Tag Archive | சிற்றின்பம்

இதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை!

2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்

தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா அவன்!

அரண்மனைக்கு அன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின் நோக்கம் வெளிப்பட்டுவிட்டது.

தாவீது உச்சகட்ட கோபத்தில் இரக்கமே இல்லாமல் ஏழையின் ஆசைக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்ட அந்த பணக்காரன் மேல் மரண தண்டனையை வீசிக் கொண்டிருக்கும்போது அவன் செவிகளில்  தாவீதே நீயே அந்த மனுஷன் என்ற தெளிவான இன்னொரு குரல் கேட்டது,

வேதத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளை அணுகப் பலவிதமான வழிமுறைகளை உபயோகப்படுத்துகிறார். இன்று கூட கர்த்தர் என்னிடமும் உங்களிடமும் பேசத்தான் முயற்சி செய்கிறார்.  நாம் வழி விலகிப் போகும்போது நம்மைத் தம்மிடமாய் இழுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.

இந்தப் பகுதியை வாசிக்குக்போது என்னை நான் தாவீதின் இடத்தில் வைத்துப் பார்த்தேன். கர்த்தரின் தீர்க்கதரிசி என்னைப் பார்த்து உரத்த சத்தமாய், நீயே அந்த மனுஷி , இந்தக் கதை உன்னைப்பற்றியது தான் என்று சொன்னால் நான் எப்படி இருந்திருப்பேன். வெட்கத்தாலும், அவமானத்தாலும் கூனிக் குறுகி எங்காவது ஓளிந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஒளிந்து கொண்டதைப் போல!

அதுமட்டுமல்ல! என் முன்னால் தவறு செய்பவர்களை நான் எப்படி நடத்துவேனோ அப்படியே கர்த்தரும் என்னை நடத்துவார் என்றுதான் நினைத்திருப்பேன்.  என்னைத் தண்டனையோடு ஒதுக்கிவிட்டு, நான் மறுபடியும் அந்தத் தவறை செய்கிறேனா என்று கவனிப்பார் என்றும் நினைத்திருப்பேன்.

நாம் இன்று நடந்து கொள்வதுபோல தான் அன்று தாவீதும் நடந்தான். தன்னுடைய பணத்தாலும், புகழாலும், பதவியாலும் தனக்குத் தானே நன்மை செய்து கொள்ளமுடியும் என்று நினைத்தான். அதன்விளைவாக சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல மாட்டிக்கொண்டான்.

நம்முடைய ஆசைகளும், இச்சைகளும், ஒரு நிமிடத்தில் நாம் அனுபவிக்கத் துடிக்கும் சிற்றின்பங்களும் நம்மை தாவீதைப் போல சிலந்தி வலையில் சிக்கச் செய்கின்றன!  ஆனால் நம்மை அதிலிருந்து தப்புவிக்க நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை ஒரு நண்பனின் குரலிலோ, ஒரு போதகரின் குரலிலோ, அல்லது நம்மை நேசிக்கும் யார் மூலமாகவோ அழைக்கிறார்.

நாத்தான் தாவீதை அழைத்த சத்தம் தாவீதின் வாழ்வில் ஒரு மாறுதலைத் தந்தது! அவன் மறுபடியும் கர்த்தரின் அன்பை உணரச் செய்தது!

உங்களால் இன்று கர்த்தரின் குரலைக் கேட்க முடிகிறதா? எல்லாம் நன்மைக்கே! அவருக்குக் கீழ்ப்படி! சிக்கிய வலையிலிருந்து விடுதலை கிடைக்கும்! உன் வாழ்க்கை மாறும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?

