Tag Archive | பத்சேபாள்

இதழ் :801 சந்தோஷம் என்னும் வற்றாத நீரூற்று!

சங்: 51:8  நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்.

தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற தலைப்பின் 9 ம் பாகம் இன்று பார்கிறோம்.

உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று நாம் வாழ ஆரம்பிக்கும்போது அந்த சந்தோஷம் தானாய் நம்மை விட்டு  மறைந்து விடும்.

இன்றைய வேதாகமப்பகுதியில் , தாவீதும் இந்த சந்தோஷத்தைப்பற்றி அறிந்திருந்தான்.அவன் மணந்த அத்தனை பெண்களாலும் கொடுக்க முடியாத சந்தோஷம், ராஜாதி ராஜனாக பெற்ற வெற்றிகளால் கிடைக்க முடியாத சந்தோஷம், ராஜாவாக இருப்பதால் அவனைத் தேடி வந்த பணத்தால் அடைய முடியாத ஒரு சந்தோஷம்!  இவையனைத்தும் மொத்தமாக அவனிடம் இருந்தபோதும், அவன் நினைத்த எல்லாமே அவனுக்கு கிடைத்தபோதும் அவன்  அடைய முடியாத ஒரு சந்தோஷம்தான் அது!

நாம் பார்க்கிற பெரிய சினிமா ஸ்டார்களும், பெரிய வியாபாரிகளும், விரலை சுண்டினால் எதையும் அடையும் பெரிய பணக்காரகளும், இன்று போதை மருந்துகளையும், குடிப்பழக்கத்தையும், தற்கொலையையும் தேடிப் போவது இந்த சந்தோஷம் கிடைக்காமல் போவதால் தான்! பணத்தால் விலை கொள்ள முடியாத சந்தோஷம் அது!

தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்து நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் மனந்திருந்தி தேவனை நோக்கிப் பார்த்தபோது, அவன் அவருடைய இரக்கத்தைத் தேடி, ரட்சிப்பை விரும்பி, பரிசுத்தத்தை வேண்டி நின்றது மட்டுமல்லாமல், அவன் இழந்து போன சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கூட வேண்டுகிறான்.

இந்த சந்தோஷத்தைப் பற்றி நாம் இன்னும் சற்று அறிந்து கொள்ள வேண்டுமானால், வாழ்க்கையில் மிகவும் நொறுக்கப்பட்ட, பலமுறை கப்பல் சேதங்களில் அகப்பட்ட, பலமுறை வாரால் அடிக்கப்பட்ட, பலமுறை மரணதருவாயில் இருந்து, பசியாக பட்டினியாக இருந்த, சிறை வாசங்களை அனுபவித்த நம்முடைய அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை  பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ( ரோமர் 15: 13)

இவ்வளவு கடினமான பாதையில் சென்று கொண்டிருந்த பவுலுக்கு எங்கிருந்து இந்த சந்தோஷம் கிடைத்தது? எதனால் அவருடைய வாழ்க்கை துதிகளும் ஸ்தோத்திரங்களும் நிறைந்ததாக இருந்தது?  இது தேவனாகிய கர்த்தரின் சந்தோஷம் என்னும் வற்றாத  நீரூற்றிலிருந்து வரும் அருவியே! எந்தக் காரணத்துக்காகவும் அது வற்றிப் போகாது! இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கொடுக்கப்படும் ஜீவ ஊற்று அது!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சந்தித்த சமாரிய ஸ்திரீயைப் பற்றி படிக்கும்போதெல்லாம் தாவீதின் ஞாபகம் வரும்! இருவரும் விபசாரம் செய்தார்கள்! இருவரும் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்பினர்! இருவரும் இரக்கத்தை நாடினர்!  இருவருமே இரட்சகரை கண்டு கொண்டனர்! இருவருக்குமே சந்தோஷம் கிடைத்தது! இந்த இருவரைப் பற்றியும் பார்க்கும்போது, காலமும், நடைமுறை பழக்கவழக்கங்களும் வேறு வேறாக இருந்தாலும் தேவை ஒன்றாகத் தான் இருந்தது! இன்று நாமும் வேறொரு கால கட்டத்தில் வாழ்ந்தாலும், வேறு பழக்கங்கள் கொண்ட நாட்டில் வாழ்ந்தாலும் நம்முடைய தேவையும் ஒன்றே! சந்தோஷம்!

