Tag Archive | எண்ணாகமம்

மலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்!

எண்ணா:16:1-4 ”கோராகு என்பவன்…. இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்குமுன்பாக எழும்பி,

மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக கூட்டங்கூடி, அவர்களை நோக்கி நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

மோசே அதைக் கேட்டபோது முகங்குப்புற விழுந்தான்.”

இந்த வேதபகுதியை வாசித்தபோது, எரேமியா தீர்க்கதரிசி நம்முடைய இருதயத்தைப் பற்றி எழுதியது மனதில் பட்டது 

எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”( எரே:17:9)

திருக்குள்ள இருதயம் என்றால் என்ன? உன் வாழ்க்கையை நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம், நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம், தப்பேயில்லை என்று நம்மை ஏமாற்றும் இருதயம்!

இப்படிப்பட்ட திருக்குள்ள, கேடுள்ள இருதயம் உள்ளவர்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளவே வேதாகமத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.

என்ணாகமம் 16 ல் இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தை சற்று ஆராய்வோம். முதலில் லேவியனான கோரகும், அவனைப் போன்று திருக்குள்ள இருதயம் கொண்ட மற்ற சிலரும், மற்ற இருநூற்று ஐம்பது பேரை அழைத்துக் கொண்டு மோசேயண்டை வருவதைப் பார்க்கிறோம். அவர்கள் ஒருசில வார்த்தைகள் பேசுமுன்னரே அவர்களுடைய இருதயம் வெளிப்படுகிறது! மோசே! உன்னையும் உன் அண்ணனையும்விட  நாங்கள் பரிசுத்தமானவர்கள், இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள், உங்களுக்கு என்னப்பா  தகுதி? நீங்கள் எங்களைவிட எவ்விதத்தில் உயர்ந்தவர்கள்? என்று ஆபத்தான விதமாக பேசுகின்றனர்.

ஒரு லேவியன், தேவனுடைய ஆலயத்தின் ஆசாரியன், கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசேயிடம் எப்படி இவ்வளவு கொடூரமாக பேச முடிந்தது?

மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான்” (எண்ணா:12:3) என்று வேதம் கூறுகிறதே! அப்படியிருக்கும்போது மோசே மீது குற்றம்சாட்ட என்ன காரணம்? அவர்களின் திருக்குள்ள, கேடுள்ள இருதயத்தின் விளைவுதான். மோசே கர்த்தரால் உபயோகப்படுத்தப்படுவதை பார்க்க பொறுக்கவில்லை. மோசேக்கு விரோதமாக கூட்டத்தை சேர்க்கிறார்கள்.

அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! இப்படிபட்ட இருதயத்தின் விளைவு என்ன என்று நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவனுடைய ஊழியனாகிய மோசே, கோராகு  தனக்கு விரோதமாக கூட்டம் கூட்டுவதை கர்த்தரிடம் முறையிடுகிறான். கர்த்தர் மோசேயை நோக்கி சகல ஜனங்களையும், கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களின் வாசஸ்தலங்களை விட்டு விலகச் சொன்னார். இந்த மூவரும் தங்கள் பெண்ஜாதிகளோடும், பிள்ளைகளோடும் வாசலில் நின்றனர். அப்பொழுது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

“பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும், அவர்கள் வீடுகளையும் ,கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.” (எண்ணா:16:32)

என்ன கொடுமை! திருக்குள்ள, கேடுள்ள இருதயம் உன் குடும்பத்தை, உன் பிள்ளைகளை அழித்துவிடும்!

கோராகு, மோசே, இந்த இருவருமே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஒருவன் தேவனுடைய சமுகத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியன், மற்றொருவன் இஸ்ரவேல் மக்களை வழிநடத்த தேவனால் அழைக்கப்பட்டவன். வெளிப்புறமாகப் பார்த்தால் இருவருமே கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபட்டவர்கள், கர்த்தரை அறிந்தவர்கள். ஆனால் ஒருவனின் இருதயம் திருக்குள்ளதாயும், மற்றொருவனின் இருதயம் சாந்தகுணமுள்ளதாயும் இருந்ததைப் பார்க்கிறோம்.

  நீதி: 4: 23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்”
உன் இருதயத்தை காத்துக் கொள்ளாவிட்டால் நீயும், உன் குடும்பமும் ஒருவேளை அழியவேண்டியதிருக்கும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

மலர் 6 இதழ் 378 – எண்ணாகமம் என்கிற நீரோடை!

எண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.”

 

நாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க இன்று ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த   எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம்.

