரிடமும் இதைப்பற்றி பேசாதே என்று சொல்லித் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வைக்கிறான். அப்சலோம் அம்னோனிடம் இதைக்குறித்து பேசவில்லை ஆனால் அம்னோனை வஞ்சம் தீர்க்கும் உள்நோக்கம் அவனுக்குள் மறைந்திருந்தது.

நம்மில் எத்தனைபேர் இன்று கர்த்தருடைய சித்தத்திற்கு மாறாக வஞ்சம் என்ற உள்நோக்கத்தை மறைத்து வைத்திருக்கிறோம். என்றைக்காவது ஒருநாள் தருணம் கிடைக்கும்போது அவன் எனக்கு செய்ததை இரண்டுமடங்காக கொடுத்து விடுவேன், நான் அனுபவித்ததை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லையா? அதை மறைத்துக்கொண்டு ஒன்றுமே நடக்காதுபோல் நாம் நடந்து கொள்வதில்லையா? வார்த்தையில் ஒன்று மனதில் ஒன்று வைத்து பேசுபவர்களில் நாமும் ஒருவரா? வாயில் தேன்! மனதிலோ நஞ்சு!

நம்முடைய எண்ணமும் செயலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் பரிசுத்தமானவைகளாய் இருக்கவேண்டுமானால் நமக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  வேதத்தில் யோவான் 16:13 ல்

சத்திய ஆவியாகிய அவர்வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.

என்று பார்க்கிறோம். சத்திய ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணும்போது நமக்குள் சத்தியம் அல்லது உண்மை நிலைத்திருக்கும். எந்த ஒளிவு மறைவுக்கும் இடம் இருக்காது. நம்முடைய செயல்களும், நம்முடைய உள் நோக்கங்களும் கர்த்தருடைய சித்தத்துக்குள் அடங்கியுள்ளன என்ற நிச்சயத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்குக் கொடுக்க முடியும்!

என் பிள்ளைகளே வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூறக்கடவோம். ( 1 யோவான் 3:18)

கர்த்தர்தாமே இந்த வேத வசனங்கள் மூலமாய் உங்களை இன்று ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர்ராஜ்

 

 

 

 

இதழ்: 775 பாழான நிலம் பயிர் கொடுக்கும்!

2 சாமுவேல் 13:20 அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப்பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு.அவன் உன்னுடைய சகோதரன். இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்.  அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.

தாமாருக்கு பொல்லாப்பு இழைக்கப்பட்டது. அவளை உபயோகப் படுத்திய பின்னர் அம்னோன் அவளைத் தன் அறையிலிருந்து வெளியேற்றி கதவைப் பூட்டினான். அதுவரை கலகலப்பாக வாழ்ந்து கொண்டிருந்த ராஜகுமாரத்தியான தாமார் இப்பொழுது தனித்துக் கிலேசப்பட்டுக் கொண்டிருந்தாள். அல்லது தனிமையில் தள்ளப்பட்டாள்!

அவளுடைய அண்ணனாகிய அப்சலோம் அவளை நோக்கி இந்தக் காரியத்தை மனதில் வைக்காதே என்று கூறி அவளைத் தன் வீட்டில் தனிமையில் வைக்கிறான்.

மனதில் வைக்காதே என்று அப்சலோம் கூறிய இந்த வார்த்தைகள்  எபிரேய  மொழியில் எந்த உணர்வுகளையும் மனதில் வைக்காதே  என்று அர்த்தமாகும். அப்சலோம் தன்னுடைய தங்கை தாமாரிடம்  தன்னுடைய உணர்வுகளை ஒதுக்கி விட்டு வாழும்படி கூறுகிறான். அவள் அனுபவித்தது எத்தனை பெரிய அவமானம் எவ்வளவு கேவலம்! எப்படி அந்த உணர்வுகளைத் தள்ளி வைக்க முடியும்.

நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்!  நம்மில் சிலர் இதை அனுபவித்திருக்கிறோம் அல்லவா? நம்முடைய இருதயத்தில் கத்தியால் குத்தி நம்முடைய மனதை இரண்டாய்ப் பிளந்த மாதிரி ஒரு துக்கம் நம் தொண்டையை அடைக்கும்போது,  யாராவது வந்து எதையும் மனதில் வைக்காதே அது தானாய்ப் போய்விடும் என்று இலகுவாகச்  சொன்னால் எப்படியிருக்கும்? தாமாருடைய இருதயம் இரண்டாய் பிளந்திருத்ந்தது! அவளுடைய சகோதரன் அவளை உபயோகப்படுத்தி தூக்கி எறிந்திருந்தான். அவள் இருதயத்தில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது! அவளால் எப்படி எல்லாவற்றையும் மறக்க முடியும்? அப்சலோம் அவளுடைய உணர்வுகளுக்கு மூடி போட்டு மூடப்பார்க்கிறான்! அப்படியானால் அது ஒருநாள் வெடித்து விடும் அல்லவா?

