Tag Archive | இரட்சிப்பு

இதழ்: 786 ஒரு புத்திசாலியானப் பெண்ணின் குரல்!

2 சாமுவேல் 14: 1- 4  ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து…நீ துக்க வஸ்திரங்கள் உடுத்திக்கொண்டு…. ராஜாவினிடத்தில் போய் அவரை நோக்கி இன்ன இன்ன பிரகாரமாய்  சொல்….. அப்படியே ..அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே ரட்சியும் என்றாள்.

இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் இந்தப்பெண்ணை தாவீதுடைய சேனைத்தலைவனும், நெருங்கிய நண்பனுமாகிய , யோவாப் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீ என்று அழைப்பதைப் பார்க்கிறோம். அவள் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் புத்தியுள்ள ஸ்திரீ என்று அனைவருக்கும் விளங்கினாள். அவளைக்கொண்டு தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் உள்ள இடைவெளியை நீக்க யோவாப் முடிவு செய்கிறான்.

அவளிடம் யோவாப் ஒரு அழகிய சித்தரிக்கப்பட்ட கதையை தாவீதுக்கு சொல்லும்படி அனுப்புகிறான். அந்தப்பெண் தாவீதிடம் கொண்டுவந்த நடிப்போடு கூடிய கதையைப் படிக்கும்போது அதே அரண்மனைக்குள் தாவீதிடம் பணக்காரன் ஒருவன் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியை பிடித்து விருந்து சமைத்த கதையோடு வந்தானே நாத்தான் தீர்க்கதரிசி அந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.

உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்குமானால், பத்சேபாளின் கணவனாகிய உரியாவை யுத்தத்தில் தாவீதுக்காக கொலை செய்தவனும் இதே சேனைத்தலைவன் யோவாப் தான்! தாவீதுடைய அசிங்கமான செயலை முடித்துக் கொடுத்தவன் இவன் தான்! இரத்தக்கரை படிந்த கைகளையுடையவன்!

இப்பொழுது பல வருடங்கள் கழிந்து விட்டன! தாவீதுடைய வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது! அரண்மனையின் நான்கு சுவருக்குள் பலவிதமான பிரச்சனைகள்! அதைப் பார்த்த  யோவாப் ஏதாவது செய்து தாவீதையும் அப்சலோமையும் சேர்த்து வைக்க முயலுகிறான். நாத்தான் உபயோகப்படுத்திய உவமை தாவீதிடம் எப்படி வேலை செய்தது என்று நன்கு அறிந்த அவன் இன்னொரு உவமையை உருவாக்குகிறான். இந்தமுறை ஒரு புத்தியுள்ள ஸ்திரீயினுடைய புத்தியுள்ள வார்த்தைகள் அவனுக்கு ஆயுதமாக வந்தன!

இந்த ஸ்திரீ ராஜாவிடம் வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி ராஜாவே ரட்சியும் என்று நேரிடையாக பேசியதைப் பாருங்கள்! அவள் தன்னுடைய இனிய வார்த்தைகளால் தாவீதை சிகரத்தில் கொண்டுபோக முயற்சி செய்யவில்லை.  அதற்கு பதிலாக சாதாரணமாகத் தன் குரலையும் வார்த்தைகளையும் மட்டும் உபயோகப்படுத்தி ராஜாவுக்கு செய்தியைக் கொடுக்கிறாள். இது என்னை அதிகமாக சிந்திக்க வைத்தது! விசேஷமாக கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் பேசும் திறன் என்ற பரிசைக்குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன்!

ஒரு சாதாரண பேச்சாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கவிதையானாலும் சரி, அல்லது சுவாரஸ்யமான கருத்தை சொல்லும்  கதைகளானாலும் சரி, நாம் அவற்றை சொல்லும் விதத்தில் திறமை உண்டு! வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரகவும், போதகராகவும், எழுத்தின் மூலம் பலருடைய உள்ளத்தை தொடும் எழுத்தாளராகவும், பாடல்களை எழுதுபவராகவும்  இருக்கும் திறன் நம்மில் பலருக்கு உண்டு அல்லவா? நீங்கள் எழுதியவை எனக்கே எழுதியது போல இருந்தது என்று என்னிடம் யாராவது சொல்லும்போது அதில் வரும் மகிழ்சியே தனி!

நம்முடைய ஆலயங்களில் நாம் பாடும் சில பாடல்களின் வரிகள் நம்மை உணர்ச்சிவசப் படுத்துவதில்லையா? எனக்கு மிகவும் பிடித்த பின் வரும்

எந்தன் ஜீவன் இயேசுவே,  சொந்தமாக ஆளுமே,  எந்தன் காலம் நேரமும், நீர் கையாடியருளும். (Take my life and let it be consecrated Lord to Thee)

என்ற பாடலை எழுதிய ப்ரான்சஸ் ஹாவேர்கல் அம்மையார் மிகச் சிறந்த குரல் வளமுள்ளவர். தன்னுடைய குரலால் அவர் எழுதின கவிதைகளை உலகத்துக்கு கொடுத்து வந்தார். பின்னர் பல கவிதைகள் பாடல்களாயின!

