Tag Archive | ஊசா

இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!

2 சாமுவேல்: 6: 10,11  அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ….. கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்!

தாவீது கர்த்தருடைய  கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா. கர்த்தரின் பெட்டியைத் தொட்டதால் ஊசா உயிரழந்ததைப் பார்த்த தாவீது அதைத் தன் ஊருக்கு கொண்டுவர பயந்தான்.

நான் அங்கு இருந்திருந்தால் அந்தப் பெட்டியின் அருகேயே செல்ல பயந்திருப்பேன்! அந்தப் பெட்டியை என் வீட்டுக்குள் கொண்டு வர எப்படி சம்மதிப்பேன்!

ஊசாவின் மரணத்துக்குபின் கொஞ்சம் வேதத்தை ஆராய்ந்து படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஏனெனில் தாவீது மறுபடியும் கர்த்தருடைய பெட்டியை எடுத்து செல்வதில் இருந்த தவறை செய்யவில்லை.

ஒருமுறை பெலிஸ்தியர் தாங்கள் கைப்பற்றிய இந்த உடன்படிக்கை பெட்டியை, கர்த்தர் தங்களை வாதித்ததால் திருப்பி அனுப்பினர். அப்பொழுது கூட அவர்கள் ஒன்றும் கர்த்தர் இந்தப்பெட்டியைக் குறித்து கூறிய விதிமுறைகளைக் கைப்பிடிக்கவில்லை.  அந்த சமயத்தில் கர்த்தர் அவர்களைத் தண்டிக்கவில்லை. ஆனால் வேதத்தை அறிந்த இஸ்ரவேல் மக்கள் தவறு செய்தபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இஸ்ரவேல் மக்கள் அறிந்து செய்த தவறே தண்டனைக்குட்பட்டது. அதிலும் தாவீது, இஸ்ரவேலின் தலைவனானதால் ஒரு பெரியப் பொறுப்பு அவன் தோள்களில் இருந்தது.

ஊசாவின் மரணத்துக்கு பின் கர்த்தருடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே வைக்கப்பட்டது.  எபிரெய மொழியில் இந்த பெயரின் அர்த்தம் , ‘வேலையாள்’ என்பது. 1 நாளா:13:13 ல் நாம் அவன் ஒரு லேவியன் என்று பார்க்கிறோம். வேதத்தின்படி, லேவியர்கள்தான் இந்த பெட்டிக்கு காவலராக இருந்திருக்கவேண்டும்.

ஊசாவின் மரணத்துக்குபின் ஓபேத்ஏதோம் இந்தப்பெட்டியைத்  தன் வீட்டுக்குள்  ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருப்பான் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் அவன் அதைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அதை 3 மாதம் வைத்திருந்தான். கர்த்தர் அவன் வீட்டை ஆசீர்வதித்தார் என்று பார்க்கிறோம்.

இதில் என்ன புரிகிறது? கர்த்தருடைய பிரசன்னத்தை ஒபேத்ஏதோம் தன்னுடைய இல்லத்தில் ஏற்றுக்கொண்டதால் அவனும் அவனுடைய குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமையால் சாபமும், அவருடைய பிரசன்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஆசீர்வாதமும் வந்து சேரும்!

இன்று கர்த்தருடைய பிரசன்னம் நம் வாழ்க்கையிலும் நம் இல்லத்திலும் இருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமா?

கர்த்தருடைய ஊழியத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவர் நடத்தும் பாதையில் நடந்து அவருடைய சித்தத்துக்குள் நிலைத்திருப்பதே அவருடைய பிரசன்னம் நம் வாழ்வில் இருப்பதின் அடையாளம்! இதுவே நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா?

2 சாமுவேல் 6: 6,7 ….மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான்,

அப்பொழுது கர்த்தருக்கு   ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று!

யாத்திராகமம் 25 – 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை அவர் எப்படியெல்லாம் உருவாக்கச் சொன்னார், அதற்கு எவ்வளவு ஞானத்தை தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்தார் என்றும் பார்க்கிறோம். அதைப்படிக்கும்போது அந்தப் பெட்டியின் மகிமை நமக்குத் தெரியும்.

ஆனால் இஸ்ரவேலின் வாழ்க்கைச் சக்ககரத்தில் எங்கோ ஒரு இடத்தில், பரிசுத்தமான கர்த்தருடைய பெட்டியின்மேல் இருந்த பயம், மரியாதை குறைந்து விட்டது. கர்த்தர் மோசேயின் மூலமாக இந்த பெட்டியை அவர்கள் எப்படி எடுத்து செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தாவீது இதைப்பற்றி சிந்தித்ததாகவேத் தெரியவில்லை, அதைக் கடைப்பிடிக்கவும் இல்லை.

கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவர வேண்டும் என்பது நல்ல எண்ணமாக இருந்தாலும், கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதது ஊசாவின் மரணத்தில் முடிந்தது.  தாவீதுக்கு எப்படியிருந்திருக்கும்? கர்த்தர்மேல் சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

இதைப் படிக்கும்போது, தாவீது செய்த தவறால் கர்த்தர் எப்படி ஊசாவைத் தண்டிக்க முடியும் என்று நாம் நினைக்கலாம். இன்றும் நம்முடைய பாவமும், கீழ்ப்படியாமையும் நம்மை சார்ந்தவர்களை பாதிக்கும் என்பது தெரியுமா?

இன்று நாமும் தாவீதைப் போன்ற சூழலில் இருக்கலாம். நாம் செய்த ஒரு தவறு நம்முடைய குடும்பத்தை அல்லது நண்பர்களை அல்லது சமுதாயத்தை பாதித்திருக்கலாம். இன்று ஒருவேளை நாம்  நம்முடைய கீழ்ப்படியாமையின் விளைவையும், அதை கர்த்தர் சிட்சிப்பதையும் பார்க்கலாம். ஆனால் நாளை நாம் இந்த சிட்சையின் மூலம் கர்த்தர் நமக்கு கொண்டு வந்த ஆசீர்வாதத்தை நிச்சயமாகப்  பார்ப்போம்.

யாரோ ஒருவர் எழுதிய விதமாக, கர்த்தர் இன்று நம்மை நம்முடைய நோயின் மூலம் திருத்தலாம், ஏழ்மையின் மூலம் நம்மை ஆத்துமத்தில் பணக்காரராக்கலாம்,  பெலவீனத்தின்மூலம் பெலசாலிகளாக்கலாம்!

பொறுமையாயிரு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்