Tag Archive | இயேசு

இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!

யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார்.

தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம்.  தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன்.

இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களுக்குள் வந்திருக்கிறோம்.கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாட்கள் அதிக தூரம் இல்லை. தேவன் நம்மேல் கூர்ந்த மாபெரும் அன்பைக் கொண்டாடும் நாட்கள் அவை.

நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு பின்னால் இன்னொரு பெண்ணைத் தேடியது எனக்கு ஒருவேளை அவனுக்கு திருப்தியான அன்பு யாரிடமும் கிடைக்கவில்லையோ என்று நினைக்கத் தோன்றியது

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்மை திருப்தி படுத்தும் அன்பைத் தேடி அலைந்ததில்லையா? இன்று உங்களுடைய வாலிப வயதில் அன்பைத் தேடுகிறீர்கள் அல்லவா? நீங்கள் மட்டும் அல்ல! எல்லோரும் அந்த வயதைக் கடந்தவர்கள் தான்! யாரும் இல்லை என்று சொல்லவே முடியாது. நம்மை முழுவதும் திருப்தி படுத்தும் அந்த ஒரு நபரை நம்முடைய உள்ளம் தேடிய நாட்களை யாராலும் மறக்க முடியாது!

இந்த உலகம் நம்மை அன்பைத்தேடி அலைய வைக்கிறது! அது முழுமையான அன்பாக இருக்கவும் வேண்டும் என்று உள்ளம் ஏங்குகிறது! அன்பு என்பது  சாக்லேட் கொடுப்பதும் பூ கொடுப்பதும் , போலியான ஆசை வார்த்தைகளை பேசுவதும்  அல்ல!  இதைத்தான் உணமையான அன்பு என்று உலகம் கருதுகிறது. அவை வெறுமையானவைதான் என்று நாம் அறிந்துகொள்ளும் முன் பல கசப்பான அனுபவங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது!

ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அன்பை நேச கர்த்தர் நமக்கு அருளுகிறார். இந்த நித்திய அன்புதான் நமக்கு முழுமையான அன்பு! இந்த அன்புதான் கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காகத் தந்தருள செய்தது!  அந்த மா பெரும் அன்புதான் கர்த்தராகிய இயேசுவை பசி, தாகம், சோதனைகள், அடி, முள்முடி, சிலுவை என்ற எல்லாவற்றையும் சகித்து நமக்காக அழுது, ஜெபித்து, சுகமளித்து, அற்புதங்களை செய்து, போதித்து, நித்தியமான வழியில் நடத்த செய்தது.

நாம் நல்லவர்கள் என்பதற்காக கர்த்தர் நம்மை நேசித்தாரா? இல்லவே இல்லை! அவர் நல்லவர்! அதனால்தான் நம்மை நேசித்தார்! அதுமட்டுமல்ல! இந்த உலகத்தில் நான் மட்டும் தான் அவருடைய ஒரே ஒரு பிள்ளையாயிருந்தால் அவர் என்னை எப்ப்டி நேசிப்பாரோ அப்படித்தான் என்னையும் உன்னையும்  நேசிக்கிறார்!

சூரியன் உதயமாவது எனக்கு ஒரு அதிசயம்!

சூரியன் அஸ்தமாவதும் ஒரு அதிசயமே!

ஆனால் இதைப் படைத்த தேவன் என் மேல் அன்பாயிருக்கிறார் என்ற

உண்மை என்னுடைய உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் மா பெரும் அதிசயம்!

அறுவடை காலம் ஒரு அதிசயம்!

வானத்து நட்சத்திரங்களும் அதிசயமே!

ஆனால் இவற்றைப்படைத்த தேவன் என் மேல் அன்பாயிருக்கிறார் என்ற

உண்மை என்னுடைய உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் மா பெரும் அதிசயம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

இந்த அன்பை அனுபவித்திருக்கிறீர்களா?

இதழ்: 674 எதிர்பார்த்தல் 1: உண்மை

சங்: 34:8  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன்.

உங்களிடம் ஒரு கேள்வி!  யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு  பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு  முற்றிலும் மாறான  குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நம்முடைய  வாழ்வில் மறுபடியும் மறுபடியும் பார்த்தவுடன் நல்லவர் என்று நம்ப வைக்கக்கூடிய பலரை கடந்து வருகிறோம்.  அவர்கள் நல்லவர்களைப் போலக் காணப்படலாம், பேசவும் செய்யலாம்.  நாம் அதில் மயங்கி அவர்கள் வலையில் விழுந்து விடுவோம். அதன் பின் என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு சம்பவத்தின்போது நாம் சுத்தமாக எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவர் செய்யும்போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரியும்.

வேதத்தில் நான் வாசித்த ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. லூக்கா 7 ம் அதிகாரத்தில், யோவான்  தன்னுடைய சீஷர்களை இயேசுவினிடத்தில் அனுப்பி, வருகிறவர் நீர்தானா? அல்லது இன்னொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்று கேட்கும்படி சொல்லி அனுப்பினார். அந்த வேளையில் இயேசு அநேக அற்புதங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் போய் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் என்றார்.

இதற்கு அர்த்தம் என்ன? நீர் உண்மையாகவே மேசியாவா? உம்மை நம்பலாமா என்ற அவர்களுடைய கேள்விக்கு அவர், ஆம்!, நான் தான்! என்று கூறாமல் அவர்களைத் தம்முடன் தங்க வைத்து, தம்முடைய அற்புதங்களை அவர்களைக் காண செய்து, நீங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் விசுவாசித்தவைகளையும் பற்றி சொல்லுங்கள் என்றார்.

கர்த்தர் நம்மிடம் கூட, நான் நல்லவர், நான் உண்மையானவர், நான், நான், நான் என்று கூறுவதே இல்லை! அதற்கு மாறாக அவர்,  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்  என்கிறார்.

நான் சிறிய வயதில் எதையும் சாப்பிட ரொம்ப கஷ்டப்படுவேன். அப்பொழுது என்னுடைய அம்மா ஒன்று மட்டும் கூறுவார்கள்.  முன்னால் வைக்கும் சாப்பாட்டில் ஒரு பிடி மட்டும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அந்த ருசி எனக்கு பிடிக்கவில்லையானால் அதை விட்டு விடலாம். ஆனால் அந்த ஒரு பிடி மட்டும் கட்டாயம் சாப்பிட வேண்டும்! சாப்பிடுவதா இல்லையா என்று முடிவு எடுக்கும் முன் அந்த சாப்பாட்டை ருசி பார்க்க வேண்டும்.

ஒருவேளை நல்லவர் என்று நம்பிய ஒருவர் உன்னைக் கைவிட்டதால் இன்று உன்னால் கர்த்தரைக்கூட நம்ப முடியாத நிலையில் நீ இருக்கலாம். ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

நீ நம்பிய ஒருவர் உன்னுடைய எதிர்பார்ப்புகளை உடைத்து, தன்னுடைய உண்மையில்லா குணத்தினாலும், பொய்யினாலும், துரோகத்தினாலும் உன்னுடைய நம்பிக்கையை உடைத்தெரிந்திருக்கலாம்! அதனால் இன்று நீ மிகுந்த கசப்புடன் உன் பரலோகப் பிதாவைக்கூட நம்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம்! ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

நீ ஒருவேளை உண்மையாக நம்பக்கூடிய ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா? ஒரு நிமிஷம்! கர்த்தராகிய இயேசுவை ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்