Tag Archive | பணக்காரன்

இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!

2 சாமுவேல் 12: 4    அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..

நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது.

இன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை இவற்றிற்கு நேர் மாறானது.

நாம் ஒருவேளை பிறக்கும்போதே இரக்கம் இல்லாதவர்களாக இருந்திருக்க மாட்டோம். நாம் பார்க்கும் எதையும் வாங்க, நாம் நினைக்கும் எதையும் நடத்த, நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ நமக்குத் தருணம் கிடைக்கும்போதுதான் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. அதிக பணம் இருக்கும் சிலர் நடந்து கொள்வது நமக்கு அருவருப்பாக இருக்கும் அல்லவா?

இதனால் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, அதிகமாக சொத்து குவித்தவர்களைப் பார்த்து, அதிக ஆஸ்தியினால் வரும் ஆபத்தைக்குறித்து பேசினார்.  அதிக ஆஸ்தி உள்ளவர்கள் பரலோக ராஜ்யம் செல்வது ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது போல இருக்கும் என்றும் எச்சரித்தார்.

சிலருக்கு இரக்க குணமே கிடையாது. ஆனால் பேரும் புகழும் கிடைப்பதற்காக சுயநலத்தோடு நான் நான் நான் என்று தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல  காரியத்தையும் கூவி அம்பலப்படுத்துபவர்கள் பரலோகராஜ்யத்துக்குரியவர்கள் அல்ல என்று கூறினார். தாங்கள் செய்வது  தங்களது மற்ற கரத்துக்கே தெரியாமல் செய்பவர்கள் தான் சுயநலமில்லாமல்இரக்க குணமுள்ளவர்கள்.  அவர்கள் இரக்கம் காண்பிப்பது அவர்களுக்கு இயல்பாக இருக்குமே தவிர உள்நோக்கம் இருக்காது.

இங்கே நாத்தானின் கதையில் வந்த ஐசுவரியவானும் அவனிடம் வந்த வழிப்போக்கருக்கு சமைக்க தன்னுடைய ஒரு ஆட்டைக்கூட இழக்க மனதில்லாதிருந்தான் என்று பார்க்கிறோம். அவன் வழிப்போக்கன் மேல் இருந்த இரக்கத்தால் சமைக்கவில்லை. தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியின் மேலுள்ள இச்சையால் தான் சமையல் செய்வித்தான்.

இந்த மனதில்லாமல் என்ற வார்த்தைக்கு பின்வாங்குதல் என்றும் அர்த்தம். யாருக்காவது உதவி தேவைப்பட்டபோது, உதவிசெய்யும் நிலையில் நாம் இருந்தாலும் பின்வாங்கியிருக்கிறோமா என்று நம்மை சோதித்து அறிவோம்!

நீ ஒருவேளை உதவ மனதில்லாதவனாக இருக்கலாம், உன்னுடைய பணத்தால் இரக்கம் செய்ய பின்வாங்கலாம், கஞ்ஞனாகவே  இருக்கலாம் ஆனால் ஒரு கிறிஸ்தவனாக மட்டும் இருக்க முடியாது!  சிந்தியுங்கள்!

போய் பசியாயிருப்போருக்கு அப்பத்தை பகிர்ந்து கொடு

என்றான் தேவ தூதன்!

நான் திரும்பத் திரும்ப இதை செய்ய வேண்டுமோ

என்றேன் நான்!

அப்படியல்ல! தேவன் உனக்குக் கொடுப்பதை நிறுத்தும் வரை கொடுத்துக்கொண்டே இரு

என்றான் தேவ தூதன்!

இதுவே என்னுடைய சாட்சி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

இதழ்: 737 நீ ஏழையா? அல்லது பணக்காரனா?

2 சாமுவேல் 12: 1   … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே சொல்லப்பட்டது என்று புரிந்தது!

நாம் முன்னரே பார்த்தவிதமாய் நாத்தான் தாவீதின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒருவன் தான். தேவனுடைய செய்தியை தாவீதுக்கு எடுத்துரைத்த அரண்மனை தீர்க்கதரிசி.

நாம் சற்று நினைவு படுத்திக் கொள்ளலாமே! பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான். என்னன்னா! தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது! பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது! பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது!  அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை!  கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை!  நிச்சயமாக ஒரு கிசுகிசுப்பு அரண்மனையை சுற்றிக் காற்றில் பரவிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் நாத்தான் தாவீதின் அரண்மனைக்குள் வந்தபோது தாவீது எந்தக் குற்றமுமே அறியாத ஒரு அப்பாவிப்போலத்தான் நடந்து கொண்டான்.

நாத்தான் தாவீதின் சமுகத்தில் தேவ செய்தியோடு நின்றதை சற்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு தைரியசாலியாயிருந்திருப்பான் அவன். சாதாரண வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஏழை, பணக்காரன் கதையை அவன் தாவீதிடம் ஆரம்பிக்கிறான். அவன் கதையில் ஒரு நல்லவன் கெட்டவன் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தவில்லை. ஏழை பணக்காரன் என்ற வார்த்தை தாவீதுக்கு நன்கு புரியும். அவன் ஏழ்மையை நன்கு உணர்ந்தவன். சவுலால் ஒரு பறவையைப் போல விரட்டப்பட்டபோது மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன். பசியும், தாகமும் அவன் நன்றாக அறிந்த ஒன்றே!  பின்னர் இந்த ஏழை, எருசலேமின் அரண்மனையில் ராஜாவானான். அவன் கண்களால் பார்த்த எதையும் அவன் அடைய முடியும்!

ஆதலால் இந்த ஏழை பணக்காரன் என்ற வார்த்தைகள் இரண்டுமே தாவீதுக்கு பொருந்தியவைதான். கர்த்தர் அவன் இந்த இரண்டு ஸ்தானத்தையுமே மறந்து விடக்கூடாது என்று நினைத்தார்.

நம்முடைய வங்கியில் இருக்கும் கணக்கை வைத்து கர்த்தர் நம்மை ஏழை என்றும் பணக்காரன் என்றும் கணிப்பது இல்லை என்று நமக்கு நன்கு தெரியும்.தாவீது எதுவுமே சொந்தம் இல்லாதிருந்தபோது அவனிடம் கர்த்தருடைய பிரசன்னம் இருந்தது. தாவீதுக்கு எல்லாமே சொந்தமான வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் அவனோடு இல்லையே! அவனுடைய வாழ்க்கை எல்லாம் இருந்தபோதும், ஒன்றுமே இல்லாமல் வெறுமையாய் ஆகிவிட்டது!

இன்று கர்த்தர் நம்மை எப்படி பார்க்கிறார்? ஏழையாகவா? பணக்காரராகவா? ஒன்றுமே இல்லாத வேலையிலும் நாம்  கர்த்தருடைய பிரசன்னத்தோடு பணக்காரராய் வாழமுடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்