Tag Archive | தாவீது

இதழ்: 627 ஒருநொடியில் தோன்றிய ஒளி!

1 சாமுவேல் 23: 26 – 28 சவுல் மலைக்கு இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள். சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும், அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஓரு ஆள் சவுலிடத்தில் வந்து நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருவதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்.

மூர்க்கமான சவுலால் ஈட்டியால் எறியப்பட்டவன்! அவன் மனைவி மீகாளால் ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு தப்பி ஓடியவன். அவன் உயிர் நண்பன் யோனத்தானால் எச்சரிக்கப்பட்டு தலைமறைவானவன்! உயிரைக் காக்க மலைகளிலும், கெபிகளிலும் மரணக்கைதி  போல தப்பி ஓடி ஒளிந்து கொண்டிருந்தவன்!  இவன் தானே நம் தாவீது?

இங்கு உங்களுக்கும் எனக்கும் ஒரே ஒரு கேள்வி!!! இந்தத்  தாவீதைத் தானே சாமுவேல் தீர்கதரிசி, இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்? இல்லை! ஒரு சின்ன சந்தேகம் தான்!

ஒருகணம் யோசித்தேன்! எனக்கு கடவுள் இப்படி ஒரு பெரிய பதவியைக் கொடுத்துவிட்டு மலையிலும், கெபியிலும், பாலைவனத்திலும் என்னை ஓடவிட்டால் நான் என்ன செய்திருப்பேன்????

பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருந்த மோசேக்குக் கூட நாற்பது வருடங்கள் சீனாய் வனாந்திரத்தில் ஆடுகளை மேய்க்கும்படியாக பதவி உயர்வு கிடைத்தது.  அந்த நாற்பது வருடங்கள் தான் மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானானுக்குள் வழிநடத்தக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த பயிற்சி காலம்!

மோசேக்கு நடந்ததுதான் இப்பொழுது தாவீதுக்கு நடக்கிறது போலும்! ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பின், கர்த்தர் அவனுக்கு கொடுக்கும் பயிற்சி முகாம் தான் இந்தக் காடும், மேடும், கெபியும்!

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எப்படி செயல்படுகிறார் என்று இவர்களுடைய வாழ்க்கை நமக்கு விளக்கவில்லையா!

உன் வாழ்க்கை இன்று எப்படியிருக்கிறது? யாருமில்லாத வனாந்திரத்திலா? உன் பிரச்சனைகள் உன்னை கெபியிலடைத்து உள்ளனவா? உன் எதிரிகள் உன்னைத் தொடர்கின்றனரா?

சவுல் தாவீது இருந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டான். அவனும் அவன் மனிதரும் தாவீதை வளைந்து கொண்டனர். இத்தனை நாட்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஓடியபின் இப்பொழுது சவுலிடம் மாட்டும் தருணம் வந்து விட்டது.

நானாக இருந்தால், என்ன ஆண்டவரே இப்படி என்னைக் கைவிட்டுவிட்டீர்? ஏன் இப்படி செய்தீர் என்று கதறியிருப்பேன். ஆனால் தாவீது எந்த சந்தேகமுமில்லாமல் அமைதியாக கர்த்தருடைய சித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து நடந்தான்.

அங்கே அந்த நிமிடத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது! எங்கேயோயிருந்து வந்த ஒரு ஆள் சவுலிடம் பெலிஸ்தியர் தேசத்தின்மேல் படையெடுத்திருப்பதாக சொன்னான். அவ்வளவுதான்! சவுல் தாவீதை விட்டுவிட்டு ஓடிவிட்டான்!

ஒருநொடி நம்பிக்கையே இல்லாமல் இருளாகத் தோன்றியது! மறுநொடி நம்பவே முடியாதபடி ஒளி ஊடுருவியது!

கண்ணிமைக்கும் நேரத்தில் கர்த்தர் தாவீதுக்கு வர இருந்த ஆபத்தை மாற்றிப்போட்டார்! இன்றைக்கு உனக்கும் அந்த அற்புதத்தை செய்வார்!

