Tag Archive | கேடகம்

இதழ்: 792 விசுவாசத்தின் பலன் !

2 சாமுவேல் 14: 17, 21  ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்….

அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான்.

வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய வார்த்தைக்கு இணங்கி ஆபிரகாம் தன் குடும்பத்தை இடம் பெயர்த்துக் கொண்டு வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி புறப்படுகிறார். அங்கு அவருடைய குடும்பம் கடலின் மணலைப்போல பெருகுகிறார்கள்.

அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி

ஆபிராமே நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.  ( ஆதி 15:1)

ஆபிரகாம் தன்னுடைய குடும்பத்தை தேவனாகிய கர்த்தரை நம்பி கானானை நோக்கி வழிநடத்திய போது, கர்த்தர்தாமே அவனுக்கு பாதுகாப்பின் கேடகமாயினார் என்ன மகத்துவம்!

கர்த்தர் நம்மிடம் வந்து அவரே நமக்கு கேடகம் நாம் எதற்கும் அஞ்சவேண்டாம் என்றால் எப்படியிருக்கும்!

உன்னை பாதித்துக்கொண்டிருக்கும் அந்த இருதயத்தை, அல்லது அந்த சிறுநீரகத்தை, அல்லது மூச்சுக்குழாயை,  அவரே பாதுகாப்பாக,  கேடகமாக அதை முற்றிலும் மூடி அதற்கு எந்தப்பழுதும் இல்லாமல் பாதுகாப்பேன் என்றால் எப்படியிருக்கும்!  ஆஹா!

ஆபிரகாமுக்குக் கொடுத்த அதே வாக்குத்தத்தம் உனக்கும் எனக்கும் சொந்தம் என்பதை மட்டும் நாம் எப்படி மறந்து விடுகிறோம்?

அதுமட்டுமா கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து நான் உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார் என்று பார்க்கிறோம். பலன் என்பது பெலன் என்று அர்த்தம் இல்லை. நாம் விளைவின் பலன் என்று சொல்வதைப்போன்றது! ஆபிரகாமுக்கு தேவனாகிய கர்த்தர் தாமே பலனுமாயிருப்பார் என்று சொல்கிறார். அவரே ஆபிரகாமுக்கு கிடைத்த வெகுமதி! அவர் வெகுமதி அளிப்பவர் மட்டுமல்ல! அவரே நமது வெகுமதியுமாவார்! இதனால் தான் வேதம் அவரை நமக்கு எல்லாவற்றுக்கும் போதுமானவர் என்று சொல்கிறது! நமக்கு எல்லா பலனையும் தர வல்லவர்!

இன்று இந்தக் காரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதின் காரணம் இன்றைய வேதாகமப்பகுதியில் இந்த புத்தியுள்ள ஸ்திரீயின் தைரியமான செயலுக்கு ராஜா வெகுமதியளிக்கிறார்! அவர் யோவாபை அழைத்து அப்சலோமை அழைத்து வர சொல்கிறார்! யாருமே நெருங்க பயந்த ராஜாவிடம், ராஜாவின் நெருங்கிய ஊழியனான யோவாபே செய்யத்துணியாத செயலை செய்து முடித்த  இந்த தெக்கோவா ஊரிலிருந்து வந்த ஸ்திரீயின் பணிக்கு பலன் கிடைத்து விட்டது!

நேர்த்தியாக செயல்படு!  தேவன் உனக்கு இன்னும் நேர்த்தியாக செய்யத் திறன் தருவார்!  கொடு! அப்பொழுது இன்னும் கொடுக்கும்படியான திறன் கிடைக்கும்! அன்பு காட்டு! இன்னும் அதிகமாக நேசிக்கும் உள்ளத்தை தேவன் உனக்குத் தருவார்! ஏனெனில் அவரே நமக்கு பலன்! அவருடைய பிரசன்னம் நம்மை நிரப்பும்!

விசுவாசம் என்பது நாம் காணக்கூடாதவைகளை நம்புதல்!  விசுவாசத்தின் பலன் என்பது நாம் நம்பினவைகளைக் காணுதல்!

உன்னுடைய விசுவாசத்துக்கு ஒருநாள் பலன் வரும்! ஆபிரகாமைப்போல கர்த்தரையே நம்முடைய பலனாக அடைவோம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 698 விசேஷித்த பெலன்!

2 சாமுவேல்8: 1-3, 5,6  தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து……. அவன் மோவாபியரையும் முறிய அடித்து……. ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா….தாவீது அவனையும் முறிய அடித்து…….தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு…..தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி நிறைய படிக்கிறேன்.  இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்ன காரணம் என்று யோசிக்கத் தோன்றியது. தாவீதின் காலத்தில் யுத்தங்கள் வானில் நடக்கவில்லை, தரையில் நடந்தது. இந்த யுத்தத்தை நடத்த அவர்கள் அநேக நாட்கள் மலைகளிலும், வனாந்தரத்திலும் செலவிட வேண்டியிருந்தது.

இந்த அதிகாரம் என் மனதை சரித்திரத்தில் தாவீது வாழ்ந்த நாட்களுக்கு இழுத்து சென்றது. என்னுடைய ஹீரோவான தாவீது சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றுத் திரும்புவதைக் கண்டு கண்கள் மலர்ந்தது. உலகத் தலைவன் போல் எல்லா நாடுகளையும் வெற்றி சிறந்தார் என் தலைவர். ஆனால் என்னுடைய தலைவனான தாவீது ஒன்றும் தனி மனித சேனை அல்ல! அவருக்கு உதவி இருந்தது! தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். இதுதான் உண்மை!

இதை நன்கு உணர்ந்த தாவீது தன்னுடைய சங்கீதங்களில், என் பெலனாகிய கர்த்தாவே, கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார், என் பெலனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் என்று கர்த்தர் தனக்கு பெலமாயிருந்ததைப் பற்றி எழுதுவதைப் பார்க்கிறோம்.

தாவீதின் வெற்றிக்கு காரணம் அவன் சத்தான உணவு உண்டது அல்ல என்று அவனுக்கு நன்கு தெரியும்.

இன்று உன்னுடைய போராட்டம் உன்னுடைய பெலத்தை மிஞ்சியது என்று பயப்படுகிறாயா? நம்முடைய அன்றாட வாழ்வின் போராட்டங்களில் கர்த்தரே நம் பெலனாயிருப்பார்! பயப்படாதே! உன்னுடைய அரணும், கோட்டையுமான கர்த்தரை நோக்கிப்பார்! தாவீதைக் காப்பாற்றிய அதே தேவன் உன்னையும் பாதுகாத்து உனக்கு வெற்றியளிப்பார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்