எங்களுடைய வீட்டில் கிணறு இருக்கிறது! கிணற்றுத் தண்ணீர் நல்ல சுவையுள்ளது. அந்தத் தண்ணீரை எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தால் அது எப்படி உபயோகப்படும்! அதை இரைத்து வெளியே கொண்டுவந்தால் தானே பிரயோஜனம்! அதைப்போன்றது தான் சந்தோஷமும்! தேவனாகிய கர்த்தரண்டை உள்ள வற்றாத இந்த ஜீவ ஊற்றிலிருந்து நாம் இரைத்து நம்முடைய வாழ்வில் நாம் விலை பெறாத சந்தோஷத்தை அடைவோம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 793 தாவீதை நேசித்த தேவன்!

சங்கீதம் 51:1  தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்!

தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்!

தாவீதின் வாழ்க்கையில் அவன் பெண்களை நடத்தியவிதம் கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதத்தில் இல்லவே இல்லை! அவன் சவுலின் குமாரத்தியாகிய மீகாளை எப்படி நடத்தினான் ஞாபகம் உள்ளதா?  அவளால் ஜன்னல் வழியாக இறக்கிவிட்டபின்னர் அவளைத் தேடவே இல்லை. பின்னர் அவள் இன்னொருவனுக்கு மனைவி என்று அறிந்தபின்னரும் அவள் கணவனை விட்டு விட்டு வரும்படி செய்தான். அபிகாயிலிடம் இனிப்பான வார்த்தைகளை பேசி திருமணம் செய்த அன்று இன்னொருத்தியையையும் விவாகம் பண்ணின செய்தியை அவளிடம் சொன்னான் என்றும் பார்த்தோம். அதுமட்டுமல்ல அவனுடைய பாதையில் அவன் அநேகப் பெண்களை விவாகம் செய்து மனைவி என்ற பட்டியலை விரிவாக்கியிருந்தான்.

கடைசியில் நமக்கு மறக்கவே முடியாத காரியம் அவன் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து உல்லாசமாக பார்த்த போது அவன் கண்களில் பட்ட அழகி பத்சேபாளை அடைய, அவளுடைய உத்தம புருஷனும், சேனை வீரனுமான உரியாவைக் கொலை செய்ததுதான்!

இப்படிப்பட்ட தவறான ஓட்டத்தை ஓடிக்கொண்டிருந்த தாவீது எங்கோ ஒருநாள் தேவனாகிய கர்த்தரைத் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நோக்கி கதறியிருந்திருக்க வேண்டும்.

தாவீதை நியாயம் தீர்க்க நான் யார்? கர்த்தர் தாமே தம்முடைய அளவிடப்பட முடியாத ஞானத்தால் நம்முடைய எண்ணங்களையும் எண்ணங்களின் தோற்றங்களையும் அறிந்திருக்கிறார்!

தாவீது தன்னுடைய வார்த்தைகளால் அவரை

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்.அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது  ( சங்: 145;3)

என்று கூறுகிறான்.

சகலத்தையும் காணும் இந்த சர்வ வல்ல, மகத்துவமுள்ள தேவனிடம் தகுதியே இல்லாத இந்த பூமியில் வாழும் மனிதரை நேசிக்கும் உள்ளம் இருந்தது!  இந்த மகத்துவமான தேவனைப்பற்றி நான் அறிய அறிய, எனக்கு கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார் என்று புரிகிறது!

அதுமட்டுமல்ல! இன்னொன்றும் புரிகிறது!  தவறான பாதையில் புள்ளி மான் போல ஓடிக்கொண்டிருந்த இந்தத் தாவீதை நேசித்த மிகவும் பெரிய மகத்துவமுள்ள கர்த்தரால் என்னையும் நேசிக்க முடியும் என்ற மகா பெரிய உண்மையும் கூட!

தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார் என்று நான் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தபோது முதலில் என் நினைவுக்கு வந்தது இன்றைய வேதாகமப் பகுதி அடங்கிய சங்கீதம் 51 தான்! வேதாகமத்தில் நம் ஒவ்வொருவரையும் மிகவும் தொடும் சங்கீதம் இதுதான். இந்த சங்கீதத்தில் தான் நாம் தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் அதிகமாக நேசித்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது!  அதுமட்டுமல்ல! இங்குதான் நாம் ஒவ்வொருவரும் கர்த்தர் ஏன் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ள உதவும் என்றும் நம்புகிறேன்.

தகுதியே இல்லாத என்னையும் தேவன் நேசிக்கிறார் என்ற எண்ணம் என்னை என்னுடைய வாழ்க்கைப்பாதையில் ஒவ்வொருநாளும் வழிநடத்துகிறது! நான் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் இந்த தேவன் என்னை நேசிக்கிறார் என்ற ஆணித்தரமான உண்மை!

இந்த மகாப்பெரிய தேவன் உன்னையும் என்னையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை இந்த வேதாகம தியானம் நமக்கு தெளிவாக்கி காட்ட வேண்டுமென்று ஜெபிக்கிறேன்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!

2 சாமுவேல் 13:1,2  இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான்.

தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். 

தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன்,  இசைக்கருவி வாசிக்கும் கலைஞன்,  ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் –  அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய மனைவிமாரும், பிள்ளைகளும் இதற்கு சாட்சி!

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தவீதுக்கு எல்லாமே இருந்தமாதிரிதான் இருந்திருக்கும். ஆனால் தாவீதின்  அரண்மனைக்கு உள்ளே புகைந்து கொண்டிருந்தது!

இந்த 13ம் அதிகாரம் தாவீதின் அரண்மனைக்கு உள்ளே நடந்த காரியங்களை நாம் பார்க்கும்படி திரையை விலக்குகிறது! தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் கூறியவை நிறைவேற ஆரம்பித்தன! அவனுடைய பாவத்தின் விளைவை அறுக்க ஆரம்பித்து விட்டான்.

தாவீது பத்சேபாளின் கதை விறுவிறுப்பாக நடந்தபோது அவனுடைய பிள்ளைகளின் கண்கள் எல்லாவற்றையும் காணும், செவிகள் எல்லாவற்றையும் கேட்கும் என்பதை அவன் கவனிக்கவே இல்லை! தாவீது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அவனுடைய பிள்ளைகள் பார்த்து விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அரண்மனையை சுற்றிவந்த கிசுகிசுப்பையும் அவர்கள் நிச்சயமாக கேட்டு விட்டார்கள்!

அதே பிள்ளைகள் சற்று வளந்தவுடன் தங்கள் தகப்பனைப்போல நினைத்தபடி வாழ ஆரம்பித்தார்கள்!  அப்பா செய்ததைப்போல அவர்களும் நடந்து கொள்ளலாம் அல்லவா!  முதலில் அவனுடைய மகனான அம்னோனிடம் அப்படிப்பட்ட நடத்தை ஆரம்பிக்கிறது!

அந்த கால கட்டத்தில் வாழ்ந்த ராஜாக்கள் அனைவரும் இப்படித்தானே பல மனைவிமாரோடும், மறுமனையாட்டியாரோடும், அநேக பிள்ளைகளோடும் வாழ்ந்தார்கள். தாவீது மட்டும் பல பெண்களோடு வாழ்ந்தது எப்படி தவறு ஆகும் என்று யோசிப்பீர்கள்! யாரோ எப்படியோ வாழலாம் ஆனால் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களும், தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுடைய ராஜாவும் அப்படி நடந்து கொள்ளும்போது அவர்களுக்கு துக்கமே முடிவானது நமக்கு ஆபிரகாம், சாராள், ஆகார் என்பவர்களின் கதையிலிருந்து தெரியும் அல்லவா!

அநேக மனைவிகளின் பிள்ளைகள் நடமாடிய அரண்மனையில் ஒருசில காரியங்கள் தலைதூக்க ஆரம்பித்தன! அண்ணன் தங்கை உறவை மீறி காதல் எழும்ப ஆரம்பித்தது!  அம்னோனுக்கு அவனுடைய தங்கை தாமார் மீது இச்சை எழும்பியது. அம்னோனுக்கும் தாமாருக்கும் ஒரே தந்தைதான்! அவர்களுக்குள் எந்த உறவு  ஏற்படுவதையும் கர்த்தர் ஏற்றுக்கொள்ள மாட்டார், அவனுடைய தந்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  இது நன்கு தெரிந்த அவனுக்கு ஏக்கம் பிடித்து விட்டது.