தாவீது செய்ததெல்லாம் ஒவ்வொருநொடியும் கர்த்தரோடு தொடர்பில் இருந்தது மட்டும்தான்!  கேள்வி கேட்கவில்லை! கதறவில்லை! பயப்படவில்லை! ஏனெனில் கர்த்தர் அவன்பக்கம் இருந்ததை உணர்ந்தான்! நீயும் விசுவாசி! உனக்கும் வழி பிறக்கும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Advertisements

இதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்!

1 சாமுவேல் 22: 1, 2 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்.  அங்கே ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள். அவன் அவர்களுக்குத் தலைவனானான்.

தாவீது அதுல்லாம் என்ற கெபியிலே ஒளிந்து கொண்டிருந்தான். அங்கே தாவீதின் குடும்பம் அவனை சந்தித்தது என்று பார்த்தோம்.

இன்றைய வேத வசனம் சொல்கிறது அவனைசுற்றி ஒரு கூட்டமே இருந்தது என்று! நானூறு பேர்! தாவீதின் இன்னொரு குடும்பமாக மாறிய இவர்களின் பெயர், ஒடுக்கப்பட்டவர்கள்! கடன்பட்டவர்கள்! முறுமுறுக்கிறவர்கள்!

என்ன சுவாரஸ்யம்! நீ இன்று மேலே குறிக்கப்பட்ட நபர்களை வீட்டுக்கு கூட்டிவந்து அப்பா அம்மாவிடம், அல்லது மனைவியிடம் இவர்கள்தான் என் நண்பர்கள் என்றால் எப்படியிருக்கும்????  என்ன கிடைக்கும்????

அப்படியானால் இவர்களை ஏன் தாவீது சேர்த்துக்கொண்டான்?  அவர்கள் தாவீதிடம் பாதுகாப்பாக இருந்தது தான் காரணம்! யாரும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், யாரையும் பார்க்க முடியாதவர்கள், தாங்கள் யாருக்கும் தேவையில்லை என்ற நிலைக்கு வந்தவர்கள் தான் தாவீதை நாடி சென்றனர்.

தாவீதைக் கர்த்தர் தன்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒருவன் என்று ஏன் சொல்லியிருப்பார் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு! நாம் எல்லோரும் தாவீதைப் பிடித்துக்கொள்வது அவன் பத்சேபாளுடன் பாவம் செய்ததைத்தான். தாவீதுடைய பாவத்தை மன்னித்தது போல நம்மையும் மன்னிப்பார் என்பது நமக்கு ஆறுதலாக அமைவதால்தான்.

ஆனால் தாவீதுடைய இந்த அற்புதமான குணாதிசயத்தைப் பாருங்கள்!  ஜாதி மத வேறுபாடு இல்லை! வாழ்க்கையில் வெறுக்கப்பட்ட எல்லோரையும் ஏற்றுக்கொண்டு உதவும் மனப்பக்குவம்! ஊரில்  உன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையா தாவீது ஏற்றுக்கொள்வான்! இன்று நம்மில் எத்தனைபேருக்கு இந்த குணம் உண்டு?

கிறிஸ்தவர்களாகிய நமக்குள் எத்தனை வேற்றுமைகள்! நம்முடைய திருச்சபைக்குள்  ஜாதி வேறுபாடுகள் உண்டு அல்லவா!  ஏழை பணக்காரர் வேறுபாடுகள்?  நம்மை அறியாமலே சிலரை நாம் வேறுபடுத்தி பார்ப்பதில்லையா? அவர்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று நாம் கோடு வரைவதில்லையா?

இயேசு கிறிஸ்து இவர்களைத்தான் ‘எளியவர்களாகிய இவர்களுக்கு எதை செய்தீர்களோ’ என்று குறிப்பிட்டார்.

ஒருநாள் இயேசுவுடன் அநேக ஆயக்காரரும், பாவிகளும் அவரோடே பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக்கண்டு இவர் ஏன் பாவிகளோடு போஜனம் பண்ணுகிறார் என்றதற்கு இயேசு, பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார் என்று மத்தேயு 9: 10 -12 ல் வாசிக்கிறோம்.

