Tag Archive | ஆசீர்வாதம்

இதழ்: 839 மின்னலுடன் கூடிய மழை வரும்!

உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார்.

சில வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் ஒருநாள், நாங்கள் காரில் பெங்களூருக்கு போய்க் கொண்டிருந்தோம். அன்று மழைக்கு எந்த அறிகுறியுமே இல்லை. சென்னையிலிருந்து வேலூர் வரை கடும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது! வேலூரைத் தாண்டி சற்று தூரம் சென்றவுடன் திடீரென்று மின்னல்களோடு, கருமேகத்துடன் மழை கொட்டியது. அப்படிப்பட்ட மழையை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என்றைக்குமே மழைக்கு பயந்து நாங்கள் வண்டியை ஓரமாக நிறுத்தியது கிடையாது! ஆனால் அன்று காரை ஒரு அடி கூட ஓட்ட முடியவில்லை. எல்லா வண்டிகளும் ஓரமாக நிறுத்தப்பட்டன. என்ன ஆச்சரியம் என்றால் தூரத்தில் இரண்டு மலைகளுக்கு நடுவே சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது தெரிந்தது. நாங்கள் இருந்த இடத்தில் ஒரு இரண்டு கிலோமீட்டர் பரப்பளவுக்கு மட்டும் கருமேகத்துடன் மழை பெய்து எங்களுக்கு புத்துணர்சியைக் கொடுத்தது. நாங்கள் காரின் ஜன்னல்களை சிறிது இறக்கிவிட்டு சில்லென்று முகத்தில் விழுந்த மழைத்துளிகளை மிகுந்த ஆனந்தத்தோடே அனுபவித்தோம். சாலைகளும், சாலையோர மரங்களும், கழுவப்பட்டதுபோல் காட்சியளித்தது. மே மாத வெயிலில் வந்து கொண்டிருந்த நாங்கள் ஏதோ ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் அடியில் நின்ற புத்துணர்வோடு பிரயாணத்தை தொடர்ந்தோம்!

இன்றைய வேதாம பகுதியில் ‘ஆசீர்வாதங்கள்’  என்ற பட்டியலில் ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும் என்று மழையை நமக்கு ஒரு ஆசீர்வாதமாக கர்த்தர் கொடுக்கிறார்.

மழை நீர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? என்று கேட்கலாம். வானத்திலிருந்து வரும் இந்த ஆசீர்வாதம், பூமியில் வாழும் நம்மையும், மிருகங்களையும், தாவரங்களையும் உயிருடன் வாழ உதவி செய்வது மட்டுமல்ல, அது ஒரே வடிவமாய் பூமிக்கு வந்தாலும் நம்மை வெவ்வேறுவிதமாய் ஆசீர்வதிக்கிறது அல்லவா? அதனால் தானோ என்னவோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளிய பரிசுத்த ஆவியானவரை தண்ணீருக்கு ஒப்பிட்டு இவ்விதமாகக் கூறினார். நான் கொடுக்கும் தண்ணிரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவா:4:14).

ஒருவேளை இன்று உன் வாழ்க்கை மழையில்லாமல் வறண்டுபோன பாலைவனம் போல இருக்கலாம்! அடி மேல் அடி! சோதனை மேல் சோதனை! எப்படி இவற்றையெல்லாம் தாங்குவது என்று நீ பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கலாம்! அப்படித்தான் இருந்தது யோபுவின் வாழ்க்கை!

அவனுடைய் பணம், ஆஸ்தி, அந்தஸ்து எல்லாம் அழிந்து போயின! பிள்ளைகள் மரித்து போயினர்! உடம்பெல்லாம் ஒரே புண்! இவற்றின் மத்தியில் யோபு தேவனாகிய கர்த்தரைத் தேடி நான் தேவனை நாடி என் நியாயத்தை தேவனிடம் ஒப்புவிப்பேன்; ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்என்றான். பின்னும் அவன்அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின் மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்” (யோபு:5:9-11) என்று கர்த்தரை ஸ்தோத்தரிப்பதைப் பார்க்கிறோம்.

வறண்ட பாலைவனமாக இருந்த யோபுவின் வாழ்க்கையில் கர்த்தருடைய கிருபை மழையைப் போல வந்து புத்துணர்ச்சியை கொடுத்து அவன் தேவனுடைய மகத்துவத்தைப் போற்ற, தேவனை ஸ்தோத்தரிக்க அவனுக்கு உதவியது. அதே தேவன் இன்று உனக்கும் உதவி செய்வார்! யோபுவைப் போல கர்த்தரை நாடி, உன் கவலைகளை அவரிடத்தில் ஒப்புவி! தேவனுடைய கிருபை என்னும் மழைத்துளிகள் , வேதனையால் வறண்டு போயிருக்கும் உன் வாழ்க்கையின் மேல் படும்போது உனக்கு புத்துணர்ச்சி பிறக்கும்!

 “பின்மாரிகாலத்து மழையை கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி …..மழையைக் கட்டளையிடுவார்.” (சகரியா: 10:1)

உன்னுடைய வாழ்க்கையின் வறட்சியைப் போக்க இன்று கர்த்தருடைய கிருபை என்னும் மழை தேவையா? கர்த்தரிடம் வேண்டிக்கொள்! மழை நிச்சயம் வரும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்