தாமாரைப்போல தனிமையே வாழ்க்கையான எத்தனை பேர் நம்மில் உண்டு!  மனதின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் மூடி போட்டு அடைத்து விட்டு வாழ்ந்து வருபவர்கள் எத்தனை பேர் உண்டு? தாமாரைப்போல தனிமையில் ஐயோ என் வாழ்க்கையே பாழாகிவிட்டதே எனக்கு எந்த சந்தோஷமும் இனி வாழ்கையில் இல்லை என்று கதறும் உங்களுக்கு இன்று ஒரு நற்செய்தி!

பாழாய்க்கிடந்த இத்தேசம் ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்வார்கள். 

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர் நிலமாக்குகிறேன் என்றும் அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை செய்வேன்.    ( எசே: 36: 35,36)

தனித்து  வாழ்ந்து கொண்டிருக்கும் நீ தைரியமாயிரு! பாழாயிருக்கும் உன் வாழ்க்கையை கர்த்தர் பயிர் நிலமாக்குவேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 774 சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம்!

2 சாமுவேல் 13: 17 – 19  தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு  நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி கதவைப்பூட்டு என்றன்….. அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்துக், சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்தபின் அவளை வீட்டைவிட்டு துரத்தி கதவைப்பூட்டுகிறதைப் பார்க்கிறோம்.

அந்தக் காலத்தில் ராஜகுமாரத்திகளாகிய கன்னிப்பெண்கள் பலவர்ணமான வஸ்திரத்தை அணிந்து கொள்வார்கள்.  ராஜகுமாரத்திகளாயிற்றே! அவர்களுடைய தகுதிக்கு தக்க வஸ்திரம் அணிந்து கொள்வதுதானே வழக்கம்.

அம்னோன் அவளை பலவந்தப்படுத்திய பின்னர் அவள் இனி கன்னிபெண் என்ற கணக்கில் வரமாட்டாள் அல்லவா அதனால் தாமார் கன்னிப்பெண்கள் உடுத்தும் அந்த பலவர்ணமாகிய வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, சாம்பலைத் தன் தலையில் வாரிப்போட்டுக்கொண்டு அழுதுகொண்டே சென்றாள். அவள் இவ்வாறு தன்னுடைய துக்கத்தையும் அவமானத்தையும் வெளிப்படுத்தினாள். அவள் தான்  இந்த வெட்கம் கெட்ட காரியத்துக்கு உடந்தையாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தினாள்.

இந்தப் பெண்ணின் துன்பத்தையும், அவமானத்தையும் படிக்கும்போது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருநாள் நீங்களும் கந்தையை அணிந்து சாம்பலாலால் நிறைந்த சம்பவம் நினைவுக்கு வரலாம். ஒருவேளை ஏதோ ஒரு சம்பவம் உங்களை மனதளவில் கறைப்படுத்தியிருக்கலாம்!

சகோதர சகோதரியே நீ மட்டும் தனியாக இல்லை! வேதம் சொல்கிறது

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது. (ஏசா:64:6)

என்ன பரிதாபம்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படும்முன்னர் நானும்கூட சுயநீதி என்ற கந்தையை அணிந்துதான் இருந்தேன். பாவக்கறையை நீக்க ஆலயத்துக்கு போவதும், காணிக்கை கொடுப்பதும் போதும் என்று எண்ணினேன்.  ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்ததே நம்முடைய பாவத்திலிருந்து, கந்தையிலிருந்து, சாம்பலிலிருந்து விடுவிக்கவே என்று உணர்ந்த நாள் எனக்கு விடுதலை கிடைத்தது!

…துயரப்பட்டவர்களை சீர்ப்படுத்தவும்,அவர்களுக்கு சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் ( ஏசா:61:3)

ஐயோ! எனக்கு இது நடந்தது ஏன்? நான் யாருக்கும் எந்த தவறுமே செய்ததில்லையே பின்னர் ஏன் எனக்கு இப்படி நடந்தது? இந்தக் கறையும், அவமானமும், நிந்தையும் என்னைவிட்டு  அகலுமா? என்றெல்லாம் புலம்புகிறீர்களா?

உங்கள் துயரத்தையும், நிந்தையையும், சீர்ப்படுத்த இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும்!

உங்களுக்காக நான் இன்று ஜெபிக்கலாமா? என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள்!