எப்படியாவது தாமாரை அடைய வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? அவனுடைய தந்தையாகிய தாவீது பத்சேபாளை அடையவேண்டும் என்ற ஏக்கம் கொண்டதையல்லவா?

ஆம்! பிள்ளைகள் எல்லாவற்றையும் கவனித்தே வளர்ந்தனர். அவர்கள் பார்த்த எதுவும் பரிசுத்தமாக இல்லையே! தகப்பனிடத்தில் பார்த்ததைத்தானே அம்னோன்  இங்கு எதிரொலிக்கிறான்!

நம்முடைய பிள்ளைகள் நம்மைத்தானே எதிரொலிப்பார்கள்! நம்முடைய தினசரி வாழ்க்கையில் பிள்ளைகள் எதைப்பார்க்கிறார்கள்? நாம் தேவனோடு நடப்பதை அவர்கள் நம்மில் காண முடிகிறதா? அல்லது நாம் ஏமாற்றுவதையா? லஞ்சம் வாங்குவதையா? வயதான அம்மா அப்பாவை கேவலமாக நடத்துவதையா? இருட்டில் வாழும் வழ்க்கையையா?

பிள்ளைகள் நம்மைக் கவனிக்காத நேரத்தில் நாம் பின்னும் பாவம் வலையில் நம்முடைய பிள்ளைகளே சிக்கிக்கொளவார்கள் என்பது நாம் அனுபவிக்கும்போதுதான் புரியும் உண்மை! ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!

2 சாமுவேல் 12: 24 – 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். 

அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.

எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது, இன்று இது எனக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறோம்!  நாம் இவ்வளவு நாட்கள் நாம் படித்த தாவீதின் வாழ்க்கை நம்மில் பலரோடு பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.

தாவீது தன்னுடைய இச்சை என்னும் பாவத்தால் கர்த்தரை அசட்டை பண்ணி, தன்னுடைய குடும்பத்துக்கு வருத்தத்தைக் கொண்டு வந்தபின்னர், இருளில் மின்னும் ஒளிபோல தோன்றியது தான் இன்றைய வேதாகமப் பகுதி!

இச்சையான பாவத்தினால் அல்ல, மனந்திருந்திய ஆறுதலையும், மரியாதையையும் தன் மனைவிக்கு தாவீது கொடுத்ததால் பிறந்த குழந்தை தான் சாலொமோன்! அவனுடைய தாய் பத்சேபாள் அவனுக்கு சாலொமோன் என்று பெயர் கொடுத்தாலும் தேவனாகிய கர்த்தர் அவனுக்கு வேறொரு பெயர் கொடுத்தார்.

ஒருநிமிடம்! இந்தப் பெயரை அந்தக் குழந்தைக்கு கொடுக்க கர்த்தர் அனுப்பியது யார் தெரியுமா? தீர்க்கதரிசி நாத்தான்! மறுபடியும் அந்த அரண்மனைக்குள் வரும்போது நாத்தானுக்கு எப்படியிருந்திருக்கும்?

வேதத்தில் இப்படிப்பட மாறுபாடான முந்திய பிந்திய சம்பவங்களை ஒப்பிடுவது அடிக்கடி பார்க்கலாம். நாத்தானின் முதலாவது வருகையில் தாவீதின் பாவத்தைப்பற்றி அவனுக்கு உணர்த்தவும், அவனுடைய இச்சையால் அவனுக்கும் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தை சாகவே சாகும் என்று சொல்வதற்கும் அனுப்பப்பட்டான்.

இந்த இரண்டாவது வருகையிலோ நாத்தான் ஒரு சந்தோஷமான செய்தியுடன் வருகிறார். தாவீதுக்கும் அவனுடைய மனைவியாகிய பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தைக்கு யெதிதியா என்ற பெயரை சூட்டும்படி வருகிறார். கர்த்தர் அந்தக் குழந்தையின்பேரில் அன்பாயிருந்தார்.

