Tag Archive | ஜெபம்

இதழ்: 758 கேட்கப்படாத ஜெபம் உண்டா?

 2 சாமுவேல் 12: 16,18  அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளே போய் இராமுழுதும் தரையிலே கிடந்தான்.

ஏழாம்நாளில் பிள்ளை செத்துப்போயிற்று.

கேட்கப்படாத ஜெபம் உங்கள் வாழ்க்கையில் உண்டா? எனக்கு உண்டு!

1977 ல் என்னுடைய அம்மா  நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போது நானும் தாவீதைப்போலத்தான் அழுது, உபவாசம் பண்ணி, தரையில் விழுந்து கிடந்து ஜெபித்தேன். அப்பொழுது அம்மாவிற்க்கு 42வயதுதான். கர்த்தர் என்னுடைய ஜெபத்தை நிச்சயம் கேட்பார் என்று வாலிப பிராயத்தில் இருந்த நான் விசுவாசத்தோடு இருந்தேன்.அந்த நாட்களில் கர்த்தரோடு அதிகமாக நெருங்கி இருந்த நான் பலருடைய தேவைகளுக்காக ஜெபித்திருக்கிறேன், பதிலும் பெற்றிருக்கிறேன்.  ஆனால் நான் அதிகமாக கெஞ்சிய ஒரே காரியம் அம்மாவுக்காகத்தான்,  அந்த என் ஜெபம் கேட்கப்படவேவில்லை!

கர்த்தர் நம்முடைய ஜெபத்துக்கு ஆம், இல்லை, காத்திரு என்று மூன்று விதமாக பதில் அளிப்பார் என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய எல்லா ஜெபத்துக்கும் ஆம் என்ற பதில் வர  வேண்டும் என்று நம் எல்லோருக்கும் ஆசை அல்லவா? நாம் விரும்பிய அல்லது எதிர்பார்த்த பதிலைத் தேவன் கொடுக்க வேண்டும் என்பதே நாம் ஜெபிப்பதின் நோக்கம்! கர்த்தர் இல்லை என பதில் கொடுத்தார் நமக்கு ஏற்றுக்கொள்ள எவ்வளவு கடினமாயிருக்கிறது!  காத்திரு என்றால் காத்திருக்க பொறுமை இல்லை!

நாத்தான் உன்னுடைய பிள்ளை சாகும் என்று சொல்லிய பின்பும் தாவீது அந்தப்பிள்ளைக்காக உபவாசித்து ஜெபிப்பதைப் பார்க்கிறோம்.  தாவீது மட்டும் அல்ல! பத்சேபாளும் ஜெபித்துக் கொண்டிருந்திருப்பாள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவளது பிள்ளை சாகும் என்ற தீர்ப்பு அவள் உள்ளத்தை சுக்கு நூறாக்கியிருக்கும். ஆனால் தாவீதும் பத்சேபாளும் விரும்பிய விதமாக இந்த ஜெபத்துக்கு பதில் கிடைக்கவில்லை.

நம்முடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்காதபோது நான் சரியானதைத்தானே கேட்டேன். நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே? உம்மால் முடியும் என்று விசுவாசித்ததால்தானேக் கேட்டேன் என்றெல்லாம் என்னைப்போல நீங்களும் புலம்பியிருக்கலாம்! ஆனால் நம்முடைய தேவனாகியக் கர்த்தர் நம்முடைய தேவைகளைப் பரலோகத்தின் கோணத்திலிருந்து பார்க்கிறார் என்பது அப்பொழுது நமக்குப் புரியாத ஒன்று.

நான் என்னுடைய வாழ்நாட்கள் முவதும் அவரையே நேசிக்கவும், அவரையே சார்ந்து வாழவும் எனக்கானத் திட்டங்களை வகுக்கிறார். இன்று எனக்கு அவர் என்னைக் கைவிட்டு விட்டதுபோலவும், என் ஜெபத்துக்கு செவி சாய்க்காதது போலவும் தோன்றும் ஒரு காரியம் நாளை என்னுடைய பரலோக வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையலாம்!

இன்று உன் ஜெபத்துக்கு பதில் வராமல் இருக்கிறதா? கலங்காதே? அன்பே உருவான உன் தேவன் அமைதியாய் இருப்பதுபோலத் தோன்றினாலும் அவர் உனக்கு நன்மையானதை செய்யும்படி கிரியை செய்து கொண்டிருக்கிறார்! அதைப்புரிந்து கொள்ளும் நாளிலே உன் உள்ளம் அவரை ஸ்தோத்தரிக்கும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

மலர் 5 இதழ் 308 எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள்!

1 சாமுவேல் 7:8 (இஸ்ரவேல் புத்திரர்) சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள்.

இருபது வருடங்கள்! கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப் போய் இருபது வருடங்கள்! பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது போதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர்! எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர்! தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும் தைரியம் இல்லாமல் அவர்கள் சாமுவேலை அணுகுகின்றனர்! அப்பொழுது சாமுவேல் கர்த்தரை நோக்கி அவர்களுக்காக வேண்டிக் கொண்டான், கர்த்தரும் மறுமொழி அருளிச்செய்தார் என்றுப் பார்க்கிறோம்.

சில நேரங்களில் நான், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்காக ஜெபிப்பேன் என்று கூறுவது உண்டு!ஆனால் ஜெபமே நான் செய்யக்கூடிய உதவிகளில் மிகச்சிறந்த ஒன்று என்று நான் உணர மறந்து விடுகிறேன்.

இன்று நாம் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் படுவதைப் பற்றி கேள்விப் படுகிறோம், அநேகக் கிறிஸ்தவர்கள் இன்று மிகுந்த பாரத்தோடு ஜெபிக்கக் கூட பெலனற்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களுக்காக ஜெபிப்பது நம் கடமையல்லவா? ஜெபத்தில் அவர்களை நாம் தாங்கும் போது, அவர்களுக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியை செய்கிறோம்.

நாம் ஜெபிக்கும் போது நம்முடைய தேவனைப் பற்றி நாம் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறோம், அவருக்கும் நமக்கும் எப்படிப்பட்ட உறவு உள்ளது என்பது விளங்குகிறது! ஜெபம் என்பது ஒருதலைப் பட்டப் பேச்சு வார்த்தை அல்ல! அவருடைய சத்தத்துக்கு நாம் செவிசாய்ப்பது மிகவும் அவசியம்.

இதை எழுதும்போது, ஜன்னல் வழியே வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களையும், மேகங்களுக்குள் ஒளிந்திருந்த நிலாவையும் கண்டவுடன், இவற்றை எட்டிப் பிடிக்க என்னால் கூடவே கூடாது ஆனால் என் அறையைப் பூட்டி என் பிதாவை நோக்கி நான் ஜெபிக்கும் போது வானத்தையும் பூமியையும் படைத்த தேவனை என்னால் நெருங்கி சேர முடியும் என்பதை என் உள்ளம் எனக்கு உணர்த்தியது.

உன் தினசரி வாழ்வில் ஜெபம் உண்டா? உனக்காகவும், எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டும் மற்றவர்களுக்காகவும் நீ ஜெபிப்பது உண்டா? தொடர்ந்து ஜெபி!

ஏறெடுக்கப்படாத ஜெபத்தை விட பதில் கிடைக்காத ஜெபம் எவ்வளவோ மேல்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்