இந்த புத்தகம் முழுவதும், கார்த்தருடைய கோபத்துக்கு ஆளாகி, பாலைவனத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்த இஸ்ரவேலரின்,  பெயர்களும், பெயர் வரிசைகளும், தொகைகளும், விதிமுறைகளும், தான் இடம் பெற்றிருக்கின்றன என்பது இதை வாசித்த நமக்கு தெரியும். சாதாரணமாக லேவியராகமம், எண்ணாகமம் புத்தகங்களை நாம் வாசிப்பதை தவிர்த்துவிடுவோம் அல்லவா?

இதை ராஜாவின் மலர்களுக்காக படிக்க ஆரம்பித்தபோது, இந்த ஜனங்களின் பாலைவன அனுபவத்திலிருந்து என்னுடைய ஆத்தும வளர்ச்சிக்கு நான் எதை கண்டடைவேன் ஆண்டவரே என்று பயந்தேன்.

ஆனால் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த புத்தகம் எனக்கு பாலைவனத்தில் ஓர் நீரோடையாய் கிடைத்தது.

இதில் இடம்பெற்றிருக்கிற சில அருமையான் சம்பவங்கள், கதைகள் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன! சில தேவனுடைய பிள்ளைகள் செய்த தவறுகள், நாம் இன்று அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் தடுத்து, நம்மை சீரான வழியில் நடத்துகின்றன! பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜீவியம், முறுமுறுப்பு என்ற பெருந்தவறு, பாலைவன வாழ்க்கையினால் ஏற்ப்படும் மன சோர்புகள் போன்ற பல அருமையான பாடங்கள் நமக்காக காத்திருக்கின்றன!

பாலைவனத்தின் நீரோடையான இந்த எண்ணாகமத்தை நாம் இன்று வாசித்த எண்ணாகமம்: 1: 1,2 வசனங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.

கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் மக்களின் தொகையை பேர்பேராக எண்ணச் சொல்லுகிறார். கர்த்தர் இப்படி இஸ்ரவேல் மக்களின் தொகையை எண்ணச் சொன்னது, முதல் தடவையோ அல்லது கடைசி தடவையோ அல்ல! அவர்களை வம்சம் வம்சமாக, குடும்பம் குடும்பமாக, தலை தலையாக எண்ணும்படி கட்டளையிட்டார்.

வனாந்தரத்தில் கால்நடையாக நடந்த மக்களை சீராக வழிநடத்த இந்த குடிமதிப்பு உதவியிருக்கும் என்பது வேதகம வல்லுநர்களின் கணிப்பு.

இதில் ஒரு காரியம் என் உள்ளத்தை கவர்ந்தது! கர்த்தர் மோசேயை நோக்கி, சுமாராக எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கு பார் என்று சொல்லியிருந்தால், சுமாராக 2 இலட்சம் பேர் அல்லது சுமாராக எண்பதாயிரம் பேர் இருப்பார்கள் என்று மோசேயும் தோராயமாக சொல்லியிருப்பான். ஆனால் கர்த்தர் கேட்டதோ தோராயமாக அல்ல, அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” என்றார்.

உதாரணமாக, யூதா கோத்திரத்தாரின் எண்ணிக்கை, இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானுறு பேர் என்று (எண்:2:9 ) வாசிக்கிறோம்.

சகல தலைகளையும் பேர்பேராக எண்ணும்படி கட்டளையிட்ட தேவனுக்கு, ஒவ்வொரு தனி மனிதனும் முக்கியம். ஒரு சபையில் எத்தனை பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு தேவையில்லை! ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் எத்தனை பேர் கை தூக்கினார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு முக்கியமில்லை! நானும் நீயும் அவருக்கு முக்கியம்!

ஏதோ ஒரு திருச்சபையில், ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து விட்டு செல்கிறாயா? ஒரு கூட்டத்தின் மறைவில் நீ யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தர் உன் தலையை எண்ணியிருக்கிறார்! நீ தேவனுடைய பார்வையில் விசேஷமானவன்!

உன் தலையை மட்டுமல்ல “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள்: அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு:10:30 என்று நம் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்.

இயேசு கிறிஸ்து உன்னை நேசிப்பதால் நீ அவருக்கு விசேஷமானவன்! யாரோ ஒரு பரிசுத்தவான் எழுதியதைப் போல ”இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் வாழாதது போல அவர் உன்னையே காண்கிறார்! உன்னையே நேசிக்கிறார்!”

நீ அவரை நேசிக்கிறாயா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com