ஜீவனுள்ள தேவனே! துயரத்தாலும், வேதனையாலும் தாமாரைப்போல கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை, சகோதரனை சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தைக் காணச் செய்யும்!  நான் இழந்த பெயர், இழந்த வாழ்க்கை இனி திரும்ப வருமா என்று புலம்புகின்றவர்களை உம்முடைய கிருபையினால் சீர்ப்படுத்தும்! கந்தலுக்கு பதிலாக துதியின் ஆடையினால் அவர்களை அலங்கரியும். எங்களுக்காக அனுப்பப்ட்ட இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம். ஆமென்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 773 கடந்த காலத்தின் தழும்பு மாறுமா?

2 சாமுவேல் 13: 14-17  அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்……அப்பொழுது அவள் நீர் எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும்  இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம்  கொடுமையாயிருக்கிறது என்றாள்….. தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளிக் கதவைப் பூட்டு என்றான்.

தாமார் தன்னுடைய அண்ணன் சுகவீனப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றும் தன் தகப்பனாகிய தாவீது சொல்லி அனுப்பிய வார்த்தைக்கு இணங்கி அம்னோன் இருந்த அறைக்கு வந்தாள்.

ஆனால் அம்னோனின் அறைக்கு வந்தபின்னர் தன்னைக் கற்பழிக்க திட்டமிட்டுப்  போட்ட நாடகம் என்று புரிந்தவுடன் அவள் உள்ளம் எப்படி கொதித்திருக்கும்!

அவன் யாரை அடையாமல் தான் வாழ முடியாது என்று அடம்பிடித்து மெலிந்து நலிந்து போனானோ அவளை அடைந்தவுடன் அவளைக் கோபுரத்தில்  வைத்துக்  கொண்டாடாமல் குப்பையில் தள்ளுவதுபோல வெளியே துரத்துகிறான். அவள் இனி அவனுக்குத் தேவையில்லாத குப்பை போல ஆகிவிட்டாள். அவள் தேவையே இல்லை!  அவள் முகத்தைப் பார்த்தால் வரும் குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை! அவளை உதறித் தள்ளுகிறான்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இத்தனை பொல்லாப்பான அவன் அவளைக் கொலை செய்யாமல் விட்டானே என்றுதான்!  ராஜகுமாரன் என்ற கர்வத்தில் அவன் அதைக்கூட செய்யத் துணிந்திருக்கலாம்! ஆனால்  அவளைத் தள்ளிவிட்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.

துரதிர்ஷ்டவசமாக இன்றும் தாமார் போலப் பெண்கள் உபயோகப்படுத்தப்பட்டு,தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். சமீப காலத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்களை தங்கள் ஆசைப்படி உபயோகப்படுத்திவிட்டு அதை வீடியோவும் எடுத்து அவர்கள் அதை வெளியே சொல்லாதபடி பயமுறுத்தி வைத்த பெரிய விஷயம் நடந்தது நம்முடைய தமிழ்நாட்டில்தானே! ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அடையாளம் இல்லாமல் எரித்து சாம்பலாக்கிய  சம்பவம் நடந்தது என்னுடைய  வீட்டிலிருந்து பத்தே நிமிட தூரத்தில்தான்!  காவல் வேலை செய்த பலர் சேர்ந்து மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கற்பழித்த செய்தி நம்முடைய தமிழ்நாட்டையே கலங்க செய்ததே அதுவும் நான் வாழும் சென்னை நகரில் நடந்ததுதான்!

இன்னும் மனசாட்சியே இல்லாமல் பெண்களைக் கற்பழிக்கும் அம்னோன்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! தங்களுடைய மானத்தை இழந்து வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் வாழும் தாமார்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அம்னோன் போன்ற பொல்லாங்கரால் ஏமாற்றப்படுகிறோம். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம்! எந்தப் பொல்லாங்கும் கர்த்தருடைய வல்லமையை விட சக்தி வாய்ந்தது அல்லவே அல்ல! 

உபயோகப்படுத்தப்பட்டு, கசக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்ட தாமாரைப் போல ஒருவேளை இன்று உங்கள் வாழ்க்கை இருக்குமானால் பயப்பட வேண்டாம்! அன்று கல்லெறியப்படும்படி  கொண்டு வரப்பட்ட ஸ்திரீயை தங்கள் இச்சைக்காக உபயோகப்படுத்திய கும்பல், அவள் மேல் குற்றம் சாட்டினபோது, கர்த்தராகிய இயேசு அவளைப்பார்த்து உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது! இனி பாவம் செய்யாதே என்று ஒரே நொடியில் அவளுக்கு பரிபூரண விடுதலையைக் கட்டளையிட்டார்.  இன்று நீ எதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று ஏங்குகிறாயோ அந்த விடுதலையைக் கொடுக்க இயேசு கிறிஸ்து வல்லவர்!

கடந்த காலத்தின் கசப்பான  வலியையும் தழும்பையும்  மாற்றிப்போட்டு அதற்கு பதிலாக எதிர் காலத்தின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் , சந்தோஷத்தையும் தரும்படி இன்று கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபிப்போம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்