கர்த்தர் இந்தக் குழந்தைக்கு அவரே பெயர் சூட்டினார் என்ற உண்மை என்னை புல்லரிக்க செய்தது!

நம்முடைய குழந்தைகளுக்கு மிகவும் தேடி நல்ல அர்த்தமுள்ள பெயராக நாம் வைக்கிறோம். ஆனால் இங்கு கர்த்தரே சாலொமோனுக்கு ஒரு புது பெயரை வைக்கிறார்.  இது சாலொமோனுக்கு மட்டும்தான் செய்தாரா? நமக்கு செய்ய மாட்டாரா?

இது எனக்கு  ஏசாயா 62:2 ல்    …..கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்  என்று தேவனாகிய கர்த்தர் கூறியதை ஞாபகப்படுத்திற்று.

அதுமட்டுமல்ல வெளிப்படுத்தல் 2:17ல்…..  அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்று ஆவியானவர் யோவான்மூலம் வெளிப்படுத்தியதும் ஞாபகம் வந்தது.

நம்முடைய தகப்பனான தேவனானவர் நம் ஒவ்வொருவருக்கும் அவரே ஒரு புதிய நாமத்தை வைத்திருக்கிறார்  என்ற உண்மை புரிந்தது. அவர் நம்முடைய அந்தப் புதிய பெயரைத் தம்முடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார்.  அவர் உன்னையும் என்னையும் பார்க்கும்போது அவர் சூட்டியிருக்கிற நாமத்தைக் கொண்டுதான் பார்ப்பார். நாம் பரலோகம் செல்லும்போது அந்தப் புதிய நாமத்தினால் அழைக்கப்படுவோம் என்பதை நாம் மறக்கவேண்டாம்!

உனக்கு பெயர் சூட்டின தேவன், அந்தப்பெயரை உள்ளங்கையில் எழுதியிருக்கிற தேவன் உன்னோடிருக்கும் போது உனக்கு எதற்கு பயம்? இந்த மாபெரும் வாக்குத்தத்தம் என்றும் உன் பெலனாயிருக்கட்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 762 பெண்ணுக்குரிய மரியாதை!

2 சாமுவேல் 12:24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி…..

நான் சில நாட்களில் இந்த தியானத்தை எழுத அதிகமாய் ஆசைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் இது.  தாவீதின் வாழ்க்கையில் பாவத்தினால் ஏற்பட்ட புயல் ஓய்ந்து, ஒரு திருப்புமுனை ஏற்பட்ட நேரம் இது. இந்த வேதாகம தியானத்தை படிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்களின் இருதயத்தில் ஏற்படும் ஒரு பெரிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் வேதப் பகுதி இது!

தாவீதின் வாழ்க்கையை நாம் இதுவரை பார்த்ததின் மிகச் சுருக்கமான நினைவூட்டல் இது!  தாவீதின் சரித்திரத்தில் பெண்களை அவன் சரியாக நடத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன்.  அவன் பெண்களை தன்னுடைய அரசியல் நோக்கத்துக்காகவோ, அல்லது இச்சைக்காகவோ தான் உபயோகப்படுத்தினான். சவுல் தன்னுடைய மகளாகிய மீகாளை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தது அரசியல் என்றாலும், அவன் அதை எதிர்க்கவில்லை. ஆனால் அவன் சவுலின் வீட்டிலிருந்து தப்பித்து ஓடியபின் மீகாளைப் பற்றி அவன் நினைக்கவேயில்லை. அவன் பணக்கார விதவையான அபிகாயிலைத் திருமணம் செய்கிறான். அவளோடு நிறுத்தினானா? இல்லை 1 சாமுவேல் 25: 43 ல் யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் அவன் திருமணம் செய்தான் என்று பார்கிறோம்.

மறக்கப்பட்ட மீகாளோடு இந்த இரண்டு மனைவிமார் அவனுக்கு பற்றவில்லை. 2 சாமுவேல் 3: 2 – 5 ல் அவன் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று, மாக்காள், ஆகீத், அபித்தால், எக்லாள் என்பவர்களையும் மணந்தான். இவர்கள் எல்லோர் மூலமும் அவனுக்கு பிள்ளைகள் இருந்தார்கள்.

