Tag Archive | நாத்தான்

இதழ்: 695 எவைகள் முக்கியம்?

2 சாமுவேல்: 7: 8,9  இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு  அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

2 சாமுவேல் 7: 8-29 தேவனுடைய சித்தத்துக்குள் நாம் நடக்கும் போது நம்முடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை போதிக்கும் ஒரு வேதாகமப் பகுதியாகும்.

தாவீது தன் கண்களை மேல் நோக்கிப் பார்த்து தேவனுடைய பெட்டி நிரந்தரமாகத் தங்கும் ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று தரிசனம் கண்ட பின், தேவனாகிய கர்த்தர் தாவீதுடைய நண்பனும், தீர்க்கதரிசியுமாகிய நாத்தான் மூலம் பேசிய காரியம் என்னவெனில், தாவீதிடம் சொல்லு, அவன் அல்ல! நானே அவனைத் தெரிந்துகொண்டேன்!, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அவனை என்னுடைய ஜனங்களுக்கு ராஜாவாக உயர்த்தினேன். சமன்வெளியில் அவனோடு இருந்த நான் சிம்மாசனத்திலும் அவனோடு இருப்பேன்!

எத்தனை பெரிய வாக்குத்தத்தம்! தாவீது தன் வாழ்வில் தேவனை மையமாக வைத்து, தேவனுடைய பணியைத் தன் தரிசனமாக கொண்டவுடன் கர்த்தர் அவனோடு கூட இருப்பதாக வாக்களிக்கிறார். தாவீது தரிசனமில்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது அவனுக்கு இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்படவில்லை. தேவனுடைய சித்தத்தை செய்ய அவன் சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் அளிக்கப்பட்டது.

தாவீது தேவனுடைய சித்தத்தின் கீழ் வாழ ஆரம்பித்தவுடன் அவனுக்கு கஷ்டமே வராது என்றுதானே கடவுள் சொன்னார்.  கர்த்தர் அவன் சத்துருக்களையெல்லாம் நிர்மூலமாக்குவேன் என்று சொன்னாரே!  அப்படியானால் நானும் என்னை தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து விட்டால் எனக்கு துன்பமே வராது அல்லவா? என்று நீங்கள் கேட்கலாம்!  உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அதற்கு என் பதில், நிச்சயமாக அப்படியல்ல என்பதுதான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியவிதமாய், முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ( மத்:6:33)

இவைகளெல்லாம் என்றால் எவைகள்? கஷடமில்லாத, துன்பமில்லாத வாழ்க்கையா?  இல்லை! நிரந்தரமான தேவ பிரசன்னம்! எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் நம்மோடிருக்கும் பிரசன்னம்!

ஒருவேளை இன்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் நம்மிடம் வந்து தாவீதைப்போல கர்த்தருடைய ஆசீர்வாதம் உன்னுடைய வாழ்க்கையில் இருக்கிறது என்று சொல்வாரானால் நாம் எதை கர்த்தரிடம் எதிர்பார்ப்போம்? நிரந்தரமான அவருடைய பிரசன்னத்தையா அல்லது இலகுவான உலக வாழ்க்கையையா?  எவைகள் முக்கியம்? யோசித்துப் பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Advertisements

இதழ்: 694 மேல் நோக்கிய தரிசனம்!

2 சாமுவேல் 7: 2,3 ராஜா தீர்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது,தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.

அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.

உங்களுடைய மனதில் என்றாவது ஒரு பாரம் அழுத்துவது போல உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால் அது என்ன பாரம் என்றே தெரியவில்லை அல்லவா? ஒருவேளை யாருக்கோ ஒருவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்ற ஒரு பாரம். அல்லது ஒருவேளை எங்கோ உடனே போகவேண்டும் என்ற ஒரு பாரம்!

இதைப்போன்ற ஒரு பாரமும், மன உருத்தலும் தான் தாவீதை வாதித்தது. கர்த்தர் அவன் வீட்டில் இளைப்பாறும் சூழ்நிலயை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். தன்னுடைய வீட்டில் இளைப்பாறிய அவன் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தபோது அவன் கண்கள் திறந்தது. அவன் தேவனாகிய கர்த்தருக்கு தான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளதை உணர்ந்தான்.

தன்னுடைய நண்பனும் தீர்க்கதரிசியுமான நாத்தானை அழைத்து, தன் உள்ளத்தின் பாரத்தை பற்றி கூறுகிறான்.  நான் கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்று தன் பாரத்தை கூறுகிறான்.

தாவீது தன் வேலைகளிலிருந்து சற்று ஒய்ந்து இளைப்பாறியபோது தேவனுடைய பெட்டிக்கு ஒரு நிரந்தர வாசஸ்தலம் வேண்டும் என்பதை உணர்ந்தான். உலகத்தின் பல்வேறு சத்தங்களுக்கு நம்முடைய செவிகள் அடைபட்டு நம்முடைய ஆத்துமா கர்த்தரை மட்டும் தேடும்போதுதான் தேவன் நம்முடைய செவிகளில் மெல்லிய சத்தத்தோடு கூறும் காரியங்கள் நமக்கு கேட்கும். இந்த உலகத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பணி நமக்கு புலன்படும்.

இன்று நம்முடைய செவி தேவனுடைய சத்தத்தைக் கேட்கவும், நம்முடைய கண்கள் தேவனுடைய தரிசனத்தைக் காணவும் தயாராக உள்ளதா? தாவீதைப் போல உன்னுடைய எல்லா வேலைகளிலிருந்தும் சற்று விடுபட்டு கர்த்தரிடம் சற்று நேரம் செலவிடு! தாவீதைப் போல உன் கண்கள் திறக்கப்படும்!

நீ உனக்குள் காணும் தரிசனம் உன் கடமையாக மாறும்!

நீ உன்னை சுற்றிக் காணும் தரிசனம் உன் ஆர்வமும், நாட்டமுமாகும்!

நீ மேல் நோக்கி காணும் தரிசனம் உன் விசுவாசமாகும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்