Tag Archive | உரியா

இதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது!

2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.

எனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள்  எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது  இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோலத்தான் சுத்தி வளைத்து பேசுவார்கள்.

இங்கே வேதம் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது என்று சொல்கிறது. கர்த்தர் தாவீது செய்த பாவத்தை சுண்ணாம்பு அடித்து மறைக்கவும் இல்லை.

தாவீதின் குடும்பம் மிகவும் பெரியது. அவனை சுற்றியுள்ளவர்கள் அதிலும் பெரிய எண்ணிக்கை. இஸ்ரவேல் தேசமே அவனை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குமே அவன் தான் முன்மாதிரி.  நம்முடைய தவறான சாட்சியின் மூலம் நாம் அதிக பாதிப்பைத்தானே ஏற்படுத்துவோம். எத்தனைமுறை நாம் அதிகமாக நேசிக்கும் பாஸ்டரோ, அல்லது டிவியில் காணும் பிரசங்கிமாரோ செய்யும் தவறைக்கண்டு நம்மில் அநேகர் தவறி விழுந்திருக்கிறோம்.

எத்தனையோ பேர் பயங்கரமாக தவறு செய்து விட்டு பிடிபடாமல் தப்பித்துப் போவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ ஊழியர்கள் அரசியல்வாதிகள் கால்களில் விழுந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தாவீதைப் பொறுத்தவரை முதலில் அவன் செய்த பாவங்களிலிருந்து எளிதாக அவன் தப்பித்ததைப் போலத்தான் இருந்தது. அவன் கொலை செய்ததாகவே கருதப்படவில்லையே, உரியா ஏதோ போரில் மரித்தது போலத்தானே காணப்பட்டது.

இதுதான் பொல்லாப்பு என்பது!  நம்மை சுற்றியுள்ளவர்களை ஏதோ அழியும் பொருட்களைப் போலப் பார்ப்பது. அவர்களும் கர்த்தரின் பார்வையில் விசேஷமானவர்கள் என்று உணராமல் இருப்பது. உண்மையில் தாவீது பத்சேபாளையும், உரியாவையும் ஏதோ தன்னிடம் அடகு வைக்கப்பட்ட பொருளை அடகுக்காரன் நடத்துவது போல நடத்தினான். அவன் தீட்டிய திட்டத்தில் அவர்களை விழ வைத்தான்.

தாவீதின் வாழ்வில்  இருந்த பொல்லாப்பு நம்முடைய வாழ்வில் உண்டா? நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம்?  பொல்லாப்பை விட்டு நாம் விலகும்போது அது நம்மை விட்டு விலகும். நாம் பற்றவருக்கு செய்யும் பொல்லாப்பு நமக்கு நாமே பொல்லாப்பு செய்வதுபோலத்தான்.

தாவீது, உரியாவுக்கும், பத்சேபாளுக்கும் செய்த செயல் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பாயிருந்தது! உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன! உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா? உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா?  சிந்தித்துப் பார்! ஜெபி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 732 பத்சேபாளிடம் ஒரே ஒரு கேள்வி!

1 சாமுவேல் 11: 26,27  தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்.

கற்பு என்பது  நமக்கும் அழகு!  நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு! பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம்!  இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன படிக்கப்போகிறோம் என்று புரிகிறது அல்லவா?

அன்று பத்சேபாளின் கதவு தட்டப்பட்டது! போர்க்களத்திலிருந்து செய்தி! என்னவாயிருக்கும்! மாவீரன் உரியா  மறைந்து விட்ட செய்தி! உன்னுடைய அன்புக் கணவன் மரித்துவிட்டான் என்ற செய்தி.

பத்சேபாளுக்கு எப்படி இருந்திருக்கும்? வேதம் சொல்கிறது அவள் தன் நாயகனுக்காக துக்கம் கொண்டாடினாள் என்று.  எத்தனை நாள் துக்கம் தெரியுமா? ஏழே நாட்கள்தான்.  உண்மையாக சொல்லப்போனால் உரியாவின் உடல் குழிக்குள் இறங்கி எட்டாம் நாளில் அவள் தாவீதுக்கு மனைவியாகிறாள்.