கடைசியாக குளித்துக்கொண்டிருந்த அழகி பத்சேபாளைத் தன் வீட்டின் உப்பரிகையிலிருந்து பார்த்து அவள் திருமணம் ஆனவள் என்றுத் தெரிந்தும் அவளை அழைத்து வரச் சொல்லி அவளை அடைந்தான். பின்னர் அவளுடைய கணவனும், நியாயமான உண்மையான தன்னுடைய சேனையின் வீரனுமான உரியாவை கொலையும் செய்தான்.

உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன். அவன் திருமணம் செய்த பெண்களை அவன் மதிக்கவேயில்லை! மதித்திருந்தால்  அடுத்த பெண்ணை அந்த வீட்டுக்குள் கொண்டு வந்திருக்க மாட்டான். திருமணமான பெண்ணின் கணவனையும் மதிக்கவில்லை! ராஜா என்கிற வெறி அவன் தலைக்கு ஏறிவிட்டது!

ஆனால் 2 சாமுவேல் 12 ல் நாத்தான் அவனிடம் வந்து அவனுடைய நடத்தையைப் பற்றி கர்த்தர் என்ன நினைக்கிறார் என்று உணர்த்தியபின்னர், அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. என்ன மாறுதல்? முதன் முறையாக அவன் தான் மற்றவர்களைத் துக்கப்படுத்தியதை உணர்ந்தான். அவனுடைய இவ்வளவு கேவலமான நடத்தைக்கு பின்னும் தேவனாகிய கர்த்தர் அவனை எப்படி நடத்தினார் என்பதையும் உணர்ந்தான்.

இன்றைய வேதாகமப்பகுதி தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளை ஆறுதல் படுத்தினான் என்று பார்க்கிறோம். எபிரேய மொழியில் ஆறுதல் என்ற வார்த்தைக்கு‘ வருத்தப்படுதல்’ என்ற அர்த்தமும் உண்டு.

தாவீது பத்சேபாளை முதல் முதல் பார்த்தபோது இச்சையினால் அவளை ஒரு பொருளைப்போல பார்த்து அடைய ஆசைப்பட்டான். ஆனால் இப்பொழுது அவனுடைய நடத்தைக்காக வருத்தப்பட்டு அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்! அவளை ஒரு பொருளைப்போல நடத்தியதற்காக வருந்துகிறான்.

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் என்று தேவனோடு உறவாடிக்கொண்டிருந்து இளம் தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற மனிதன் என்ற பெயர் வாங்கியவன். அவருடைய ஆறுதலை அவன் நன்கு அறிந்திருந்தான். அவருடைய ஆறுதளிக்கும் கரம் அவனை நடத்தி இஸ்ரவேலின் தேவனாகி உயர்த்தியதும் அவனுக்குத் தெரியும்!

இன்று அவன் தேவனிடம் பெற்ற ஆறுதலைத் தன்னால் உபயோகப்படுத்தப்பட்டு, வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பத்சேபாளுக்குக் கொடுக்கிறான். இதுவரை உரியாவின் மனைவி என்று அழைக்கப்பட்டவள்  இங்கு  தாவீதின் மனைவி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அவள் இனி இன்னொருவனின் மனைவி அல்ல! தன்னுடைய மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை அவன் கொடுக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது இதுதான்! பெண்ணுக்குரிய மரியாதை! அவள் ஒரு பொருள் இல்லை! இன்று ஒருவேளை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அவளுக்குரிய மரியாதை கொடுக்கப்படாமல் இருக்குமானால் இந்த வேத வார்த்தைகளின் வெளிச்சத்தில் சற்று சிந்தித்து பாருங்கள்!

தாவீது மனம் மாறிய போது பெண்களை மனந்திருந்திய ஆறுதலோடு, மரியாதையோடு நடத்த ஆரம்பித்தான்!  நீங்கள் எப்படி?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 761 கண்ணீர் மூலம் காணும் வானவில்!

2 சாமுவேல் 12: 14  உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும்.

