Tag Archive | தாவீது

இதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்!

1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.

சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன?

ஒருதடவை, இருதடவை அல்ல! சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழலில் அவள் தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்!

இன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின்  வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த  அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.

அவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும்  என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்கும்! சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா? அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.

நம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா?

என்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா?  பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை!  என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான்!  ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது!

மீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது! அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது! அவனைத் தன் தகப்பனிடமிருந்து  காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது!

உன் வாழ்க்கை எப்படி? நிச்சயமாய் பயம்  உண்டு! ஆனால்  பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Advertisements

இதழ்: 619 நண்பனின் உயிர் காத்த சாந்தகுணம்!

1 சாமுவேல் 19: 1-6  தாவீதைக் கொன்றுப்போடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். சவுலின் குமாரனாகிய யோனத்தானோ தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்….. யோனதான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி … தாவீதைக் கொல்லுகிறதினால் குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ் செய்வானேன் என்றான். சவுல் யோனத்தனுடைய சொல்லைக்கேட்டு அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டான்.

இன்னும் தாவீதைக் கொல்லும் வெறி சவுலுக்கு அடங்கவில்லை.  முதலில் தன் குமாரத்திகளை அடகு வைத்து கொல்ல நினைத்தான்! இப்பொழுது தன் குமாரன் யோனத்தானை ஏவுகிறான்.

சவுலின் குமாரன் யோனத்தான் அவன் தகப்பனைப் போல இல்லை. அவனுக்கு தாவீதின்மேல் பிரியம். அவன் தன் தகப்பனுடைய சதி திட்டத்தை தாவீதினிடம் எடுத்து சொல்லி ஒளிந்திருக்கும்படி கூறியது மட்டுமில்லாமல் தன் தந்தையிடம் தாம் இதைக்குறித்து பேசுவதாகவும் சொன்னான்.

யோனத்தானின் நடத்தை என்னை இங்கே மிகவும் கவர்ந்தது.

உன்னுடைய நல்ல நண்பனின் நட்பை விட்டுவிடும்படி  உன் தந்தை உன்னிடம் கூறினால் உனக்கு கோபம் வராதா? நீ கண்டமாதிரி வார்த்தைகளால் பேசிவிடுவாய் அல்லவா? இங்கே சவுல் தாவீதை கொன்றுவிடும்படியல்லவா கூறுகிறான். அவன் நண்பனாகிய யோனத்தானுக்கு எப்படியிருந்திருக்கும்!

யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலிடம் ஆர்ப்பாட்டமாய் பேசாமல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டாமல் , யோசித்து அவன் புரியும்படி மிருதுவான வார்த்தைகளால் உண்மையை எடுத்துக் கூறுவதைப் பார்க்கிறோம். ஒரு இளவரசனான யோனத்தான் இப்படி நிதானமாய், பொறுமையாய்  செயல்பட்டது ஆச்சரியப்படுத்தும் ஒரு காரியம் அல்லவா? ஒருவேளை அவன் அப்படி அடக்கமாய் சற்றும் யோசிக்காமல் பேசியிருந்தால் பின் விளைவு கொடியதாயல்லவா இருந்திருக்கும்!

சாந்தமான,  மென்மையான வார்த்தைகள் என்ற ஆயுதத்தை தரித்ததால் யோனத்தானுக்கு வெற்றி கிடைத்தது! அவன் நண்பன் தாவீது காப்பாற்றப்பட்டான்.

சாந்தம்,  மென்மை என்ற வார்த்தைகள் கோழைத்தனத்தைக் குறிக்காது. அவை கர்த்தரால் உபயோகப்படுத்தப்படும் வல்லமையான ஆயுதங்கள். அவற்றைக் கையாட நமக்குள்ளே தைரியம் வேண்டும். நம்மை சுற்றி அலைகள் வீசும்போது  சாந்தமாய் செயல்படுவது  சுலபமல்ல!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் குணநலன்களில் ஒன்றுதான் இந்த சாந்தமும், மென்மையும்.  இவற்றைதான் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.

உன்னுடைய வாயில் கடுமையான வார்த்தைகள் வரும்போது உன் குடும்பத்தில் உன் சாட்சி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்!

சற்றும் சிந்திக்காமல் பேசிய வார்த்தைகளின் பின்விளைவு எப்படியிருக்கும்?