தாவீதைப் போல நம்மை சுற்றியிருக்கும் நலிந்து, மெலிந்து, வாழும் ஒடுக்கப்பட்டோரை, ஏழை எளிய மக்களை வேறுபாடன்றி நேசிக்கும் இருதயம் நமக்கு இன்று உண்டா? நமக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் செல்வத்தை ஏழை எளியவரோடு பகிர்ந்து கொள்கிறோமா?

கர்த்தர் தாவீதின்மேல் பிரியமாயிருந்ததற்கு அவன் ஒதுக்கப்பட்டோரை நேசித்ததும் ஒரு காரணம் அல்லவா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 625 எதிர்பாராத நாட்டில்!

1 சாமுவேல் 22: 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய் மேவாபின் ராஜாவைப் பார்த்து; தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி,

நம்முடைய தேவனாகிய கர்த்தர்  நாம் செல்லும் எல்லா கரடு முரடான பாதையிலும் நம்மோடு இருப்பார், நாம் எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பாராத வேளையில் நம்மோடு இருந்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரால் கூடும் என்பதை இன்றைய வேத பாகம் அழகாகக் காண்பிக்கிறது.

தாவீது, சவுலுக்கு தப்பி அதுல்லாமென்னும் குகையில் ஒளிந்திருந்தான். அவனுடைய குடும்பத்தார் அதைக்கேள்விப்பட்ட போது அங்கே அவனிடத்தில் போனார்கள்.( 1சாமு:22:1) தாவீது இப்படி தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்ததால் அவன் குடும்பம் அவனைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கலாம். அதுமட்டுமல்ல, ஒருவன் இப்படி அரசரால் தேடப்படும் கைதியாக இருந்தால் முதலில் அவன் குடும்பம் கண்காணிக்கப்படுவது இன்று கூட நடக்கும் ஒன்றுதானே!

தாவீது இந்தப் பிரச்சனை தன் பெற்றோருக்கு உருவாகிறதை அறிந்து மோவாபுக்குப் போய் தன் தாயும் தகப்பனும் தங்கியிருக்க அடைக்கலம் கேட்பதைப் பார்க்கிறோம்.

மோவாப்? எதற்கு இந்த நாட்டுக்கு சென்றான் தாவீது? மோவாபியரோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் கூறியிருந்தாரே! அதைமீறி தாவீது எப்படி அங்கு சென்றான் என்றக் கேள்வி எனக்கு எழுந்தது!

ஆம்! ஆம்! தடை செய்யப்பட்ட நாடுதான்!

ஆனால் ஒருநாள் அந்த நாட்டின் பெண்ணான ரூத் தன்னுடைய மாமியாராகிய நகோமியிடம், ‘உம்முடைய தேவன் என் தேவன்’ என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொன்னதை கர்த்தர் அங்கீகரித்தார் அல்லவா!  இந்த மோவாபியப் பெண்ணான ரூத், இஸ்ரவேலனாகிய போவாசை  முறைப்படி திருமணம் செய்தாள். அவர்களுக்கு ஓபேத் என்ற குமாரன் பிறந்தான்.  அந்த ஓபேத் தான் தாவீதின் தாத்தா! ஓபேத்தின் மகன் ஈசாய் தான் தாவீதின் அப்பா!

அப்படியானால் தாவீதின் தகப்பன் வழியாக அவன் மோவாபியருக்கு சொந்தம் தானே! இப்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் வேண்டியபோது, அவர்கள் குடும்பம் ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவி செய்யக் கர்த்தர் மோவாபை என்றோ ஆயத்தம் பண்ணிவிட்டார்.

இந்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. எத்தனை அற்புதமான வழிநடத்துதல்! எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சமயத்தில் கர்த்தரின் உதவிக்கரம் அவர்களை வழிநடத்தியது!

உன் வாழ்க்கையிலும் கர்த்தர் இந்த அற்புதத்தை செய்ய முடியும். நீ ஒருவேளை இன்று மோவாபைப் போன்ற அந்நிய நாட்டில்  இருக்கலாம். இது என்னுடைய வீடு இல்லை! இங்கு எனக்கு பாதுகாப்பு உண்டா? நான் எவ்வளவு நாட்கள் இங்கு கஷ்டப்படவேண்டும், என்னை சுற்றிலும் எல்லாம் இருளாகத் தோன்றுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறாயா?