அவருடைய குரலை கேட்க எல்லோரும் ஆவலாய் இருந்தனர். எல்லா இடங்களிலும் அவரை அழைத்து சிறப்பித்தனர். ஆனால் அவர் ஒருநாள் தன்னுடைய வாழ்வில் கர்த்தருக்கு அர்ப்பணிக்காத இன்னும் ஒன்று இருப்பதாக உணர்ந்தார். அன்று தன்னுடைய குரலை தேவனுக்கு அர்ப்பணித்து பாடிய வரிகள் தான் இவை,

எந்தன் நாவு இன்பமாய், உம்மைப்பாடவும்  என் வாய் , மீட்பின் செய்தி கூறவும், ஏதுவாக்கியருளும்.( Take myvoice and let me sing, always only for my king)

இன்று நீ கர்த்தருக்காக என்ன செய்யப்போகிறாய்? எதை அர்ப்பணிக்கப்போகிறாய்? இன்று வேதத்தைப் போதிக்கும் குரல் உன்னிடம் உண்டா? கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் குரல் உண்டா? ஆறுதலாக, தேறுதலாக பேசி நொறுங்கிய உள்ளங்களைத் தேற்ற வைக்கும் குரல் உண்டா?

ந்ம்முடைய வார்த்தைகள் மூலமாகவும், குரல் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 676 எதிர்பார்த்தல் 3: திடமான குணம்!

எபிரேயர் 13:8   இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

என்னிடம் ஒரு பழைய வாஷிங் மெஷின் இருந்தது. ஒருநாளும் ரிப்பேர் என்று யாரிடமும் கொடுத்ததேயில்லை. நான் புதிய மெஷின் வாங்கியவுடன், எத்தனையோ  வருடங்கள் உழைத்த அந்த மெஷினை என்னிடம் வேலை செய்த பெண்ணுக்கு கொடுத்தேன். சில வருடங்கள் கழித்து அவளை நான் பார்த்தபோது அந்த மெஷின் இன்னும் நன்றாக வேலை செய்கிறது என்றாள்.

அப்படிப்பட்ட திடமான மெஷினை விட திடமான ஒரு உறவை நாம் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிப்பேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் பழுதடையாத ஒரு உறவு, எப்பொழுதும் மாறாத ஒரு உறவு! எந்த வேளையிலும் நம்மைக் கைவிடாத ஒரு உறவு!

ஒருநேரம் அன்பாகவும் அடுத்த நேரம் முகம் சுழித்தும் இருப்பவர்களுக்கு மத்தியில், ஒருநேரம் தயவாகவும் மறுநேரம் வெறுப்பாகவும் இருப்பவர்களுக்கு மத்தியில், ஒருநேரம் நல்லவர்களாகவும் மறுநேரம் கெட்டவர்களாகவும் இருப்பவர்களுக்கு மத்தியில்  என்றும் மாறாத ஒரே தன்மையுள்ள உறவை எங்கே தேடுவது?

அதனால் தான் எனக்கு பவுலின் இந்த வார்த்தைகள் மிகவும் பிரியம். கர்த்தராகிய இயேசு மட்டும்தான் நம்மிடம் ஒருநேரம் சூடாகவும் மறுநேரம் வெதுவெதுப்பாகவும்  இல்லாமல், என்றும் மாறாத தன்மையுள்ளவராயிருப்பார்.

பழைய ஏற்பாட்டில் ஒரு சிறு புத்தகமாக உள்ளது யோனாவின் கதை. ஒரு சிறிய மனிதனும் பெரிய மீனும் என்று நான் சிறு வயதில் கேட்ட கதை. ஆனால் இந்த யோனாவின் கதை வெறும் மீன் கதை அல்ல! நினிவே பட்டணத்துக்கு கர்த்தர் அவனை அனுப்பி அந்த ஊர் ஜனத்தை மனந்திரும்பும் படி பிரசிங்கச் சொன்னார். கீழ்ப்படியாமல் வேறு திசையில் ஓடிய அவன், மீன் வயிற்றிலிருந்து வெளி வந்தவுடன் நினிவே போய் பிரசங்கம் பண்ணினான்!  ஜனங்கள் மனம் திரும்பினார்கள்! யோனாவுக்கு கோபம் வந்துவிட்டது! அவன் அந்த ஜனங்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுக்க வேண்டும் என்று விரும்பினானே தவிர அவர்களை இரட்சிக்க விரும்பவில்லை.

ஆனால் இரட்சிப்பு என்பது நம்முடைய கர்த்தரின் மாறாத குணம் என்று அன்று அவனுக்கு புரியவில்லை! அவர் அன்பில் திடமானவர்!

நம்மை இரட்சிக்கத் தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவை பரியந்தம் அனுப்பக்கூட  அவர் தயங்கவில்லையே!

பாவம் யோனா! அதை புரிந்துகொள்ளாமல் கோபப்பட்டான்.  இரட்சிப்பு என்பது அவரது மாறாத குணம் ஏனெனில் அவர் நம்மை அவ்வளவாய் நேசிக்கிறார்.  நேற்றும் இன்றும் என்றும் அவர் என்னை நேசிக்கிறார். அவருடைய மாறாத அன்பு ஒவ்வொரு நிமிடமும் என் வாழ்க்கையில் கிடைக்கும்!  எல்லா நேரத்திலும் அவர் என்னை நேசிப்பார்! ஒரு திடமான அன்பு!

இரவின் பயம் என்னை நெருடும்போது

கேள்விகளால் என் உள்ளம் வாடும்போது

வறண்ட பாலைவனம் பூந்தோட்டமாய் மாறும் வரை

என்னோடிரும் என்றும் மாறாத என் நேச கர்த்தரே   –   என்பதே இன்று என் ஜெபம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்