Tag Archive | ஆகான்

இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் ???

2 சாமுவேல் 11:2  அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.

ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது.

தாவீதின் அராசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை.

ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று நான் நினைத்தது உண்டு.  இந்தக் கேள்வி எனக்கு நாம் எப்படி ஒருவரின் வெளியரங்கத்தைப் பார்த்து உடனே அவரைப் பற்றிய தீர்ப்பை நம் மனதில் எழுதுகிறோம் என்று நினைப்பூட்டியது.

என்னுடைய பள்ளியின் இறுதியாண்டுகளில் நான் ஆடம்பரமாய் உடை உடுத்தியதோ அல்லது நவீனமாய் வாழ்ந்ததோ இல்லை. என்னுடைய ஆடைகள் எனக்குத் தெரிந்தவரை அம்மா தைத்துக் கொடுத்தவை தான். ஒருநாளும் ரெடிமேட் எதுவும் வாங்கியதில்லை. தலை முடி நீளமாக இருந்ததால் நன்றாக பின்னி ரிபன் கட்டிவிடுவேன்.  சினிமாவுக்கோ அல்லது பார்க்குகளுக்கோ நண்பர்களோடு சென்றதில்லை. நான் பார்க்க அழகாக இல்லை என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன் ஆனால் ஆடம்பரமாய் அலைந்த கூட்டத்தில் நான் சேர்ந்ததில்லை. எனக்கென்று ஒருசில நல்ல தோழிகள் இருந்தனர். நாங்கள் ஒரு தனிப்பட்டவர்களாகவே இருந்தோம்.

சில வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் என்னோடு படித்த ஒரு நண்பனைப் பார்த்தேன். என்னைப்பார்த்தவுடன், ஐயோ அடையாளமே தெரியவில்லை! இப்படி மாறிவிட்டாய் என்றான். எப்படி மாறிவிட்டேன் என்று எனக்கு புரியவில்லை. கட்டுப்பாடான என் உள்ளான வாழ்க்கை என்றுமே மாறியதில்லை!

சென்னையை விட்டு வெளியே படித்துக் கொண்டிருந்ததால் உடை, தலை பின்னல் இவை சற்று மாறியிருந்தது. என்னுடைய வெளிப்புற மாறுதல் அவன் கண்களில் பளிச்சென்று பட்டது போலும்.  இதில் வருந்தக்கூடிய காரியம் என்னவென்றால், தாவீதைப் போலத்தானே நாமும் வெளிப்புறமாய் சற்று அழகாக ஏதாவது தென்பட்டால் நம் கண்களை அகற்றவே மாட்டோம்.

ஏவாள்  பார்த்த கனி பார்வைக்கு அழகாக இருந்தது!  அவள் அதை இச்சித்தாள்!

யோசுவா 7: 20 -21 ல்  ஆகானின் பார்வைக்கு ஒரு பாபிலோனிய சால்வையும்,  வெள்ளிச்சேர்க்கையும், பொன்பாளமும் அழகாய்த் தோன்றின! அவன் அவைகளை இச்சித்தான்.

தாவீது தன் அரமனை உப்பாரிகையின் மேலிருந்து பார்த்த பெண் கண்களுக்கு அழகாக இருந்தாள். அவன் அவளை இச்சித்தான்!

இன்று உன் பார்வையில் எது அல்லது யார் அழகாய்த் தோன்றுகிறார்கள்? யாரை இச்சிக்கிறாய்?  வெளிப்புற தோற்றம் மாயையாக இருக்கலாம்! ஏமாந்துவிடாதே!  இதுதான் தாவீதைத் தவறி விழ செய்தது! பின்னர் சங்கீதங்களை எழுதும்போது, வெளிப்புறமாய்த் தன் கண்களை அலைய விட்ட முட்டாள்த்தனத்தை பற்றி அடிக்கடி அவன் எழுதினான்.

நீயும் முட்டாளாய் இருந்துவிடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்!

யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.”

நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்துக்கும் ஒரு துளி கூட இரக்கம் காட்டாதவராக என் மனதில் பட்டார். தவறு செய்தால் தண்டிப்பவராக மட்டுமே எனக்குத் தோன்றினார்.

வேதத்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை படித்து, கர்த்தருடைய அநாதி அன்பையும், கிருபையையும் உணராமல், தம்முடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்ற அவர் சரித்திரம் முழுவதும் கிரியை செய்து கொண்டிருக்கும் அற்புதத்தை அறியாமல், ஆங்காங்கே கதை வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கும் அவர் அப்படித்தான் தோன்றுவார்.

ஆகானின் கதை மிகவும் பரிதாபமானதுதான்! தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு, அவற்றை தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான் என்று பார்த்தோம்.