ஒவ்வொரு நாளும் உன் தகப்பனாகிய தேவனை நோக்கிப்பார்! நீ அவரை விசுவாசிப்பாயானால், அவரை முழுமனதோடு நபுவாயானால் அவர் மோவாபில் இன்று உன்னோடு இருப்பார். உன் இருண்ட வாழ்வில் ஒளிக்கதிர் வீசி உனக்கு பாதையைக் காட்டுவார்! நீ தவறாக எடுத்த உன்னுடைய கோணலான பாதை செவ்வையாகும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 624 நல்லதொரு நட்பு!

1 சாமுவேல் 20:42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம்.  கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும், உமது சந்ததிக்கும் நடு நிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய் நாமத்தைக் கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான்.

நல்ல நண்பர்கள் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லாதது போலத்தான்! இன்பத்தையும் துக்கத்தையும் பகிர நல்ல நண்பர்கள் தேவை என்பது நம்மில் அனைவருக்குத் தெரியும்.

தாவீதின் மனைவியாகிய மீகாள் அவன் தன்னைக் கொல்ல வந்ததாக அவளுடைய தகப்பனிடம் சொல்ல, இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தாவீதைக் கொல்லும்படி எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டி விட்டான்! தாவீதின் நிலை மிகவும் பரிதாபமாய்ப் போய்விட்டது. அவன் தன் துக்கத்தைப் பகிரவும், அவனுடைய இருதயத்தின் பாரத்தை இறக்கவும் அவனுக்கு ஒரு நல்ல  நண்பன் தேவைப்பட்டான்.

இந்த அதிகாரத்தை வாசித்தால் அப்படிப்பட்ட நல்ல நண்பனாக  தாவீதுக்கு இருந்தது தாவீதைக் கொலை செய்யத் தேடிய சவுலின் மகனாகிய யோனத்தான் என்றுத் தெரியும்.

சவுலின் அரண்மனையிலிருந்து அதிக தூரம் இல்லாத ஒரு சமவெளியில் யோனத்தான் தாவீதைக்  கனிவுடன்  பார்த்து , அன்பின் வார்த்தைகளைக் கூறி, அவனுக்கு நம்பிக்கையூட்டி, அவனுடைய இருதயத்தின் பாரத்தை குறைத்தான். அவன் தாவீதை தன்னுடைய உடன்பிறப்பை விட அதிகமாக நேசித்தான் என்று பார்க்கிறோம்.

அவர்கள் இருவரும் தங்களுடைய நட்பு தங்களுடைய சந்ததிக்கும் தொடரும் என்று கர்த்தரை  சட்சியாகக் கூறி பிரிந்தனர். ஆனால்  சரீரத்தில் பிரிந்தாலும்  இருதயத்தில்  பிரியவில்லை!

யோனத்தானைப் போன்ற ஒரு நல்ல நண்பன்  தாவீதுக்கு கிடைத்த அரியப் பரிசுதான். அப்படிப்பட்ட நண்பர்கள் நமக்கு இருப்பார்களானால் நாமும் கொடுத்து வைத்தவர்கள்தான்.

ஒரு பறவைக்கு கூடு  எப்படியோ, ஒரு சிலந்திக்கு வலை எப்படியோ அப்படித்தான் ஒவ்வொரு மனிதனுக்கும்  நட்பு என்பது!

ஒருநொடி நம்முடைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்போம்! நாம் கண்ணீர் விடும்போது நாம் சாய்ந்து கொள்ளத் தோள் கொடுக்கும் நட்பு,  நம்முடைய இருதயத்தின் பாரத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கி  யாராவது நம் வாழ்க்கையில் உண்டா? அல்லது நீ யாருக்காவது நல்ல நண்பராக உள்ளாயா?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், ‘ ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக்கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை’  ( யோவான் 15:13)

அவருடைய நட்பு விலையேறப்பெற்றது! எந்த நேரத்திலும் உன்னுடைய பாரத்தை அவர்மேல் இறக்கலாம்! அவர் மார்பில் சாய்ந்து உன்னுடைய சுக துக்கங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்! அவரை உன் நண்பராக ஏற்றுக்கொள்! உன் பாரம் இலகுவாகும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 623 ராமாவிலே நடந்த கதை!