நான் பத்சேபாளை சந்திக்க நேர்ந்தால் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். என்ன கேள்வி தெரியுமா? உன் புருஷனை கொன்ற ஒருவனை எப்படி உன்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது என்றுதான். சிலர் சொல்கின்றனர், பத்சேபாளுக்கு தன் கணவன் படுகொலை பண்ணப்பட்ட விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று.

ஆனால் பெண்களே சொல்லுங்கள்! நம்மால் இதை உணர முடியுமா? முடியாதா? நம்முடைய உள்ளுணர்ச்சி நிச்சயமாக இதை நமக்குக் காட்டும். தான் தாவீதால் கர்ப்பவதி ஆகிவிட்டதை தாவீதுக்கு தெரிவித்து சில நாட்களிலேயே அவளுடைய, வாலிபனான, போரில் திறமையான, தைரியசாலியான கணவன் மரித்து விட்டான். நான் பத்சேபாளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக எங்கோ கரிந்து விட்டது என்று முகர்ந்திருப்பேன். ராஜ கிரீடம் தரித்து சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜா ஒரு நரி என்று உணர்ந்திருப்பேன்.

முதல் தடவை தாவீது அவளை அடைய விரும்பி ஆள் அனுப்பியபோதே அவள் முடியாது என்று சொல்லி  இருக்கலாம். அவள் கணவன் இறந்து துக்கம் கொண்டாடிய பின்னர் மறுபடியும் அவளுக்காக ஆள் அனுப்பியபோது முடியாது என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் இருவரும் ஆடிய கபட நாடகத்தை மறைக்க அவள் அரண்மனைக்குப் போய் அவனைத் திருமணம் செய்கிறாள்.

கர்ப்பவதியான அவளால் அந்த செய்தியை அநேக நாட்கள் மறைக்க முடியாது. போர்க்களத்தில் கணவன் இருந்தபோது இவள் எப்படி கர்ப்பந்தரித்தாள் என்ற கிசுகிசுப்பு பரவ ஆரம்பிக்கும்.  தாவீதும் அவளும் செய்த பாவத்தை எப்படியாவது மறைக்கவேண்டும் என்றே இந்த உடனடி முடிவு எடுக்கப்பட்டது.

தாவீதுக்கு தான் விரும்பிய பெண் கிடைத்து விட்டாள். அவளுக்கோ யாரும் அவள் கற்பின்மேல் குற்றம் கண்டுபிடிக்கவே முடியாது.  கற்புக்கரசி அல்லவா!

ஆனால் அவளுடைய குமாரனான சாலொமோனோ தன்னுடைய நீதிமொழிகளின் புத்தகத்தில் ( 28:13) தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்கிறான். தன் தாயும் தகப்பனும் செய்த சதி வேலைகள் அவனுக்குத் தெரிந்திருந்தனவோ என்னவோ?

நம்முடைய நடத்தையில்  பரிசுத்தம் இல்லாமல் ஆத்துமாவைப்பற்றி பேசுவதால் என்ன பயன்? நடத்தையில் பரிசுத்தம் இல்லாமல் ஆலயப்பணிகளில் ஈடுபடுவதால் பலன் என்ன? இன்று நம்மில் எத்தனை பேர் இப்படி நம் பாவத்தை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்?

கற்போடும், பரிசுத்தத்தோடும் வாழ பெலன் தருமாறு கர்த்தரை நோக்கி ஜெபிப்போமா?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 730 ஒருவர் மீது கக்கும் நெருப்பு ஒருவரையா அழிக்கும்?

2 சாமுவேல் 11: 18 – 21  அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு  அறிவிக்க ஆள் அனுப்பி …… நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால் உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.

தாவீது, பத்சேபாள், உரியா என்னும் முக்கோணத்தில் கவனிக்கப்படாமல் போகும் பகுதி இன்றைய வேதபகுதி என்று நினைக்கிறேன். இந்த வசனங்கள் நமக்கு இஸ்ரவேல் அம்மோனியரோடு செய்த யுத்தத்தை விளக்குகிறது.  இதுவரை இஸ்ரவேலின் சேவகர் நன்றாகத்தான் யுத்தம் செய்து வந்தனர். ஆனால் அவர்கள் அலங்கம் உள்ள அம்மோனியரின் பட்டணத்தின் அலங்கத்தை நெருங்கியபோது தான் பிரச்சனை வந்தது.