யோனத்தானிடமிருந்து சாந்தமாய், பொறுமையாய், தாழ்மையாய், மென்மையாய் பேசக் கற்றுக் கொள்!

எத்தனைமுறை ஆத்திரத்தில் பேசிவிட்டு பின்னர் அதைக்குறித்து வருந்தியிருக்கிறாய்? ஆத்திரப்படுவதால் நாம் எதையும் அடையமுடியாது!

சாந்தகுணம் கிறிஸ்துவின் குணம்! அது இன்று உன்னில் பிரகாசிக்கிறதா?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 618 மகளின் நேசத்தை சதியாக்கின தகப்பன்!

1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு  சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி…

மீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது.

மீகாள் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் மீகாள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது தாவீதை கொன்றுவிட சவுல் நினைப்பது அவளுக்குத் தெரியாதா என்ன?

ஆனால் சவுலோ தாவீதைத் தன் மருமகனாக்கத் துடித்தான்! அவன் துடித்ததில் ஒரு சதி இருந்தது மீகாளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை!

மீகாளுடைய அப்பா தாவீதை எப்படியாவது தன்னுடைய மருமகனாக்கத் துடித்ததின் காரணம்  தன் பிள்ளைகளை தாவீதோடு வாழ வைப்பதற்காகவா? தாவீதை யுத்தத்துக்கு அனுப்பி பெலிஸ்தரின் கையினலால் சாகடிப்பதற்கல்லவா?

தாவீதின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை. ஆதலால் ராஜாவாகிய சவுலின் மகளை மணக்க வேண்டுமானால் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி தன்னை வல்லவன் என்று காண்பிக்க வேண்டும்!  அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம்! மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா? மீகாளுடைய காதலைக் கொண்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றலாம்  என்று எண்ணினான். காதலைக் கொண்டு கொல்ல சதி!

சவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சகல வல்லமைகளும் எடுபட்டுவிட்டது. ராஜாங்கம் அவனைவிட்டு விலகும் என்று சாமுவேல் சொல்லிவிட்டார். உள்ளே பயம், நடுக்கம், கோழைத்தனம் ஆனால் வெளியே அதைக் காட்ட முடியவில்லை. தன்னைவிட பேரும் புகழும் வாங்கும் தாவீதை வேறோடு அழித்துவிட நினைத்தான். எல்லோரும் அவனை நேசிக்கின்றனர் அவன் மேல் கைபோட முடியாது.  ஆதலால் தன்னுடைய குடும்பத்தின் பெண்களையும் அவர்களுடைய அன்பையும் அவனுடைய  பகடையாய் உபயோகித்தான். தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் தன் மனைவி, பிள்ளைகளிடம் மட்டும்தானே காட்ட முடியும்.

இது சில  குடும்பங்களிலும் நடப்பதுதானே!  சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள்  தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா?  வெளியே காட்டமுடியாத வீரத்தை வீட்டில் காட்டுவது மட்டுமல்ல, குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்துவதும் , அவர்களை கைநீட்டி அடிப்பதும், அவர்களுடைய அன்பை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவதும் கூட உண்டு!

இன்று சவுலைப் போல ஒரு கணவனோ அல்லது தந்தையோ உன் வாழ்வில் உண்டா? உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா? நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா? உன் உள்ளம் புண்பட்டு இருப்பதை கர்த்தர் காண்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்கள் புண்பட்ட உள்ளத்தை ஆற்றித் தேற்றுவார்! அவர் உங்களுக்கு சுகமளிக்கும்  தைலமாக இருந்து நீங்கள் புதுபெலத்தோடு காலூன்றி நிற்க அருள் செய்வார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்!

1 சாமுவேல் 18:17  சவுல் தாவீதை நோக்கி: இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன். நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலால் தாவீதைக் கொல்லமுடியவில்லை. அவனிடம் கர்த்தரின் ஞானம் இருந்ததால் சவுல் அவனைக்கண்டு பயந்தான் என்று படித்தோம் அல்லவா?

இப்பொழுது சவுல் ஒரு தந்திரமான திட்டம் தீட்டுவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். என்னத் திட்டம் அது? என் குமாரத்தியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன், அதற்கு பதிலாக நீ பெலிஸ்தருடன் யுத்தம் பண்ண வேண்டும் என்று சொல்கிறான்.  பெலிஸ்தருக்கு எதிரான யுத்தத்தில் தாவீது நிச்சயமாகத் தோற்றுப் போவான் என்று எண்ணி சவுல் தந்திரமாக இந்தத் திட்டத்தைத் தீட்டுகிறான்.