1 சாமுவேல் 19: 19,20 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான். அப்பொழுது அவரகள் தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள். அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல்; தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

வேதத்தில் உள்ள சில கதைகள் நம் எல்லோருடைய மனதிலும் நின்றுவிடுகிறது. தானியேல் சிங்கத்தின் கெபியில் இருந்ததை மறப்போமா? அல்லது எஸ்தர் ராஜாத்தியின் கதையை மறப்போமா? ஆனால் இன்றைய வசனத்தில் உள்ள அருமையான கதை நம் நினைவில் தங்குவதேயில்லை!

தாவீதைக் காப்பாற்ற அவன் மனைவி மீகாள் ஜன்னல் வழியே இறக்கிவிட்டதைப் பார்த்தோம். ஆவேசமாக இருந்த தன் தகப்பனிடம் அவர் என்னைக் கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தினார் என்று பொய்யும் சொன்னாள். அது சவுலின் மூர்க்கத்தை அதிகரித்தது என்று பார்த்தோம். தாவீது எங்கேயிருக்கிறான் என்று உடனே கண்டுபிடிக்கக் கட்டளை கொடுத்தான்.

சவுலுக்கு பதில் கொண்டுவந்தனர் அவனுடைய சேவகர்கள்! தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று.

இந்த வேத பகுதியை பல தடவை நான் வாசித்திருந்தும் நான் ஒரு அருமையான காரியத்தை உணராதிருந்தேன்.  ஆம்! ராமாவிலே சாமுவேல் தீர்க்கதரிசி இருந்தார் என்பதுதான் அது. சாமுவேல் வாழ்ந்த ராமா தீர்க்கதரிசிகளின் பட்டணமாகவே மாறியிருந்தது! தாவீது சவுலின் கோபத்துக்குத் தப்பி ஓடி கர்த்தருடைய பிரசன்னம் குடிகொண்டிருந்த ராமாவிலே அடைக்கலம் புகுந்தான்.

தேவனுடைய வல்லமையை விசுவாசித்த கர்த்தருடைய மனிதர் வாசம்பண்ணிய ராமாவில் தன்னுடைய ஆவிக்குரியத் தகப்பன் சாமுவேலிடம் தங்க ஆரம்பித்தான்.

அதனால் என்ன நடந்தது பாருங்கள்! சவுலுடைய சேவகர்கள் அங்கு வந்தபோது  அவர்களும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்!  பாலாம் என்ற தீர்க்கதரிசி இஸ்ரவேலரை சபிக்கத் தன் வாயைத் திறந்தபோது அவர்களை சபிக்காமல் ஆசீர்வதித்தது போல தாவீதை சிறைபிடிக்க வந்தவர்கள் தீர்க்கதரிசிகளானார்கள். இது ஒருமுறை மட்டுமல்ல, இரண்டுமுறையல்ல, மூன்றுமுறை நடந்தது!

கடைசியில் தானே வேலையை முடிக்க எண்ணி ராமாவை நோக்கிப் புறப்பட்டான் சவுல். என்ன நடக்கிறது? அவனும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிக்கிறான். கர்த்தருடைய பிரசன்னம் நிரம்பியிருந்த இடத்தில் தாவீது என்ற கர்த்தருடைய பிள்ளைக்கு தீமை செய்ய நினைத்த சவுல் வல்லமையை இழந்துபோனான்!

இன்று உலகமே உனக்கு எதிராக இருப்பதாக நீ நினைக்கலாம். ஒருவேளை பணப்பிரச்சனையாகவோ, குடும்ப பிரச்ச்னையாகவோ, நோய்வாய்ப் பிரச்சனையாகவோ இருக்கலாம்! எனக்குத் தெரியாது! நீ எங்கேயும் போகமுடியாமல் ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கலாம்.

இன்று உனக்கு நான் ஒரே ஒரு ஆலோசனை சொல்லட்டுமா? தாவீது ராமாவுக்கு ஓடியதுபோல தேவனுடைய பிரசன்னத்துக்குள் அடைக்கலம் புகுந்து அங்கேயே தரித்திரு!