நம்முடைய நாட்டின் சரித்திரக் கதைகளில் கூட மலையின்  மேல் கட்டப்பட்ட கோட்டைகளிலிருந்து அம்புகளை எய்தோ, கற்களை உருட்டியோ எதிரிகளைத் தாக்குவதைப் பற்றி படித்திருக்கிறோம் அல்லவா?

அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான இடத்தில் உரியாவை நிறுத்த திட்டமிட்ட யோவாப் அம்மோனியரின்  பட்டணத்தின் அலங்கத்தை நெருங்க தன்னுடைய சேவகருக்குக் கட்டளையிட்டான். அதன்பின்னர் உரியாவை கொலை செய்யும் எண்ணத்தோடு அலங்கத்தை நெருங்க செய்தது மட்டுமல்லாமல், உரியா சற்றும் எதிர்பாராத வண்ணம் மற்ற சேவகரை பின்வாங்கவும் செய்தான். தன்னை சுற்றி நடப்பதை அறியாதிருந்த உரியா அடிக்கப்படுகிற ஆட்டைப்போல அலங்கத்தின் அருகேயே யுத்தம் செய்து கொண்டிருந்தான்.

உரியா யுத்தத்தில் மடிந்துவிட்டான் என்று யோவாபுக்கு எப்படித் தெரியும். அலங்கத்தின் அருகே போய் ஒவ்வொரு சரீரமாக உருட்டியாப் பார்த்தான்? ராஜாவின் தந்திரமான கொலைத்  திட்டம் நிறைவேறிவிட்டதா என்று பார்க்க யோவாப் நிச்சயமாக வெட்டுண்ட உடல்களைப் பார்க்க சென்றிருப்பான்.

இந்தக் கொலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டது உரியா  மட்டும் அல்ல, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அநேகரை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அலங்கத்தின் அருகே போன அத்தனைபேரின் உயிரும் ஆபத்தில் இருந்தது என்று அறிந்தும் அப்படி ஒரு திட்டத்தை வகுத்தது எவ்வளவு தவறு! இதை யுத்தத்தில் நடக்கும் ஒரு சாதாரண காரியம்தானே என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

கானானியருக்கும், இஸ்ரவேலருக்கும் வித்தியாசம் வேண்டாமா? கானானியர் தேவனை வணங்காதவர்கள், இஸ்ரவேலரோ கர்த்தரையே தேவனாகக் கொண்டவர்கள். உரியாவுடன் சேர்த்து செய்யப்பட்ட இந்த மொத்த கொலையும் கர்த்தருக்கு அவமானத்தை உண்டு பண்ணுவதல்லவா?

இந்தக்கொலையை கர்த்தர் எப்படி பார்த்தார்? ஒரு யுத்தத்தில் நடக்கும் மரணம் போலவா? இல்லவே இல்லை! கர்த்தர் அவர்களை வெட்டுண்டு கொலை செய்யப்பட்டவர்களாகவே பார்த்தார்! அதுவும் அவர்கள் ராஜாவாகிய தாவீதின் கையினால்!

என்னுடைய ஏதாவது செயல் இன்று என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கிறதா என்று நம்மைக் கேட்போமா? யாரோ ஒருவரை பழிவாங்க எண்ணி எத்தனை பேரை வருத்தப்படுத்தியிருக்கிறோம்.  உன்னுடைய மனைவியை நீ வெறுப்பதால் அவளுடைய மொத்த குடும்பமும் பாதிக்கப்படலாம் அல்லவா? உன்னையே நம்பியிருக்கும்  ஒருவர் மீது நீ கக்கும் நெருப்பு சுற்றியுள்ள எத்தனை பேரை பட்சிக்கிறது என்று அறிவாயா?

நாம் இன்று எதை செய்தாலும் அது நம்மை சுற்றியுள்ளவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்க ஜெபிப்போமா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 728 நறுமணம் வீசிய வாழ்க்கை!

