Tag Archive | எத்திரோ

மலர் 6 இதழ் 356 பெரியவர்களின் ஆலோசனையை உதறாதே!

யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்………

18:24  மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.

மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம்.

யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த மறுநாள் காலை முதல் மாலை வரை மோசே ஜனங்களை  நியாயம் விசாரித்ததை எத்திரோ கவனித்துக் கொண்டிருந்தான்!

இதைப் பற்றி மோசேயிடம் விசாரித்தபோது அவன் ஜனங்களுக்கு யாதொரு வழக்கு உண்டானால் அவர்கள் என்னிடத்தில் வருகிறார்கள், நான் அவர்களுக்கு நியாயம் விசாரித்து, தேவ கட்டளைகளை தெரிவிக்கிறேன் என்றான்.

இதைக்கேட்ட எத்திரோ மோசேக்கு ஒரு ஆலோசனை கொடுத்து, தேவனுடைய ஊழியக்காரனான அவனுடைய வேலை தேவனுடைய சமுகத்தில் காத்திருப்பது என்பதையும், நல்ல திறமையான தேவனுக்கு பயந்த  மனிதரை தேர்ந்தெடுத்து அவர்களை ஆயிரம் பேர்களுக்கும், நூறு பேர்களுக்கும், ஐம்பது பேர்களுக்கும், பத்துபேர்களுக்கும் அதிபதிகளாக ஏற்படுத்தவேண்டும் என்பதையும் அறிவுறித்தினான்.

இந்த பகுதியில் நாம் முக்கியமான ஒரு காரியத்தைப் பற்றி படிக்கிறோம். யாருக்கும் ஆலோசனை கொடுப்பது சுலபம் தான் ஆனால் அதை எப்படி, அவர்கள் மனம் புண்படாமல் கொடுக்க வேண்டும் என்று எத்திரோவிடம் கற்றுக் கொள்வோம்.

முதலாவதாக, எத்திரோ மோசேயிடம் ‘ நீ நடந்து கொள்வது தவறு’ என்றோ, அல்லது ‘முட்டாள்தனமான காரியத்தை செய்கிறாய், காலை முதல் மாலை வரை இந்த ஜனங்கள் முன்னால் உட்கார்ந்திருந்தால் உன் குடும்பம் என்ன ஆகும்’ என்றோ கடிந்து பேசவில்லை.

மாறாக அவன் மோசேயிடம் பரிவாக “மோசே நீயும் உன்னோடே இருக்கிறவர்களும் தொய்ந்து போவீர்கள். உன்னால் இந்த பாரத்தை சுமக்க முடித்து” என்று பேசுவதைப் பார்க்கிறோம்.

அநேக நேரங்களில் நாம் ஆலோசனை கொடுக்கும்போது, கேட்கிறவர்களின் செவி கிழியும்படி கத்தி, அவர்கள் காதுகளில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ள செய்கிறோம். எத்திரோ அப்படி செய்யவில்லை, அவன் மோசேயின் நலனில் அக்கறை காட்டினான்.

இரண்டாவது எத்திரோ, மோசே தேவனுடைய சமுகத்தில் அதிக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்று உணர்ந்தான். மோசே தேவனிடமிருந்து ஒரு விசேஷ அழைப்பை பெற்ற தேவ மனிதன், ஆதலால் அவன் தேவனிடம் காத்திருந்து, அவருடைய கற்பனைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான், அவன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்பதை மோசேக்கு விளக்கி காட்டினான்.

மூன்றாவது, எத்திரோ மோசேயிடம் நீ செய்வதை நிறுத்திவிடு, யாரோ எப்படியோ போகட்டும் என்று கூறவில்லை. இப்படி செய்யாமல் எப்படி மாற்றி செய்தால் பலன் இருக்கும் என்று விளக்குகிறான். ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் ஏற்படுத்தும்படியான உயர்ந்த ஆலோசனையை சொல்லுகிறான்.

தக்க சமயத்தில் கொடுக்கப்படும் நல்ல ஆலோசனையைவிட உயர்ந்த பரிசு இந்த உலகில் எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்!

 வேதம் கூறுகிறது, மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான் என்று.

நம் குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கும் குணம் உண்டா என்று சிந்தித்து பார்ப்போம். மாமனாரை மதித்து அவர் வார்த்தையின்படி செய்கிறவர்கள் நம்மில் எத்தனைபேர் உண்டு?

 எத்திரோவின் ஆலோசனை மோசேயின் வாழ்க்கையை நிர்மூலமாக்கவில்லை, அவன் குடும்பத்தை கட்ட உதவியது. பெரியவர்களின் ஆலோசனையை உதறித்தள்ளாதே! அவை உன்னை அழிக்காது!

 நீதி: 15:23 “ மனுஷனுக்கு தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்! ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது”.   

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்!

 

யாத்தி: 18: 5 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….”

நாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி படிக்கும் போது பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம்.  

மோசேயின் மனைவியாகிய சிப்போராள் ஒரு அருமையான பெண் மாத்திரமல்ல, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவளும் கூட. அவளும் அவள் தகப்பன் எத்திரோவும் மோசேயின் வெற்றிக்கு பின் நின்றவர்கள்!

மோசே எகிப்தில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் இருந்தபோது எகிப்தியன் ஒருவன் ஒரு எபிரேயனை சித்திரவதை செய்வதைப் பார்த்து, அவன் மேல் கோபப்பட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனைக் கொலை செய்தான். நாம் மறைவிடத்தில் செய்யும் தவறையும் பார்க்கிற தேவன், அவன் சட்டத்தை கையில் எடுத்து எகிப்தியனை தண்டித்ததை நிச்சயமாக விரும்பவில்லை. அதனால் அவன் எகிப்தை விட்டு ஓடி மீதியான் தேசத்தில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. கர்த்தர் அவனைக் கைவிடாமல், மீதியான் தேசத்தில், எத்திரோவின்  குடும்பத்தில் அவனுக்கு அன்பையும், அரவணைப்பையும், ஒரு மனைவியையும், பிள்ளைகளையும் அமைத்து கொடுத்தார்.