உன்னை அழிக்கவும், உன்னை சிறைப்பிடிக்கவும், நெருங்கும்  எல்லா பிரச்சனைகளும் உன்னை நெருங்க விடாமல் விழுந்துபோவதை உன் கண்கள் காணும்! தேவனுடைய பிரசன்னத்தில் சர்வ வல்லவரின்  வல்லமையினால் மூடப்பட்ட உன்னை உன் சத்துரு நெருங்கவே முடியாது.

தாவீதைக் கொல்ல வந்தவர்கள்  தீர்க்கதரிசிகளாகிய கதையை ஒருக்காலும் மறந்து போகாதே!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்!

1 சாமுவேல்: 19: 17  அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்ப அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி; என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

எனக்கு மீகாளை ரொம்ப பிடிக்குங்க! அவள் கணவனாகிய தாவீதை நேசித்தாள்! அவனுடடைய உயிருக்கு ஆபத்து வந்தபோது தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினாள்! தைரியமாக, துணிகரமாக முடிவு எடுத்தவள்!  எனக்கு இந்தப்பெண்ணின் குணம் நிச்சயமாகப் பிடிக்கும்.

ஆனால் நம் எல்லோரையும் போல இவள் வாழ்க்கையிலும் சில சரிவுகள் இருந்தன! தாவீதுக்குப் பதிலாக ஒரு சுரூபத்தைப் படுக்கவைத்து அங்கு வந்த எல்லா ஆண்களையும் அவன் வியாதியாயிருக்கிறான் என்று பொய் சொல்லி  ஏமாற்றிய அவள், பிடிபட்டு அவள் நாடகம் வெட்ட வெளிச்சமானவுடன் மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

ஏதாவது ஒரு காரியத்தில் ஒருதடவை நாம் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால், அது நம்மைத் தொடர்ந்து பொய் சொல்ல வைக்கும் என்பதை கவனித்திருப்பீர்கள் அல்லவா!

மீகாள் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்த சவுல் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டான்! அவள் இப்படி ஏய்த்தது ஏன் என்று சவுல் கேட்டதும் பொய்க்கு மேல் பொய்  சொல்ல ஆரம்பித்தாள்.

இப்பொழுது மீகாள்  என்னைப் போகவிடு நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று தாவீது சொன்னதாகக் கூறியப் பச்சைப்  பொய், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினது போல் பற்றியது. தான் சொன்னதை உண்மை என்று நிரூபிக்க மீகாள் அழுதும், பயந்ததுபோல நடித்தும் இருப்பாள். சவுல் அவள் பொய்யை நம்ப வேண்டுமே!

தன்னுடைய மகளையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறானே தாவீது! என்ன நெஞ்சழுத்தம்! இவனை நான் விடவே மாட்டேன் எப்படியாவது கொல்லுவேன் என்றுதான் சவுலின் நினைவுகள் ஓடியிருக்கும். பின்னால் சவுல் தாவீதை விரட்டி விரட்டி கொல்ல முயன்றதற்கு இதையும் ஒருக் காரணமாக வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒரே ஒரு பொய்! அதை மறைக்க இன்னொரு பொய்! இன்னொரு பொய்! பொய் ஒரு குடும்பத்தையே இரண்டாக்கிவிட்டது!

ஒரு பொய் சொல்லிட்டாபோதுங்க! அடுத்தடுத்தது தானா கோர்வையா வந்துடும்! அது கூட சகஜமாக வரும்! இது  நம்முடைய நாவின் அநீதியான செயல்!

ஒரு நிமிஷம்!  நீங்கள் யாரையாவது ஏமாற்ற பொய் சொல்லியதுண்டா? அதன் விளைவுகள் என்ன? அப்படி பொய் சொன்னபின் உங்கள் உள்ளுணர்வு  என்ன சொல்லிற்று? சற்று யோசித்து சொல்லுங்களேன்!

நீ யாரையாவது ஏமாற்ற ஒரு பொய்யை  சொல்லும்போது உன்னை சிக்கவைக்கும் சிலந்தி வலையை உனக்கே பின்னிக்கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்துபோகதே!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்!