2 சாமுவேல்: 11: 17 பட்டணத்து மனுஷர் புறபட்டு வந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள். ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

இமாலய மலையில் மலையில் அமைந்துள்ள தரம்சாலா என்ற பட்டணத்துக்கு சென்றபோது உய்ரமான ஒரு மலைக்கு சென்றோம். ஒருபக்கத்தில் அழகிய லேக் இருக்கும் அந்த மலையின் அடுத்தபகுதி கண்கொள்ளாத பள்ளத்தாக்கு. மேலிருந்து பார்க்கும்போது ஆங்காங்கே காணப்பட்ட வீடுகள் பொம்மை வீடுகள் போல இருந்தன.  அங்கே தென்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி ஏதோ வெள்ளைக் கோடு போட்ட மாதிரி இருந்தது.  சிறு உருவங்கள் அசைவதுபோல் காணப்பட்டவையெல்லாம் பெரியபலத்த மாடுகள் என்பது புரிந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது  ஒரு காட்சி எத்தனை வித்தியாசமாகத் தெரிகிறது,  நம்முடைய வாழ்க்கையை நாம் உயரத்திலிருந்து கர்த்தர் பார்ப்பது போல பார்த்தால் எப்படியிருக்கும் என்று அடிக்கடி யோசிப்பேன்.

அன்னை தெரெசா அவர்கள், நம்முடைய இந்த பூலோக வாழ்க்கையை பரலோகத்திலிருந்து பார்த்தால், ஒருநாள் ஒரு கேவலமான பயணிகள் விடுதியில் நடக்கும் காட்சி போலத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார். நாம் ஒரு பயணிகள்! இந்த உலகம் நமக்கு சொந்தம் என்று போராடுகிறோமே அது வெறும் விடுதி! அதுவும் கேவலமான விடுதி! இதற்குதான் இத்தனை போட்டியும் பொறாமையும்!

எத்தனை உண்மை அது!

போர்க்களத்தில் தனித்து தள்ளப்பட்டு வெட்டுண்டு மரித்த உரியாவை நினைக்கும்போது, தனிமையிலே இப்படிப்பட்ட வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கத் தோன்றியது. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:18ல்

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

என்று எழுதுகிறார். இப்படிப்பட்ட வேதனைகளைக் கடந்து வந்த ஒருவர் , கர்த்தர் நம்முடைய கண்களை கண்ணீரால் கழுவி நாம் மறைந்திருக்கும் கண்ணீர் இல்லாத மகிமையின் தேசத்தைக் காண செய்வார் என்று எழுதியிருக்கிறார்.

ஆம்! இதுதானே கர்த்தர் வெளிப்படுத்தின விசேஷத்தில் (21:4) நமக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்.

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்….

இந்த வாரம் நான் உரியாவின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது அவனுடைய இளம் பிராயத்தில் அவன் கர்த்தர்மேல் கொண்டிருந்த உறுதியான விசுவாசமும், அவனுடைய ஒழுக்கமான வாழ்க்கையும் எனக்கு எங்கள் தோட்டத்தில் வளரும் காபியைத்தான் ஞாபகப்படுத்தியது. அந்த செடி வளரும்போது அதில் எந்த நறுமணமும் கிடையாது, அதின் பழங்கள் கொத்துக்  கொத்தாய்த் தொங்கும்போதும் அதில் மணம் கிடையாது. ஆனால் அந்தகொட்டைகளை எடுத்து வறுக்கும்போதுதான் அதின் திவ்யமான நறு மணம் நம்மை மயக்கும்.

பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவனாகிய கர்த்தர்,  ஏத்தியனான உரியா தேவனுக்கு முதலிடம் கொடுத்ததால் தனியே தள்ளப்பட்டு மும்முரமான போர்க்களத்தில் வெட்டுண்டு  சாய்ந்தபோது, அவன் வாழ்க்கையை நறுமணம் வீசிய  ஒரு சுகந்த வாசனையாகக் கண்டார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 727 தனித்து தள்ளப்பட்ட போர்க்களம்!

