Tag Archive | ஐசுவரியவான்

இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!

2 சாமுவேல் 12: 4  அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில் வந்தான் என்று இந்தக் கதையில் கூறப்படவில்லை. ஆனால் அவனுக்கு உணவு தேவைப்பட்டது.

என்ன கொடூரம் இது! அந்த வழிப்போக்கனுக்கு உணவு சமைக்க தனக்குண்டான அநேக ஆடு மாடுகளிலிருந்து ஒன்றை அடிக்க மனதில்லாமல், அந்த ஏழையுடைய அன்புக்குரிய ஆட்டுக்குட்டியை அடித்து சமைக்கிறான் என்று பார்க்கிறோம். எப்பொழுது அந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ண வேண்டும் என்று தன் மனதில் முடிவு செய்தானோ அப்பொழுதே அது தன்னுடைய ஆட்டுக்குட்டி அல்ல, மாற்றானுடையது என்றும் முடிவு செய்து விட்டான்.

அவன் அந்த ஏழையுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து அடித்தான். வேதம் நமக்கு கூறுகிறது இதைத்தான் தாவீது உரியாவுக்கு செய்தான் என்று. உரியாவை யுத்தத்தில் முன்னிலையில் நிறுத்தி, மற்றவர்களை பின்வாங்க செய்து அவனை படுகொலை செய்தான்.

நான் முதலில் நாத்தான் ஒரு கதையோடு தாவீதிடம் வந்த போது, அது தாவீது பத்சேபாளை தனக்கு சொந்தமாக்கியதுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தக் கதையின் அம்சமே தாவீது உரியாவை தந்திரமாக யுத்தத்தில் படுகொலை செய்ததுதான் என்று இப்பொழுத்தான் புரிந்து கொண்டேன்.

பத்சேபாள் கர்ப்பவதியான செய்தி கேட்டவுடனே தாவீதிற்கு இருந்த ஒரே பிரச்சனை அவளுடைய கணவன் உரியா தான்.  ஆதலால் அவனை அடித்து கொலை செய்த தாவீது அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் பத்சேபாளைத் தன் மனைவியாக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தான்.

நாம் நம்முடைய நடத்தையைப் பற்றி கவனித்தால் நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் நம் கவனத்துக்கு வரும். ஆனால் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் எண்ணங்கள் தான். தாவீது பத்சேபாளை தன் அரண்மனைக்கு அழைத்து வந்தது, ஏதோ துக்கத்தில் இருந்த ஒரு விதவைக்கு ஆறுதல் கொடுக்க அல்ல! யுத்தத்தில் கணவனை இழந்த பத்சேபாளின் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்க அல்ல! கர்த்தர் தாவீதின் உள்ளத்தை அறிவார்!  அவன் இருதயத்தின் எண்ணங்களையும், எண்ணங்களின் தோற்றங்களையும் அவர் அறிவார்!

அதனால் நாத்தான் தாவீதிடன் கர்த்தர் அவன் இருதயத்தை அறிவார் என்று ஞாபகப்படுத்தத்தான்  வந்தான்.

ஒரு நல்ல மரத்திற்கு அதின் வேர் எப்படியோ அப்படித்தான் நம் இருதயத்தின் எண்ணங்களும்!  கெட்ட எண்ணங்கள்  நம்முடைய ஆத்துமாவிற்கு விஷம் போன்றது! கர்த்தர் உன்னுடைய உள்ளத்தின் ஆழத்தை அறிவார்! உன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் எண்ணத்தையும் அறிவார்! ஜாக்கிரதை!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 739 இரக்கமுள்ள இதயம்!

2 சாமுவேல் 12: 3   தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. 

வேதம் எனக்கு மிகவும் பிரியமான புத்தகமாயிருப்பதின் காரணங்களில் ஒன்று வேதத்தில் காணும் நிஜ வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான்! ஏனெனில் அன்று அந்த நிஜ வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் இன்று நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கின்றது அல்லவா?