1 சாமுவேல் 19:13 – 16  மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே , ஒரு வெள்ளாட்டுத்தோலைப் போட்டு, துப்பட்டியினால்  மூடி வைத்தாள். தாவீதைக்கொண்டு வர சேவகரை அனுப்பினபோது அவர் வியாதியாயிருக்கிறார் எனறாள். அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். சேவகர் வந்தபோது, இதோ சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

மீகாளை ஒரு தைரியசாலியான பெண்ணாக நாம் கடந்த வாரத்தில் படித்தோம். பெண்களுக்கு சமுதாயத்தில் எந்த இடமும் கொடுக்கப்படாத காலம் அது. அவள் தகப்பனாகிய சவுலுக்கு சொந்தமான ஒரு பொருள் போலத்தான் அந்த ராஜாங்கத்தில் வளர்ந்தாள். அங்கு ஆண்கள் எடுத்த எந்த முடிவையும் மாற்றவோ, எதிர்க்கவோ திராணியற்றவர்கள் பெண்கள்.

ராஜாவாகிய சவுல், தாவீதைக் கொல்லும்படி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும், சேவகர்களுக்கும் கட்டளையிட்டபோது, மீகாள் மிகவும் தைரியமான முடிவை எடுக்கவேண்டியிருந்தது.

அவள் தாவீதை ஜன்னல் வழியாக இறக்கி தப்புவித்ததுமல்லாமல், அவன் படுத்திருந்த படுக்கையில் ஒரு சுரூபத்தை படுக்கவைத்து,அதை ஒரு வெள்ளாட்டுத்தோலினால் மூடினாள் என்று பார்க்கிறோம். தாவீதைத் தேடி யாராவது வந்தால் அவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல ஏதுவாக்கினாள்.

மூர்க்கமாய் தாவீதைக் கொல்லத்தேடும் சவுலுக்கு எதிராக எடுத்த முடிவு அவளுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கக்கூடும். சவுல் கையில் ராஜா என்னும் அதிகாரம் இருந்ததை மறந்துவிடாதீர்கள்!

தாவீது வியாதியாயிருக்கிறான் என்று அவள் சவுலுக்கு சொல்லியனுப்பியபோது, அவனை படுக்கையிலேயே கொல்ல முடிவு செய்து தன்னுடைய சேவகரை அனுப்புகிறான் சவுல். இங்கேதான் மீகாளுடைய நாடகம் வெட்ட வெளிச்சமாகியது.

கட்டிலில் படுத்திருந்தது தாவீது அல்ல என்ற உண்மையை அந்த சேவகர் எந்த முகத்துடன் சவுலிடம் கூறியிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது!!!!

தைரியம் என்ற வார்த்தைக்கு பயத்தை வெல்லும் என்று மட்டும் அர்த்தம் அல்ல, அதற்கு ஆபத்து வரும்போது துணிவாக முடிவு எடுப்பது என்பதும் பொருந்தும். மீகாள் துணிகரமான முடிவை எடுத்து தாவீதைக் காப்பாற்றினாள்!

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் பாடு, நிந்தை, போராட்டம் மத்தியில் சுவிசேஷத்தை சொல்லும்படி தேவனுக்குள் தைரியம் கொண்டதாக ( 1 தெச: 2:1) ல் கூறுவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய தைரியம் கர்த்தரால் வந்தது.

அநேக வேதனைகளும், பாடுகளும் நம்மை சுற்றியிருக்கும் வேளையில் துணிகரமாக முடிவு எடுக்க நமக்கு தேவனாகிய கர்த்தரின் தயவு வேண்டும்.

ஒருவேளை தாவீது இந்த இரகசியத்தை தன் மனைவியாகிய மீகாளுக்கு கற்றுக் கொடுத்தானோ என்னவோ? தாவீது சொல்வதைப் பாருங்கள்!

கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

என்னை பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. (சங்: 18:31-32)

இன்று உனக்கு தேவனாகிய கர்த்தரின் பலம் தேவையா? அவர் உன்னோடு இருப்பாரானால் நீ எந்த இருண்ட சூழ்நிலையில் இருந்தாலும், ஒரு  நல்ல முடிவை நீ துணிவாக தைரியமாக எடுக்க உனக்கு உதவிசெய்வார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்