2 சாமுவேல்: 11:15  அந்த நிருபத்திலே: மும்முரமாய்  நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

எனக்கு மிகப்பிடித்த ஒரு ஆங்கில மாத இதழ் உண்டு. முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பு நான் ஆந்திராவில் இருந்தபோது யாரிடமாவது சொல்லியனுப்பி சென்னையிலிருந்து இந்த இதழை வாங்குவேன். அதிலிருந்து சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அதில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காட்டப்படுகிற வாழ்க்கையே வேறு. ஒரு உயர்ந்த வாழ்க்கையை வரையறுத்துக் காட்டும் மாத இதழ்.

அப்படிப்பட்ட இதழில் காட்டப்படும் வாழ்க்கையைப் போலத்தான் ஆரம்பித்தது பத்சேபாளின் வாழ்க்கையும். ராஜாவின் மிகச்சிறந்த வீரர் பட்டியலில் இடம்பெற்ற ஒரு மாபெரும் வீரனோடுதான் அவளுடைய திருமணம் நடந்தது. பத்சேபாளும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் அல்ல. அவள் ராஜாவுக்கு அறிவுறை கொடுக்கும் ஒரு பெரியவரின் பேத்தி. அந்த வருடத்தில் எல்லோராலும் பேசப்பட்ட திருமணமாய் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் என்ன பரிதாபம்! உரியாவும், பத்சேபாளும் தங்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்குமுன்னரே உரியாவும், பத்சேபாளும் அக்கினிக்குள் தள்ளப்பட்டனர்.

உரியா ஒரு கொள்கைவாதி, கர்த்தராகிய தேவனுக்கும் அவருடைய உடன்படிக்கை பெட்டிக்கும் முதலிடம் கொடுத்தவன், ராஜாவின் எந்த தந்திர வார்த்தைகளும், மாயாஜாலமும் அவனைத் தன் முடிவை மாற்ற செய்ய முடியவில்லை என்று பார்த்தோம். அவன் வேறு மதத்திலிருந்து மனம் மாறியவனாயிருந்தாலும் தேவனையும், ராஜாவையும், தன்னுடன் இருந்த சக சேவகரையும் அதிகமாக நேசித்தவன் என்று பார்த்தோம்.

ஆனால் இன்றைய வசனம் கூறுகிறது அப்படிப்பட்ட ஒரு விசுவாசி மும்முரமாய் நடக்கிற போரிலே வெட்டுண்டு சாகும்படி மற்றவர்கள் பின்வாங்கி அவன் மட்டும் தள்ளப்படுவதைப் பார்க்கிறோம். உரியாவைப்போன்ற விசுவாசிக்கு வந்த பரீட்சையைப்பாருங்கள்!

ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்!

உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? எல்லோரும் பின்வாங்கி உங்களை மட்டும் வேதனை என்ற போர்க்களத்தில்  தனியாக விட்டதுண்டா? உங்கள் பலருடைய வாழ்க்கையில் இப்படி நடக்கிரது என்று எனக்குத் தெரியும்.சிலருக்கு பணப்போராட்டம்! சிலருக்கு கேன்ஸர் போராட்டம்! சிலருக்கு தோல்வியடைந்த திருமணம்!  உரியாவைப்போல உங்களில் பலரும் இந்த யுத்தக்களத்தில் தனித்து நிற்கிறீர்கள் அல்லவா? எத்தனை போராட்டம்? உங்களை சுற்றி எத்தனை எதிரிகள்! ஆனால் உதவி செய்ய யாருமே இல்லை என்று புலம்புகிறீர்கள் அல்லவா!

ஏசாயா 53 ல் மேசியாவும் நமக்காக இப்படியாக அடிக்கப்படுவதைப் பார்க்கிறோம்! அவர் தனித்துதான் இந்த யுத்தத்தில் தள்ளப்பட்டார். தனிமையில் எல்லாவற்றையும் அனுபவித்தார். ஆனால் அந்த இம்மானுவேல் நம்மோடு இன்று இருக்கிறார். கலங்க வேண்டாம்! நீ தனித்து இல்லை! உன்னைத் தாங்கி சுமக்கும் கர்த்தர் உன்னோடு இருக்கிறார்!