இங்கே என்ன நடந்தது என்றால் சவுலை மாமனாராக ஏற்றுக்கொள்ள தாவீது தயாராக இல்லை ஆதலால் ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம் என்று மறுத்துவிட்டான் இந்தப் புத்தியுள்ள வாலிபன்.( 18:18).

சவுல் என்ற தகப்பன் செய்தது எப்படிப்பட்ட காரியம் பாருங்கள்? தாவீதை பெலிஸ்தரின் யுத்தத்தில் கொல்லத் திட்டம் போட்டு அதற்குத் தன் மகளை உபயோகப்படுத்தத் துணிந்தான் அவன்.

வேதாகமத்தில்  தெபோராள், யாகேல், நகோமி, ரூத், ராகாப் போன்ற பெண்கள் தேவனாகியக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்  பட்டாலும், யெப்தாவின் மகளைப் போன்ற பலியாடுகளும் இருந்தார்கள். பெண்களின் வாழ்க்கை மலர் தூவியதாக இல்லவே இல்லை. காரணம் இஸ்ரவேல் மக்கள் கானானியரின் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டதுதான். கர்த்தர் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏற்படுத்திய திருமண பந்தம் மாறி, வேறே பெண்களையும் மணந்தனர். அதுமட்டுமல்ல அவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளையும் கூட மதிக்கவில்லை.

இங்கே இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தன்னுடைய குமாரத்தி  மேராவை அடகு வைக்கத் துணிந்ததும் அதே பட்டியலில் சேரும் அல்லவா! ஒருவனை கொலை செய்ய தன் மகளின் வாழ்க்கையை அல்லவா  உபயோகப்படுத்த நினைத்தான்  சவுல்!

இன்றைக்கும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய சுயநலத்துக்காக அடகு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். எத்தனை குடும்பங்களில் மூத்த பிள்ளைகளின் வாழ்க்கை இளைய பிள்ளைகளுக்காக பலியாக்கப்படுகிறது!

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருடைய பார்வையில்  நேர்மையாக  நடத்துகிறோமா? அல்லது நம்முடைய சுயநலத்துக்காக அவர்களை உபயோகப்படுத்துகிறோமா?

ஒருவேளை உன்னுடைய வாழ்க்கை மேராவின் வாழ்க்கையைப்போல இருக்கலாம்!  உன் குடும்பத்தின் லாபத்துக்காக நீ உபயோகப்படுத்தப்படுவதை நினைத்து வெளியே சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம்!

உன்னுடைய இன்றைய நிலை ஒருவேளை மேராவைப் போல இருந்தாலும்   நீ ஒருநாளும் கைவிடப்படுவதில்லை!  கர்த்தர் உன் அடைக்கலமும் உன் கோட்டையுமாயிருப்பார்!  உன் நம்பிக்கையும் சந்தோஷமும் அவரே! அவரைப்பற்றிக் கொள்! 

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 616 சாட்சி சொல்லவே வேண்டாம்!

1 சாமுவேல் 18:15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.

தாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்ததையும் அவன் புத்திமானாய் நடந்து கொள்வதையும் சவுல் கண்டு அவனுக்கு பயந்தான் என்று இன்றைய வசனம் சொல்கிறது.

தாவீது செய்த எல்லா காரியங்களிலும் பரலோக தேவன் அளித்த ஞானம் புலப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது.  ஒருவேளை தாவீதின் முகத்தைப் பார்க்ககூட பயந்தானோ என்னவோ அதனால் சவுல் அவனைத் தொட பயந்து என் கையல்ல பெலிஸ்தரின் கையே அவன் மேல் விழட்டும் ( 18:17) என்று நினைத்தான்.

இதை நான் படிக்கும்போது என் நினைவுக்கு வந்தது யாத்திராகமம் 34:29 தான்.  மோசே சாட்சிப் பலகைகளை எடுத்துக்கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கும்போது அவன் முகம் பிரகாசித்தது. ஜனங்கள் அவன் சமீபத்தில் சேரப் பயந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஏனெனில் அவர்களுக்கு மோசே கர்த்தரிடத்திலிருந்து வந்தது தெரியும்.

