Tag Archive | தெபோராள்

மலர் 7 இதழ் 471 விசுவாசத்தைத் தொடர தைரியம் தேவை!

நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள்.

சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு. தூரத்தில் தெரியும் கப்பலைக்கூட அருகாமையில் வரும்வரை கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஆம்! துறைமுகத்தில் கப்பல் பத்திரமாய் நிற்பதில் ஆபத்தே இல்லை, ஆனால் கப்பல்கள் அந்த நோக்கத்துக்காகவா கட்டப்பட்டன? அலைகளை எதிர்த்து, போராடி, ஆழ்ந்த கடலின் மேல் மிதந்து எத்தனைத் துணிகரமாகச் செயல்படும்படியல்லவா அவைகள் கட்டப்பட்டன!

துணிகரம் என்றவுடன் அந்த வார்த்தையைப் பற்றி சற்று சிந்திக்க ஆரம்பித்தேன்!  துணிகரமான செயல்களைப் புரிந்த பெண்கள்தான் மனதில் வந்தனர்.

சகோதர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் பெண்களைப் பற்றி மாத்திரம் எழுதவில்லை என்று உங்களுக்கு நன்றாகவேத் தெரியும்! ஆனால், இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்ட பெண்கள் துணிந்து நிற்பது நம் மனதைக் கவரும் காரியம் அல்லவா!

தான் பிறந்த தேசத்தை விட்டு விட்டு எங்கு போகிறோம், எப்படி வாழ்வோம் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் கணவன் ஆபிரகாமைப் பின் தொடர்ந்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானானுக்கு பிரயாணம் செய்த சாராள் எவ்வளவு துணிகரமானப் பெண்!

தன்னுடைய பெற்றோரையும், சகோதரையும் , தன் தேசத்தையும் பிரிந்து, தான் அறியாத ஒருத்தனுக்கு மனைவியாக புறப்பட்டாளே ரெபேக்காள், அவள் துணிகரமானவள் அல்லவா!

தான் வாழும் தேசத்துக்கு எதிரியாய்க் கருதப்படும் தேசத்தின் வேவுகாரர் இருவரைத் தன் வீட்டில் மறைத்து வைத்து, அவர்களுடைய தேவனுக்கு பயந்ததால், தன் உயிரைப் பணயம் வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாளே ராகாப், அவள் துணிகரமானவள் அல்லவா!

இப்பொழுது நாம் படித்துக் கொண்டிருக்கும் தெபோராள், துணிகரமாக ஆண்களின் உலகத்துக்குள் நுழைந்து, சேனாதிபதியைத் தட்டியெழுப்பி, யுத்த களத்துக்கு வழிநடத்தி, இஸ்ரவேலுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தாளே அவள் துணிகரமானவள் இல்லையா!

கர்த்தருடைய சித்தத்தை பூமியில் நிறைவேற்ற தேவன் துணிகரமானவர்களைத் தெரிந்தெடுக்கிறார்! நேர்த்தியாய் செயல்படும், மன உறுதியோடு செயல்படும், துணிகரமாக செயல்படும் தேவபிள்ளைகள் அவருக்காக ஒளிர்விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

நம்முடைய குடும்பத்தாரின் நிழலில், நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வசதியானக் குடும்பம் என்ற ஆபத்தில்லாத சூழ்நிலையில் அழகான கப்பலாக கரையில் ஒதுங்கி நிற்க நாம் உருவாக்கப்படவும் இல்லை, தெரிந்துகொள்ளப் படவும் இல்லை!

எங்கள் கம்பெனியில் செய்து ஏற்றுமதி செய்த ஒரு எம்பிராய்டரி துணிகளில் அதிகமாக எல்லோருடைய மனதையும் கவர்ந்த ஒன்று, சூரியன் மயும் வேளையில், படகு ஒன்று காற்றில் அசைவாடி செல்வது போன்ற படமும், அதன் கீழே, ” கடவுளே என்னைவிட்டு நீங்காதிரும்! இந்தக் கடலோ மகா பெரியது, என்னுடைய படகோ மிக சிறியது! என்ற வாசகமும் கொண்ட ஒரு அழகிய எம்பிராய்டரி கொண்ட ஒரு துணிதான்!

ஒவ்வொரு நாளும் தேவனுடைய கரத்தில் நம்மையும் நம்முடைய பயங்கள் யாவையும் ஒப்புக்கொடுத்து, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை தெபோராளைப் போலத் துணிகரமாக விசுவாசத்தில் தொடரக் கர்த்தர் நம் அனைவருக்கும் உதவி செய்வாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 451 நம் மண்ணில் கூட தெபோராக்கள் உண்டு!