முதன் முதலில் நாம் காயீன், ஏபேல் என்ற இரண்டுபேருடைய  மாறுபட்ட  வாழ்க்கையைப்  பார்த்தோம். பின்னர் ஏசா, யாக்கோபு என்ற இரண்டு மாறுபட்ட இரண்டு நபரைப் பார்த்தோம். ஆகார், சாராள் மற்றும் லேயாள், ராகேல் என்ற மாறுபட்ட பெண்களையும் கூட பார்த்தோம். இந்த மாறுபட்ட குணங்கள் உள்ளவர்களைப் பற்றி நாம் ஒப்பிட்டு  படிக்கும்போது ஒளிந்திருக்கும் நம்முடைய   குணம் வெளிச்சத்தில்  தெரிகிறது அல்லவா?

அதனால் தான் கர்த்தராகிய இயேசுவும் சில உவமைகளை ஒப்பிட்டு நாம் பரலோகத்தையும் பூலோகத்தையும் பற்றிய உண்மைகளை தெளிவாகக் கூறினார். புத்தியுள்ள கன்னிகை, புத்தியில்லாத கன்னிகை, கற்பாறையின்மேல் கட்டிய புத்தியுள்ளவன், மணலின்மேல் கட்டிய புத்தியற்றவன் என்ற உவமைகளை நாம் மறக்கமுடியுமா? அதுமட்டும் அல்ல கர்த்தராகிய இயேசு, ஒரு பணக்காரனையும் அவனுடைய வாசலில் இருந்த ஒரு ஏழை லாசருவையும் பற்றி கூட ஒப்பிட்டு கூறியதை மறக்க முடியாது.

இங்கு நாத்தானும்ஐ, அநேக ஆடுமாடுகள் வைத்திருந்த ஐசுவரியவானுக்கும், ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த தரித்திரனுக்கும்  உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு பேசுகிறான்.

இன்றைய வேதாகமப்பகுதியில் நான் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பற்றி படிக்கும்போது என் உள்ளம் நெழ்ந்தது!  ஐசுவரியவானுடைய ஆடுமாடுகள் மந்தை மதையாயிருந்தன! ஒருவேளை ஒரு காட்டு மிருகம் வந்து ஒரு ஆட்டை தூக்கிவிட்டாலும் அங்கு மந்தையாக பல ஆடுகள் இருந்தன. ஆனால் தரித்திரனோ ஒத்தை ஆடுதான் வைத்திருந்தான். அது ஒரு பெண் ஆட்டுக்குட்டி ஏனெனில் அது அவனுக்கு மகளைப் போல இருந்தது என்று வேதம் சொல்கிறது. அவனுடைய வீட்டின் சொத்து அந்த ஆட்டுக்குட்டி.  அடிக்கப்படுவதற்காக வளர்க்கப்பட்ட ஆட்டுக்குட்டி அல்ல அது! ஒரு இரக்கமுள்ள தயவுள்ள மனிதன் தான் இப்படியாக  ஒரு ஆட்டுக்குட்டியை வளர்க்க முடியும் என்பது என்னுடைய எண்ணம் அதுதான் உண்மையும் கூட. அப்படியானால் இந்த கதையில் சொல்லப்பட்ட தரித்திரன் மிகுந்த இரக்க குணமுள்ளவன்!

கர்தருடைய இரக்கமுள்ளவராக இருப்பது போல நாமும் இரக்கம் காண்பிக்கும்போதுதான் நாம் அவருடைய குணாதிசயத்தை இந்த உலகத்துக்கு காட்ட முடியும். இரக்கமும் தயையும் இருக்கும் இடத்தில் மன திருப்தியும்,சந்தோஷமும் இருக்கும்!

இந்தக் கதையை நாம் தொடருமுன் இன்று உன்னுடைய இதயத்தில் இரக்கமும், தயையும் காணப்படுகிறதா என்று சிந்தித்து பார்!  அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறாய் என்று சற்று யோசி?

நம்மை சுற்றி எவ்வளவு மக்கள் தேவையில் வாழ்கிறார்கள்? நாம் எப்படி உதவி செய்கிறோம்?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்