Tag Archive | தாவீது பத்சேபாள்

இதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை!

 2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே …. உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்.

நான் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே இல்லை! சாதாரணமாய் நாம் யாரும் அந்த மலையில் ஏறிப் பார்க்க முடியாதக் காட்சிகளை அந்த வீடியோ கொண்டிருந்தது.

மனிதர்களே ஏற முடியாத இந்த மலைகளில் ஏறுபவர்களின் அனுபவம் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசித்து பார்த்தேன்!  இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது! கடக்க முடியாத மலைகளையும்  பள்ளத்தாக்கையும் நாம் கடந்து செல்லும்போது கிடைக்கும் அனுபவத்தைப் பற்றிதான்!

நீ சாகமாட்டாய் ஆனால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீடு திரும்பி விட்டான். தாவீது மனமொடிவால் செத்தவனைப்போல ஆகிவிட்டான். கர்த்தர் அவனுடைய பிள்ளையை அடித்தார்.

அந்த அருமையான சிறு குழந்தையை தன் வயிற்றில் சுமந்தது பத்சேபாள் தானே! குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே! கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே! அவளது முதல் குழந்தையின் இறப்பு அவளை எப்படி பாதித்திருக்கும்.  பெரும் மன வேதனையும், துன்பமும் பெரிய மலை போல நின்றன் பத்சேபாள் முன்.

இதைப் படிக்கும்போது நான் கவனித்த ஒன்று என்னவென்றால், கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்  என்றது.  கர்த்தர் பத்சேபாளை இன்னும் உரியாவின் மனைவியாகத்தான் பார்த்தார். அவள் தாவீதின் அரண்மனையில் இருந்தது கர்த்தரின் பார்வையில் ஒரு அதிக ஆசை வெறிப்பிடித்த ஒரு ராஜாவின் திருட்டு செயல் போலத்தான் பட்டது.

தாவீது தன்னுடைய பாவத்தை நினைத்து மனம் கலங்கினாலும் அதன் விளைவுகள் பின் தொடர்ந்தன. இங்கு நாம் மறந்தே போகிற ஒரே ஒரு காரியம், ஒரு தாயாக, ஒரு பெண்ணாக பத்சேபாளின் இருதயமும்  நொறுங்கிப் போயிற்று என்பதைத்தான்!

பத்சேபாளை தாவீது அழைத்து வர ஆள் அனுப்பிய போது நான் அங்கு இல்லை!  அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை! ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ? அதுவும்  எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது அவள் அனுபவிப்பது – தன்னுடைய பாவத்தால் மனமொடிந்து செத்தவனைப்போல இருந்த கணவன், கர்த்தரால் அடிக்கப்பட்டு உயிரிழந்த தன்னுடைய முதல் பிறப்பு!

இதைவிட பெரிய மலையை உங்கள் வாழ்க்கையில் பார்த்ததுண்டா?  மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நாம் கடக்கும்போது அவை கடினமாய்த் தோன்றலாம். ஆனால் அவை நம்மை விசுவாசத்தில் உறுதியாக்க, நம்மை அவருடைய வழிப்படுத்த,  கர்த்தர் எடுக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக்கூடாது!

இன்று ஒருவேளை பத்சேபாளைப்போல பெரிய மலையையும், பள்ளத்தாக்கையும் நீ கடந்து கொண்டிருக்கலாம்! கர்த்தர் உன்னை ஒருவேளை பொன்னை புடமிடுவது போல புடமிட்டுக் கொண்டிருக்கலாம்!

சோர்ந்து போகாதே! இது கர்த்தர் தாம் நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுக்கிற சிகிச்சை! 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 711 இஷ்டம்போல வாழும் வாழ்க்கை!

2 சாமுவேல் 11: … அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.

உனக்கு இஷ்டப்படி நீ செய்யலாம் என்ற சுதந்தரம் என்னுடைய இளவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மா, அப்பா, டீச்சர்ஸ், போதகர்மார்,  என்ற பலருடைய அட்வைஸ் கேட்டுதான் நடந்தோம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தங்களுடைய சொந்த வழியில் நடந்தவர்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களால் அவர்களுடைய குடும்பம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது!

எல்லா செயல்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு! அதுவும் யாரையும்பற்றி யோசிக்காமல் நாம் சுயமாக எடுக்கும் முடிவுகளுக்கு நிச்சயமாக பக்க விளைவுகள் உண்டு.

இங்கு தாவீது எடுத்த முடிவால் 5 பேர் பாதிக்கப் படுவதைப் பார்க்கிறோம்.

முதலாவது தாவீது தான். அவன் தான் இந்தத் திட்டத்தை வகுத்தவன். இரண்டாவது தாவீது பத்சேபாளைப்பற்றி விசாரிக்க அனுப்பிய ஆள். இவருக்குதான் தாவீதின் திட்டம் தெரியும். மூன்றாவது பத்சேபாளின் தகப்பன் எலியாம். நான்காவது பத்சேபாள். ஐந்தாவது அவளுடைய கணவன் உரியா.