1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில்  இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து…

ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள் வரைந்த முகத்துக்கு அம்மா என்று பேரிட்டனர், சிலர் அக்கா என்றும், சிலர் தாத்தா என்றும் வரைந்திருந்தனர். ஆனால் ஒரு சிறு பெண் மாத்திரம் தான் வரைந்ததற்கு பெயர் கொடுக்கவில்லை. அதைக்கண்ட ஆசிரியை, நீ யாரை வரைகிறாய் என்று கேட்டார். அந்த சிறுபெண் உடனே, கடவுளை வரைகிறேன் என்றாள். அதற்கு ஆசிரியை, கடவுளை யாரும் கண்டதில்லை, கடவுளின் முகம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, பின்னே எப்படி உன்னால் வரைய முடியும் என்றார். அதற்கு அந்த சிறுபெண், அப்படியானால் இனிமேல் எல்லோருக்கும் தெரியவரும்  என்று உடனே பதிலளித்தாள்.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் நாம் கூட பலருடைய முகங்களை கற்பனை பண்ணி வைத்திருக்கிறோம். ஓய்வு நாள் பாடசாலையில் கேட்ட கதைகளையெல்லாம் கற்பனையில் காண்பதில்லையா? ஏன் கடவுள் எப்படியிருப்பார், சாத்தான் எப்படியிருப்பான் என்றுகூட நமக்கு கற்பனையில் தெரியும். விசேஷமாக சாத்தான் என்றவுடன் நாம் ஒரு பயங்கரமானஉருவத்தைதான் நினைப்போம். ஆதியாகமம் 3:1 ல் சாத்தான் பயங்கர ரூபத்தில் வந்து ஏவாளை பயமுறுத்தவில்ல, மாறாக தந்திரமாய்ப் பேசக்கூடிய சர்ப்பமாய் வந்தான் அல்லவா?

சவுல்,பெலிஸ்தியரின் பாளயத்தைக் கண்டு அஞ்சி,  பொல்லாங்கைத் தேடி சென்றான் என்று பார்த்தோம். எந்தோரில் ஒரு அஞ்சனம் பார்க்கும் ஸ்தீரியிடம் சென்றான், அவளோ அவனிடம் மிகவும் கருணையாக நடந்து கொள்வதை இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். அவனுக்கு விருந்தே சமைத்துக் கொடுக்கிறாள் அந்தப்பெண்.

சவுலுக்கு அவ்வப்போது ஆலோசனைத் தேவைப்படும்போது யாரவது ஆலோசனைக் கொடுத்து, அவன் பயத்தை நீக்க வேண்டும். இது அவனுடைய பழக்கம். அதனால்தான் சாமுவேலைத்தேடி ஓடுவான். இப்பொழுது சாமுவேல் இல்லை, அதனால் இந்த ஸ்திரியிடம் வந்திருக்கிறான்.இங்கே சாத்தான் இந்தப் பெண்ணின் ரூபத்தில் சவுலின் சரீரப்பிரகாரமானத் தேவைகளை சந்திக்கிறான்.

இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கொடுக்கிறது. சாத்தான் என்றுமே நம்மை பயப்படுத்தும் ரூபத்தில் நம்மிடம் வருவதே இல்லை. நமக்குப் பிடித்த, நம்முடைய உடனடி ஆசைகளை நிறைவேற்றும் ரூபத்தில் தான் நம்மிடம் வருவான். நாம் ஏமாந்துவிட்டோம் என்று உணருவதற்குள் நாம் அவன் வலையில் சிக்கி விடுவோம்.

சோர்ந்து போயிருந்த சவுலுக்கும், அவனுடைய ஊழியருக்கும் நல்ல சாப்பாடோடு வந்தான் சாத்தான். அது அந்த வேளையின் தேவையாயிருந்தது. நாம் பலமாக இருக்கையில் நம்மை அணுகமாட்டான் சாத்தான். நம்முடைய பலவீன வேளையில்தான் நம்மை நெருங்குவான். நம்முடைய பலவீனத்தை நம்மைவிட அகிகமாக அறிந்தவன் அவன்!

இன்று யாருடைய ரூபத்தில் சாத்தான் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்? நவீனமயமாகக் கூட சாத்தான் வருவான்! தன்னை தேவதூதனைப் போல மாற்றி வந்து கூட உன்னை ஏமாற்றுவான்! சிற்றின்பங்களை அள்ளி அள்ளித் தருவான்!  அவன் வஞ்சிக்கிறான் என்று உணரும் முன்பே நீ அவன் வலையில் விழுந்துவிடுவாய்!

ஜாக்கிரதை!  ஒவ்வொருநாளும் உன்னை சுற்றி வேலியடித்து உன்னைக் காக்கும்படி கர்த்தரிடம் மன்றாடு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்