நான் சிறுவயதில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூவரின் கதையையும் கேட்டபோது (தானி 3:25), என் கண்கள் விரிந்தன! அவர்களோடு நான்காவதாக கர்த்தர் இருந்தார்.

புயலடிக்கும் உன் வாழ்க்கையில் கிறிஸ்து கூட இருப்பானால் உனக்கு பயமே வேண்டாம்! அவரை நம்பு!! அவர் உன்னோடு இருப்பேன் என்று வாக்களித்ததை விசுவாசி! அவர் உன் கரம் பற்றி நடத்துவார்! உனக்கு வெற்றியளிப்பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 726 நிற்கிறாயா? விழுந்து விடாதே!

2 சாமுவேல்: 11:15  அந்த நிருபத்திலே: மும்முரமாய்  நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

தாவீதின் நகரமாகிய எருசலேமில் சூரியன் அஸ்தமித்துவிட்டது. ராஜாவாகிய தாவீது தன்னுடைய படுக்கை அறையில் தூக்கமில்லாமல் புரளுகிறான். அவன் மனது படபடத்தது. அவன் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றேத் தெரியவில்லை. அவன் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்று தவறாக எண்ணி தன்னை இச்சைக்குட்படுத்தி விட்டான். இப்பொழுது அது மலை போன்ற பிரச்சனை ஆகிவிட்டது.

உரியா தாவீதுக்கு அசைக்க முடியாத சாலைத்தடை போல ஆகிவிட்டான். இபொழுது தாவீது உடனடியாக எதையாவது செய்ய வேண்டும். உரியா நாளைக் காலை யுத்தகளத்துக்கு திரும்புமுன் ஏதாவதுஅவசரமாய்  செய்ய வேண்டும்.

ஒரு நிமிஷம்! நீங்களும் நானும் தாவீதின் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?  நம்முடைய சேனையின் தளபதிக்கு தாவீதைப் போல ஒரு கடிதம் எழுதியிருந்தால் நாம் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருப்போம்?   மும்முரமாய்  நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதும்போது தாவீதின் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் ( சங்:23:1)

என்று எழுதிய அதே தாவீது அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதுவது ஆச்சரியமாயிருக்கிறது.

இந்தப்பகுதியை வாசித்தபோது இரண்டு முக்கியமான காரியங்கள் எனக்கு கண்களில் பட்டன.

இப்படியிருக்க தன்னை நிற்கிறனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்  ( 1 கொரி:10:12)

எப்படியிருந்த தாவீது எப்படி வீழ்ந்து போய்விட்டான் என்று பாருங்கள்! கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவன், வழிநடத்தப்பட்டவன், இப்பொழுது தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தரைமட்டத்துக்கு வந்துவிட்டான்..

இன்னொரு முக்கியமான காரியம் தாவீதின் வாழ்க்கையில் நாழடைவில் ஏற்பட்ட மாறுதல். பதவியும், பணமும், புகழும், பெரிய சம்பத்தும், வெற்றிகளும் வந்தடைந்தவுடன், அவன் தேவனுடைய வழிநடத்துதலை விட்டுவிட்டு, தன்னைத்தானே வழிநடத்த ஆரம்பித்துவிட்டான். தன்னுடைய வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தானே முடிவு தேட ஆரம்பித்து விட்டான். நாம்கூட சிலநேரம் நாமே சாதித்துவிடலாம் என்று நினைத்து முடிவு செய்வதில்லையா அப்படித்தான்!

ஒருகாலத்தில் கர்த்தரிடம் எல்லாவற்றையும் விசாரித்த அவன், இன்று யோவாபைத் தேடுகிறான்.

தன்னுடைய வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை ஒருகாலத்தில் தாவீது திரும்பி பார்த்திருப்பான் அல்லவா? அவனுக்கே ஆச்சரியமாயிருந்திருக்கும் அவன் எவ்வாறு இவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டான் என்று!

அவன் நிற்கிறேன் என்று நினைத்தபோது கீழே விழுந்தான்! அவன் தனக்கு எல்லாம் இருக்கிறது என்று நினைத்தபோது அவனுக்கு ஒன்றுமேயில்லை!

