Tag Archive | பதவி

இதழ்: 713 பதவியும், பணமும் கொடுக்கும் தவறான கருத்து!

2 சாமுவேல்: 11:4  அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான்.

இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதரை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் பண்ணுகிறார்கள் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது.

ஒருகாலத்தில் பக்கத்து வீட்டு நண்பராக இருந்தவர் கூட,  பிசினஸ் ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும் ஏதோ ஒரு இடத்தில் உயர்ந்த பதவியைப் பிடித்தவுடன் ஆளே மாறிப்போவதில்லையா?

கிறிஸ்தவ ஊழியக்காரர் கூட சிலரைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் ஊழியத்துக்காக ஜனங்களிடம் பணம் கேட்பார்கள். திங்கள் கிழமைகளில் விமானத்தில் பறப்பார்கள். பணமும், புகழும், பாராட்டுகளும், பதவியும் மனிதரை அப்படியே மாற்றிவிடுகிறது. இந்தப் பதவியில் நான் இருப்பதால் நான் இப்படி வாழலாம் என்று முன்கூட்டியே தங்கள் மனதில் ஒரு தவறான கருத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள் போலும்.

இங்கு தாவீது ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கிறவன். ஒரு தேசத்தை ஆளும் ராஜா. மிகவும் சௌந்தரியமும் , திறமையும் கொண்டவன். யுத்தத்தில் வல்லவன். அவனைக்கண்ட பெண்கள் எல்லோரும் சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று போற்றிப் பாடிய ஹீரோ அவன். ஒவ்வொருவருடைய கவனத்தையும் ஈர்ந்த இஸ்ரவேலின் முன்னோடி அவன்.

அதே சமயத்தில் அவனிடம் கர்த்தரைத் தேடும் இதயம் இருந்தது. கர்த்தரை பிரியப்படுத்தும் வாஞ்சை இருந்தது. தேவனுடைய பாதையை தன் சிறு வயது முதல் தெரிந்து கொண்டவன். இன்று அவனிடம் பணம், புகழ், பெரிய பதவி இவை வந்தபோது அவன் மனதிலும் நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற தவறான கருத்து ஏற்பட்டு விட்டது. அடுத்தவனின் மனைவி மேல் கை போடவும், அவளை அடையவும் கூட தனக்கு உரிமை உள்ளது என்று எடுத்துக் கொண்டானோ என்னவோ! பதவி வந்தவுடன் எதையும் தான் செய்யலாம் என்ர தவறான கருத்து! மற்றவருக்கு இல்லாத உரிமை எனக்கு உண்டு என்ற தவறான கருத்து! என்ன முட்டாள்த்தனம்!

என்ன  பரிதாபம்! இன்று  இந்த உலகத்தின் பதவி, இந்த உலகத்தின் புகழ், இந்த உலகத்தின் சொத்து, இவை நாம் எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு உரிமை உண்டு என்ற எண்ணத்தை நமக்குள் கொண்டு வருமானால் அது மிகப்பெரிய தவறு.  அது  நம்மையும், நம்மை சார்ந்தவரையும் அழித்துவிடும்.

கர்த்தரை நேசித்த, அவருடைய இருதயத்திற்கேற்றவன் என்று எண்ணப்பட்ட  தாவீதே இந்தக் கண்ணியில் விழுந்தால்  நீயும் நானும் எப்படி? ஜாக்கிரதை!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Advertisements

இதழ்: 667 பதவியைத் தேடி ஓடாதே!

2 சாமுவேல் 3: 9-10 நான் ராஜ்யபாரத்தை சவுலின் குடும்பத்தைவிட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கி பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும், யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற்போனால்…..

அப்னேர் சவுலின் படைத்தலைவனாக இருந்தவன். சவுலின் எதிர்பாராத மரணத்துக்கு பின், அவன் சவுலின் குடும்பத்துக்குத் தன் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்தான். அவன் தேவன் தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நன்கு அறிந்திருந்தான் என்று இன்றைய வேதாகமப்பகுதி நமக்குத் தெரிவிக்கிறது.

ஏழறை வருடங்கள் சவுலின் குடும்பம் ராஜ்யபாரத்தைத் தொடர அவன் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்தான். அவன் சொற்கேட்டு எப்பிராயீம், பென்யமீன் கோத்திரங்கள் மாத்திரம் அல்ல, யூதா தவிர அனைத்து கோத்திரங்களும், சவுலின் இளைய குமாரனாகிய இஸ்போசேத்தை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் ஒருநாள் இஸ்போசேத் தனக்கு பக்கபலமாயிருந்த தன் நண்பனாகிய அப்னேரின் பேரைக் கெடுக்கத் துணிந்தான்.. அப்னேரின் பெயர் கெட்டது, அப்னேரைப் பற்றிய கிசுகிசுப்பு ஊரெங்கும் பரவியது. ஒரு நல்ல நண்பன் இப்பொழுது எதிரியாக மாறிவிட்டான்.

வேதம் தெளிவாக சொல்கிறது, அப்னேருக்கு தேவன் தெரிந்துகொண்ட ராஜா யாரென்று நன்கு தெரியும் என்று. ஆனால் அதைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அவன் இஸ்போசேத்தை ராஜாவாக்கியது ஒருவேளை தனக்கு அதிகாரமும், வல்லமையும் வேண்டும்  என்பதால் இருக்கலாம். ஆனால் அவனுடைய திட்டம் அவனுக்கு எதிராகத் திரும்பியவுடந் ஒரு கணமும் காத்திராமல் சவுலின் குடும்பத்தை புறக்கணித்து விட்டு எதிரியான தாவீதின் பக்கம் வலை வீசுகிறான். தான் யார் பக்கம் இருப்பது என்பது அவனுக்கு முக்கியமில்லை! தனக்கு வல்லமையும் அதிகாரமும் வேண்டும் அவ்வளவுதான்!

சரித்திரத்தில் இது ஒன்றும் புதிது இல்லை! ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் மத்தியில் நடப்பதுதான். பெரிய வியாபாரிகள் மத்தியிலும் இது காணப்படும்.  ஆனால் எனக்கு மிகவும் மன வருத்தம் கொடுக்கும் காரியம் என்னவென்றால் இது நம்முடைய சபைகளிலும் காணப்படுவதுதான். மற்றொருவருடைய பதவியை அல்லது அதிகாரத்தை எப்படியாவது தட்டிப்பறிக்க வலைவீசுகிறார்கள்! ஒவ்வொரு திருச்சபையும் தேவனாகிய கர்த்தர் உலாவும் ஸ்தலம் என்பதையும், அவரே அங்கு ஆளுகை செய்கிறார் என்பதையும் மறந்து பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் எதையும் செய்யத் துணிகிறார்கள்.

அப்னேர் அதிகாரத்தைத் தட்டிப்பறிக்க நினைத்தபோது யார் இந்த பூமியை ஆளுகிறார் என்பதை மறந்தே போய்விட்டான். நாம் அந்தத் தவறை செய்யவே வேண்டாம்.

கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார் ( சங் 97:1) அப்படியானால் நாம் ஏன் இந்தப் பதவிக்காக சண்டை போட வேண்டும்?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்