தாவீது வனாந்தர வெளியில் தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்தபோது அவன் ஒவ்வொருநாளும் தேவனாகியக் கர்த்தரிடம் பேசி உறவாடியதால் கர்த்தருடைய மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்தது போல தாவீதின் முகத்திலும் காணப்பட்டதோ என்னவோ அவனைக் காணவே சவுல் பயந்தான்.

மோசேயாகட்டும், தாவீதாகட்டும் அவர்கள் மகா பெரிய புருஷர் என்று ஜனங்கள் அவர்களைக் கண்டு பயப்படவில்லை. அவர்களோடு இருந்தவர் மகா பெரியவர் என்று கண்டு பயந்தனர். அன்று மோசேயோ அல்லது தாவீதோ யாரிடமும் தன்னுடைய சாட்சியைப் பகரவோ அல்லது கர்த்தர் என்னோடிருக்கிறார் என்று சொல்லவோ தேவையேயில்லை.  அவர்கள் முகமே கர்த்தர் அவர்களோடிருந்ததை ஜனங்களுக்கு காட்டியது.

நம்முடைய வாழ்க்கை எப்படி?

நான் கிறிஸ்தவன், நான் கிறிஸ்தவன் என்று  சொல்லிக்கொண்டு நம் வாழ்க்கையில் நம்முடைய மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ துரோகம் செய்வோமானால் என்ன பிரயோஜனம்?

நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு உண்மை பேச வேண்டிய வேளையில் பொய் பேசுவோமானால் என்னதான் பிரயோஜனம்?

உன்னுடைய வாழ்க்கையில் இயேசுக் கிறிஸ்துவின் அழகை பிரதிபலிக்க முடியுமானால் நீ யாரையும் கூவியழைத்து சாட்சி சொல்லவேண்டாம்!  அவர்களே உன்னில் கிறிஸ்துவைக் காண்பார்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 615 ஒப்பிட்டு பேசாதே! அது ஆபத்தானது!

1 சாமுவேல்: 18: 7 -9 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து ….

இஸ்ரவேலில் கொண்டாட்டம்! பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதின் வெற்றியைக் கொண்டாடினர். பெண்கள் தெருக்களில் கூடி சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடுவதை சற்று மனக்கண்கள் முன்பு கொண்டுவாருங்கள்! எத்தனை களிப்பு! எத்தனை சிரிப்பு! எல்லா திசையிலும் கலகலவென்று சிரிப்பொலி கேட்டது.

பெலிஸ்தருடன் யுத்தம் முடிவடைந்துவிட்டது. எல்லோரும் சந்தோஷமாய்க் களிகூறும் நேரத்தில்  இன்னொரு யுத்தம் ஆரம்பிக்கிறது. இந்த யுத்தம் தான் என்னைப்பொறுத்தவரை பல குடும்பங்களில், நண்பர்கள் மத்தியில், ஏன் நம்முடைய திருச்சபைகளிலும் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.  ஒருவரையொருவர் ஒப்பிடுதல் என்ற யுத்தம்!

இங்கு இஸ்ரவேலின் பெண்கள் சவுலையும் தாவீதையும் ஒப்பிட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்து விட்டனர், அது அடக்க முடியாமல் பற்றி எரிந்து விட்டது! சவுலுக்குள் ஒளிந்திருந்த பொறாமை என்ற அசுரனைப் பற்றி அறியாமல்தான் இந்தப் பெண்கள் அவர்களை ஒப்பிட்டு பாடிவிட்டனர். ஆனால் அந்த அசுரன் தாவீதைக் கொல்லத்துணிவான் என்று கொஞ்சமும் அறியவில்லை.

சில நேரங்களில் இந்தப் பெண்களைப்போல நம்முடைய அறியாமையால்,  ‘அவன் அண்ணன் மாதிரி ஸ்மார்ட்டாக தம்பி இல்லை,  என்ன இருந்தாலும் உன் அக்கா மாதிரி நீ இல்லை ‘ என்று சற்றும் யோசிக்காமல் ஒப்பிட்டு பேசுவது உண்டு அல்லவா!  தாலந்து உள்ள பிள்ளைகளை அவர்கள் கூடப்பிறந்தவர்களோடு ஒப்பிட்டு பேசி எத்தனைக் குடும்பங்களில் பிரச்சனைகள் எழும்புகின்றன!