இவை நம் வாழ்வுக்கு ஒரு பாடம் அல்லவா? இன்று நாம் நிற்கிறோம் என்று நினைத்து விழுந்து விடாமல் இருக்க ஜெபிப்போமா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 725 உறுதியான கொள்கைவாதி!

2 சாமுவேல் 11:11 …….நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.

கொள்கைரீதியாக வாழாத எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் வாழத் தகுதியில்லாதவர்க்ள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.

இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்!  மார்ட்டின் லூதர் கிங் அவர்கள், ‘ ஒரு மனிதனை அளக்கும் அளவுகோலால்,  அவன் வசதியாக வாழும்போது அல்ல, அவன் கடினமான சோதனைக்குள் செல்லும்போதுதான் அளக்க முடியும்’ என்று  கூறிய கூறியது எத்தனை உணமை!

உரியாவின் கொள்கைகள் அவன் கடினமான சோதனையின் மத்தியில் சென்றபோதும் அசைக்கப் படவே இல்லை.

உரியா யுத்தத்தில் இருந்தபோது தாவீது ராஜா அவனுடைய மனைவியான பத்சேபாளோடு உல்லாசமாய் உறவு கொண்டது மட்டுமல்லாமல், அவள் கர்ப்பவதியான செய்தி வந்தவுடன், அந்த செய்தி வெளியே தெரிந்துவிட்டால் ஏற்படுத்தப்போகும் விளைவுகளை நினைத்து, தாவீது அதற்கு முடிவு கட்ட முடிவு செய்தான்.அதனால் யுத்தத்தில் நம்பகமான வீரனான உரியாவை அழைத்து,அவனைத் தன் வீட்டுக்குள் அனுப்ப முடிவு செய்தான். அப்படி உரியா சென்றிருந்தால் அவளுடைய குழந்தைக்கு தகப்பன் உரியா என்றுதானே உலகம் நினைக்கும்.

தாவீது போட்ட இந்தத் திட்டம், கர்த்தராகிய தேவனுக்கும், ராஜாவுக்கும், தன்னோடு யுத்தத்தில் உள்ள மற்ற வீரருக்கும் வாழ்க்கையில் முக்கிய இடம் கொடுக்காத ஒருவனிடம் செல்லுபடியாயிருக்கும்.

இங்கு பிரச்சனை என்னவென்றால் தாவீது தம்முடைய கொள்கையில் விடாப்பிடியாக உள்ள ஒருவனிடம் மாட்டிக்கொண்டான். அவனை வீட்டிற்குள் அனுப்ப முயற்சி செய்த தாவீதிடம் இந்த கொள்கைவாதி, நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.

கொள்கைகளை உரியா தான் உடுத்தும் ஆடை போல உபயோகப்படுத்தவில்லை! ஆடைகள் என்றால் களைந்து விடலாமே!

நேர்மையானதையே  செய்வேன் ஏனெனில் அதுவே நேர்மையானது! இது எப்படி! அவன் வாழ்ந்த காலம் என்னமோ குறுகியதுதான் ஆனால் அவன் தன்னை வழிநடத்திய தேவனின் பலத்த கரத்துக்குள் அடங்கியிருந்தான் என்பதுதான் உண்மை.

ஏத்தியனான உரியா ஒரு வேறு மதத்திலிருந்து மனம் மாறியவன், கர்த்தரை தன் வாழ்க்கையில் முதலிடமாகக் கொண்டவன், தன்னுடைய வாழ்வின் முடிவு பரியந்தம் கர்த்தருக்கும், ராஜாவுக்கும், தன்னோடு ஊழியம் செய்த சக போர் வீரருக்கும் உண்மையாக வாழ்ந்த ஒரு கொள்கைவாதி!

நம்முடைய சோதனைகளுக்கு மத்தியில், நம்முடைய ஆசாபாசங்களுக்கு மத்தியில் நாம் கிறிஸ்துவுக்காக எடுத்த முடிவில் உறுதியாக உள்ளோமா? ஏத்தியனான உரியாவை எதுவுமே அசைக்க முடியவில்லை! நீயும் நானும் கிறிஸ்தவ வாழ்க்கையில் உறுதியான கொள்கைவாதியாக இருக்க ஜெபிப்போம்!

 

உங்கள்  சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்