Tag Archive | இளைப்பாறுதல்

இதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை!

சங்கீதம் 38: 3,4  உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று!

தகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது, எங்கோ ஒரு இடத்தில் பாவம் அவனுடைய வாழ்வில் விளையாட இடம் கொடுத்து விட்டான். கடைசியில் அவன் வேதத்தில் இடம் பெற்ற ஒரு மோசமான விபசாரத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டான்.

ஒரே ஒரு கணம் அவன் தவறியது தாவீதை என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை என்று எழுத வைத்தது.

அவனுடைய குடும்பம் அனுபவித்த துன்பங்களை இன்று நாம் சிந்திக்க வேண்டாம் ஆனால் அவன் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த வேதனையைப் பாருங்கள்!

தாவீது தன்னுடைய மாம்சத்தில் ஆரோகியமில்லை என்று சொல்லுகிறான். பாவம் நம்முடைய ஆரோக்கியத்தை சிதைத்து விடுகிறது! வியாதியும், வேதனையும் தொடருகின்றன! அதுமட்டுமல்ல அவனுடைய  பாவம் ஒரு வெள்ளம் போல, ஒரு சுனாமி போல அவனுடைய தலைக்கு மேலாக பெருகிற்று. அவை தன்னை பாரச்சுமையைப் போல தாங்கமுடியாமல் பாரமாக அழுத்தியது என்று கூறுகிறான்.

பாரச்சுமையைத் தாங்கமுடியாமல் குனிந்து கொண்டு செல்லும் ஒருவன் தள்ளாடி நடப்பதை நம்முடைய மனக்கண்ணால் பாருங்கள்! அழகான மாளிகையில், உலக அழகி பத்சேபாளுடன் இருந்த அந்த கணம் அவனுக்கு எத்தனை பெரிய பாரமாக மாறிவிட்டது பாருங்கள்! அதைத் தாங்கமுடியாமல் அவன் தத்தளிப்பதைப் பார்க்கிறோம்.

சங்கீதம் 38 ல் தாவீது எழுதியவை, பாவம் அவனுடைய வாழ்வில் ஏற்படுத்திய பேரழிவைக் தெளிவாக காட்டுகின்றன. தாவீது தேவனுடைய கட்டளையை மீறியதால், கர்த்தர் அவனை நோக்கி நீ ஏன் என்னை அசட்டை செய்தாய்? ஏன் என்னை இழிவு படுத்தினாய்?  என்று கேட்ட கேள்வி, அவனுக்கும் கர்த்தருக்கும் நடுவில் ஏற்பட்ட பிளவைக் காட்டியது!

பாவம் என்னும் நச்சு நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவை அறுத்து விடுகிறது. நான் நேசிக்கும் என்னை என்னுடைய பாவம் அசிங்கமான சாக்கடையில் தள்ளி விடுகிறது! அதனால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை! பாவம் என்னும் பாரம் சுமையாக என்னை அழுத்துகிறது! எனக்கு நிம்மதியே இல்லை! இதுதானே தாவீதைப்போல நம்முடைய கதையும்!

ஆனால் கர்த்தராகிய இயேசு , வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார்! இன்றே வாருங்கள்! பாரச்சுமையினால் வாடும் உங்களுக்கு இளைப்பாறுதல் உண்டு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 693 அவர் தரும் இளைப்பாறுதல்!

2 சாமுவேல் 7:1  கர்த்தர் ராஜாவைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது…

நான் என்னுடைய அவசரத்தால் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் உள்ள தாவீதும் பத்சேபாளும் கதைக்குத் தாவ முயன்றபோது கர்த்தர் அஅற்கு தடைபோட்டர். தாவீதுக்கும் மீகாளுக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது என்பதை முடித்தவுடன், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு வாரிசு  பிறந்ததை ஆரம்பிக்க நினைத்த என்னை கர்த்தர் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள அதிகாரங்களை படிக்கத் தூண்டினார்.

2 சாமுவேல் 7 ம் அதிகாரம் இளைப்பாறுதல் எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் போதிக்கிறது. கர்த்தர் ராஜாவை இளைப்பாறப்பண்ணினபோது என்ற வார்த்தை கர்த்தர் இந்த இளைப்பாறுதலை தாவீதுக்கு அருளினார் என்பதை உணர்த்துகிறது. தாவீது யுத்தம் பண்ணுவதிலும், திருமணம் பண்ணுவதிலும், நாட்டை ஆளுவதிலும் மிகவும் மும்முரமாக இருந்துவிட்டான். கர்த்தர் இப்பொழுது சற்று இளைப்பாறுதலைக் கொடுத்து வாழ்க்கையில் மிக முக்கியமானது என்ன என்று அவன் சிந்திக்க நேரம் ஏற்படுத்தினார்.

நாம் எத்தனைமுறை நம்முடைய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு, நமக்கென்று சற்று நேரம் ஒதுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். நம்மால் நேராக சிந்திக்ககூட முடியாத நிலை. ஒரே குழப்பமான மனநிலை!  வெளியில் உள்ள எத்தனை சக்திகள் நம்மை விரட்டுகின்றன! யாருடைய வேலையை செய்வது என்றே தெரியவில்லை! அவை நாம் விரும்பும் அமைதியை கெடுத்து விடுகின்றன!

இதே மனநிலையில் தான் அன்று தாவீதும் இருந்திருப்பான். வெளியே யுத்தத்துக்கு மேலே யுத்தம்!  உள்ளே மீகாளைப்போன்ற மனைவிமாரால் பிரச்சனை! நாட்டை ஆளுவது சுலபமா என்ன? எத்தனை சக்திகள் தான் அவனை ஆட்டிப்படைக்கின்றன! பம்பரம் போல சுழன்ற அவன் வாழ்வில் கர்த்தருக்கு இடமே இல்லாமல் போயிற்று! நம்மைப் போலத்தான்!

தேவனாகிய கர்த்தர் நம்முடைய பாதையில் வெளிச்சம் காட்டவேண்டுமென்று நாம் விரும்பினால், நாம் நம்முடைய நேரத்தை கர்த்தருக்கென்று ஒதுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சரியான வெளிச்சத்தை பின் தொடருகின்றோமா என்று நமக்குத் தெரியும்! சில நேரங்களில் சாலைகளில் கண்களை கூச செய்யும் ஹெட் லைட் போல சில தவறான வெளிச்சம் நம்மை தேவனுடைய சித்தம் என்ற பாதையை விட்டு விலக செய்துவிடும்.

கர்த்தர் தாவீதை இளைப்பாறப்பண்ணினபோது அவன் நிச்சயமாக கர்த்தரை நோக்கிப்பார்த்து அவரோடு பேசி, உறவாடியிருப்பான்.

நம்மால் சற்று நேரம் கர்த்தருக்கென்று கொடுக்க முடிகிறதா? வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதன் மத்தியில் கர்த்தருடன் செலவிடும் நேரத்தை மட்டும் விட்டு விடாதே!

கர்த்தருடைய சமுகத்தில் அமைதியாக இருக்கும்போது தான் நமக்கு நல்ல இளைப்பாறுதல் கிடைக்கும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்