ஆனால் குடும்பத்தில் மட்டுமல்ல நம்முடைய திருச்சபைகளிலும் இது நடக்கின்றது அல்லவா! ஒரு ஊழியர் போய் மற்ற ஊழியர் பொறுப்பேற்கும்போது நாம் எப்படி பேசுகிறோம்?  அதுவும் பழைய ஊழியர் நமக்கெல்லாம் பிடித்தவராக இருந்தால் நாம் அடுத்தவரைப் பற்றி என்னவெல்லாம் பேசுவோம்?

இஸ்ரவேலிலே பெண்கள்தான்  இந்த ஒப்பிடுதல் விளையாட்டை விளையாடினர் என்பதை மறக்கவேண்டாம். தாவீது இளைஞன், அழகானவன், வீரன், தைரியமானவன், புத்திசாலி இவை போதாதா பெண்களுக்கு! இந்த விளையாட்டு எத்தனைப் பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்து உள்ளது தெரியுமா? பெற்றக் குழந்தைகளையும், கணவனையும் விட்டு விட்டு, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஒப்பிட்டு மற்றவனோடு ஓடிய எத்தனைக் கதைகளை தினமும் கேட்கிறோம்!

உங்களுக்கு அன்பானர்வகளை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்! அது ஆபத்தானது!  கர்த்தர் நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை! அவர் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் விசேஷித்தவர்களாகக்  காண்கிறார்.

நம் ஒவ்வொருவரிலும் அவருடைய சிருஷ்டிப்பின் அழகு காணப்படுகிறது! ஒருவரை மற்றொருவரோடு ஒப்பிட்டு பேசி கர்த்தருடைய் சிருஷ்டிப்பை குறைகூற வேண்டாம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 613 புத்தியாய் செயல்படு!

1 சாமுவேல் 18:5  தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனை போர்ச்சேவகர்களுக்கு  அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் கூறூகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது.

இந்த அழகிய வாலிபன் புத்தியாய்க் காரியத்தை நடப்பித்தான்!

புத்திசாலி என்ற வார்த்தை எனக்கு கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் ஒன்று.  நீ ரொம்ப புத்திசாலி என்று நினைப்போ என்றும், உன் புத்திசாலித்தனத்தை என்னிடம் காட்டாதே என்றும் சிலர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன்.

தாவீது தான் செய்த எல்லா காரியத்திலும் புத்தியாய் நடந்து கொண்டான் என்பது நம்முடைய உள்ளங்களில் அச்சடிக்க வேண்டிய ஒரு காரியம். ஏனெனில் அவன் அப்படி  நடந்து கொண்டதால் தான் கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று கூறுகிறார். இஸ்ரவேல் மக்களும் அவனை நேசித்தனர்.

தாவீது எப்படிப்பட்ட புத்திசாலித்தனத்தை தன் செயல்களில் வெளிப்படுத்தினான் என்று நாம் நினைக்கலாம்!

ஒரு வாலிபனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன்னுடைய எதிர்காலத்துக்காக தன்னை ஆயத்தப்படுவதுதான்.  ஒரு நடுத்ததர வயது மனிதனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன் நிகழ்காலத்தைப்பற்றி சிந்திப்பதுதான். ஆனால் தாவீது தன்னுடைய கடந்த கால அனுபவங்களை மறந்து போகாமல், அவற்றின் அடிப்படையில் தன்னுடைய நிகழ்கால செயல்களை வெற்றிகரமாக செய்து, தனக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டான்.

தாவீதின் வாழ்க்கையில் அவன் நடந்து கொண்டவிதத்திலும், அவனுடைய எல்லா செயல்களிலும் தேவன் அருளிய ஞானம் வெளிப்பட்டது! அதை சவுல் கண்டான்! இஸ்ரவேல் மக்கள் கண்டனர்!

இன்று உன் வாழ்க்கை எப்படி? கிறிஸ்துவுக்குள்ளான அனுபவங்கள் உன்னை புத்திசாலியாக்கியிருக்கின்றனவா? உன்னுடைய எல்லா செயல்களிலும் நீ கர்த்தருடைய பிள்ளை என்று தெரிகிறதா?  உன்னை சுற்றிலும் உள்ளவர்கள் உன்னை நீ ரொம்ப புத்திசாலி என ஏளனப்படுத்தின்றனரா? அல்லது நீ நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து உன்னிடம் கர்த்தருடைய ஞானம் உள்ளதென்று புரிந்துகொள்கின்றனறரா?

புத்திசாலியாய் நடந்துகொள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்