நாம் என்றைக்காவது கடவுளிடம் நம்முடைய வேதனை, கண்ணீர், மனக்குளைச்சல் இவற்றைப்பற்றி நேரிடையாக பேச முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியாது என்று நினைத்தால் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப் பாருங்கள்!

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால் தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன். ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? (எரே12:1)

இந்த மனிதனின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும்! எனக்கு அந்தத் துணிச்சல் ஒரு துளி கிடைத்தால் எரேமியா கேட்ட கேள்விக்கு மேல் ஏன் குற்றமற்றவர் பழியை சுமக்கிறார்கள் என்பதையும் சேர்த்து விடுவேன்.

தாவீது பத்சேபாள் என்ற இருவரின் பாவத்தால் ஒரு குற்றமற்ற குழந்தை இறந்து போயிற்று. அந்தக் குழந்தையைக் கர்த்தர் அடித்தார் அந்த வேதனையை அது அனுபவித்தது என்ற உண்மையை மறைக்க முடியாது. குழந்தையை பெற்று வளர்த்த நம்மாலும் இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தானே இருக்கிறது!

இந்தக் குழந்தையின் வேதனை யாருடைய கீழ்ப்படியாமையால் வந்தது? பல நேரங்களில் அப்பாவிகள்தான் யாரோ செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை!

ஆனால் சிறிது நேரம் தாவீதின் வாழ்க்கையைப் படித்தபோது தேவனுடைய நியாயத்தீர்ப்பு  தவறாகாது என்றுதான் புரிந்தது. ஒருவேளை அந்தக்குழந்தை உயிருடன் இருந்திருந்தால், அந்த அரண்மனையில் அந்தக் குழந்தை எப்படி இருந்திருக்கும்? தாவீதின் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் அதை எப்படி நடத்தியிருப்பார்கள். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் பாவத்தின் பலனாக நடக்கும் என்று சொல்லிய காரியங்கள் நிறைவேறியபோது அந்தக் குழந்தை அந்த அரண்மனையில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  அந்தக் குழந்தை அங்கு நிம்மதியாகவே இருந்திருக்க முடியாது!

பத்சேபாளின் குழந்தை மரித்ததால் அது குற்றவாளியாகத் தீர்க்கப்படவில்லை! நம்முடைய கண்களுக்கு அநியாயமாய்த் தோன்றினாலும் பரலோக தேவனின் கண்களுக்கு அதில் ஒரு நியாயம் தென்பட்டது. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கு தாவீதின் மூலம் பிறந்த பிள்ளை என்ற அவச்சொல்லை வாழ்நாள் முழுதும் ஏற்று அவமானத்தில் கூனி நிற்க வேண்டாம் என்று கர்த்தர் சீக்கிரம் எடுத்துக்கொண்டரோ என்னவோ?

இன்று நாம் எரேமியாவைப் போன்ற கேள்வியோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்! கர்த்தர் எரேமியவைப் பார்த்து கோபப்படவில்லை. ஏனெனில் கர்த்தர் கிரியை செய்வது இன்று நம் கண்களில் புலப்படாமல் இருக்கலாம் ஆனால் ஒருநாள் அதின் முழு அர்த்தமும் விளங்கும்!  இன்று அவருடைய பிள்ளைகள் அனுபவிக்கும் எல்லாத் துன்பங்களும் அவர்களை கர்த்தரிடம் நெருங்கச் செய்யத்தான். இன்று நமக்கு அநீதியாய்க் காணப்படும் காரியம் பரலோக தேவன் பார்க்கும் கோணத்தில் வானவில்லாய்த் தோன்றலாம் அல்லவா?

நம்முடைய கண்களில் கண்ணீர் இல்லாவிடில் நம்முடைய ஆத்துமாவில் வானவில் எப்படி ஏற்படும்? சிந்தியுங்கள்! ஜெபியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்!

2 சாமுவேல் 12: 21- 23  .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.

தாவீதின் இல்லத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இந்த வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். உரியாவின் மனைவியாகிய பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற பிள்ளை சாகும் என்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் கூறி செல்கிறார். இந்த செய்தி தாவீதின் உள்ளத்தையும், பத்சேபாளின் உள்ளத்தையும் நொறுக்கிற்று.