கர்த்தரால் அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாபத்தீடான காரியங்களை நாம் துணிந்து செய்யும்போது, அவை நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையும் சாபத்துக்குள்ளாக்கி விடுகின்றன. இதுதான் ஆகானின் குடும்பத்துக்கும் நடந்தது.

கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து அவற்றை நம் வாழ்க்கையில் ஒளித்து வைப்போமானால், நம்முடைய அந்த செயல்கள் நம் குடும்பத்துக்கும் அழிவைக் கொண்டுவரும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்கியிருப்பதே நலம்!

ஆகானின் வாழ்க்கையால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு அப்பால் எதையோ என்னால் காண முடிகிறது!

ஒருநிமிடம் என்னோடு இஸ்ரவேல் மக்களின் பாளயத்துக்கு வாருங்கள்! ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி! இனி எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்ற கேள்விக்குறி எல்லார் முகத்திலும் தெரிகிறது அல்லவா?

எரிகோவின் வெற்றியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் சிகரத்துக்கே ஏறிய அவர்கள், ஆயியின் தோல்வியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்குக்கே வந்துவிட்டர்கள்.

ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு என்ன என்பதை அனுபவித்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம்! கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு பிரிந்து பள்ளத்தாக்கில் விழுந்த நீங்கள், கற்களுக்கு அடியே புதைந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கலாம்.

ஆகானின் விஷயத்தில் மன்னிக்கத்தெரியாதவராய், கொடூரமாய் நம் கண்களுக்கு தெரிந்த தேவனாகிய கர்த்தர், ஆவிக்குரிய பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னிப்பின் நற்செய்தியை வைத்திருக்கிறார்!

ஏசாயா 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.

இன்று நம்முடைய பள்ளத்தாக்கான வாழ்க்கையிலிருந்து நாம் கர்த்தரைத் தேடும்போது, அது நாம் வாசம்பண்ணி இளைப்பாறும் இடமாக மாறும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு:11:28 ல் ”வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் “ என்றார்.

ஒசியா: 2:15 ல் “ அவளுக்கு .. நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” என்று  தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது.

ஆகோரின் பள்ளத்தாக்கு, உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு ஒருநாள் உன் நம்பிக்கையின் வாசலாக மாறும்! என்ன அருமை பாருங்கள்!

நாம் கர்த்தரைத் தேடும்போது கர்த்தர் நம்முடைய பள்ளத்தாக்கை, நம்முடைய தோல்விகளை, நம்முடைய பாவமான வாழ்க்கையை மறந்து, மன்னித்து, அதை ஒரு அழகிய இளைப்பாறும் இடமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாற்றிப்போடுகிறார்.

தோல்விகளின் பள்ளத்தாக்கில் வேதனையிலும் வலியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தரிடம் வா! உன் வாழ்க்கை நிச்சயமாக மாறும்!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?

 யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது.

பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டான் என்று நாம் இதுவரைப் பார்த்தோம்.

அந்தப்பொருட்களை ஆகான் என்ன செய்தான் பாருங்கள்! தன்னோடு எடுத்துச் சென்று தன் மனைவி, பிள்ளைகள் வாழ்ந்த கூடாரத்தில் மறைத்து வைத்தான்.

ஆகான் எடுத்த இந்த முடிவு ஒன்றும் புதிதானதல்ல! கண்களால் கண்டதும், கண்டதை இச்சித்ததும், இச்சித்ததை தனக்கு சொந்தமாக்கியதும், மறைத்து வைத்ததும், அன்று ஏதேன் தோட்டத்தில் ஏவாளும், பின்னர் அரண்மனையின் உப்பரிகையில் தாவீதும் எடுத்த முடிவுதான்.

ஏதேன் தோட்டத்தில், தன்னுடைய சாயலாக உருவாக்கின தன் பிள்ளைகளோடு பேசி உறவாட பரம தகப்பன் வந்தபோது ஆதாமும், ஏவாளும் சாபத்தீடான காரியத்தை செய்தபடியால் ஒளித்துக்கொண்டிருந்தனர். ஏன்? பரமபிதாவாகிய கர்த்தர்மேல் உள்ள பயம் அவர்களை ஒளித்துக்கொள்ள செய்ததா?  இல்லை! தங்களுடைய செயலால்தான் அவர்கள் ஒளித்துக்கொள்ள வேண்டியிருந்தது! அதையேதான் இங்கு ஆகான் செய்கிறான். சாபத்தீடானவைகளை தன் கூடாரத்துக்குள் கொண்டு சென்று, அவற்றை பூமியிலே ஒளித்துவைத்தான்.