நம்மை சிப்போராளின் இடத்தில் வைத்து கொஞ்சம் சந்தித்து பாருங்கள்! நாம் எகிப்திய ராஜ குமாரன் என்று நினைத்தவன், திடீரென்று நம்மிடத்தில் நான் எகிப்தியன் இல்லை, கொலை செய்து விட்டு தப்பி ஓடிவந்த எபிரேயன் என்றால் நமக்கு எப்படியிருக்கும்?

அதுமட்டுமல்ல, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆன பின்னால் ஒருநாள், நான் எரியும் முள் செடியில் கர்த்தரைப் பார்த்தேன் அவர் என்னை எகிப்த்துக்கு திரும்பிப் போய் பார்வோனிடமிருந்து என் ஜனத்தை மீட்க சொல்கிறார், புறப்பட்டு நாம் போகலாம் என்றால், இவனுக்கு என்ன ஆயிற்று? ஏதாவது குடித்து விட்டு புலம்புகிறானா என்று தானே நினைப்போம்.

இந்த சம்பவங்களை நாம் வேதத்தில் வாசிக்கும்போது, அதில் இடம் பெற்றவர்களும் நம்மைப் போல சாதாரண மக்கள்தான், இந்த சம்பவம் நடந்த போது அவர்களும் இதைக்குறித்து முடிவு எடுக்க திணறிதான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம்  நமக்கு உதிப்பதில்லை. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னுடைய பிள்ளைகளோடு, எகித்துக்குள் போய், பார்வோனால் கொலைக் குற்றத்துக்காக தேடப்படுகிற குடும்பம் என்று முத்திரை குத்தப்பட நிச்சயமாக சரி என்று சொல்லியிருக்க மாட்டேன்.

யாத்தி4: 18 ல் மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் போய் , உண்மையான காரணத்தை சொல்லாமல், தன் சகோதரரை எகிப்தில் பார்க்க போவதாக பொய் சொல்லி விடை பெறுகிறதைப் பார்க்கிறோம். எத்திரோவும் அவனை, உண்மையறியாமல் சமாதானத்தோடே போ என்று அனுப்பி வைக்கிறான்.

மோசே தன் மனைவி, பிள்ளைகளோடு எகிப்த்துக்கு போகும் வழியில் கர்த்தர் இடைப்பட்டு அவனுடைய கீழ்ப்படியாமையினால் அவனைக் கொல்லப் பார்த்தார். சிப்போராளின் கீழ்ப்படிதல் அவனைக் காப்பாற்றியது.

இந்த பயங்கர சம்பவத்துக்கு பின் நான் அங்கு இருந்திருந்தால், ‘மோசே நீர் தேவனுக்கு கீழ்ப்படிவதைக் குறித்து எனக்கு பெருமையாய் இருந்தாலும், எகிப்தில் நமக்கு எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை நாம் சிறைக் கைதிகளாகலாம் அல்லது அடிமைகளாகலாம். நானும் பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பிப் போகிறோம், நீர் நாங்கள் வரலாம் என்று சொல்லி அனுப்பும்போது வருகிறோம்’ என்றுதான் கூறியிருப்பேன்.

அங்கும் அப்படித்தான் நடந்தது என்று நினைக்கிறேன். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத்தான் அது இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, மோசேக்கு கர்த்தர் கொடுத்த பெரிய பொறுப்பு அவனுடைய முழு நேரத்தையும், பெலத்தையும் கொடுக்க வேண்டியது என்று அந்த குடும்பம் உணர்ந்து, சிப்போராளும், பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பி எத்திரோவுடன் தங்கினர்.

பின்னர் என்ன நடந்தது என்று இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம். கர்த்தர் செய்த அற்புதமான வழிநடத்துதலைப் பற்றி கேள்விப்பட்ட எத்திரோ, சிப்போராளோடும், மோசேயின் இரண்டு குமாரரோடும் மோசே இருந்த பர்வதத்துக்கு வந்து சேர்ந்தான்.

யாத்தி:18 ல் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்த போது இருந்த மகிழ்ச்சியைப் பற்றி கூறுகிறது. மோசே கூடாரத்தை விட்டு வெளியே சென்று தன் மாமனாரை முத்தம் செய்து வரவேற்கிறான். பின்னர் அவனை கூடாரத்துக்குள் அழைத்துவந்து கர்த்தர் செய்த எல்லா அதிசயங்களையும் பற்றி கூருகிறான். அந்த இடத்திலேயே எத்திரோ , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை  விசுவாசித்தான் என்று பார்க்கிறோம்.

இதைப் பற்றி நாம் தொடர்ந்து படிக்குமுன், சிப்போராளின் குடும்பத்தினர் மோசேயிடம் காட்டிய பரிவும், அன்பும், அக்கறையும், பின்னர் அவனை புரிந்து கொண்டு தேவனுடைய காரியமாய் அனுப்பி வைத்ததும் நம் மனதில் தங்குகிறதல்லவா?

ஒருவனின் வெற்றிக்கு பின்னணியே அவன் குடும்பம் தான்.

 
உங்கள் குடும்பம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அவரவர் பணியில் சிறந்து விளங்க ஒத்துழைக்கும் குடும்பமா? குடும்ப நலனை மனதில் கொண்டு எந்த முடிவையும் எடுக்கும் குடும்பமா?

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

ஜெபக்குறிப்புகள் இருந்தால் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.