தாவீது தரையிலே கிடந்து உபவாசித்து ஜெபித்தான்.  அவனுடைய ஒவ்வொரு அணுவும் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடிற்று. ஆனால் குழந்தை இறந்து போயிற்று. குழந்தை இறந்தவுடன் அரண்மனை ஊழியர் அந்த செய்தியை அவனிடம் சொல்ல பயந்தனர்.  அதை இரகசியமாக பேசிக்கொண்டனர். ஆனால் தாவீது என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து விட்டான். ஒருவேளை அந்தக் குழந்தையின் அழுகுரல் நின்றுவிட்டதோ என்னவோ? அல்லது பத்சேபாளின் அழுகுரல் அவன் செவிகளை எட்டியதோ என்னவோ?

ஆனால் எல்லா ஊழியரும் ஆச்சரியப்படும் வகையில் தாவீது நடந்து கொள்ள ஆரம்பித்தான். பிள்ளை இறந்த செய்தி தெரிந்தவுடனே அவன் எழுந்து, எண்ணெய் பூசி, கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய் பணிந்து கொண்டு, தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.

தாவீதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கேள்வி கேட்டவர்களிடம், தாவீது தேவனுடைய சித்தத்தைத் தான் ஏற்றுக்கொளவதாகக் கூறினான். ஒவ்வொரு நிமிடமும் நம்மை விட்டு கடந்து போகிறது! கடந்த காலத்தை நாம் திரும்பக் கொண்டுவர முடியாது, அழுவதால் அதை மாற்றவும் முடியாது என்பதை உணர்ந்தான் தாவீது.

நாம் தாவீது கூறிய இந்த வார்த்தைகளை சற்று சிந்திப்போம். தங்களுடைய குழந்தையை இழந்த மன வேதனையில் தாவீதும் பத்சேபாளும் இருந்தபோது, தாவீது தன்னுடைய குழந்தை இனித் திரும்ப வராது என்றும், ஆனால் அவன் அதினிடத்துக்கு போகும் காலம் வரும் என்றும் கூறுகிறான்.

மரணம் நம்மை நம்முடைய அன்பானவர்களிடமிருந்து பிரிக்கும்போது நாம் எவ்வளவு துடிக்கிறோம். இதை நான் எழுதவேண்டும் என்று அவசியமே இல்லை. அனுபவப்பட்ட ஒவ்வொருவருக்கும் அந்த வேதனைத் தெரியும். அதுவும் எதிர்பார்க்காத வேளையில் ஒருவரை இழக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கிறோம். ஆனால் தாவீது தன்னுடைய இழப்புக்கு பின்னர் புதிதாக வாழ ஆரம்பிக்கிறான்! தானும்  ஒருநாள் அந்தக் குழந்தையுடன் பரலோகத்தில் சேர முடியும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது!

நாம் இந்த பூமியில் வாழும் வரை நமக்கு அன்பானவர்களின் மரணம் என்பது நமக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.ஆனால் நாமும் தாவீதைப்போல் கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, மரித்தவர்களுக்காக அல்ல, உயிரோடு இருப்பவர்களுக்காக வாழ வேண்டும்! நாம் ஒருநாள் பரலோகத்தில் சந்திப்போம் என்ற நிச்சயமே நம்மை புதிய வாழ்க்கைக்குள் நடத்தும்!

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும்படி கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். இது நம்முடைய வாழ்க்கை ஒளிப்பிரகாசமாய் மின்னும்போது மட்டும் அல்ல, நம்முடைய வாழ்க்கை இருள் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் போதும் நாம் செய்ய வேண்டிய ஜெபம்!

தாவீது தன்னுடைய  குழந்தை இறந்த துக்க செய்தி கேட்டதும் எழுந்து, தேவனைப் பணிந்து கொண்டு, உபவாசத்தை முடித்து உணவு உண்ண ஆரம்பித்தான்! ஏனெனில் பரலோக வாழ்க்கையில் தன்னுடைய குழந்தையைக் காண்போம் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.

அந்த நிச்சயம் உங்களுக்கு உண்டா?  அப்படி உண்டு என்றால் மரித்தவருக்காக துக்கித்து அல்ல, உங்களை சுற்றியிருப்பவருக்காக உங்கள் வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்