நாம் நம் பார்வைக்கு இன்பமானவைகளை கண்ணை எடுக்காமல் பார்க்க முடிவெடுத்தபோது, அவற்றின் மேல் ஆசை வைக்க முடிவெடுத்தபோது, அவற்றை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடிவெடுத்தபோது, நாம் ஒளித்துக்கொள்ள வாஞ்சிக்கிறோம், ஏனெனில் நம்முடைய சாபத்தீடான இந்த செயலால், தேவனாகிய கர்த்தரோடு நமக்கு உள்ள உறவு அறுந்து போகிறது. இதைத்தான் ’நாம் கர்த்தருக்கு விரோதமாக செய்யும் பாவம்’ என்று ஆகானைப்பற்றிய நம்முடைய முதல்நாள் தியானத்திலேயே படித்தோம்.

ஆகான் யோசுவாவின் முன்னால், தான் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததாகக் கூறினான். ஏனெனில் அவன் கர்த்தரால் சாபத்தீடானவைகள் என்று அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை, கண்டான், இச்சித்தான், தனக்கு சொந்தமாக்கினான், ஒளித்துவைத்தான்.

கர்த்தருக்கு விரோதமாக ஆகான் பாவம் செய்தான் என்று ஆரம்பித்த நாம், ஆகானின் வாழ்க்கை என்னும் வட்டத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டோம்.

திருடவேண்டும் என்ற எண்ணத்தோடு எரிகோவுக்கு சென்றவன் அல்ல ஆகான்! நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோட்டத்தில் அலையவில்லை ஏவாள்! பத்சேபாள் குளிப்பதை காணவேண்டுமென்று உப்பரிகையின் மேல் ஏறவில்லை தாவீது! இவர்கள் மூவருமே கர்த்தரையும், அவருடைய வார்த்தைகளையும் அறிந்தவர்கள்தான்!

நம்மில் பலரும் இப்படித்தான்! ஆனால் கண்களின் இச்சையும், இருதயத்தின் ஆசைகளும் நம்மை நிலைத்தடுமாற செய்து, கர்த்தரால் சாபம் என்று அழைக்கப் பட்டவைகளை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால் தவறு இல்லை என்று நம்பவைத்து விடுகின்றன!
தேவனுடைய சேனையின் வீரனாய் ஆரம்பித்து, அழிவில் முடிவடைந்த ஆகானின் வாழ்க்கைப் பயணம்  நமக்கு ஒரு எச்சரிக்கையாயிருக்கட்டும்!  வேதத்தில் எழுதப்பட்ட எல்லா சம்பவங்களும் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவே எழுதப்பட்டுள்ளன!

வேதத்தின் வெளிச்சத்தில் உன்னை ஆராய்ந்து பார்! உன்னுடைய வாழ்க்கை என்னும் கூடாரத்தில் உன்னையும் கர்த்தரையும் விரோதியாக்கும் எதையாவது அல்லது யாரையாவது சிற்றின்பம் என்னும் பெயரில் ஒளித்து வைத்திருக்கிறாயா?

ஒன்றும் இல்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக்கொள்ளாதே!

 

என்னுடைய ஜெபமாகிய இந்த வரிகள் இன்று உன் ஜெபமாகட்டும்!

 

நான் உம்மைவிட்டு விலகும் போது என்னை பற்றிக்கொள்ளும்!

நான் உம்மைவிட்டு திரும்பும்போது உம்மிடமாய்த் திருப்பிக்கொள்ளும்!

நான் உம்மைவிட்டு ஒளித்துக்கொள்ளும்போது என் ஒளிப்பிடத்தை கண்டுபிடியும்!

நான் என்னையே காயப்படுத்தும்போது என்மேல் அன்பு கூறும்!

நான் மற்றவர்களைக் காயப்படுத்தும்போது என் நோக்கத்தை முறியடியும்!

நான் குழந்தையைப்போல அழும்போது உம்

அன்பின் கரத்தினால் என்னை அரவணைத்துக் கொள்ளும்!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

மலர் 6 இதழ்: 432 சிறு துளி விஷம் போன்றது சிற்றின்பம்!

யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன்.

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின்மலர்களில் ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும்.

நாம் பாவம் செய்வது தவறு என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஒரே ஒரு கணம் சிற்றின்பத்தை அனுபவித்தால் கூடத் தவறாகிவிடுமா? என்ற எண்ணமும், அது தவறு இல்லை என்று யாராவது சொல்லமாட்டர்களா என்ற ஆசையும், சிற்றின்பம் என்னும் பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது? என்ற எண்ணமும் நம்மில் பலருக்கு உண்டு. ஆகமொத்தத்தில் பாவத்தைக்குறித்து சிந்திக்கும்போது நம்மைக்குறித்த சுயநலத்தினால் தான் சிந்திக்கிறோமே தவிர, நாம் பாவம் செய்யும்போது நம்மில் வாசம் செய்யும் ஒருவரை துக்கப்படுத்துகிறோமே என்ற எண்ணத்தில் இல்லை.