1 நாளாகமம் 11:26,41 ல் தாவீதின் இராணுவத்திலிருந்த பராக்கிரமசாலிகளின் பட்டியலில் ஏத்தியனான உரியாவின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

தாவீது தன்னுடைய சுயமான வழியில் போட்ட இந்தத் திட்டம் அவனுடைய நம்பிக்கைகுரிய ஒரு இராணுவ வீரனின் மனைவியைப் பற்றியது. அவள் யாருடைய மனைவியாயிருந்தாலும் இந்தத் திட்டம் தவறுதான். ஆனாலும் அவனுடைய மிகவும் விசுவாசமுள்ள ஒரு பராக்கிரமசாலியின் இருதயத்தை ஈட்டியால் குத்த முடிவு செய்து விட்டான்.

வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்ற சில ஊழியக்காரர்கள் தவறு செய்து அவர்கள் பெயர் டிவியிலும், நியூஸ் பேப்பரிலும் வரும் போது நமக்கு எப்படி ஷாக்காக இருக்கிறது? அப்படிதான் தாவீதின் இந்த செயலும். எத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தான்! ஆனால் எப்படி இந்த தவறை திட்டமிட்டு செய்தான் என்று படிக்கும்போது நமக்கு சற்று அதிர்ச்சி தான் ஆகிறது.

ஒரு ராஜாவாக தான் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தனோ என்னவோ?

நம்முடைய நடத்தை என்பது நாம் முகம் பார்க்கும் ஒரு கண்ணாடி போன்றது. தாவீதின் நடத்தையை பிரதிபலித்த கண்ணாடியில் அதன் மூலம் அவன் குடும்பம், அவன் பிள்ளைகள், ஏன் அவனுடைய தேசமும் அடையப்போகிற விளைவுகள் பிரதிபலித்தன.

உன்னுடைய இஷ்டப்படி முடிவு எடுத்து நடந்து கொண்டிருக்கிறாயா? ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் உண்டு! இதன்மூலம் உன் குடும்பம் பாதிக்கப்படலாம்! உன் பிள்ளைகள் பாதிக்கப்படலாம்!

அதுமட்டுமல்ல!

நம்முடைய ஒவ்வொரு செயலும் நம்முடைய நித்திய வாழ்வை ஏதோ ஒரு விதத்தில் தொடுகிறது!  அது நம்முடைய பரலோக வாழ்க்கையை அழித்து விடக்கூடும்!  என் இஷ்டம் போல வாழுவேன் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று எண்ணி வாழாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்!

1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

நான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத்!  பின்னர் தாவீது  பத்சேபாள்!!!! உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் இருந்தன!

தாவீதின் வாழ்க்கை கிறிஸ்தவர்கள் கையில் பந்தைப்போல அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். தாவீதைப் பார்! அடுத்தவன் மனைவியை சொந்தமாக்கிக் கொண்டான் அவனைக் கடவுள் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று சொல்லவில்லையா என்று பலர் கூறுகின்றனர்.

அப்படி பேசுகிறவர்கள் ஒரு நிமிடம் கவனியுங்கள்!

கர்த்தர் தாவீது பாவம் செய்தபோது கைத்தட்டி இவன் என் இருதயத்திற்கேற்றவன் என்றாரா? இல்லவே இல்லை!

இன்று நாம் பார்க்கிற வசனத்தில் சாமுவேல் முதன்முறையாக சவுலிடம் அவன் ராஜ்யபாரம் நிலைநிற்காது என்பதைப் பார்க்கிறோம். அவனுக்குப் பதிலாக கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒருவனைத் தேடுவதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தாவீது தம்முடைய குடும்பத்தின் ஆடுகளையல்லவா மேய்த்துக்கொண்டிருந்தான்! அந்த நாட்களில் தாவீதின் உள்ளம் உண்மையில் தேவனை நாடிற்று, காடுகளில் இருந்த தனிமையான வேளைகளில் அவன் கர்த்தருடன் பேசினான். தேவனுடைய சித்தத்தை செய்ய நாடினான். சிறுவயதிலேயே கோலியாத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கர்த்தர் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் அவனுக்கு இருந்தது.

இன்று கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற வாழ்க்கை எதுவாக இருக்க முடியும்? குற்றம் செய்தால் சாக்குபோக்கு சொல்லும் வாழ்க்கை அல்ல! உண்மையாய் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் வாழ்க்கை! பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் வாழ்க்கை! ஒவ்வொருநாளும் அவரோடு நடக்க முயற்சி செய்யும் வாழ்க்கை.

தம் இருதயத்திற்கேற்ற ஒரு மனிதனைக் கர்த்தர் நமக்குள்ளும் தேடுகிறார்!அவரை உண்மையாய் வாஞ்சிக்கும் உன் உள்ளத்தை அவர் அறிவார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்