நியாதிபதிகள்: 4:5  ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.”

இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார்.

இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து  ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று பார்க்கிறோம். அவள் ‘தெபோராளின் பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்தாள் என்ற வாசகத்தை கவனித்துப் பாருங்கள்!  அந்த பேரீச்சமரத்துக்கு தெபோராளின் பேரீச்சமரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல அவள் அங்கேயே குடியிருந்தாள் அல்லது தங்கியிருந்தாள் என்றும் பார்க்கிறோம்.

இன்றைய உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் ‘இன்று இங்கே, நாளை எங்கேயோ’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரைப் போய் பார்க்கவேண்டுமானாலும் அவருக்கு முன்கூட்டியே போன் செய்து சொன்னால் தான் போய் பார்க்க அனுமதி கிடைக்கிறது. நான் தொழில் சம்பந்தமானவர்களைப் பற்றி பேசவில்லை, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களாகிய நாங்களும் அப்படித்தான்.

ஆனால் இந்த ஊழியக்காரியான தெபோராள் 24 மணிநேரமும் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து, பேரீச்சமரத்துக்கடியிலேயே குடியிருந்தாள். தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பணியை அவளால் தொடர்ந்து செய்ய முடிந்தது ஏனெனில் அவள் தொடர்ந்து அங்கேயே  தங்கியிருந்து மக்களுக்கு நியாயம் தீர்த்தாள்.

நான் 36 வருடங்களுக்கு முன்னால் வடஇந்தியாவில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரை என்ற ஊரில் ஒரு மிஷன் பள்ளியில் ஆசிரியையாக  வேலை பார்த்தேன். அப்பொழுது  கிராமங்களில் வாழ்ந்து ஊழியம் செய்த மிஷனரிகள் ஒருசிலரின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன். சிலருடைய வாழ்க்கை எனக்கு சவாலாகவே இருந்தது. விசேஷமாக கால்ப்பி என்ற பகுதியில் வாழ்ந்த என்னுடைய ஊழியக்கார நண்பர்கள் முட்டை சாப்பிடுவதையே தியாகம் பண்ணிவிட்டார்கள். ஏனெனில் அந்த கிராமத்து மக்கள் முட்டை சாப்பிடுபவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்.

மதர் தெரேசா போன்றவர்களின் தியாகம் உலகளவில் தெரிந்தது, ஆனால் யாருக்குமே தெரியாத அளவுக்கு சிறு கிராமங்களில் தங்களையே மக்களுக்காக தியாகம் செய்து வாழ்ந்து சுவிசேஷத்தை அறிவித்து சபைகளை உருவாக்கிய தெபோராக்கள் நம் மண்ணில் அநேகர் உண்டு.

நான் இன்று தெபோராளைப் பற்றி வாசிக்கும்போது ‘தெபோராளின் பேரீச்சமரம்’ என்ற வார்த்தையை பார்த்தவுடன் ஒன்றுதான் என் மனதில் வந்தது. இன்று நான் வாழும் தெருவில் உள்ள மக்களுக்கு நான் ஊழியம் செய்வதால் இந்த தெரு என் பெயரால் அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியே நாம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் நம்மை சுற்றில் உள்ள மக்களுக்கு நம்முடைய நேரத்தை ஒதுக்கி ஊழியம் செய்வதால், அவர்களுடைய வாழ்வு நலமடைவதால், நாம் இருக்கும் தெருவோ அல்லது ஊரோ நம்முடைய பெயரேந்தியிருக்குமானால் எப்படியிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்!

தெபோராளைப் போல் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமுதாயத்தின் நலத்துக்குக்காக நம்முடைய நேரத்தை அர்ப்பணிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்யுமாறு ஜெபிப்போம். விசேஷமான தாலந்துகள் இருந்தால் தான் என்னால் சாதிக்கமுடியும் என்று எண்ணாதே! உன்னிடம் உள்ள தாலந்துகளை மற்றவருக்காக  இன்று உபயோகப்படுத்து!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி!

நியாதிபதிகள்:  4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.”

நாம் யோசுவா புத்தகத்தை படித்து விட்டு, இப்பொழுது, நியாதிபதிகள் படிக்க ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம்.தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள்.

தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில்  கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி பார்க்கலாம். நோவா கர்த்தரால் அழைக்கப்பட்டு பேழையை கட்டும்படி உத்தரவு பெற்றபோது, 120 வருடங்கள் பேழையை கட்டினான். ஒரு சாதாரண மனிதனாக  தன் கையாலே தச்சு வேலை செய்து பேழையை கட்டினபோது அவனைப் பார்த்து எத்தனைபேர் நகைத்திருப்பார்கள். இத்தனை வருடங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தானே இந்த  நோவா ஒரு சாதாரண மனிதன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை ஒரு அசாதாரணமானவன்!

யாத்திராகமத்திலிருந்து மோசேயைப் பார்ப்போம். பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்கள் பயிற்சி எடுத்த அவன் தான் கர்த்தருடைய வேலையை செய்ய சரியான மனிதன் என்றுதான் நானும் நீங்களும் நினைத்திருப்போம். ஆனால் கர்த்தர் அப்படி  நினைக்காமல் அவனை மீதியான் காட்டில் ஆடுகள் மேய்க்கும் பயிற்சியை 40 வருடங்கள் கொடுத்தார். பின்னர் கர்த்தர் கடைசியில் தன்னுடைய மந்தையை மேய்க்க அழைத்தபோது அவன் உடனே சரி என்றானா? கர்த்தரிடம் ஒரு மைல் தூர காரணங்கள் கொடுத்தான். ஏதேதோ காரணம் சொல்லிவிட்டு கடைசியில் என்னால் சரியாக பேசக்கூடத் தெரியாதே என்றானே அந்த மோசே ஒரு சாதாரண மனிதன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை ஒரு அசாதாரணமானவன்!

இப்பொழுது நாம் நியாதிபதிகள் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். யோசுவா இறந்து விட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல இருந்த சமயத்தில் கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார். 40 வருடங்கள் காலேபின் மகள் அக்சாள் மணந்த ஒத்னியேல் என்பவன்,  இஸ்ரவேலை அமைதியாய் வழிநடத்தினான். காலேப் சரியான மாப்பிள்ளையைத்தான் தன் மகளுக்கு தேர்ந்தெடுத்திருந்தான்.

நியாதிபதிகள் இரண்டு, மூன்று அதிகாரங்களில் நாம் இஸ்ரவேலின் தோல்வியுள்ள சோர்ந்து போன வாழ்க்கையைப் பார்க்கிறோம் . அப்படிப்பட்ட வேளையில்ஒரு பெண், வேதத்தில் இரண்டாவது முறையாக தீர்க்கதரிசி என்று அழைக்கப் பட்டவள்,   நியாதிபதியாக இருப்பதைப் பார்க்கிறோம். அவள்தான் தெபோராள்.

யார் இந்த அசாதாரணமானப் பெண்?

இவள் லபிதோத்தின் மனைவி என்று வேதம் சொல்கிறது. லபிதோத் என்பதற்கு தீவட்டி என்று கூட அர்த்தம் உண்டு, அதனால் அவள் தீவட்டி பெண் என்றும் அழைக்கப்பட்டாள்.

நியாதிபதிகளைப் பார்க்கும்போது, அவர்களுடைய அசாதாரணமான திறமைகள் அவர்களை நியாதிபதிகளாக உயர்த்தவில்லை. சாதாரணமானவைகளை எடுத்து அசாதாரணமாக்கிய திறமையே அவர்களை நியாதிபதிகளாக்கியது என்று நினைக்கிறேன்.

தீவட்டி என்பது சாதாரணமான வார்த்தைதான், ஆனால் தெபோராள் தீவட்டி போன்று  ஒளிக்கதிர்களை வீசியதால் அசாதாரணமானாள்.

தேவனாகிய கர்த்தரின் வல்லமையால் சாதாரணமான நாம் கூட அசாதாரணமாகலாம்!

நான் மிகவும் சாதாரணமானவன் அல்லது சாதாரணமானவள், நான் எப்படி கர்த்தருடைய ஊழியத்தை செய்வேன் என்று நினைக்கிறாயா! கர்த்தர் நம்மைப் போன்ற சாதாரணமானவர்களைத் தான் தம்முடைய வேலைக்காக உபயோகப்படுத்துவார்.

ஒருவேளை மிக சாதாரணமான உங்களில் ஒருவரை கர்த்தர் தம்முடைய ஊழியத்தில் , உலகத்தின் இருளை நீக்கும் தீவட்டியாக, ஒளியாக உபயோகப்படுத்துவாரோ என்னவோ யாருக்குத் தெரியும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்