பாவம் என்பது நமக்காக தம்மையே தியாகமாக சிலுவையில் ஒப்புக்கொடுத்த நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமக நாம் செய்யும் துரோகம்! அவரை நாம் அவமதிப்பதும், துக்கப்படுத்துவதுமாகும்! அதுமட்டுமல்ல, பாவம் நம்மை கர்த்தருக்கு விரோதியாக்குகிறது!

இன்றைய வேதாகமப் பகுதியில், ஆகான் நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்பதைப் பார்க்கிறோம்.

இஸ்ரவேல் மக்கள் ஆயியில் தோல்வியடைந்ததற்கு காரணம், எரிகோ நகரை எரித்து சாம்பலாக்கும்போது ராகாபும் அவள் குடும்பமும் தவிர மற்ற எல்லாம் எரிக்கப்படவேண்டும் என்ற கர்த்தருடைய கட்டளையை மீறி, யாரோ ஒருவன் சாபத்தீடானவைகளை எடுத்து தன் கூடாரத்திலே ஒளித்து வைத்திருந்ததால் தான் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

யோசுவா, இஸ்ரவேல் மக்களை கோத்திரம் கோத்திரமாகவும், குடும்பம் குடும்பமாகவும், பேர் பேராகவும் நிற்க வைத்து குற்றவாளி யார் என்று விசாரிக்கும்போது ஆகான் வேறு வழியில்லாமல், முழுப் பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்க முடியாது என்பார்களே, அப்படியாக சாபத்தீடானவைகளை மறைத்து வைத்த கூடாரத்தின் முன் நின்று, நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்றான்.

எரிகோ எரிக்கப்பட்டபோது ஆகான் கண்ணுக்கு குளிர்ச்சியான சில பொருட்களை எடுத்தான். அவை அவனுடைய பார்வையில் மிகச்சிறு குற்றமாகக் காணப்பட்டிருக்கலாம்! அந்தக் குற்றத்தை செய்யும்போது அது தன் வாழ்க்கையை இவ்வளவுதூரம் பாதிக்கும் என்று கனவுகூட கண்டிருக்கமாட்டான்!

நம்முடைய கண்ணுக்கு மிகச்சிறியதாக தோன்றும் சிற்றின்பம் ஒரு சிறிய துளி பாம்பின் விஷம் போலத்தான்! நம்மையே அழிக்கும் தன்மையுடையது! ஆதாம் ஏவாள் கண்ணுக்கு இனிமையாயிருந்த கனியைப் புசித்தபோதும், ஆகான் கண்ணுக்கு அழகான சில பொருட்களை தனக்கு சொந்தமாக்கிய போதும், அவர்களுக்கு அது ஒரு மிகமிக சிறிய காரியமாய்தான் தெரிந்திருக்கும்!  இந்த மிகச்சிறிய காரியம் நம்பவே முடியாத அளவில் அவர்களை தேவனாகிய கர்த்தருக்கு விரோதியாக்கி, அவர்களை மரணத்துக்குள் தள்ளி அழித்துவிடும் என்று நிச்சயமாக எண்ணியிருக்க மாட்டார்கள்.

ஆகானுடைய வார்த்தைகளை சற்று சிந்தித்து பார்! தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்று சரியாகச் சொன்னான்!  நாம் இனிது இனிது என்று நினைக்கிற சிற்றின்பங்கள், உன்னையும் என்னையும், சாத்தானைப்போல, தேவனாகிய கர்த்தருக்கு விரோதியாக்கிக் கொண்டிருக்கின்றன!

ஆகான் விரும்பி செய்த சிறு காரியம் கர்த்தருக்கு விரோதமான பாவமாயிற்று!  நாம் ஒவ்வொருதடவை மிகச்சிறிய சிற்றின்பத்தில் விழும்போதும் நம் முன்னால் ‘நீ கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தாய்’ என்ற எச்சரிக்கை விளக்கு எரிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! சிற்றின்பம்தானே என்று நாம் அலட்சியப்படுத்தும் காரியம் எவ்வளவு கொடியது என்று நாம் உணருவோம் அல்லவா?

 

இன்பம் ஒன்று கண்டேன்! சிற்றின்பம்தானே என்றெண்ணினேன்!

சிற்றின்பம் என்னை மோசம் போக்கி மரணத்தில் வீழ்த்தியது!

சிற்றின்பம்  என்னை நம்பினோரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது!

சிற்றின்பம் நான் நேசிக்கும் என் பரம தகப்பனுக்கு

என்னை விரோதியாக்கியது!

சிலுவையண்டை சென்றேன்! எனக்காய் மரித்த நேசரைக் கண்டேன்!

என்னை அவருக்கு விரோதியாக்கிய

சிற்றின்பத்தை சிலுவையில் அறைந்தேன்!

அவர் கண்கள் என்னை நோக்கின! என் கண்கள் பனித்தன!

 

உங்கள் சகோதரி

 

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com